குடல் வாதம் எனும் நோயும், அதற்கான சிகிச்சை முறைகளும்.. விரிவான பார்வை

'குடல்வாதம்' என்று ஒரு நோய் உண்டு என்றால், அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்? அதற்கான மருத்துவம் என்னவென்று கூறுங்கள்?
குடல் வாதம் எனும் நோயும், அதற்கான சிகிச்சை முறைகளும்.. விரிவான பார்வை

'குடல்வாதம்' என்று ஒரு நோய் உண்டு என்றால், அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்? அதற்கான மருத்துவம் என்னவென்று கூறுங்கள்?

-கே. வேலுச்சாமி, தாராபுரம். 

பைஷஜ்ய ரத்னாவளி எனும் ஆயுர்வேத நூலில் - குடல்வாதம் ஏற்படத்தக் கூடிய காரணங்களும், அவற்றின் வகைகளும், சிகிச்சைகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. வறண்ட மாமிச வகை உணவுகள், முள்ளங்கி, மீன், நீர்வற்றிப் போன கறிகாய்கள், பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, கிழங்குகள், இனிப்பான பழங்கள், ஒவ்வாமை உணவுகள்( உதாரணம் - மீனும் பாலும், பாலும் உப்பும், வாழைப்பழமும் மோரும்), மலச்சிக்கலையும் செரிமான தாமதத்தையும் ஏற்படுத்தும் மைதா, ரவை போன்றவை, உடல் உட்புற நீர்த்திரவங்களை தடுத்து வெளியேற்றாமல் செய்யும் உணவு, வாந்தியை வலுக்கட்டயமாக அடக்குதல், அதிக அளவில் தண்ணீரையும் மற்ற திரவங்களையும் அருந்துதல் போன்ற சில காரணங்களால் குடல்வாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

உடல் முழுவதும் மூலிகைத் தைலத்தை வெது வெதுப்பாகத் தடவி, மூலிகை நீராவிக் குளியல் மூலம் குடல் வாயுவை பெருமளவு குறைக்கலாம். இதன் மூலம் உடல் உட்புற குழாய்கள் மிருதுவான தன்மையை அடைந்து, குடல் வாயுவை கீழ்ப்புறமாக வெளியேற்றி, மலச்சிக்கலையும் நீக்குவதால், இன்று ஆயுர்வேத மருந்துவமனைகளில் இந்த சிகிச்சை, முக்கிய அங்கமாக விளங்குகிறது.

தசமூலம் எனும் பத்து வகை வேர்களால் தயாரிக்கப்பட்ட கஷாயத்தை, அரிசியுடன் வேகவைத்து, வெது வெதுப்பாக சாதம் வடித்து, மாமிச சாறு கலந்து சாப்பிடுவதன் மூலமாகவும் குடல் வாயுவை வெளியேற்றலாம். மாமிச சாறு விரும்பாதவர்கள், ரசம் மோர் போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து சாப்பிடலாம்.

நார்த்தங்காய் சாறு பிழிந்து அதில் சிட்டிகை- பெருங்காயம், மாதுளம் பழச்சாறு, இந்துப்பு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சிறிது பருகி வர குடல்வாதம் நன்கு குணமடையும். 

23 கிராம் சுக்குத்தூள், 23 கிராம் எள்ளு பொடி, 46 கிராம் வெல்லம் ஆகியவை கலந்து உருண்டை பிடித்து, சிறிது சூடான பாலுடன் மாலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர, குடல்வாதத்திற்கு நல்ல மருந்தாகும்.

200 மி.லி. சூடான பாலுடன் 25 மி.லி. நல்ல விளக்கெண்ணெய் கலந்து வாரமிருமுறை காலையில் சாப்பிட, குடல்வாயுவும் மலச்சிக்கலும் முழுவதுமாக நீங்கிவிடும்.

187 கிராம் தோல் நீக்கிய சிறியவகை பூண்டு, 750 மி.லி. பால் மற்றும் 750 மி.லி. தண்ணீருடன் கலந்து கொதிக்கவிட்டு, பால் அளவு குறுகியதும் வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக பருகி வர, குடல்வாதம், ஏப்பம், இடுப்பிலிருந்து பின் தொடைவழியாக இறங்கும் நஇஐஅபஐஇஅ நரம்புவலி, முறைக்காய்ச்சல், இதய நோய்கள், கட்டிகள், வீக்கம் போன்ற உபாதைகளை குணப்படுத்தும்.

15 கிராம் உலர்திராட்சையை, 500 மி.லி. தண்ணீரில் கொதிக்கவிட்டு, 100 மி.லி. வற்றியதும் வடிகட்டி, 15 கிராம் வெல்லம் கலந்து காலையில் பருக, குடல்வாதத்துடன் பித்தம் சேர்ந்து ஏற்படும் எரிச்சலைக் குணப்படுத்திவிடும். அதுபோல 15 கிராம் திரிபலா சூரணத்தை 500 மி.லி. தண்ணீருடன் காய்ச்சி, 100 மி.லி. ஆகக் குறுகியதும் வடிகட்டி, 5 கிராம் சிவதை வேருடன் சாப்பிட நீர்பேதியாகி, பித்தம் மற்றும் வாயுவினால் ஏற்படும் குடல்வாதத்தைக் குணப்படுத்தும்.

பித்த எரிச்சலுடன் கூடிய ஏப்பம், கீழ்காற்று வேக்காளத்துடன் வெளியேறுவது போன்றவை குடல்வாயுவுடன் பித்தமும் கலந்துள்ளதை அறிவிக்கின்றன. அது போன்ற நிலையில் - உலர்திராட்சை, கடுக்காய் தோல் ஆகியவை 10 கிராம் வீதம் எடுத்து, 500 மி.லி. தண்ணீரில் கொதிக்கவிட்டு 100 மி.லி. ஆக வற்றியதும் வடிகட்டி, 5 கிராம் வெல்லம் கலந்து பருக, ஓரிருமுறை நீர் பேதியாகி, குணப்படுத்திவிடும். திரிபலை சூரணம் 5 கிராம், சர்க்கரை 5 கிராம் தேன் 5 கிராம் குழைத்துச் சாப்பிடுவதும் நல்லதே.

50 மி.லி. நெல்லிக்காய் சாறுடன் 5 கிராம் சர்க்கரை கலந்து சாப்பிடுவதன் மூலம் முன் குறிப்பிட்ட பித்தம் கலந்த குடல்வாதம் குணமாகும்.

ஆசனவாய் வழியாக எண்ணெய் கொடுப்பதும் கஷாயம் கொடுப்பதும் குடல்வாதத்தை குணப்படுத்தும் சிறந்த சிகிச்சை முறையாகும்.

இன்றைய வாழ்க்கை முறையில் மனிதர்கள் செய்யக் கூடிய சில தவறான செயல்கள் மற்றும் உணவுகளாகிய அதிக நடனம், பாட்டு, பேச்சு, உடற்பயிற்சி, ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்திருத்தல், அதிக குளிர்பானம் அருந்துதல், கொடிக் காய்களாகிய பாகற்காய், அவரைக்காய், பீன்ஸ், பரங்கிக்காய் போன்றவற்றை உணவாக சமைத்து ஆறிய நிலையில் சாப்பிடுதல். உணவில் அதிகம் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை ஆகியவை அதிக அளவில் சாப்பிடுதல் போன்றவற்றால் குடல்வாதம் எனும் நோய் ஏற்படக் கூடும்.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com