மூட்டுத் தேய்மானத்தைச் சரி செய்ய...!

முடிந்தவரை நடக்கட்டும். முடியாமல் போனால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என மூட்டுவலி டாக்டர் கூறிவிட்டார்.
மூட்டுத் தேய்மானத்தைச் சரி செய்ய...!

எனது மனைவிக்கு 73 வயதாகிறது. நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். மூட்டுத் தேய்மானம் உள்ளது. முடிந்தவரை நடக்கட்டும். முடியாமல் போனால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என மூட்டுவலி டாக்டர் கூறிவிட்டார். இதற்கு ஆயுர்வேத மருந்துவம் உள்ளதா?

- முனுசாமி,  கே. கே நகர், சென்னை. 

மூட்டுப் பகுதியில் எலும்புகளுக்கிடையிலான உராய்வு ஏற்படாமலிருக்கவும், "சிலேஷகம்' என்ற ஒரு கபம் அவ்விடத்தில் வழுவழுப்பை ஏற்படுத்தி, பாதுகாப்பான அரணாக விளங்குகிறது. வயோதிகத்தில், உணவினுடைய செரிமான விசேஷத்தினால் இப்பகுதிக்கு வர வேண்டிய ஊட்டச் சத்தான குணங்களாகிய நெய்ப்பு, கனம், மந்தம், வழவழப்பு போன்றவை வராமல் போவதால் தான்... இந்த சிலேஷகம் என்ற கபம் தன் செயல்திறன் குன்றி, வாயுவினுடைய குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, சொர சொரப்பு ஆகியவற்றிற்கு வழி விடுவதால், மூட்டுத் தேய்மானம் ஏற்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட ஊட்டச் சத்தான குணங்களை, பாசகம் எனும் உணவைச் சீராக செரிமானம் செய்யும் பித்தத்தை, வயோதிகத்தில் மனிதர்கள் பொதுவாக இழப்பதால், நாம் என்னதான் சாப்பிட நேர்ந்தாலும், சீரான செரிமானம் சரிவர ஏற்படாததால், அவை கழிவுகளாக மாறி, மலம் , சிறுநீர், வியர்வை போன்றவற்றின் வழியாக வெளியேறுகின்றன. அதனால், மூட்டுத் தேய்மானம் ஏற்படும் நிலையில், பலரது சிந்தனையும் மூட்டுப் பகுதியை நோக்கியே குவிகிறது என்பதாலும், செரிமான விசேஷத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்காமல் போவதாலும், மூட்டுத் தேய்மானம் என்பதை நிரந்தரமாக குணப்படுத்த இயலாமல் போகிறது.

அதனால், நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டியது, "பாசகம்' எனும் பித்தத்தைத் தூண்டிவிட்டு, குடலில் உள்ள வறட்சியையும், மலத் தேக்கத்தையும் அப்புறப்படுத்தி எதையும் செரிக்கக் கூடிய அளவிற்கு, பசித்தீயை மூட்டிவிட வேண்டும். கந்தர்வஹஸ்தாதி எனும் விளக்கெண்ணெய் மருந்தை, சுமார் 15 மி.லி. வரை, அவருடைய குடல் அமைப்பை ஊகித்து அறிந்த பிறகு, காலை, மாலை வெறும் வயிற்றில் சில காலம் கொடுத்துவரலாம். நாக்கில் ருசி கோளங்களைத் திறந்துவிட்டு, பசித்தீயைத் தூண்டி, குடல் வாயுவையும், மலத்தேக்கத்தையும் ஆசனவாய் வழியாக, நன்றாக வெளியேற்றிவிடும். இம் மருந்தை சுமார் 21 நாட்கள் வரை சாப்பிடலாம். இம் மருந்தை சாப்பிடும் நாட்களில், காலையில் சூடான புழுங்கலரிசிக் கஞ்சியில், பசு நெய்யும், இந்துப்பும் கலந்து சாப்பிட்டு, மேல் வெந்நீர் அருந்தி வர வேண்டும். அந்த வெந்நீரும் சுக்கும், தனியாவும் போட்டுக் காய்ச்சியதாக இருந்தால் நல்லது. மதியம் மிளகு ரசம், சூடான சாதம், கறிவேப்பிலை, கொத்துமல்லி அரைத்த துவையல், வெண்ணெய் நீக்கிய மோர், வேக வைத்த கறிகாய் கூட்டு, நார்த்தங்காய் ஊறுகாய் என்ற வகையில் அமைத்துக் கொள்வதையும், இரவு, மிளகு சீரகம் தனியா பொடித்த சூரணத்தை, சூடான சாதத்துடன் நெய் கலந்து சாப்பிடுவதையும் ஓமம் தாளித்த இந்துப்பு கலந்த மோரையும் பருக வேண்டும்.
பசித்தீயானது நன்கு தூண்டப்பட்ட நிலையில், ஊட்டத்தை பூட்டுகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் காலையில் அரிசி, உளுந்து, எள்ளு பொடித்த கஞ்சியில் பாலும், விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்துடன் சாப்பிடுவதையும், மதியம் சூடான சாதத்துடன் 10 - 15 சொட்டு க்ஷீரபலா 101 எனும் நெய் மருந்தைக் கலந்து, சாம்பார் சாதமாகச் சாப்பிடுவதும், மாலையில் அஸ்வகந்தா சூரணத்தை, சூடான சர்க்கரை கலந்த பாலுடன் ஐந்து கிராம் கலந்து சாப்பிடுவதையும், இரவில் சப்பாத்தி சப்ஜியில் சேர்க்கப்பட்ட இந்துகாந்தம் எனும் நெய் மருந்தையும் சாப்பிட பழகிக் கொண்டால், ஊட்டமானது மருந்தின் வழியாகவும் உணவின் வழியாகவும், பசித்தீயில் நன்றாக வேக வைக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்படுவதால், அவற்றின் முழுச் சத்தும் பூட்டுகளுக்கு வந்து சேர்ந்து விடும். இதனால், பூட்டுகளின் உட்புற நெய்ப்பை வளர்த்து இழந்து போன, வழுவழப்பை மீட்டெடுக்கலாம். வெளிப்புற பிண்டதைலம், முரிவெண்ணெய் ஆகியவற்றை மூட்டில் பொத்தி வைக்க வேண்டிய சிகிச்சை முறைகளாலும், உங்கள் மனைவி பயனுறக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com