உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேதம் இருக்க கவலை எதற்கு?

ஆயுர்வேத மருத்துவருடைய ஆலோசனைப்படி, அளவும், உணவிற்கு முன் அல்லது பின் போன்ற விவரங்களையும் கேட்டறிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. 
உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேதம் இருக்க கவலை எதற்கு?


என் உயரம் 5 அடி நான்கு அங்குலம். எடை 99 கிலோ கிராம். க்ருதம் எனப்படும் நெய் மருந்துகள் உட்கொண்டால் பேதி ஆகிறது. எந்த எந்த நெய் மருந்துகளால் உடல் எடையைக் குறைத்திட முடியும்?

-ந. பாலாம்பாள், 
விருகம்பாக்கம் , சென்னை- 92.

"ருணம் க்ருத்வா க்ருதம் பிபேத்' என்று சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு. கடன் வாங்கியாவது நெய் சாப்பிடு என்று அதற்கு அர்த்தம் கூறலாம். நெய்க்கு அத்தனை முக்கியத்துவம் உணவில் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக நெய்யால் பேதி ஆகாது. நெய்யில் அடங்கியுள்ள மருந்துகளால் ஆகலாம். சூடான நெய், கையில் பட்டதும் "நெய் சுட்டுவிட்டது' என்கிறோம். நெய் ஒரு பொழுதும் சுடாது. ஏனென்றால் நெய் வீர்யத்தில் குளிர்ச்சியானது. நெய்யினுள் அடங்கியுள்ள சூடான தன்மை தான் கையைச் சுட்டு விட்டது. அதனால், நீங்கள் சாப்பிடும் நெய் மருந்துகள், எடையைக் குறைப்பதற்காகவா?அப்படியென்றால் அவற்றின் பெயர்கள் எவை? தங்களுடைய வயது?பசியின் தன்மை? போன்ற நிறைய விவரங்கள் தேவைப்படுகின்றன. 

பித்த தோஷத்தினுடைய குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடானவீர்யம், லேசு, துர்நாற்றம், குடலிலிருந்து எளிதாக நழுவும் தன்மை மற்றும் நீர்த்தநிலை போன்றவை உங்களுக்கு அதிகமிருந்தால், பசியினுடைய தீவிரத் தன்மையானது கூடுதலாக இருக்கும். அது போன்ற நிலையில், கசப்புச் சுவையுடைய சில நெய் மருந்துகளாகிய திக்தகம் க்ருதம், மஹாதிக்தகம் க்ருதம் போன்றவை சாப்பிட உகந்தவை. வாயு மற்றும் ஆகாயத்தை உள்ளடக்கிய கசப்புச் சுவையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இம் மருந்துகளின் வரவால் , குடலிலுள்ள நெருப்பின் இருப்பிடமாகிய பித்தம் குறைந்துவிடும். பசி சாதாரண நிலைக்கு வந்துவிடும். கசப்புச் சுவை, உடலிலுள்ள தேவையற்ற ஊளைச்சதைப் பகுதியை நீர்க்கச் செய்துவிடும் தன்மையுடையது. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் குறைத்து, அங்குள்ள விஷப்பொருட்களையும் உறிஞ்சி எடுத்து வெளிக் கொண்டுவரும் சக்தி உடையது. இதனால், தோலிலுள்ள உபாதைகளையும் குணப்படுத்திவிடும்.  உடல் எடையும் குறையும். பேதியாகாது.

வாயு தோஷத்தினுடைய குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, சொரசொரப்பு, நுண்ணியது, நகரும் தன்மை ஆகியவற்றால் பசித்தீயினுடைய தன்மையானது சில நேரங்களில் பசி சரியாக எடுப்பதும், பசி சரிவர எடுக்காமலிருப்பதும் போன்ற நிலையைக் குடலில் ஏற்படுத்தும். இப்படி ஏற்றக் குறைவுடன் கூடிய பசித்தீயினுடைய தன்மைக்கு ஏற்ப, அந்தக் குணங்களுக்கு எதிரிடையான தன்மையுடைய தாடிமாதி க்ருதம், குக்குலுதிக்தகம் க்ருதம் போன்ற மருந்துகளின் வரவால், குடலில் வாயுவானது மட்டுப்பட்டு, உடல் பருமனுக்கான காரணமாகிய சதை ஊட்டத்தைக் குறைத்துவிடும்.
கபதோஷத்தினுடைய ஆதிக்க குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழுகொழுப்பு, நிலைப்பு ஆகியவற்றால் குடலிலுள்ள பசியானது மந்த நிலையிலேயே இருக்கும். சிறு அளவு உணவு சாப்பிட்டாலே, போதும் என்ற எண்ணம் தோன்றும் அதை மாற்றுவதற்கு, வரணாதி க்ருதம், இந்துகாந்தம் க்ருதம் போன்றவை பயனளிக்கக் கூடும். கபதோஷத்தினுடைய குணங்களைக் குறைத்து, உடல் ஊட்டத்தைக் கரைத்துவிடும் செயலையும் இவை செய்துவிடுகின்றன.

உங்களுடைய பசியானது இம்மூன்று நிலையிலும் அல்லாமல், சீரான அளவிலேயே இருக்கின்றன. மூன்று வேளை உணவும் குறிப்பிட்ட நேர அமைப்பில் செரிமானமாகி விடுகிறது என்று நீங்கள் குறிப்பிட்டால், அதற்கு சமாக்னி என்று பெயர். அது போன்ற நிலையிலும், உடல் எடையைக் குறைக்க, கால நிர்ணயம் செய்து அதற்கேற்றாற் போல் மருந்து சாப்பிட வேண்டும். அதாவது காலையில் கப தோஷத்தினுடைய ஆதிக்கம் இயற்கையாகவே இருப்பதால், அப்பொழுது வரணாதிகிருதம், மதியம் பித்த தோஷ ஆதிக்க காலத்தில் திக்தகம் மஹாதிக்தகம் க்ருதமும், மாலையில் வாத தோஷ ஆதிக்ய காலத்தில் குக்குலுதிக்தக க்ருதமும் சாப்பிட்டு நீங்கள் பயன்பெறலாம். ஆயுர்வேத மருத்துவருடைய ஆலோசனைப்படி, அளவும், உணவிற்கு முன் அல்லது பின் போன்ற விவரங்களையும் கேட்டறிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. 

(தொடரும்) 
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com