எதைச் சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? 

எண்ணெய்ப் பசையுள்ள உணவு, புலன்களை உறுதிப்படுத்துகிறது. உடலை வளர்க்கிறது. கிழத்தன்மையைப் போக்குகிறது. வலிவை கொடுக்கிறது. நிறத் தெளிவைத் தோற்றுவிக்கிறது. 
எதைச் சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? 

(சென்ற இதழ் தொடர்ச்சி)

எண்ணெய்ப் பசையுள்ள உணவு, புலன்களை உறுதிப்படுத்துகிறது. உடலை வளர்க்கிறது. கிழத்தன்மையைப் போக்குகிறது. வலிவை கொடுக்கிறது. நிறத் தெளிவைத் தோற்றுவிக்கிறது. 

எளிதில் சீரணிக்கக் கூடிய உணவு, இயற்கை முதலியவற்றால் உடலைக் கெடுக்காமல், தோஷங்களைச் சீற்றமடையச் செய்யாமல் சீரணமடையச் செய்கிறது. அது கெட்டிருந்தாலும் தீமைகளைச் சிறிதளவே விளைவிக்கிறது.
சூடான உணவு சுவையூட்டுகிறது. கபத்தை வற்றச் செய்கிறது. தாமதமாகச் சாப்பிட்டால் திருப்தி ஏற்படுவதில்லை. அளவுக்கு மீறி உண்டுவிடுகிறான். அதிகம் தாமதித்துச் சாப்பிட்டாலோ உணவு குளிர்ந்துவிடுகிறது. சரி வர சீரணிப்பதில்லை. 

மிக விரைவாகவும், பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மனதை வேறிடத்தில் செலுத்தியபடியும் உண்ட உணவு முறையே நேராகச் செல்ல வேண்டிய தாதுக்களினிடத்திற்குச் செல்லாமல் வேறு இடத்திற்குச் சென்று விடுகிறது. சீரணம் சரியாக ஆவதில்லை. சரியான நிலையிலிருப்பதில்லை. 
இது எனக்குப் பொருந்தும், இந்த உணவு எனக்குப் பொருந்தாது என்று சோம்பலில்லாமல் எப்பொழுதும் தன்னை நன்கு கவனித்து உண்பது என்பதன் கருத்து:

பொருந்துவது (ஸாத்ம்யம்) என்பதற்கு பழக்கத்தின் விளைவாக தன்னுடன் ஒன்றி விடுகிறது என்றும், பொருந்தாதது (அஸாத்ம்யம்) என்பதற்கு உடலுக்கு ஒத்துக் கொள்ளாதது என்றும் விளக்கம் கூறுகின்றனர் சிலர். மற்றும் சிலர், இயற்கை, வயது, இடம், பருவங்கள், தோஷங்கள், நோய், இவற்றின் பிரிவுகளை ஒட்டி பொருந்துவது பலவிதம் எனக் கருதுகின்றனர்.

சீரணத்திற்கு ஏற்ற வகையில் முதலில் திரவப் பொருட்கள் அல்லது உலர்ந்த பொருட்களைப் புசிக்க வேண்டும். செரிப்பதற்கு கடினமானவையும், இனிப்புச் சுவையுடையதும், எண்ணெய்ப் பசையுள்ளதுமான பொருட்களை முன்பே உண்ண வேண்டும்.

புளிப்பு, உப்புச் சுவை கொண்ட பொருட்களை இடையிலும், காய்ந்ததும், திரவமானதும், மற்ற சுவையுள்ளதுமான பொருட்களை முடிவிலும் சாப்பிட வேண்டும். சீரண சக்தி குறைந்தவன் முதலில் சூடான திரவப் பொருட்களை அருந்த வேண்டும். அதனால் அவனது சீரணசக்தி வளர்ச்சி பெறுகிறது. உட்கொண்ட பொருட்களும் நன்கு சீரணமாகின்றன.

உணவு அருந்திய பின், தணலில் சூடாக்கி, வறுத்த தானியங்கள், அவல், அரிசி மாவினால் ஆன பொருட்கள் இவற்றை ஒரு பொழுதும் உண்ணக் கூடாது. 

