ரசாயன உணவுகளின் பாதிப்பு: வெல்வது எப்படி?

உடல் நலத்துக்குத் தீங்கு செய்யக் கூடிய ரசாயனங்களால் வயது, உடல்பருமன்,
ரசாயன உணவுகளின் பாதிப்பு: வெல்வது எப்படி?

இன்று பலவித PRESERATIVE  ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பாக்கெட் பால் வகைகள் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். உடல் நலத்துக்குத் தீங்கு செய்யக் கூடிய ரசாயனங்களால் வயது, உடல்பருமன், முழங்கால் மூட்டு நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றுடன் வாழ்பவர்கள் இவற்றால் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் அவர்களைப் பாதுகாப்பது எப்படி?

சுப்ர.அனந்தராமன், 
அண்ணாநகர், சென்னை-40
.


நம் முன்னோர்கள் கண்டறியாத, கேட்டறியாத ரசாயனங்களை நவீன வாழ்க்கை காரணமாக நாம் இன்று சாப்பிடவும், அருந்தவும் வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அவற்றை நாம் குடல் வழியாக இரத்தத்தில் உள் வாங்கி, த்ரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சீரான செயல்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சப்த தாதுக்களாகிய ஏஸ-ரக்த -மாம்ஸ - மேத - எலும்பு- மஜ்ஜை - விந்துவிற்குச் செயல் நாசத்தையும், மலங்களாகிய மலம் - சிறுநீர் - வியர்வை போன்ற கழிவுகளின் அடைப்பிற்குமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வருகிறோம். உடலைத் தாங்கி நிறுத்தக் கூடிய ஆணி வேர்களாகிய தோஷ - தாது - மலங்களையே ஆட்டி அசைத்துப் பிடுங்கக் கூடிய இந்த ரசாயனக் கலவைகளே நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு பெரும் ஆபத்தை விந்தணுக்கள் மூலமாகவும் சினை முட்டை வாயிலாகவும் செய்யக் காத்திருக்கின்றன.

உடலில் ரசாயனச் சேர்க்கையை எதிர்த்துப் போராடக் கூடிய திறனை ஐந்துவகையான நபர்களால் மட்டுமே செய்ய இயலும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

1.தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள்
2. நெய்ப்பை உடலில் நன்கு சம்பாதித்துக் கொண்டவர்கள்.
3. பசித்தீ கெடாமல் பார்த்துக் கொள்பவர்கள்
4. இளமைப் பருவத்தை உடையவர்கள்
5. பலசாலிகள் உடற்பயிற்சி என்பது நடையாகலாம், யோகப் பயிற்சியாகலாம், விளையாட்டாகலாம், தண்டால் , குஸ்தியாகலாம். எதுவாக இருந்தாலும், உட்புற ரசாயனக் கழிவுகளை வியர்வை மூலமாக வெளியேற்றி விட வேண்டும். தசைகள் முறுக்கேறி, உடல் லேசாகி, செயல்களை எளிதாகச் செய்ய முடிவதும், தேவையற்ற கொழுப்பை அகற்றுவதும் உடற்பயிற்சியின் விளைவாக ஏற்படுமாயின், நோய் எதிர்ப்பு சக்தியானது உடலில் நன்கு ஏற்பட்டு, எந்த ரசாயனத்தையும் உடல் எதிர் கொண்டு பக்க விளைவுகளை முறியடித்துவிடும். அதனால், சோம்பேறியாய் எந்த வேலையையும் செய்யாமல், எதையாவது எந்நேரமும் கொறித்துக் கொண்டு ஊர் வம்பு பேசிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இது போன்ற ரசாயனங்களால் உடல் அழிவு காத்திருக்கிறது.

உடல் நெய்ப்பைத் தரும் உணவுப் பொருட்களாகிய எள், தேங்காய்ப் பால், உளுந்து, கோதுமை, அரிசி போன்றவற்றை சீரான அளவில் நெய், பால், வெண்ணெய் ஆகியவற்றுடன் கலந்து உண்பதாலும், நல்லெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தலை முதல் உள்ளங்கால் வரை தடவி, ஊற வைத்துக் குளிப்பதாலும், ரசாயனப் பொருட்களால் அடங்கியுள்ள வறட்சி எனும் குணத்தை வெல்வதும், தாமரை இலைத் தண்ணீரைப் போல உடலில் ஒட்டி உறவாடச் செய்யாமலும் பாதுகாக்கக் கூடியது.

தன் பசி நிலையறிந்து உணவைத் தக்க அளவில் ஏற்று, பசியின் திறன் குன்றாமல் பாதுகாப்பதின் மூலம், ரசாயனங்களை எரித்து பஸ்மமாக்கி வெளியேற்றிவிடலாம். நாக்கிற்கு அடிமையாகி, இஷ்டம் போல உண்பவர்களுக்கு, பசித்தீ கெட்டு, ரசாயனங்களை வெளியேற்ற முடியாமல் அவற்றின் கிடங்காக மாற்றி விடுவார்கள்.

சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், துடிப்பும் நிறைந்த இளமைப் பருவத்தை, வயோதிகத்திலும் தக்க வைத்துக் கொள்ள முன் குறிப்பிட்ட உடற்பயிற்சி, நெய்ப்பு, பசித்தீ ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதொன்றே வழியாகும். அப்படிச் சம்பாதித்துக் கொண்டவர்களை வாலிப வயோதிக அன்பர்கள் என்று குறிப்பிடலாம். 

தாய் தந்தையிடமிருந்து கிடைக்கும் ஸகஜ பலம் - பருவகாலங்களுக்குத் தக்கவாறு உணவு - செயல்முறை மாற்றம் வழியாகக் கிடைக்கும் காலபலம் மற்றும் புத்தியைப் பயன்படுத்தி உடலுக்கு நன்மைதரும் உணவு - செயல்- மருந்து மூலம் கிடைக்கும் யுக்தி பலம் ஆகியவற்றைச் சிரத்தையுடன் காப்பாற்றுவதின் மூலம், ரசாயனங்களை எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com