ரத்தசோகையை நீக்கும் மோர்!

எனக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எப்போதும் குறைவாகவே காணப்படுகிறது. 
ரத்தசோகையை நீக்கும் மோர்!

குழாய் அடைப்புகளை நீக்கக் கூடியதும், ரத்தத்தைச்  சுத்தப்படுத்துவதும், ரத்த அணுக்களை வளரச் செய்வதுமான உணவும் மருத்துகளையும் பரிந்துரை செய்யவும்.  எனக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எப்போதும் குறைவாகவே காணப்படுகிறது.

 -பொன் மனோகரன்,   
நரிமேடு, மதுரை.

உணவுப் பொருட்களில் நீங்கள் குறிப்பிடும் மூன்று செயல்களையும், செய்யக் கூடிய மோரும், தயிர் மேல் நிற்கும் தண்ணீரும் சிறந்தவை.  அஷ்டாங்கஹருதயம் எனும் ஆயுர்வேத நூலில், மோர் பற்றிய வர்ணனையில் - மோர் லேசானது, துவர்ப்பும், புளிப்புச்சுவையும் கொண்டது.  நல்ல ஜீரணகாரி, கபம் மற்றும் வாயு சார்ந்த உபாதைகளைக் குணப்படுத்தக் கூடியது. உடலில் ஏற்படும் வீக்கம், வயிற்றில் ஏற்படும் நீர் தேக்க உபாதையான உதரம், மூலம், க்ரஹணி எனப்படும் உணவு சரிவர செரியாமல் வெளியேறும் உபாதை, சிறுநீர் சரியான அளவில் பிரியாமல் ஏற்படும் தேக்கம், நாக்கில் ருசியின்மை, மண்ணீரல் வீக்கம், குல்மம் எனப்படும் வாயு உருண்டு திரண்டு பந்துபோல ஆகுதல், நெய்யை அதிக அளவில் பருகுவதால் ஏற்படும் வீக்கம், மூலம், சலிப்பு, விரைப்பு, உணர்வற்றநிலை, இடுவிஷம் எனப்படும் விஷப்பொருட்களின் சேர்க்கை, சோகை உபாதை ஆகியவற்றை மோர் குணப்படுத்தும் என்று கூறுகிறது. தயிரின் அளவிலிருந்து கால்பங்கு தண்ணீர் மட்டும் சேர்த்து, நன்கு கடைந்து வெண்ணெய் நீக்கியது தான் மோர் என்று அழைக்கப்படுகிறது. அதற்குத்தான் மேற்கூறிய சிறப்புகள் அனைத்தும் உரித்தானவை. 

தயிரை வடிகட்டி எடுக்கப்பட்ட அதன் தண்ணீருக்கு "மஸ்து' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. மோரினுடைய அத்தனை குணங்களும் இதிலும் அடங்கியுள்ளன. மேலும் குழாய் உட்புற அடைப்புகளைச்  சுரண்டி நீக்கக் கூடிய தன்மையும், வயிற்றில் வாயு உருண்டோடும் சத்தத்துடன் கூடிய மலச்சிக்கலையும் குணப்படுத்தும் சிறப்பான செயல்களை மஸ்து கொண்டுள்ளதாக அந்நூல் கூறுகிறது.

கசப்பு, துவர்ப்பும் கூடிய உணவு மற்றும் மருந்துபொருட்கள், குழாய்களின் உட்புறக் கழிவுகளை நன்கு அகற்றக் கூடியதும், ரத்தத்திலுள்ள கெடுதிகளை நீக்கக் கூடியவையுமாகும். அந்த வகையில் பாகற்காய், கோவக்காய், மணத்தக்காளி கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரை, நிலவேம்புகுடிநீர், வேப்பம்பூ, மஞ்சள் போன்ற கசப்பான நாம் அன்றாடும் பயன்படுத்தும் உணவு வகைகளை நீங்கள் உணவாக ஏற்கலாம். அதுபோலவே துவர்ப்புச் சுவை வகைகளான கடுக்காய், கருங்காலிக்கட்டைத் தண்ணீர், அத்திக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, சுண்டைக்காய் ஆகியவற்றையும் உபயோகித்து உட்புற குழாய் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம். 

சிலாசத்து எனும் பாறையின் இடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் தாதுப்பொருள், தற்சமயம் காப்ஸ்யூல் வடிவத்தில் கொண்டு வரப்படுகிறது. குழாயின் உட்புற அழுக்குகளைச் சுரண்டி எடுப்பதும் ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதும், ரத்த அணுக்களை நன்கு வளரச் செய்வதிலும் இது பெரும் பங்கு ஆற்றுகிறது. இரவில் படுக்கும் முன் ஒன்றிரண்டு காப்ஸ்யூல்களை சிறிது சூடான பாலுடன்  சாப்பிட மிகவும் நல்லது. 

உடலெங்கும் மூலிகைத் தைலமாகிய மஹாமாஷத்துடன், பலா அஷ்வகந்தாதி தைலத்தைக் கலந்து தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து அன்றைய தினம் மிளகு மற்றும் சீரகம் சேர்த்த ரசம், புழுங்கலரிசி சாதத்துடன் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துவது உட்புற குழாய்களைச் சுத்தப்படுத்துவதற்கான ஓர் எளிய வழியாகும்.

உண்ணும் உணவின் செரிமானம் நன்கு ஏற்பட்டு, அவற்றின் சத்து முழுவதும் உடலில் நன்கு சேரும் வகையில் பசித்தீயை மேம்படுத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ரத்த அணு குறைபாடானது விரைவில் நீங்கும். அப்படி அல்லாமல் நேரடியாக ரத்த அணுக்களை வளர்த்துத்  தரும் மருந்துகளை மட்டுமே நம்பி, மாத்திரையாகவோ, டானிக்காகவோ சாப்பிடுவதால், தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும்.

ஒரு சில ஆயுர்வேத மருந்துகள், பசியை நன்கு ஏற்படுத்தி, தானும் விரைவாக குடலில் செரித்து, ரத்த அணுக்களை வளர்க்கும். தாடிமாதிகிருதம் எனும் நெய் மருந்து, அந்த வகையில் மிகவும் சிறந்தது. சுமார் பத்து மில்லி லிட்டர் மருந்தை, நீராவியில் உருக்கி, காலை மாலை வெறும் வயிற்றில் தொண்ணூறு நாட்கள் வரை சாப்பிட, சோகை உபாதையின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கும். 

அதன் பிறகு உலர்ந்த திராட்சையை, இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை கசக்கிப் பிழிந்து, வெறும் வயிற்றில் சாப்பிடும் நீர்பேதி ஏற்படுத்தும் முறை, லோஹாஸவம் மற்றும் குமார்யாஸவம் கலந்து சாப்பிடும் முறை, தேனுடன் வாஸாகுடூச்யாதி கஷாயம் சாப்பிடும் வகை, மண்டூரவடகம் மோருடன் சாப்பிடுவது, திராக்ஷாதி லேஹ்யம் போன்ற வரிசைக் கிரமமான பிரயோக விசேஷங்களை ஆயுர்வேத மருத்துவர்களிடமிருந்து நன்கு அறிந்து நீங்கள் சாப்பிட்டுவந்தால், உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கி, ஆரோக்யத்தின் அடிப்படை  ரகசியமான "பலத்தை' உடலிலும், மனதிலும் நீங்கள் முழு அளவில் பெறலாம். 
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com