வயோதிகத்தில் ஏற்படும் வாயு உபாதை!

என் வயது 82. சென்ற 5 வருடங்களாக என் கால் பாதங்கள் இரண்டும் இறுக்கமாக இருக்கின்றன. சிறிது சிறிதாகக் கூடி, தற்சமயம் 4 மாதங்களாக அதிக இறுக்கமாகவும் பாதத்தின்
வயோதிகத்தில் ஏற்படும் வாயு உபாதை!

என் வயது 82. சென்ற 5 வருடங்களாக என் கால் பாதங்கள் இரண்டும் இறுக்கமாக இருக்கின்றன. சிறிது சிறிதாகக் கூடி, தற்சமயம் 4 மாதங்களாக அதிக இறுக்கமாகவும் பாதத்தின் அடிப்பகுதி தோல் மென்மையாகவும், சிறு அரிசி கிடந்தால் கூட, அதன் மீது நடந்தால் வலி கூடுகிறது. எழுந்து உடனடியாக நடக்க முடியவில்லை. இது எதனால்? குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

அ.சந்திரகுருசாமி, மதுரை. 

முதுகுத் தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து புறப்படும் நரம்புகள், கிளைகளாக மாறி கால்களின் வழியே, பாதம் வரை செல்கின்றன. இந்த நரம்புகளின் ஊட்டத்தைப் பெறச் செய்வதற்கும், அவற்றின் செயல் திறனை மழுங்கடிக்கச் செய்யும் செயலையும் வாயுவே செய்வதாக ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. நிலம் மற்றும் நீரின் தன்மையே ஊட்டத்தைத் தரும், வாயுவும், ஆகாயமும் அவற்றை வற்றச் செய்யும். நெருப்பானது இவற்றை உணவு மற்றும் செயல் வடிவங்களின் வழியாகப் பெறும் போது, அவற்றைப் பக்குவப்படுத்தி, சேர வேண்டிய பகுதிகளுக்கு, பிரித்து எடுத்துக் கொடுக்கும் பணியை ஆற்றுகிறது. ஆக, பஞ்ச பௌதிக சித்தாந்தத்தின் அடிப்படையின் மூலமாகத்தான் மனிதர்கள் ஊட்டத்தைப் பெறுவதையும் அவற்றை இழுப்பதையும் அடைகிறார்கள். உடல் எனும் இந்த வாகனத்தின் எஜமானனாகவும், ஓட்டியாகவும் ஆன்மா இருந்து கொண்டு, செயல் மூலம் பெரும் கர்ம வாசனைகளை சூட்சுமமான மனதின் வழியாகச் சம்பாதித்து, உடலை விட்டுப் பிரியும் போது, செயலுக்கு ஏற்ப, அடுத்த புதிய உடலைத் தேடிச் செல்கிறது.

மேற்குறிப்பிட்ட நரம்புக் கூட்டங்களின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில், தலை மற்றும் முதுகுத்தண்டுவடப் பகுதிகளை வலுவூட்டும், நிலம் மற்றும் நீரின் சேர்க்கையை நீங்கள் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. பிரச்னையானது பாதத்தில் தென்பட்டாலும், அங்கு மட்டுமே சிகிச்சை செய்தால் போதாதா? என்று கேட்டால், போதாது என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் அப்பகுதிக்கான உணர்வுகளைத் தரும் நரம்புக் கிளைகளையும் நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. அதனால் இப்பிரச்னையானது ஒரு பகுதியில் தென்பட்டாலும், அதன் ஆளுமையைக் கொண்ட பிற பகுதிகளுக்கும் சேர்த்தே சிகிச்சை செய்தால் தான், பலனைப் பெறலாம்.

