தோலுக்கு வலுவூட்ட... செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்

தோலில் ஏற்படக்கூடிய புதிய அணுக்களின் உற்பத்தியானது வயோதிகத்தில் குறைந்துவிடும். தோலைச் சார்ந்த ப்ராஜதம் எனும் பித்தத்தினுடைய
தோலுக்கு வலுவூட்ட... செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்

ஓய்வூதியரான எனது வயது 72. மணிக்கட்டுகள், புறங்கைகள் மற்றும் தலைமுடி ஆகியவற்றில் ஓயாத அரிப்பு உள்ளது. சொறிந்தால் வெள்ளை நிற செதில்கள் உதிர்கின்றன. இதற்கு ஆயுர்வேத மருத்துவம் பற்றி விளக்கக் கோருகிறேன். 
- த. நாகராஜன் - சிவகாசி.

தோலில் ஏற்படக்கூடிய புதிய அணுக்களின் உற்பத்தியானது வயோதிகத்தில் குறைந்துவிடும். தோலைச் சார்ந்த ப்ராஜதம் எனும் பித்தத்தினுடைய ஊட்டச்சத்தானது வயிற்றிலிருந்து செயல்படக்கூடிய பாசகம் எனும் பித்தத்தினுடைய சீரான செயல்பாட்டின் மூலமே பெற முடியும் என்பதால், தங்களுடைய அடிப்படை ஆரோக்கியமானது உட்புற வயிற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியிருப்பதால் நீங்கள் பசியை சீராக வைத்திருக்கக் கூடிய பாசகபித்தத்தினுடைய சிறப்பான அம்சங்களை வயோதிகத்தில் இழக்காதிருக்க வேண்டும். அதற்கு உணவில் நெய்ப்பு தரக் கூடிய நெய், உளுந்து, எள்ளு, தேங்காய்ப்பால் போன்றவையும், ஊடுருவும் தன்மையைக் கொண்ட இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவையும், பித்தத்தினுடைய சூட்டைப் பாதுகாக்கக் கூடிய மசாலாப் பொருட்கள், நார்த்தங்காய் வற்றல் ஆகியவையும், எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகளாகிய கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை முறையான அளவில் சேர்த்துக் கொள்வதும், திரவப்பொருட்களாகிய மோர், பழரசங்கள் போன்றவையும் மிகுந்த கவனத்துடன் குடலில் சேர்க்கப்படுமேயானால், தங்களுடைய பாசகபித்தத்தினுடைய சிறப்பான செயல்களைப் பாதுகாப்பதுடன், அதன் வழியே கிடைக்கக் கூடிய ஊட்டச் சத்தும் தோலுக்கு வந்து சேர்வதால், முன் குறிப்பிட்ட ப்ராஜகம் எனும் பித்தம் நன்கு செயல்படத் தொடங்குவதால் ஏற்பட்டிருக்கக் கூடிய ஓயாத அரிப்பும், சொறிந்தால் வெள்ளை நிறச் செதில்கள் உதிர்வதும் குறைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

பாசகபித்தத்தினுடைய கெடுதல்களை நீக்கக் கூடிய ஆயுர்வேத மருந்தாகிய மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை மதியவேளைகளில் உணவிற்கு சுமார் ஒருமணிநேரம் முன்பாக பத்து முதல் பதினைந்து கிராம் வரை வாரம் இருமுறை நக்கிச் சாப்பிடுவதால், இரண்டு மூன்று முறை கழிச்சல் ஏற்பட்டு பித்தமானது சுத்தமடைந்துவிடும். கசப்புச் சுவையுடைய திக்தகம் எனும் நெய்மருந்தை காலை, மாலை இருவேளைகளிலும் சுமார் பத்து முதல் பதினைந்து மில்லி லிட்டர் வரை நீராவியில் உருக்கி வெறும் வயிற்றில் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். இதன் மூலமாகவும் தோலில் ஏற்பட்டிருக்கக் கூடிய கெடுதல்கள் நீங்குவதுடன் பித்தமும் சீராகச் செயல்படும். இவை இரண்டு மருந்துகளும் தோல்களில் உள்ள அணுக்களின் கெடுதிகளைப் போக்கி நெய்ப்பு தரக்கூடியவை. உட்புற சுத்தத்தை மேம்படுத்தக்கூடிய இந்த லேகிய மருந்தும் குடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றக் கூடிய இந்த நெய் மருந்தினுடைய உபயோகமும் மட்டுமே போதுமானவையல்ல. 

தோல்களுக்கு வலுவூட்டி அங்குள்ள கெடுதிகளை அகற்றக் கூடிய நால்பாமராதி எனும் தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சக் கூடிய மூலிகைத் தைலமும், தலைக்கு அருகம்புல் கொண்டு தயாரிக்கப்படும் தூர்வாதி எனும் தேங்காய்எண்ணெய் மருந்தும் உபயோகிக்கச் சிறந்தவை. காலையில் இவ்விரு எண்ணெய்களையும் வெதுவெதுப்பாகத் தேய்த்து சுமார் அரை மணி முதல் முக்கால் மணி வரை ஊறிய பிறகு வெதுவெதுப்பான மூலிகைத் தண்ணீராகிய வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, கருங்காலிக்கட்டை, புங்கம்பட்டை, நால்பாமரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை ஆகியவற்றில் கிடைத்த மட்டில் சேர்த்து குளித்த பிறகு முன்குறிப்பிட்ட மூலிகை நெய் மருந்தைச் சாப்பிட்டு அதன்மேல் கருங்காலிக்கட்டை சுமார் பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி அரை லிட்டராகக் குறுக்கிய மூலிகைத் தண்ணீரை நூறு மில்லி லிட்டர் வரை வெதுவெதுப்பாக அருந்தவும். இதேபோல மாலையிலும் நெய்மருந்தை அருந்திய பிறகு மூலிகைத் தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிக்கவும். 

தவிர்க்கக் கூடிய உணவு வகைகளாகிய புளித்த தயிர், நல்லெண்ணெய், கடுகு, புலால் உணவு, கத்திரிக்காய் போன்றவற்றைச் சேர்க்க வேண்டாம். பகல் தூக்கத்தைத் தவிர்க்கவும். இரவில் எந்தக் காரணம் கொண்டும் புளிப்புப் பொருட்களாகிய புளியோதரை, புளித்த தயிர், புளிப்பான ஊறுகாய் வகைகள், பழைய சாதம் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். பருத்தி ஆடைகளை அணிவதே நல்லது. அவற்றையும் சோப்புத்துகள் நன்றாக அகலுமாறு தண்ணீரில் அலசி வெயிலில் உலர்த்திய பிறகே பயன்படுத்துவது என்ற விஷயத்தில் நீங்கள் கவனமாக இருத்தலும் நலமாகும். காலில் அணியக் கூடிய பாத அணிகள் அதிகமான அளவில் தடிமனாகவும், தோல்பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும் அல்லாமல், மிருதுவான காலணிகளையே அணியவும். வெயிலில் செல்லும்பொழுது கருப்பு அல்லாத மற்ற நிறங்களில் குடையைப் பயன்படுத்தவும். குளிர் கண்ணாடிகளை கண்களில் அணிவதால் உடல் சூடு அதிகரிக்காமல் பாதுகாக்கும். தங்கம் அல்லாத பிற ஆபரணங்களை அணிய வேண்டாம்.  
(தொடரும்)


பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com