கீரை வகை, காரம், புளிப்பு, துவர்ப்பு, உப்புச் சுவையுள்ள பொருட்கள் இவற்றை உணவில் அதிகமாக சேர்க்கக் கூடாது. ஒரே சுவையுள்ள பொருளையே பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடாது. செரிப்பதற்கு கடினமுள்ள உலர்ந்த உணவை விலக்க வேண்டும். அதிகப் பசையினாலும், கடினமான செரிக்கக் கூடிய தன்மையினாலும், உடலிலுள்ள தாதுக்களை எரிக்கச் செய்யும் குணமுள்ள பொருட்கள், மலம் - சிறுநீர் இவற்றைக் கட்டி வயிற்றுப் பொருமல் முதலானவற்றை உண்டாக்கும் பொருட்கள், குடலில் நன்கு சீரணமாகாமல் உள்ளே அழற்சியைக் கொடுக்கக் கூடிய பொருட்கள், குளிர்ச்சி தரும் பொருட்கள், வறட்சியைத் தோற்றுவிப்பவை, தயிர், உலர்ந்த மீன் (கருவாடு), பச்சை முள்ளங்கி, அழற்சி தரும் பொருட்கள், மாவுப்பொருட்கள், முளைத்த தானியங்கள் இவை யாவற்றையும் பயன்படுத்தக் கூடாது.

சம்பா அரிசி, கோதுமை, அறுபது நாட்களில் விளையும் அரிசி, இளம் பச்சை முள்ளங்கி, கடுக்காய், நெல்லிக்காய், திராட்சை, புடல், பயறு, சர்க்கரை, நெய், மழை நீர், பால், தேன், மாதுளை, இந்துப்பு, இவற்றை உணவாகச் சேர்த்துக் கொள்ளவும்.

கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய் இவற்றை தேன், நெய் இவற்றுடன் கலந்து இரவில் உண்டால் கண்கள் வலிவு பெறும். மிகுதியான வறண்ட உணவு, வலிமை, நிறம் இவற்றைப் போக்குகிறது. தோலில் வறட்சியைத் தோற்றுவிக்கிறது. வாதம், மலம் இவற்றைத் தடுக்கிறது. அதிக எண்ணெய்ப் பசையுள்ள உணவு, கபத்தை அதிகரிக்கச் செய்கிறது. உமிழ் நீர், மார்பில் கனம் , சோம்பல், சுவையின்மை இவற்றை உண்டாக்குகிறது.

அதிக சூடான வீரியம் கொண்ட உணவு, வெறி, எரிச்சல், நாவறட்சி, வலிமைக்குறைவு, தலை சுற்றல், இரத்த பித்தம் இவற்றைத் தோற்றுவிக்கிறது.
மிகுதியாகக் குளிர்ச்சி தரும் உணவு, உடல் தளர்ச்சி, சுவையின்மை, பசித்தீ குறைவு, மனத்தளர்ச்சி, மலக்கட்டு இவற்றை ஏற்படுத்தும். மிகக் கடினமான உணவு, சிறுநீர், மலம் இவற்றைக் கட்டும். அதிருப்தியை உண்டாக்கும். உடல் முழுவதும் பரவாது. விரைவில் சீரணிக்காது. இருமல், கண்ணீர் ஒழுக்கு நோய் இவற்றை உண்டாக்கும். பசியினுடைய வலுவைக் குறைக்கும்.

மிக இனிப்புச் சுவையுள்ள உணவு பசியைத் தணிக்கும். உடலுடன் ஒன்றிப்போகாத உணவு உடல் வளர்ச்சியைத் தராது. மிக உப்புச் சுவையுள்ள உணவு கண்களுக்கு நல்லதல்ல. முன் கூறப்பட்ட உணவு முறையைப் பின்பற்றி, உடல் வலிமைக் கேற்றவாறு உண்பவனை, சிறுநோயும் அண்டுவதில்லை. அவன் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கிறான்.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com