அந்த வகையில், தலைக்கு க்ஷீரபலாதைலம் எனும் மூலிகைத் தைலத்தை, வெது வெதுப்பாகத் தலையில் 1/2 - 3/4 மணி நேரம் ஊறவிடுவதையும், முதுகுத்தண்டு வடப் பகுதி முழுவதையும் பிரபஞ்சன விமர்தனம் குழம்பு எனும் மூலிகைத் தைலத்தால், வெது வெதுப்பாக இதமாகத் தேய்த்து அதே தைலத்தை பஞ்சில் முக்கி தண்டுவடப் பகுதி முழுவதும் இளஞ்சூடாக 1/2 - 3/4 மணி நேரம் ஊற வைப்பதாலும் வாயுவினுடைய வாயு - ஆகாசம் எனும் ஆதிக்கத்தின் அளவைக் குறைக்கலாம். வெளிப்புற சிகிச்சையின் வெளிப்பாடாக, நரம்புகளிலுள்ள வாயு அகன்றாலும், ஊட்டத்திற்கு இவை போதுமானதாக இருப்பதில்லை. அதனால், உட்புற ஊட்டத்தை நீங்கள் நிலம் மற்றும் நீரின் வாயிலாக, பசித்தீயின் செரிமான சக்தியினால் குடல் வழியாக உட்செலுத்தி, பாத நரம்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. அந்த வகையில், விதார்யாதி எனும் நெய் மருந்தை, நீராவியில் உருக்கி, காலை மாலை சுமார் 15 மிலி அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வர, பாத நரம்புகள் வலுப்பட ஏதுவாகயிருக்கும். செரிமானத்தில் கனமான இந்த நெய் மருந்தால், பசித்தீயானது சற்றே தடுமாறக் கூடும் என்பதால், இந்த நெய் மருந்தை சாப்பிட்ட பிறகு, அதை எளிதாக செரிக்கச் செய்வதற்கு சிறிது சூடான தண்ணீர் பருகவும்.

ஹிங்குவசாதி எனும் சூரண மருந்தை 1/2 - 1 ஸ்பூன் அளவில், சூடான சாதத்துடன் கலந்து, 5 மிலி இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை உருக்கிச் சேர்த்து காலையில் முதல் உருளையாக சாப்பிட்டு வர, எதையும் செரிக்கும் சக்தியை பசித்தீ பெற்றுவிடும். மேலும் குடலில் வாயு சேராமல் தடுக்கவும் செய்யும்.

பாத நரம்புகளை நேரடியாக வலுப்படுத்த, க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தை, 10 - 15 சொட்டுகள் 100 மி.லி. சூடான பாலுடன், காலை இரவு உணவிற்கு 1/2 மணி முன் சுமார் 3 மாத காலம் சாப்பிடலாம். வாத மர்த்தனம் குழம்பு எனும் தைல மருந்தை கால் பாதங்களில் இதமாகத் தடவித் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு, உப்பு கலந்த வெந்நீரில் பாதங்களை 10 - 15 நிமிடங்கள் வைத்திருந்து, துடைத்து விடுவதும் நல்லதே.

உணவில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, வேர்க்கடலை, கடலை எண்ணெய், உருளை, வாழை, மொச்சை, கொத்தவரை, காராமணி, சேப்பங்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும். இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை மிதமாகச் சேர்க்கலாம். மேற்குறிப்பிட்ட வாயுப்பொருட்களைச் சாப்பிட நேர்ந்தால், வெது வெதுப்பான நிலையில் சாப்பிடலாம். மறுபடியும் சூடாக்கி சாப்பிடக் கூடாது. குளிர்ந்த நீரில் குளிப்பதை விட, ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை உடலில் தடவி, நீவிவிட்ட பிறகு, இதமான வெந்நீரில் குளிப்பதே நல்லது. குஷன் போன்ற பாத அணிகளை அணிவதே நல்லது.

ஆயுர்வேத மருந்துவமனைகளில் சில நாட்கள் தங்கியிருந்து, உடலுக்கும் தலைக்கும் மசாஜ் செய்து, நீராவிக் குளியல் செய்வதால் வயோதிகத்தில் ஏற்படும் பல வாயு உபாதைகளைக் குறைக்க முடியும். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com