வயிற்று நோய்களும்... உணவுக்கட்டுப்பாடும்!

வயிற்று நோய்களும்... உணவுக்கட்டுப்பாடும்!

உங்களுக்கு உணவைச் செரிக்கச் செய்யும் ஜீரண சக்தி குறைந்துள்ளதாகத் தோன்றுகிறது

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு அடிக்கடி வயிற்றில் மப்பு நிலை ஏற்பட்டு கீழ் வாயுத் தடை, ஏப்பம், செரிமானக் குறைவு, நெஞ்செரிச்சல், நூலாக சளி வெளியேறுவது போன்ற பலவகை உபாதைகளால் அடிக்கடி கஷ்டப்படுகிறேன். இது எதனால் ஏற்படுகிறது? இதை எப்படிக் குணமாக்குவது?

சக்திவேல், காஞ்சிபுரம்.

உங்களுக்கு உணவைச் செரிக்கச் செய்யும் ஜீரண சக்தி குறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. ஜீரண சக்தி என்பது உட்செல்லும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அதை உடலின் பகுதியாக அமைப்பதே. உணவை அன்னச்சத்தாக மாற்றுவதுடன் நிற்காமல் அதனை ரத்தமாக , தசையாக, எலும்பாக, உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியாக மாற்றும் சக்தி இது. வெளிப் பொருளை -உணவை- உடலாக மாற்றும் திறமை இதற்கு உண்டு. இதை ஜாடராக்னி (ஜடாரம் - வயிறு), இரைப்பை முதல் பெருங்குடல் வரை உள்ள பகுதி, அதிலுள்ள சூடு என்று அழைக்கப்படுகிறது. மப்பு நிலை ஏற்பட உணவை அதிக அளவில் சாப்பிடுவது மட்டுமே காரணமாகாது. தனக்குப் பிடிக்காத வெறுப்பான உணவை பிறருடைய கட்டாயத்தினால் சாப்பிட நேர்வதாலும், குடலில் வாயுவையும் மலக்கட்டையும் ஏற்படுத்தக் கூடிய சூடு ஆறிய நிலையிலுள்ள கிழங்குகளைச் சாப்பிடுவதாலும், அதிகம் வெந்தததையும், வேகாததையும் சேர்த்துப் புசிப்பதாலும், எளிதில் செரிக்காத , வறட்சி மற்றும் குளிர்ச்சி நிறைந்த பொருளை உண்பதாலும், சுத்தமல்லாத பொருளை உணவாகச் சாப்பிடுவதாலும், குடல் உட்புறங்களில் வேக்காட்டை ஏற்படுத்தும் காரக்குழம்பு, ஊறுகாய் போன்றவற்றாலும், வறண்டு போனதும், அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் கிடப்பதையும் வருத்தம், கோபம், அதிகப்பசி போன்ற நிலையில் சாப்பிடப்படும் உணவும் செரிக்காமல் ஜாடராக்னியைக் கெடுத்து மப்புநிலை ஏற்படக் காரணமாகிறது.

செரிமானத்துக்கு உதவும் வயிற்றிலுள்ள ஸமானன் எனும் வாயுவுடன் இந்த மப்புநிலை அடைந்த உணவு கலந்தால், வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு அசைவற்று நின்றுவிடுதல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கும். பித்தம் சீரணமாகாத உணவுடன் சேர்ந்தால் உணவில் கெட்ட நாற்றத்தை உண்டு பண்ணி, எரிச்சலுடன் கூடிய ஏப்பத்தை ஏற்படுத்தும். வயிற்றில் குழகுழப்பும், கனமும் உண்டாகும். "க்லேதகம்' எனும் கபத்துடன் செரிக்காத உணவு கலந்து விட்டால், உணவு அழுக்கடைந்ததும், நூல் போன்றும், கெட்டியாகவும், பிசுபிசுப்பாகவும் ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையதாகவுமிருக்கும்.

அதனால் ஜாடராக்னிக் குறைவினால் இரைப்பையில் உணவும், உணவின் முதல் சாரமான அன்னச்சத்து முழுவதும் சீரணமாகாமல், குடல் வழியாக உட்புறப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, குழாய்களின் அடைப்பு, பலக்குறைவு, உடல் கனத்தல், கீழ் வாயுத்தடை, சோம்பல், தாதுக்களில் செரிக்காத நிலை, உமிழ்நீரைத் துப்புதல், மலம் வெளியேறாமல் தங்குதல், ருசியின்மை, ஆயாசம் போன்ற குறிகளை வெளிப்படுத்தும்.

உட்புறங்களில் பகைமை குணங்களைக் கொண்ட மப்புநிலையை ஜீரணிக்கச் செய்தல், ஜாடராக்னியை வளர்த்தல், சூடும், ஊடுருவும் தன்மையும் கொண்ட மருந்துகளால் தயாரித்த எண்ணெய் வகை, வியர்வை சிகிச்சை இவற்றால் மப்பான நிலையை ஜீரணிக்கச் செய்து, இளக்கி, குடலுக்குள் கொண்டு வந்து, வாந்தி மற்றும் பேதி மூலமாக வெளியேற்றுதல், தலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தால் மூக்கில் எண்ணெய் மருந்தைச் செலுத்தி வெளிக் கொணருதல் போன்ற சிகிச்சை முறைகளால் வெளியேற்ற வேண்டும்.

இத்தனை கஷ்டமான சிகிச்சை முறைகளுக்கு காரணமாக அமைவது, நாக்கின் சபலத்தால் வயிற்றிலுள்ள ஜாடராக்னியை கெடுத்துக் கொள்வதால்தான். அதனால் நீங்கள் உணவில் கட்டுப்பாடும், செரிமானக் கோளாறுகள் ஏற்படா வண்ணம் கவனத்துடன் இருத்தலும் அவசியமாகும்.
(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com