பசித்ததும் சாப்பிடுகிறோம்; அதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

ஆயுர்வேதம் சில காய்கறிகளை, உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கச் சொல்கிறது. ஆனால் இன்று இருக்கும் பல மாற்று மருத்துவ முறைகளும் அவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும் என்கிறது.
பசித்ததும் சாப்பிடுகிறோம்; அதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் சில காய்கறிகளை, உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கச் சொல்கிறது. ஆனால் இன்று இருக்கும் பல மாற்று மருத்துவ முறைகளும் அவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும் என்கிறது. நலமான, நோயற்ற , நிம்மதியான வாழ்விற்கு உணவே அடிப்படை என்று ஆயுர்வேதம் உட்பட பல மாற்று மருத்துவங்களும் சொல்கிற போது, எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எந்த உணவு நோயற்ற வாழ்விற்கு தேவை, அதற்கான வழிமுறைகளும் மனிதனுக்கான உணவு கோட்பாடு என்ன என்பதையும் ஆயுர்வேதம் சொல்லும் முறை என்ன?

-எ.தாவீது ராஜா, பொன்னேரி.

நீண்ட ஆயுளுக்குக் காரணம் - நீண்ட ஆயுள் நிலைப்பதற்கு முக்கிய காரணமான முறையான உணவு, குடிநீர் முறைகளையும், புலன்களுக்கு இதமான புலப் பொருட்களைப் பற்றிய விவரங்களும் "அஷ்டாங்க சங்கிரகம்' எனும் ஆயுர்வேத நூல் விவரித்திருக்கிறது.

ஓஜஸ் எனும் உடலிலுள்ள ஏழு தாதுக்களின் சாரம், ஒளி, தாதுக்கள், புலன்கள், பலம், மகிழ்ச்சி, வளர்ச்சி, சமயோசித அறிவு, இன்ப வாழ்வு இவற்றிற்கு உணவு, குடிநீர் முறை காரணமாகின்றன.

இம்மாதிரியான முறையான எரி பொருள்களில் தான் இவ்வுடல் நிலைத்திருப்பதற்கு அடிப்படைக் காரணமான பசித்தீ எனும் சடராக்கினி நிலைத்திருக்கிறது.

இயற்கை, சேர்க்கை, பக்குவம் செய்யும் முறை, அளவு, இடம், காலம், பயன்படுத்துதல் என்ற ஏழுவித உணவு பயன்படுத்தும் முறைகள் நோயற்ற வாழ்விற்கும், நோயுற்ற வாழ்விற்கும் காரணமாவதால், புலனடக்கம் உள்ளவன் அவற்றை நன்கு ஆராய்ந்து நலம் தருவதையே பின்பற்ற வேண்டும்.

இயற்கை, சேர்க்கை முதலியவற்றின் விளக்கம் - இயற்கை - மழைநீர், செந்நிற அரிசி, அறுபது நாளில் விளையும் அரிசி, பயிறு, மான் இறைச்சி, சிறு பறவை
களின் மாமிசம் இவை எளிதாக செரிக்கக் கூடியவை.

பால், நெய், கரும்பு, நெல், உளுந்து, நீர்ப்பாங்கான இடங்களில் வாழும் பிராணிகளின் மாமிசம் செரிப்பதற்குக் கடினமானவை .

எளிதில் செரிக்க கூடிய பொருட்கள், சேர்க்கை முதலிய சிறப்பினால் எளிதில் செரிக்காமலாவதும், செரிப்பதற்கு கடினமான பொருட்கள், எளிதில் செரிக்கக் கூடியவையாகவும் மாறுதலை அடைகின்றன.

சேர்க்கை - இரண்டு அல்லது பல பொருட்களின் கலப்பு சேர்க்கையெனப்படும். இந்தச் சேர்க்கைப் பொருட்கள் தமது தனித்தன்மையை விட்டு விட்டு சிறப்பான செயல்களைச் செய்கின்றன.

பக்குவம் செய்யும் முறை - நீர், நெருப்பின் சேர்க்கை, சுத்தப்படுத்துதல், கடைதல், இடம், காலம், ஊற வைத்தல், பாத்திரங்கள் ஆகியவற்றால் பொருட்களில் ஏற்படும் குணமாற்றம் ஸம்ஸ்காரமாகும்.

அளவு - இது இரண்டு வகைப்படும். ஒன்று பொருட்களின் கூட்டளவு, மற்றொன்று பொருட்களின் தனி அளவு.

இடம்- பொருட்கள் தோன்றுமிடம், அவற்றைப் பயன்படுத்துபவன் தோன்றிய இடம் என இது இரண்டு வகைப்படும். பயன்படுத்துபவன் நோயுள்ளவனா நோயற்றவனா என்பதையும் அவனுடைய இயற்கை உடல் நிலையையும் சோதிக்க வேண்டும்.

காலம் - பருவம், நோய், சீரணம், அசீரணம் இவற்றின் நிலையைப் பொருத்ததாகும்.

பயன்படுத்துதல் - அசீரணத்தில் உணவு உட்கொண்டால் முன் உண்ட உணவின் மாறுபடாத சீரணமாகாத உணவுச்சத்து, பின்பு உண்ட உணவின் சத்துடன் சேர்ந்து விரைவில் எல்லா தோஷங்களாகிய வாத, பித்த, கபங்களை சீற்றமடையச் செய்கின்றன.

உண்பதற்கேற்ற காலம் - முன் உண்ட உணவு சீரணித்த பின்னும், வாதம் முதலிய தோஷங்கள் தமது இடங்களை அடைந்திருக்கும் பொழுதும், வாதம் சரியான நிலையில் இருக்கும் பொழுதும், சிறுநீர், மலம் இவற்றைச் சரியாகக் கழித்த பின்பும், ஏப்பம் சுத்தமான பின்பும், இதயம், உடல் துவாரங்கள், முகம், புலன்கள் இவை தெளிவுற்றிருக்கும் பொழுதும், உடல் இலேசாக இருக்கும் பொழுதும், பசித்தீ நன்கு வளர்ந்திருக்கும் பொழுதும், பசி எடுத்த பின்பும், அருந்தும் உணவு தோஷங்களைச் சீற்றமடையச் செய்யாமல் ஆயுள், வலிவு, நிறம் இவற்றை வளர்க்கின்றது. இவ்வாறு உரிய காலத்தில் உட்கொள்ளும் உணவு உடலில் தோஷங்களைச் சீற்றமடையச் செய்யாமல் ஆயுள், உடல்வலிமை, பொலிவு இவற்றை வளர்க்கிறது. இதுதான் உண்ணுவதற்கு உகந்த காலமாகும்.

காலம் தவறி உணவு உட்கொண்டால், வாயு தடைபெற்று அசீரணத்தை ஏற்படுத்துகிறது. உணவு, நேரம் கழித்துச் சீரணமாகிறது. உடலை இளைக்கச் செய்கிறது. உணவில் அருவருப்பைத் தோற்றுவிக்கிறது.

(இக்கேள்விக்கான பதில் அடுத்த வாரமும் தொடரும்) 

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com