தீராத மலச்சிக்கல் தீர...

வயோதிகத்தில் வாயுவின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு,
தீராத மலச்சிக்கல் தீர...

என் வயது 78. இளம் வயதில் கண்ட கண்ட ஹோட்டல்களில், கண்டபடி வாய்க்கு ருசியான விதம்விதமாக மசால் சேர்த்த உணவுப் பண்டங்களை நேரம் கெட்ட நேரத்தில் உட்கொண்டதால் எனது கல்லீரல் பழுதடைந்து பித்தப்பை நீக்கப்பட்டுள்ளது. இப்போதும் கூட தீராத மலச்சிக்கல். எந்தவிதமான மலமிளக்கி மருந்துகள் உட்கொண்டாலும் திருப்திகரமாக மலம் வெளியேறுவது இல்லை. மாதம் மூன்று முறையாவது கடும் உபவாசம் இருக்கிறேன். இதுவும் மலச்சிக்கலுக்கான காரணமாக இருக்குமா? மேலும் நிரந்தர சளித்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன். இவற்றுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உள்ளதா?

-சங்கர வெங்கட்ராமன், சென்னை-8.

வயோதிகத்தில் வாயுவின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு, ஊடுருவும் தன்மை, நகரும்தன்மை போன்றவை இயற்கையாகவே குடலில் ஆதிக்கம் செலுத்துவதால், கடும் மலச்சிக்கலால் அவதியுற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பித்தப்பை நீக்கப்பட்டுள்ளதால், நெய்ப்புத்தன்மையுடைய தேங்காய்ப்பால், எள்ளு, உளுந்து போன்ற பண்டங்களின் வரவானது, குடலில் எந்த அளவிற்கு உள்வாங்கப்பட்டு, குடலில் நெய்ப்பூட்டி, அவற்றின் அசையும் தன்மையைக் குறைவில்லாது நடத்திச் செல்லும் என்பதை நம்மால் அறிய முடியாது. செரிமானத்தை விரைவுபடுத்தும் பித்தத்தினுடைய சிறிது நெய்ப்பு எனும் தன்மையையும், மலத்தை இளக்கக் கூடிய குணமும் சீராக்கினால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை ஒருவாறு சமாளிக்கலாம். சாதாரண ஆனால் சுத்தமான பசு நெய்க்கு, பித்தத்தினுடைய சிறிய நெய்ப்புத் தன்மையை சீராக்கித் தரும் சக்தியிருப்பதால், நீங்கள் பசு நெய்யை லேசாக நீராவியில் உருக்கி, காலை, இரவு  சூடான சாதத்துடன் கலந்து முதல் கவளத்தைச் சாப்பிடலாம். குடலுக்கு வழுவழுப்பை ஏற்படுத்தித் தரும். அளவு குறைவாக இருப்பதால், பித்தப்பை நீக்கப்பட்டிருப்பதால் பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. குடலில் வாயுவினுடைய சீற்றத்தையும் மட்டுப்படுத்தும். அதிக அளவில் நீரான உணவுப் பண்டங்களாகிய ரசம், சாம்பார் தெளிவு, பால் பாயசம் போன்றவை சாப்பிட, குடலில் ஏற்றம் பெரும் நீர்ப்பாங்கான தன்மையால், பித்தத்தினுடைய திரவம் எனும் குணமானது ஏற்றமடைந்து, வயிற்றிலுள்ள கழிவுப் பொருட்களை அலசி, நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். அதனால், உங்களுடைய விஷயத்தில், பித்தம் ஏற்றமுற வேண்டும், வாயு மட்டுப்பட வேண்டும் என்பதை என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது.

மிச்ரகஸ்நேஹம் எனும் நெய் மருந்தை, 10 மி.லி. அளவில் உருக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மேலே சிறிது வெந்நீர் அருந்தலாம். தீவிரமான மலமிளக்கி என்பதால் கடும் மலச்சிக்கல் உள்ள நாட்களில் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. விரத நாட்களில், குடலில் ஏற்படும் வெற்றிடத்தை வாயு நிரப்புவதால், அந்நாட்களில் வெது வெதுப்பான சர்க்கரை கலந்த பால், நடுநடுவே சாப்பிட வேண்டிய நிர்பந்தமிருக்கிறது.

சளித் தொல்லை குணமாக ஏலக்காய் விதை, லவங்கப்பட்டை, வெற்றிலையின் காம்பு இவற்றை அரைத்து சிறிது சூடாக்கிச் சூட்டோடு நெற்றியிலும் தலை உச்சியிலும் பற்றுப்போடவும்.

மஞ்சள், சாம்பிராணி இரண்டையும் தண்ணீர்விட்டு கல்லில் உரைத்தும் நெற்றியில் பற்றுப் போடலாம். கொம்பரக்கு, தும்பைப்பூ, மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், ஓமம், வில்வ இலை, வெற்றிலை இவற்றில் ஒன்றைப் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெய்யையே தேய்த்துக் கொள்ளவும். ஒரே சூடாகக் காய்ச்சிய வெந்நீரில் குளித்து, உடனே தலையை நன்கு துவட்டி, சாம்பிராணியைத் தணலில் தூவி புகை பிடிப்பது, சூடான லேசான உணவு, வெயிலில் செல்லாமல், பகலில் தூங்காமல், இரவில் விழித்திராமல், உடல் சூட்டை ஒரே சீராகப் பாதுகாத்துக் கொள்வது. இவை சளி, ஆஸ்துமா இவற்றில் இருந்து காப்பாற்றும். குளிக்கும் வெந்நீரில் கருங்காலிக் கட்டையையோ, கடுக்காயையோ இடித்துப் போட்டுக் காய்ச்சி குளிக்கலாம்.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com