காதில் இரைச்சல்... என்ன செய்ய வேண்டும்?

வாயுவினுடைய ஒரு முக்கியப் பகுதியாக காது இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. காதினுடைய உட்பகுதிகளில் அமைந்துள்ள நுண்ணிய எலும்புகளும் நரம்புகளும்
காதில் இரைச்சல்... என்ன செய்ய வேண்டும்?

வயது 70. எனக்கு சர்க்கரை வியாதி கடந்த 8 ஆண்டுகளாக உள்ளது. கடந்த சில வருடங்களாக வலது காதில் இரைச்சல் இருக்கிறது. ஆனால் சில நாட்களாக இரண்டு காதுகளிலும் இரைச்சல் அதிகமாக இருக்கிறது. இரவில் தூங்க முடிவதில்லை. இந்த இரைச்சல் எதனால் ஏற்படுகிறது? இதை குணப்படுத்துவது எப்படி?

-ர.சந்திரன், சென்னை -49.

வாயுவினுடைய ஒரு முக்கியப் பகுதியாக காது இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. காதினுடைய உட்பகுதிகளில் அமைந்துள்ள நுண்ணிய எலும்புகளும் நரம்புகளும் இடைவெளிகளும் வாயுவிற்கு இடமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்தித் தருகின்றன. வாயுவினுடைய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி போன்ற குணங்களின் சீற்றத்தால் நீங்கள் குறிப்பிடும் இரைச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நெய்ப்பும், கனமும், சூடும் இக்குணங்களுக்கு எதிரான குணம் கொண்ட தன்மையுடையதால், அவற்றை மருந்தாகவும், செயலாகவும், உணவாகவும் நாம் மாற்றி அமைக்கும் போது, காதிலுள்ள இரைச்சல் குறையலாம்.

மருந்துகளில் இந்துகாந்தம் க்ருதம் எனும் நெய் மருந்தை சுமார் 15 மி.லி. அளவில் உருக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மாலையில் விதார்யாதி க்ருதம் எனும் நெய் மருந்தை உருக்கி, சுமார் 15 மி.லி. அளவில் வெறும் வயிற்றில் சாப்பிட, நரம்பு மண்டலத்தையும், காதினுள் அமைந்துள்ள எலும்புகளையும் புஷ்டிப்படுத்தி வறட்சி, லேசான தன்மை ஆகியவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி நெய்ப்பையும் வலுவான கனத்தையும் அதிகப்படுத்தும். இவற்றைச் சாதிக்க, இம் மருந்துகளின் தொடர்ச்சியான உள்வரவானது சுமார் 5-6 மாதங்களுக்காவது தேவைப்படும்.

வாசனைக்கோஷ்டம் என்ற மருந்துச்சரக்கை ஒரு மெல்லிய வெள்ளைத் துணியால் சுற்றி, நல்லெண்ணெய்யில் நனைத்துத் திரி போலாக்கி, அதைக் கொளுத்தி எரியும் போது சொட்டு சொட்டாக ஜ்வாலையின் மேல் நல்லெண்ணெய்யை விட்டு கொண்டே வர, கீழே சுடர் எண்ணெய் விழும். அந்த எண்ணெய்யைச் சேகரித்து வைத்துக் கொண்டு அதைக் காதில் நேரிடையாகவிட்டோ, பஞ்சில் நனைத்துக் காதில் சொருகிக் கொண்டோ வர, குளிர்ச்சியால் ஏற்படும் காதுவலி, சத்தம், மென்னி விரைப்பு, தோள்பட்டை வலி இவை நீங்கும்.

தலைக்கு வெது வெதுப்பாக க்ஷீரபலா தைலம் தேய்த்துக் குளிக்க, காதினுள் ஏற்படும் இரைச்சலைக் குறைக்கலாம்.

செயல்களில் - பேருந்து, இருசக்கரவாகனம், ரயில், விமானம் ஆகியவற்றில் பயணம் செய்ய நேர்ந்தால், காதின் நுட்பமான உணர்ச்சி மிக்க தோல் அதிக சூட்டையும் அதிகக் குளிர்ச்சியையும் தாங்காது என்பதால், காதினுடைய வெளிப்புற ஓட்டை மட்டும் அடையும் அளவில், உருண்டையான பஞ்சை வைத்து  அடைத்துக் கொள்வது அவசியமாகும். பயணம் முடிந்ததும் எளிதில் வெளியே எடுத்துவிடும் வகையில் காதை அடைத்துக் கொண்டால் போதுமானது. குளிர்ந்த நீரை தலைக்குவிட்டுக் கொண்டு குளிக்க நேர்ந்தால், குளித்த பிறகு பஞ்சினால் காதை, இதமாகத் துடைத்து நீரை அகற்றிவிட வேண்டும்.

உணவில் - குடலில் வாயுவின் சீற்றத்தை அதிகப்படுத்தும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளைக் குறைப்பது நலம். வாயுவின் ஓட்டத்தை குடலிலிருந்து மற்றப் பகுதிகளுக்குத் தள்ளிவிடும். துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, காராமணி, வேர்க்கடலை ஆகியவற்றின் உபயோகத்தையும் குறைத்துக் கொள்வதும் நல்லதே. உணவை வெது வெதுப்பாகச் சாப்பிடுவதும், நேரம் தவறாமல், பசி எடுத்துள்ள நிலையில் சாப்பிடுவதும், உணவின் இறுதியில் வெந்நீர் அருந்துவதும், வாயுவை கோபமுறச் செய்யாமல் தடுக்கும் வழிகளாகும்.

இன்றைய வாழ்க்கை முறையில், வெளிப்புற நரம்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் செயல்களும் சர்வசாதாரணமாகிவிட்டன. வருங்காலத்தில் அவர்கள் ஆயுர்வேதம் காட்டும் வாழ்க்கை முறைக்கு, மாற வேண்டிய அவசியம் ஏற்படலாம். 

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com