உணவுகளை சமைக்க எந்த பாத்திரம் சரியானது?

எருக்கஞ்சட்டி பாத்திரத்தில் வைக்கப்பட்ட பழைய சாதம், குழம்பு போன்றவை மறுநாள் எவ்வகையிலும் கெடுவதில்லை, மாறாக ருசி கூடுகிறது.
உணவுகளை சமைக்க எந்த பாத்திரம் சரியானது?

குளிர்சாதனப் பெட்டியில் சாதம், குழம்பு, பொரியல் ஆகிய சமைத்த உணவு வகைகளை வைத்திருந்து உண்பது ஆரோக்கியத்திற்கு கேடு என்பது சரிதான். ஆனால் காலையில் வடித்த சாதம் மீந்துபோனால், அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை, அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாயுடன் சாப்பிடலாம் என்று இயற்கை வைத்தியர்களும் அறிவுரை அளித்துள்ளார்களே?

-எஸ். பாலாம்பாள், விருகம்பாக்கம்.

இந்தக் கேள்வியின் மூலம் சுமார் 40 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று கும்பகோணம் - குடவாசல் அருகிலுள்ள மஞ்சக்குடி கிராமத்தில் விட்டுவிட்டீர்கள் ! மீந்துபோன சாதம், குழம்பு போன்றவற்றை பாட்டி, எருக்கஞ் சட்டியில் போட்டு மூடி வைத்திருந்து, மறுநாள் காலை, கெட்டியான தயிர் விட்டு சாதத்தைப் பிசைந்து, உள்ளங்கையில் போடுவார். நடுவில் குழிகுழித்து, மீந்துபோன சாம்பாரை ஊற்றி, சாப்பிடச் சொல்வார். அதில் கிடைக்கும் ஆனந்த அனுபவத்தை இன்றளவும் மறக்க முடியவில்லை. அதன் ருசியும் இன்றைய ஒரு உணவுப் பொருளிலும் கிடைக்கவில்லை! 

அன்று கிடைத்த அரிசியின் தரம் இன்றுள்ளதா? தண்ணீர் சுத்தமாக, ரசாயனக் கலவை மூலம் சுத்தப்படுத்தப் படாமல் கிடைக்கிறதா? அவை வைக்கப்பட்டிருந்த எருக்கஞ்சட்டி பாத்திரம் கிடைக்கிறதா? இவை அத்தனையும் மீறி, பாட்டியின் அன்பான பரிமாறல் தான் இன்று கிடைக்குமா? இவை அனைத்தும் ஏக்கமாகிப் போனது தான் மிச்சம் !

