முகங்களைப் போலவே பாதங்களையும் கவனிக்க வேண்டும்.. பித்த வெடிப்புக்கு இதோ தீர்வு! 

பனி வறட்சியும், உடல் உட்புற வறட்சியும் இதற்குக் காரணமாகலாம். நாம் முகத்தை அடிக்கடிப் பார்த்து அழகுறச் செய்துகொள்வது
முகங்களைப் போலவே பாதங்களையும் கவனிக்க வேண்டும்.. பித்த வெடிப்புக்கு இதோ தீர்வு! 

எனது குதிகாலின் விளிம்புப் பகுதிகளில் பாளம் பாளமாக பித்த வெடிப்பு உள்ளது. மேல் தோல் உரிந்து பயங்கர வலி, இதைக் குணப்படுத்த என்ன வழி?

- ஸ்ரீராம் பராசரன்,
விருகம்பாக்கம், சென்னை- 92.

 பனி வறட்சியும், உடல் உட்புற வறட்சியும் இதற்குக் காரணமாகலாம். நாம் முகத்தை அடிக்கடிப் பார்த்து அழகுறச் செய்துகொள்வது போல, பாதத்தைச் செய்து கொள்வதில்லை.

 குதிகால், பாதம், பாத விரல் இடுக்கு, விரல் நக இடுக்கு ஆகிய பகுதிகளில் சிறிதும் அழுக்கு சேராதவாறு பார்த்துக் கொள்வது நல்லது என்பது ஆயுர்வேத உபதேசம். அப்பகுதிகளில் தோல் மென்மையை அதிகப்படுத்தி, வறட்சியாகாமல் பார்த்துக் கொள்வது நலம். கால் பாதத்தை இதமாகப் பிடித்து விடுவதால், ரத்த ஓட்டமானது சுறுசுறுப்படைகிறது.

 வறட்சியாகக் காண்பதற்குக் காரணம், வாயுவின் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சொர சொரப்பு போன்றவற்றின் ஆதிக்க இருப்பிடமாகப் பாதம் இருப்பதால் தான். மென்மையையும், வறட்சியைப் போக்கும் ஆயுர்வேத களிம்பு மருந்துகள், இந்தப் பிரச்னைக்குத் தீர்வைத் தரலாம். உங்கள் உடல்தன்மையை மருந்துவரிடம் கண்டறிந்து, ஜீவந்தியாதி யமகம், சததௌதகிருதம், சிந்தூராதிலேபம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

 அதிக உடல் எடையினால் குதிகால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் வெடிப்பு ஏற்படும். அதுபோன்ற நிலைகளில் மேற்குறிப்பிட்ட களிம்புகளின் பயன்பாடு மட்டும் போதாது. உடல்பருமனையும் குறைக்க வேண்டும். வெடிப்பு, வலி, உடல்பருமன் ஆகியவற்றைக் குணப்படுத்தும் வகையில் சிறிது குக்குலுதிக்தகம் எனும் நெய்மருந்தை, 48 முதல் 60 நாள்கள் வரை பயன்படுத்தலாம். கால்களுக்கு காலணி மட்டும் உபயோகப்படுத்துவது போதாது. காலுறை அணிந்து அதன் மேல் கேன்வாஸ் ஷூ அணிவதால், பாதங்களிலுள்ள மென்மையைப் பாதுகாக்கலாம்.

உடல் சூட்டினுடைய அதிகப்படியான சீற்றத்தாலும், பித்தத்தினுடைய சீற்றத்தாலும் சிலருக்கு பித்தவெடிப்பும், குதிகால் வலியும் ஏற்படலாம். அப்போது பித்தசூட்டைக் குறைக்கும் வகையில், இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவையை முக்கிய உணவாகக் கொள்வதாலும், பித்தத்தை வெளியேற்றும் பேதி மருந்துகளாகிய அவிபத்தி சூரணம், திருவருத்லேஹ்யம், மாணிபத்ரம் எனும் லேஹிய மருந்துகளை மருந்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதாலும் நிவாரணம் பெறலாம்.

கால் பகுதிகளில் ரத்தக்குழாய் சுருட்டல்களால் ரத்த ஓட்டத் தடையின் காரணமாக, சிலருக்குப் பித்த வெடிப்பு ஏற்படலாம். நீண்ட நேரம் நிற்பதும், கால்களை அதிக நேரம் தொங்கவிட்டபடி அமர்ந்திருப்பதாலும், கால் பாதங்களுக்கு வந்து சேர வேண்டிய ஊட்டத் தடையின் விளைவாக, பாளம் பாளமாக வெடிக்கக் கூடும். பிண்டதைலம், முரிவெண்ணெய் போன்ற தைலங்களைக் கலந்து முட்டியிலிருந்து பாதம் வரை வெது வெதுப்பாகத் தடவி, சுமார் 20 முதல் 30 நிமிஷங்கள் பாதங்களைப் பிடித்து விட்டு, வெது வெதுப்பான தண்ணீரால் கழுவுவதால், ரத்த ஓட்டத் தடை நீங்கி, பாதங்கள் வலும்பெறும்; வெடிப்புகளும் மறையும்.

தரையிலுள்ள சில்லிப்பான தன்மையால் குதிகால் பகுதிகளில் தோல் வறண்டு வெடித்து விடக்கூடும். வெடிப்பினுடைய உட்பகுதிகளில் அழுக்கும் அண்டக்கூடும். அதனால், கால் பாதங்களுக்குக்கு மென்மை தரும் காலணிகளை வீட்டினுள் ஒன்றும், வெளியே செல்லும்போது ஒன்றுமாகப் பயன்படுத்தினால் பித்த வெடிப்பைத் தவிர்க்கலாம்.

ஒரு சில பயிற்சிகள் மூலமாக கால் பாதங்களில் உள்ள நரம்புகளையும் தசைகளுக்கான ஊட்டத்தையும் பெற இயலும். கீழே படுத்த நிலையில் பாதங்களை உயரத் தூக்கி மேலும் கீழுமாகவும் குறுக்குவாட்டிலும் உருட்டி உருட்டி அசைத்து சுமார் 5 முதல் 10 நிமிஷங்கள் செய்து வந்தால் ரத்தத்தின் வழியாக ஊட்டச்சத்து சென்று தசைகள் வலுப்பெறும். அதன் பிறகு சிறிது விளக்கெண்ணெய்யைத் தடவி வெதுவெதுப்பான உப்பு கரைத்த வெந்நீரில் கால் பாதங்களை முக்கி சிறிது நேரம் வைத்திருந்து இதமாகப் பிடித்து விடுவதால் பாதம் வளவளப்பாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com