பருப்புகளினால் ஏற்படும் வாயுவில் இருந்து தப்பிக்க எளிய வழி

பருப்பு வகைகள் பலதும் வாயுவை அதிகபடுத்தும் என்று பல கட்டுரைகளில் நீங்கள் தெரிவித்து வருகிறீர்கள்.
பருப்புகளினால் ஏற்படும் வாயுவில் இருந்து தப்பிக்க எளிய வழி

பருப்பு வகைகள் பலதும் வாயுவை அதிகபடுத்தும் என்று பல கட்டுரைகளில் நீங்கள் தெரிவித்து வருகிறீர்கள். எப்படி சாப்பிட்டால் வாயுவைக் குறைக்க முடியும்? ஒரு சில மருத்துவ குணங்களை விவரிக்க முடியுமா?

- சிவகாமி, திருச்சி.

பருப்பு வகைகள் அனைத்துமே ஜீரணமாகத் தாமதமாகுபவை. புளிப்பையும் எரிச்சலையும் அதிகப்படுத்துபவை. வயிற்றில் வாயு அழுத்தத்தை அதிகமாக்குபவை. இவற்றைத் தண்ணீரில் ஊற வைத்துத் துணியில் இறுகக் கட்டி முளைக்க வைத்துப் பின் குத்திப் புடைத்து வைத்துக் கொள்வதுண்டு. முளை நீங்குவதால் இவை எளிதில் செரிக்கும். வறுத்து உபயோகிக்க மேலும் லேசான தன்மையை அடைகிறது. நெய்யில் சேர்த்துச் சாப்பிட வறட்சி தராது. இவற்றில் உளுந்து நல்லது. காய்ச்சல் உள்ள நிலையில் பச்சைப் பயறு நல்லது. களைப்பு சோர்வுள்ள நிலையில் பச்சைப் பயறும், துவரம் பருப்பும் நல்லது. மாதவிடாய் சிக்கல், இரவில் அதிகம் சிறுநீர் போகுதல் இவற்றிற்கு எள்ளு நல்லது. வாயில் பற்களிடுக்கில், தொண்டையில், மலத்தில் ரத்தக் கசிவிருந்தால் துவரம் பருப்பு நல்லது. மூலம் சிறுநீர்த் தாரையில் கல்லடைப்பு, விக்கல், மூச்சுத்திணறல் முதலியவற்றுக்கு கொள்ளு நல்லது.

துவரை- நல்ல வலிமை தரும் பொருள். படுக்கையிலேயே வெகு நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்தவர், மிக மெலிந்தவர் திரும்பவும் வலுவடைய ஏற்றது. பட்டினி முடிவிற் சேர்க்கத்தக்க பத்திய உணவு. உடலுரம் கூடச்செய்யும். உள் அழற்சி ஆற்றும். அதனால் உணவு வரிசையில் இதற்கு முதல் இடம். தோல் நீக்கிய பருப்பு உணவாகிறது. மிக பலவீனமானவர், வயிற்றில் வாயு சேர்பவர் இதனை லேசாக வறுத்துச் சேர்ப்பர். காரம், புளிப்பு, உப்பு இவை இரைப்பையைப் புண்படுத்தாமலிருக்க துவரம் பருப்பு அவற்றிற்கு நடுவே நின்று உதவுகின்றது.

துவரம் பருப்பை வேக வைத்து அதன் தண்ணீரை இறுத்து அதில் மிளகு, பூண்டு சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போதும், பருப்பை வறுத்து அரைத்து துவையலாகச் சாப்பிடும் போதும், வாயு அழுத்தம் குறையும். 
காராமணி- இனிப்பும் குளிர்ச்சியும் உள்ளது. சிறுநீர் பெருக்கி. உப்பும் வெல்லமும் சேர்த்து வேகவைத்து உண்பதுண்டு. வாயுத் தொந்தரவு, பேதி உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. 

உளுந்து- நல்ல புஷ்டி தரும் புரதசத்து நிறைந்தது. செரிப்பதற்குத் தாமதமாகும். உடல் மூட்டுகளுக்கு எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தரும். இதில் பெரும் பகுதி மலமாக மாறுவதால் அதிக அளவில் உபயோகித்தால் சிறுநீரும் மலமும் அதிகமாகி அடிக்கடி வெளியாகும். 

நரம்புகளிலும் தசைகளிலும் வலியும் எரிச்சலும் உள்ள நிலையில் உளுந்தை வேக வைத்துச் சூட்டுடன் தேய்க்க வலி நீங்கும். உளுந்து சேர்த்து தயாரிக்கப்படும் மஹாமாஷ தைலம், தசைகளிலும் மூட்டுகளிலும் ரத்தக் குழாய்களிலும் வறட்சி அதிகமாகி எண்ணெய் பசையில்லாமல் அசைக்கக் கூட முடியாத நிலையில், இது எண்ணெய்ப் பசையை அளித்து வறட்சியைப் போக்கி, உட்புற பூச்சையும் பிசுபிசுப்பையும் அளித்து தசைகளைத் தளர்த்தி வேதனையை குறைக்கும். உளுந்தையும் கொள்ளையும் வேக வைத்து அதன் கஷாயத்தால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்க உதவும்.

கொள்ளும், அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி நல்ல பசி, உடல் பலம், விந்தணு வீர்ய வளர்ச்சி, சுறுசுறுப்பு தரக்கூடியது. பச்சைக் கொள்ளை நீர் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றைத் தினம் பருகிவர வற்றிய உடல் பருக்கும். தூண்போல் உரத்து நிற்கும், வறட்சி, சளியுடன் இருமல், சளியால் மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றை நீக்கும். ஒரு பங்கு கொள்ளை பத்து பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட சிறுநீரகம், பித்தப்பை முதலான இடங்களில் ஏற்படும் கற்கள் கரைந்து வெளியாகும். பிரசவ அழுக்கு வெளியேற இந்த நீர்த்தக் கஞ்சி உதவும். 

கடலை - நல்ல புஷ்டி தரும் பருப்பு. அதிக அளவில் வயிற்று உப்புசம், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அழுத்தம், ஜீரணமில்லாத பெருமலப் போக்கு, தலைசுற்றுதல் இவற்றையும் ஏற்படுத்தும். 

பச்சைக்கடலை - நல்ல வாளிப்பைத் தரும். உடலை ஊட்டப்படுத்தி தசைகளை நிறைவுறச் செய்யும். நுரையீரலுக்குப் பலம் தரும். கடலையைச் சற்றுக் கருக வறுத்து பொடித்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல், மூத்திரத்தடை நீங்கும். கடலையை லேசாக வேக வைத்து மென்று சாப்பிட்டு மேல் பால் சாப்பிட நீர்க்கோர்வையும் இருமலும் விலகும்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com