பழைய சாதத்தினுடைய ருசியைக் குறைவில்லாமல் கூட்டித் தருவதின் சிறப்பே எருக்கஞ்சட்டியின் மகிமையாகும். அதற்கு மாக்கல் என்று வேறு ஒரு பெயர் உண்டு. மூன்று வகையான விஷயங்கள், அவை அடங்கியுள்ள பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வேலை செய்யும் என்று ஆயுர்வேதம் அவை - சஸ்த்ரம் (ஆயுதம்) - சாஸ்த்ரம் (கல்வி) - சலிலம் (தண்ணீர்). ஆயுதம் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பயன்படுத்தினால், அது தீமையே செய்யும். உதாரணத்திற்கு தீக்குச்சியின் நெருப்பால் ஒரு குடிசையை எரிக்கலாம். நன்மை செய்ய எண்ணினால் அதே நெருப்பினால் இருண்டுள்ள ஒரு வீட்டில் விளக்கேற்றினால், வீடே பிரகாசமாகிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை விட, மண்பானைத் தண்ணீர் தரத்திலும் குணத்திலும் சிறப்பாகிறது. நீங்கள் குறிப்பிடும் உணவு வகைகள் குணம் செய்ய, பாத்திரத்தைத் பொருத்தே அமைந்துள்ளது. ஸ்டீல் பாத்திரத்தை விடவும் குளிர்சாதனப் பெட்டியை விடவும் முன் குறிப்பிட்ட எருக்கஞ்சட்டி பாத்திரத்தில் வைக்கப்பட்ட பழைய சாதம், குழம்பு போன்றவை மறுநாள் எவ்வகையிலும் கெடுவதில்லை, மாறாக ருசி கூடுகிறது. அவற்றை உண்பதால் - வயிற்றிலுள்ள அபரிமிதமான சூடு தணிகிறது. நாக்கிலுள்ள ருசிக் கோளங்கள் சுத்தமாகின்றன. சுத்தமான எச்சில் சுரப்பானது ஏற்படுகிறது. குடலிலுள்ள பித்த ஊறலை மட்டுப்படுத்தி, பசியின் செரிமானத் திரவங்களைச் சீராக்குகிறது. மனதை அமைதியுறச் செய்கிறது. கல்லீரல் - மண்ணீரலின் சுறுசுறுப்பானது கூடுகிறது. குடலிலுள்ள தேவையற்ற அழுக்குகளைச் சுரண்டி வெளியேற்றுகிறது. உட்புறக் குழாய்களில் பொதிந்துள்ள அணுக்களின் வளர்ச்சிப் பரிணாமத்தை துரிதப்படுத்துகிறது. அந்த நீராகாரத்தில் சிட்டிகை, உப்பு, சீரகத்தூளும் சேர்த்துச் சாப்பிட, மலச்சிக்கலை நீக்குகிறது. நீங்கள் குறிப்பிடுவது போல, நல்லெண்ணெய் சேர்ந்தால், குடல் கிருமிகளை நசித்து, உடலைத் தேற்றுகிறது. சின்ன வெங்காயம் சேர்க்கும் போது, மூல உபாதையிலிருந்து வரக் கூடிய சில உபாதைகளான ரத்தக்கசிவு, வலி போன்றவை குணமடைகின்றன. பச்சை மிளகாயைக் கடித்து பழைய சாதம் சாப்பிட்டால், குடலிலுள்ள மந்தமான நிலையை மாற்றி விறுவிறுப்படையச் செய்கிறது.

நீராகாரம், சாத்தூத்தம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஏழைகளின் உணவாகிய இந்த பழைய சாதத்தின் பெருமையை உணர்ந்தவர்கள், அதைச் சாப்பிட்ட பிறகு, அதிலுள்ள சத்து நன்கு உடலில் சேருவதற்காக, வயல்காட்டிற்குச் செல்வது, வீட்டை சுத்தப்படுத்துவது, சைக்கிள் சவாரி செய்வது என்று ஏதேனும் வேலையில் ஈடுபட்டு, அந்த உணவை விரைவாகச் செரிக்கும்படி செய்துவிடுவார்கள்.

செயற்கையான முறையில் பழைய உணவுகளில் ஏற்படுத்தப்படும் குளிரூட்டப்படும் தன்மையால் அவற்றில் அனுக்கிருமிகளின் செழிப்பான வளர்ச்சி ஏற்படக் கூடும் என்ற பயத்தால் தான், உணவைப் பதப்படுத்துகிறார்கள் அது போன்ற ஒரு சூழலை உருவாக்காமல், இயற்கையின் அரணாக விளங்கக் கூடிய குளிர்ச்சியை, பாத்திரத்தின் வழியாக, உணவு வகைகள் பெறும்பொழுது, நாம் நன்மையே அடைகிறோம். அதனால், அற்புதமான பாத்திரத்தின் பெருமையை நாம் உணவுகளின் வழியாக மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். இது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. 

ஆயுர்வேத மருந்துகளின் தரம் குறையாதிருக்க அவற்றின் தயாரிப்பு முறை முடிந்ததும், பீங்கான் ஜாடி, மண் குடுவை, கண்ணாடி பாட்டில் போன்றவையே முன்பெல்லாம் பயன்படுத்தப்பட்டன. தற்சமயம் கால நிலைக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சூழ்நிலை, கால நிலை - மனிதர்களின் உடல் உட்புற த்ரிதோஷங்களாகிய வாத - பித்த- கபங்களின் நிலை போன்றவை அறிந்து உணவை பாத்திரங்களின் வழிமேம்படுத்திச் சாப்பிட்ட நம் முன்னோர் வழி அறிவது சிரமமே! 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com