தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல்.. காரணம் என்ன?

உடலின் சகிப்புத்தன்மை ஒரு வகையில் குறைந்து போவது தான் இப்பிரச்னைகளுக்குக் காரணம்.
தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல்.. காரணம் என்ன?


எனக்கு வானத்தில் மேக மூட்டம் இருந்தால் போதும், உடனே வந்துவிடும் தும்மலும் தொண்டைக் கரகரப்பும், இருமலும் இழுப்பும், டான்ஸில் வீக்கமும், காதில் சீழும். "ஈஸினோபைல்' அளவு ரத்தத்தில் கூடுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது? எப்படிப் போக்குவது?

- சௌரிராஜன், காஞ்சிபுரம்.

உடலின் சகிப்புத்தன்மை ஒரு வகையில் குறைந்து போவது தான் இப்பிரச்னைகளுக்குக் காரணம். உடலில் எந்த உறுப்பில் எவ்வித நோய் உண்டானாலும் அதனுடன் போராடி அந்த நோயைப் போக்கிட இயற்கையாகவே நமது உடல் முயற்சி செய்யும்.  இந்தப் போராட்டத்திற்கு உதவிபுரிவது பொதுவாக இரத்தத்திலுள்ள வெண்ணிற ஜீவ அணுக்கள். இவற்றுள் "ஈஸினோபைல்" என்பது ஒருவகை.  ஒன்று முதல் ஆறு சதவிகிதம் வரை சாதாரண நிலைகளில் காணப்படும் இவை, நுரையீரலைப்  பாதிக்கக் கூடிய உபாதைகளின் தாக்கம் தெரியத் தொடங்கிவிட்டால், அந்த வியாதிகளுடன் போராடி,  அதைத் தடுக்கவும், விரட்டியடிக்கவும் கடுமையாகப் போராட வேண்டியிருப்பதால் 20, 30, 60 சதவிகிதம் என்ற அளவில் இரத்தத்தில் வளர்ச்சியடைகின்றன.  இதனால் நோயின் தாக்கம் எவ்வளவு வலியது என்பதையும் அத்துடன் போராடி வெற்றி பெற முயலும் இயற்கை வன்மை எத்துணை என்பதையும் நாம் அறியலாம். இந்த ஈஸினோபைல் அதிகமாயிருப்பதால் தான் நீங்கள் குறிப்பிடும் உபாதை தோன்றியிருப்பதாக சிலர் நினைத்து,  அதைக் குறைக்க மருந்துகளைத் தருவார்கள். காரியம், காரணம் என்பவற்றின் சம்பந்தத்தை நன்கு அறியவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

வரத் தொடங்கும் நோயையோ அல்லது வந்துள்ள நோய்களையோ போக்கிட மருந்துகளைக் கொடுத்தால், வியாதியுடன் ஏற்கெனவே போராடிக் கொண்டிருக்கும் ஈஸினோபைல்களுக்கு உதவியாக இருக்கும்.  இவை இரண்டும் சேர்ந்தால், உபாதைகளை விரைவில் குணப்படுத்தலாம்.

சில வகை அழுக்குகள் நுரையீரலில் சேரவிடாது தடுக்கும் டான்ஸில் என்னும் கிரந்திகள், நமக்கு பேரு உதவியாகச் செயல்படுகின்றன. ஈஸினோபைல் அதிகரிப்பது போலவே, நமக்கு ஏற்பட்ட அதிகப்படி வேலையின் நெருக்கடி காரணமாக, இந்த டான்ஸில் எனும் கிரந்திகள் வீக்கமடைந்து, பருமனாகிவிடும். அவற்றை கிருமிகள் உபத்திரவிக்கத் தொடங்கி, புண்களை ஏற்படுத்தும். தொண்டையில் அடைபட்டது போன்ற தோற்றம், வீக்கம் வலி இவற்றுடன் எச்சிலையும் விழுங்க முடியாத கஷ்டமும் உண்டாகும். முடிந்த வரை டான்ஸிலை எடுக்காமல் பாதுகாத்து அங்கு ஏற்பட்டுள்ள உபாதையைக் குணப்படுத்த முயற்சிப்பதே நல்லது.

வில்வத்தின் இலை, துளசி இவற்றில் ஒன்றையோ இரண்டையுமே தனித் தனியாக இடித்துப் பிழிந்த சாறை சம அளவில் எடுத்து, அவற்றிற்கு சமமான அளவில் நல்லெண்ணெய் கூட்டி அடுப்பிலேற்றி   மணல் பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து குளித்து வர, மூக்கடைப்பு, காதில் சீழ்வடிவது. தொண்டையில் சதை வளர்வது போன்றவை கட்டுப்படும். சில துளிகள்  காதில் விட, காதுகுத்தல், சீழ்வடிதல் குணமாகும். ஐந்து மி.லி. தைலத்தை வாயினுள்விட்டு கொப்பளித்து, வாயினுள் எச்சில் நிறைந்ததும் துப்புவதும் டான்ஸில் உள்ளவருக்கு நல்லது. ஒன்றிரண்டு துளிகளை மூக்கினுள் உறிஞ்சித் தும்மி - மூக்கைச் சிந்துவதால் மூக்கடைப்பு, ஜலதோஷம் முதலியவை குணமாகும். 

எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெய்யில் சில நாள் ஊற வைத்து, பிறகு அதை ஒரு கோணி ஊசியில் குத்திப் பிடித்துக் கொளுத்தவும். எரியும் போது அதிலிருந்து சொட்டும் சுடர் தைலத்தை ஒன்றிரண்டு துளிகள் காதில் ஊற்றி வர, குடம்குடமாக ஒழுகும் சீழ் கூட நின்றுவிடும்!

உள் மருந்தாக அஸ்வகந்தா லேகியம்,  கூஷ்மாண்ட ரசாயனம் போன்றவை சாப்பிட, அடிக்கடி வரும் தும்மல் முதல் ஆஸ்த்துமா வரை குணமாகும். உடலில் சகிப்புத்தன்மை வளரும். உடல் புஷ்டியடையும். வியாக்ரயாதி கஷாயம், தசமூலகடுத்ரயம் கஷாயம், தாளீசபத்ராதி சூரணம், தசமூலாரிஷ்டம், லக்ஷ்மீ விலாஸரஸம் மாத்திரை, வாயு குளிகை, ஹாரித்ரா கண்டம், வியோஷாதிவடகம் போன்றவை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட உகந்தவை. 

(தொடரும்) 
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com