நீரிழிவு மாத்திரைகளுக்கும் வாய் வறட்சிக்கும் சம்பந்தமா?

என் வயது 71. சர்க்கரை உபாதை கட்டுப்பாட்டிலிருந்தாலும், நடு இரவில் வாய், நாக்கு முழுவதுமாக உலர்ந்து போய்விடுகிறது.
நீரிழிவு மாத்திரைகளுக்கும் வாய் வறட்சிக்கும் சம்பந்தமா?

என் வயது 71. சர்க்கரை உபாதை கட்டுப்பாட்டிலிருந்தாலும், நடு இரவில் வாய், நாக்கு முழுவதுமாக உலர்ந்து போய்விடுகிறது. தண்ணீர் குடித்தாலும் கூட பிளாட்டிங் காகிதத்தைக் கொண்டு ஒத்தி எடுத்தாற்போல, மீண்டும் வாயின் உட்புறம், நாக்கு உலர்ந்து போய்விடுகிறது. இதற்கு என்ன காரணம், நிவாரணம் என்ன?

சுப்ர. அனந்தராமன் 
அண்ணாநகர்.

சர்க்கரை உபாதையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்துகளே, சில நேரங்களில் வாய், நாக்கு உலர்ந்து போவதற்குக் காரணமாகிவிடுகின்றன. இரவில், உமிழ்நீர் கோளங்கள் வறண்டு போய், எச்சில் சுரக்க முடியாமல் போவதற்குக் காரணம் - இரவு உணவும், மாத்திரைகளும் தான். வாயிலுள்ள உமிழ்நீர்கோளங்கள் நீரை நிறையச் சுரப்பதற்கு நிலம் மற்றும் நீர் சார்ந்த பொருட்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. இனிப்பான உணவுப் பொருட்களில் மட்டுமே, அதிக அளவில் இந்த இரு மகாபூதங்கள் பொதிந்திருப்பதாலும், அவை மூலம் தூண்டிவிடப்பட்ட கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைப்பு போன்றவை உமிழ்நீர் கோளங்களிலிருந்து உற்பத்தியாகும் நீரை, சுண்டவிடாமல் வாயில் நிரப்புவதாலும், வாய் உலர்ந்து போகும் தன்மையானது தடுக்கப்படுகிறது. சர்க்கரை உபாதை உள்ளவர்கள் இனிப்பு சாப்பிட்டால், சர்க்கரையின் அளவு கூடிவிடுமோ என்ற பயத்தின் காரணமாக, அதிக நெய்ப்பில்லாத வறண்ட உணவை பெரும்பாலும் பகலிலும், இரவிலும் தேர்ந்தெடுப்பதால், நிலம் மற்றும் நீர் ஆகியவற்றிற்கு எதிரான நெருப்பு, வாயு மற்றும் ஆகாயம் எனும் மகாபூதங்கள் கூடுவதால், பித்தமும் வாயுவும் இயற்கையாகவே கூடுகின்றன. உமிழ்நீர்க் கோளங்களை கடுமையாக வற்றச் செய்து, வாயை வறட்சியாக்குகின்றன. இரவில் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும், தண்ணீருடைய சிறப்பான குணங்களை உடல் வாங்கிக் கொள்ளாதவாறு இந்த மூன்று மகாபூதங்களும் தடுத்துவிடுகின்றன. 

அதனால் இரவு சாப்பாட்டில் சிறிது பசுநெய் சேர்த்துச் சாப்பிடுவதால், வாதம் மற்றும் பித்ததோஷங்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து வாயிலுள்ள போதகம் எனும் கபதோஷத்தினுடைய ஆளுமையைக் குறையாமல் பாதுகாக்கலாம். கோதுமை மாவை சப்பாத்திக்காகப் பிசையும் போது, ஆயுர்வேத மருந்தாகிய தான்வந்தரம் எனும் நெய் மருந்தை சிறிது உருக்கிச் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்தி இட்டு சாப்பிட்டால், சர்க்கரையின் அளவு கூடாமலும் உமிழ்நீர் வறட்சி ஏற்படாமலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகாமலும் பாதுகாக்கும். 

வெட்டிவேர் போட்டு ஊற வைத்த மண் பானைத் தண்ணீரை இரவு படுக்கும் முன் சிறிது அருந்துவதால், வாய் வறட்சி ஏற்படாமல் கவனித்துக் கொள்ளலாம். மாலையில், நல்ல சீரகம், கொத்துமல்லி விதை, நன்னாரிவேரின் பட்டை, ரோஜா புஷ்பம், தாமரை புஷ்பம் இவற்றை எல்லாவற்றையுமோ, கிடைத்தவற்றை மட்டுமோ சிறிதளவு மண்பானைத் தண்ணீரில் ஊறப் போட்டு வைத்து, இரவு படுக்கும்முன் சிறிது அருந்திப் படுத்தால், நடு இரவில் வாய் உலர்ந்து போகும் தன்மையைத் தவிர்த்து, வாயினுள் ஏற்படும் நுண்ணுயிரிகளையும் அழித்து, வாயைச் சுத்தமாகவும், ஈரப்பசையுடனும் வைத்திருக்கும்.
ஜலநஸ்யவிதி என்று ஒன்று இருக்கிறது. இரவு படுக்கும் முன் மல்லாந்து படுத்துக்கொண்டு சுமார் ணீ - 1 டீஸ்பூன் அளவு சுத்தமான நீரை மூக்கின் இரு துவாரங்களிலும் ஊற்றி சுவாசத்துடன் உள்ளே உறிஞ்சிக் கொள்ள வேண்டும். நீர் தொண்டை வழியே வாயில் வரும். அதைத் துப்பிவிடவேண்டியது. பேனாவிற்கு மசி நிரப்பும் குப்பியை (Ink filler) இதற்காக மட்டும் பயன்படுத்தி வர உடலில் தொய்வு ஏற்படாது. முடி நரைக்காது, கருடனுக்குச் சமமான கண்பார்வையுண்டாகும். மகத்தான அறிவாற்றலுடன் விளங்குவர் என்றெல்லாம் யோகசாஸ்திரம் வர்ணிக்கிறது. 
(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com