அரிப்பும் தடிப்பும் குறைய கருந்துளசி!

கபம் எனும் தோஷத்தினுடைய நீர்த்த நிலை, இரத்தத்தில் ஊடுருவும் தறுவாயில், தோலில் தடிப்பும் அரிப்பும் காணத் தொடங்கும்.
அரிப்பும் தடிப்பும் குறைய கருந்துளசி!

எனது மகன் வயது 30. டிரைவர். 5 ஆண்டுகளாக அவனுக்கு அரிப்பு, தடிப்பு இருந்து வருகின்றது. ஆங்கில மருந்து, நாட்டு மருந்துகள் சாப்பிட்டு வருகிறான். எது சாப்பிட்டாலும் இரண்டு, மூன்று மாதங்கள் நன்றாக இருக்கின்றது. பின்பு மீண்டும் அரிப்பு, தடிப்பு ஏற்படுகின்றது. அதனால் ரொம்பவும் சிரமப்படுகிறான். இதனை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் ஏதேனும் வழி உள்ளதா?

-சா. முகம்மது, சிதம்பரம்.

கபம் எனும் தோஷத்தினுடைய நீர்த்த நிலை, இரத்தத்தில் ஊடுருவும் தறுவாயில், தோலில் தடிப்பும் அரிப்பும் காணத் தொடங்கும். இரத்தத்தினுடைய இயற்கை குணமாகிய சூடும், கபத்தினுடைய இயற்கை குணமாகிய குளிர்ச்சியும், ஒன்றோடு ஒன்று கலக்கும் போது, எதிர்மறையான இரு குணங்களின் சேர்க்கையினால், உடல் உட்புற தாதுக்களில் ஏற்படும் மாற்றமானது, தோலில் இது போன்ற அரிப்பும் தடிப்பும் ஏற்படக் காரணமாகலாம். எண்ணற்ற உணவுப் பொருட்களின் துகள்களைச் செரிமானம் செய்யும் வயிற்றுப் பகுதியின், சுகாதாரமற்ற உட்புற சூழலாலும், அதிலிருந்து ஏற்படும் பிரதிபலிப்பின் சாரமாக தடிப்பும், அரிப்பும் ஏற்படக் கூடும். அதனால், வயிற்றினுடைய செரிமான கேந்திரத்தில் உணவின் வழியாக அழுக்குப் படியாமலும் இரத்தத்தில் ஏற்பட்டுள்ள குண  எதிரிகளைப் பிரிப்பதும், வெளியேற்றுவதும் சிகிச்சையின் முக்கிய நோக்கமாக அமைத்து செயல்பட்டால், தங்கள் மகனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். 

திக்தகம் எனும் நெய் மருந்தையோ, மஹாதிக்தகம் எனும் நெய் மருந்தையோ சுமார் 15 மி.லி. முதல் 25 மி.லி. வரை உருக்கி, காலையில் வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிட, உகந்த மருந்தாகும். குடலில் வாயுவினுடைய நடையானது, கீழ் நோக்கிச் செல்லுதலும், பசி நன்றாக எடுப்பதும், மலத்தில் நெய்யினுடைய வரவானது பிசுபிசுப்பை ஏற்படுத்துவதும், மலம் கட்டை பிடிக்காமல் வெளியேறுவதும், நெய் உடலில் நன்றாக செரிமானமாகி கலந்துள்ள நிலையைக் குறிக்கிறது. 

மேற்குறிப்பிட்ட நிலையை உடல் அடைந்ததும், இரத்தத்திலுள்ள குண எதிரிகளைப் பிரிப்பதற்காக, படோலமூலாதி எனும் கஷாய மருந்தால், வயிற்றிலுள்ள அழுக்குகள் சுரண்டப்பட்டு, 2-3 முறை பேதியாகி, குடல் சுத்தமடைவதுடன், இரத்தமும் சுத்தமாகிறது.

அரிப்பும், தடிப்பும் நீங்க, எண்ணற்ற ஆயுர்வேத மருந்துகள் இருந்தாலும், உடலின் தன்மையை துல்லியமாக எடுத்துக் காட்டும் நாடித்துடிப்பிற்கு ஏற்ப, ஆராக்வதாதி கஷாயம், மஞ்சிஷ்டாதி கஷாயம், சோணிதாமிர்தம் கஷாயம், நிம்பாதி கஷாயம், திக்தகம் கஷாயம், மஹாதிக்தகம் கஷாயம், படோல கடு ரோஹிண்யாதி கஷாயம் போன்றவற்றில் ஒன்றிரண்டைத் தேர்வு செய்து மருத்துவர்கள் அளிப்பதை கால நிர்ணயத்துடன், பத்தியத்துடனும் சரியாகச் சாப்பிடுவது அவசியமாகும்.

குடல் சுத்தி முறைகளை அடிக்கடி கடைப்பிடிக்க வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு ஏற்படும். அதனால் வயிற்றில் ஏற்படும் வெற்றிடமானது, வாயுவைத்  தூண்டிவிடும் என்பதால் நெய் மருந்துகளை விட்டுவிடாமல் சாப்பிட வேண்டிய நிலைகளும் ஏற்படும். மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை, தோல் உபாதையுள்ளவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு, வயிற்றைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

 புலால் உணவு, தயிர், நல்லெண்ணெய், கடுகு வெந்தும் வேகாததுமான உணவு, முதல் நாள் உணவைச் சுட வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது, காய்ந்து உலர்ந்து போன கறிகாய்கள், அதிகம் வெந்து போன உணவு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, அது கோபமாக மாறி மற்றவர்களுடன் சண்டை செய்வது, வருமானம் குறைந்தால் துக்கப்படுவது போன்ற மனதைச் சார்ந்த விஷயங்களையும் அடக்கி அமைதியுடனிருத்தல், லாஹிரி வஸ்துக்களைத் தவிர்த்தல், தீய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தலும் அவசியமாகும்.

இரத்தத்திலுள்ள விஷத்தை முறிக்கும் சக்தி கருந்துளசிக்கும் மிளகுக்கும் உள்ளதாக நம்பப்படுகிறது. அதனால் உங்கள் மகன் கருந்துளசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 4 மிளகுடன் காலை, மாலை சாப்பிட்டு வர, அரிப்பும் தடிப்பும் குறைய வாய்ப்புள்ளது. தோலின் சீதோஷ்ண சகிப்புத் தன்மை வளர, ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய நால்பாமராதி தைலம் அல்லது தினசவல்யாதி தைலத்தையோ உடலில் தடவி, அரைமணி நேரம் ஊற வைத்துக் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். வேப்பம் பட்டை, அரசம்பட்டைகளை தண்ணீரில் நன்கு கொதிக்கவிட்டு, குளிப்பதற்குப் பயன்படுத்துவதும் நல்லதே.
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com