கார்த்திகை, மார்கழியில் ஏற்படும் உடல் உபாதைகளுக்குத் தீர்வு?

கார்த்திகையின் கடைசி எட்டு நாட்களும் மார்கழியின் முதல் எட்டு நாட்களும் யமனின் தெற்றுப்பற்கள்.
கார்த்திகை, மார்கழியில் ஏற்படும் உடல் உபாதைகளுக்குத் தீர்வு?

கார்த்திகை - மார்கழி - தை மாதங்களில் ஏற்படும் மழை - பனி நாட்களில் தசைப்பிடிப்பு - முழங்கால் மூட்டுப்பிடிப்பு, இடுப்பு, கழுத்து விலாபிடிப்பு ஏற்பட்டு அவதியுறுகிறேன். ஏன் இம்மாதங்களில் இப்படி ஏற்படுகிறது? இவை வராதிருக்க என்ன செய்வது?

-சிவகுருநாதன், தஞ்சாவூர்.

ஆண்டு முழுவதும் நடைபெறும் பிறப்பு இறப்புக்களின் விகிதம் கார்த்திகை மார்கழி மாதங்களில் அதிகமாகக் காணப்படும். கார்த்திகையை பிறப்பு மாதம் எனவும் மார்கழியைச் சூனிய மாதம் எனவும் குறிப்பிடுவதுண்டு. அதிக அளவு மரண விகிதத்தைக் கொண்ட மாதம் என்பதால் மார்கழி சூனியமாகும். திருமணங்கள் நடைபெறாததால் விருந்துகள் கிடைக்க வாய்ப்பில்லாததாலும் சூனியமாகலாம். கேளிக்கை விருந்துகளுக்கேற்ற மாதம் இவையல்ல. உணவுக் கட்டுப்பாடு மிக அதிகமாகத் தேவையான மாதங்கள் இவை. குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு போன்ற குடல் கோளாறுகள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இயற்கை மாறுதலால் ஏற்படும் வாய்ப்புள்ள காலம் இவை.

சாரங்கதரர் என்ற வைத்தியத் தொகுப்பு நூலாசிரியர் குறிப்பிடுவதாவது:

கார்த்திகையின் கடைசி எட்டு நாட்களும் மார்கழியின் முதல் எட்டு நாட்களும் யமனின் தெற்றுப்பற்கள். இதில் மிதமான உணவை ஏற்பவன் வாழ்வான் என்கிறார். அதாவது யமனின் பிடியில் அகப்படாதிருக்க உணவை மிதமாகக் கொள்க என்று கூறுகிறார்.

மழை நின்றதும் ஏற்படும் பனி கடுமையாவதற்கு முன்பே பருவ மாற்றத்திற்கேற்ப ஜீரண உறுப்புகள் தம்மைச் சீரமைத்துக் கொள்ள சிறிது இடைவெளிதேவை. அப்போது இரைப்பையிலும் குடலிலும் அழற்சி ஏற்படாமல், அடைசல் ஏற்படாமல் பாதுகாப்பது அவசியம். இந்தப் பாதுகாப்பு மார்கழியைப் பின் தொடரும் தையிலும் கடைபிடிப்பது அவசியமாகிறது.

பனி வாடை காரணமாக உள்ளுறுப்புகளும் வெளியுறுப்புகளும் மந்தமாக இயங்கும் என்பதால் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தோன்றக் கூடும். நம் விருப்பப்படி தசைகளை இயக்க முடியாதபடி பிடிப்பும் இறுக்கமும் இந்த மாதத்தின் கோளாறு. இந்த மந்தத்தைப் போக்க, சுறுசுறுப்பை ஊட்ட, மூட்டுகளுக்குத் தேவையான சூட்டையும் நெகிழ்வையும் தர, கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாக, தசை இறுக்கம், மூட்டுப் பிடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நன்றாக நீவிவிட்டுப்பிடித்து, வெந்நீரில் குளிப்பது நல்லது.

பனிக்காலத்தில் இரவு நீண்டு பகல் குறைவதால், குறுகிய பகலை நீட்ட விடியற் காலையிலேயே எழுந்து கொள்வது நல்லது. குளிரைத் தாங்க பயன்படுத்தப்படும் கனத்த உடைகளாலும், பனியாலும் ஏற்படும் தோல் வறட்சியால் உடலின் உட்சூடானது அதிகரிக்கிறது. வயிற்றின் உட்புறங்களில் இந்தச் சூடு சூழ்ந்து பசியை அதிகமாகத் தூண்டும். ஆனால் தசை இயக்கம் மந்தமாவதால் ஜீரணப்பணி தாமதமாகும். இப்படி எதிரிடையான இரு இயக்கங்கள் ஜீரண கோசங்களின் அழற்சிக்குக் காரணமாகலாம். அதனால் நீங்கள் எளிதில் செரிக்கும் உணவை மிதமாக காலமறிந்து உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கிழங்கு, அதிகம் எண்ணெய் கலந்த உணவுப்பண்டம், கனமான உணவு இவற்றை அளவில் மிகக் குறைவாகக் கொள்வதே மிக நல்லது.

பனிக்காலத்தில் காலை இளம் வெயிலில் காய்வது சிலருக்கு இதமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் - தலையில் பித்தவேகம் ஏறி தலைவலி, பின் மண்டையில் இறுக்கம், தலை கனம், தோல் வறட்சி, அரிப்பு, சொறி சிரங்கு, உணவில் வெறுப்பு, உட்குளிர் என்றெல்லாம் ஏற்படக்கூடும். அதனால் அதைத் தவிர்ப்பதே நலம்.

பெருங்குடல், இடுப்பு, தொடைப்பகுதி, காது, எலும்புகள் மற்றும் தோல் ஆகிய பகுதிகள் இயற்கையாகவே வாயுவினுடைய இருப்பிடங்களாகும். அதிலும் முக்கியமாக பெருங்குடல் பகுதி வாயுவின் ஆதிக்கம் அதிகமுள்ள இடமாகும். வாயுவினுடைய குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, முறமுறப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் மழை பனி நாட்களில் அவற்றின் அளவு உடலில் கூடுவதால், தசைப்பிடிப்பும் மூட்டுப்பிடிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. வாயுவின் குணாதிசயங்களை மட்டுப்படுத்தும் இந்துகாந்தம் நெய் மருந்து, தசமூலாரிஷ்டம், வாயுகுளிகை, மூலிகைத் தைலங்கள் போன்றவற்றின் பயன்பாடு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நன்மை தரும். 

நீங்கள் ஈரக்கசிவற்ற கல் தரை, சிமெண்டுத்தரை, கருங்கல் தரை, இரும்பு முதலியவற்றாலான நாற்காலி முதலியவற்றில் மேல் விரிப்பின்றி உட்காருதல், படுத்தல் முதலியவற்றைத் தவிர்த்தல் நலம். தசை இறுக்கம், ஜீரண உறுப்புக்களின் மந்தம் இவற்றைக் கண்ணோட்டத்தில் கொண்டு, நடை, உடை, உணவுகளை அமைத்துக் கொள்வது நலம். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com