தலைபாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள்!

இருபது வருடங்களாக தலைபாரத்தால் சிரமப்படுகிறேன். தலை எப்போதும் பாரமாகவே இருக்கிறது.
தலைபாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

இருபது வருடங்களாக தலைபாரத்தால் சிரமப்படுகிறேன். தலை எப்போதும் பாரமாகவே இருக்கிறது. இரவில் படுத்தால் தலை பாரமாக உள்ளது. எழுந்து 10 நிமிடம் உட்கார்ந்து பிறகு படுத்தால் தலை கனமாகிறது. இதனால் தூங்கவும் முடியவில்லை. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?

 - ரவிக்குமார், விருதுநகர்.
 நிலம் மற்றும் நீரின் ஆதிக்கத்தினால் கனம் ஏறிய கபம் எனும் தோஷமானது, இயற்கையாக உடலின் கீழ் பாகத்தில் தான் இடம் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அது இதயத்திற்கு மேலிருந்து உச்சந் தலை வரை இடம்பிடித் திருப்பதாக ஆயுர்வேதம் ஒரு விந்தையான கருத்தை முன் வைக்கிறது! இது போன்ற இயற்கையான விந்தைகளும் உண்டு. உதாரணத்திற்கு, பனை மரத்தின் நுங்கும், தென்னை மரத்தின் இளநீரும் பகலில் எந்நேரமும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தாலும், அவற்றை உள்ளுக்குச் சாப்பிட்டால் நம் உடல் குளிர்ச்சியடைகிறது. இஞ்சியும், பூண்டும் பூமிக்கடியில் விளையும் கிழங்குகள். சூரிய ஒளியினுடைய சூட்டை நேரடியாக பெறாதவை. ஆனால் அவற்றை நாம் உணவாக சமைத்து உண்டால் உடலில் அபரிமிதமான சூட்டை கிளப்பக் கூடியவை. இது போன்ற புதிரான பல விஷயங்களையும் நாம் பூமியில் காண்கிறோம். மனித உடலிலும் தலையைச் சார்ந்த தர்பகம் எனும் கபம், சுவையறியும் நாக்கில் அமைந்துள்ள போதகம் எனும் கபம் ஆகிய இரண்டும் உங்களுக்கு எளிதில் சீற்றம் அடைவதாகத் தெரிகிறது. இனிப்புச் சுவையினுடைய ஆதிக்க பூதங்களாகிய நிலமும் - நீரும், புளிப்புச் சுவையிலுள்ள நெருப்பும் - நிலமும், உப்புச் சுவையிலுள்ள நீரும் - நெருப்பும், உணவில் சேர்க்கும் பொழுது அவை நீர்க்கோர்வையாக ஏற்றமடைந்து மேற் குறிப்பிட்ட இரு வகை கப தோஷங்களையும் கனக்கச் செய்து, நீங்கள் குறிப்பிடும் உபாதையைத் தோற்றுவிக்கும். இதற்கு மாற்றாக, வாயுவும் ஆகாயமும் அதிகம் கொண்ட கசப்புச் சுவையும், நெருப்பும் காற்றும் கொண்ட காரச்சுவையும், நிலமும் காற்றும் அதிகம் கொண்ட துவர்ப்புச் சுவையும், கபத்தினுடைய கனமான தன்மையை உடைத்து நீர்த்துவிடச் செய்யும் தன்மையுடையவையாக இருப்பதால், இந்த மூன்று சுவைகளையுடைய உணவுப் பொருட்களைனைத்தும் உங்களுக்குப் பத்திய உணவாக அமைகின்றன.

 நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழவழப்பு, பிசுபிசுப்பு, நிலைப்பு ஆகியவற்றின் மேம்பட்ட தன்மை, உங்களுக்கு மிக சிறிய காரணங்கள் கொண்டும் வளர்ந்து விடுவதாகத் தெரிகிறது. நெய்ப்புக்கு எதிரான வறட்சியும், குளிர்ச்சிக்கு எதிரான சூடும், கனத்திற்கு எதிரான லேசும் மந்தத்திற்கு எதிரான ஊடுருவும் தன்மையும் மருந்தாகவும் செயலாகவும் அமைந்தால், உங்களுடைய பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 அந்த வகையில், வாரணாதி கஷாயம் எனும் மருந்தை சுமார் 15 மிலி லிட்டர் எடுத்து அதில் 60 மிலி லிட்டர் கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து அரை ஸ்பூன் (2 ணீ மிலி) தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடலாம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை நன்கு பொடித்து நுண்ணிய சூரணமாக விற்கப்படும் திரிகடுகம் எனும் மருந்தை 5 கிராம் அளவில் எடுத்து, 10 மிலி லிட்டர் தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு சாப்பிடலாம். பொதுவாகவே உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன் தொடங்கும் செரிமானத்தில், கபத்தினுடைய குணங்கள் இயற்கையாகவே சீற்றமடையும் நிலை ஏற்படுவதால், அதைக் குறைப்பதற்காகவே இரண்டு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி பாக்குடன் சாப்பிடும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் இருக்கிறது.

 தலைபாரத்தைக் குறைக்கக் கூடிய மூலிகைப் பற்றுகளாகிய ராஸனாதி சூரணம், ஏலாதி சூரணம் போன்றவற்றை இஞ்சிச் சாறுடனோ, வெற்றிலைச் சாறுடனோ குழைத்துச் சூடாக்கி நெற்றியில் சுமார் 1 மணி நேரம் பற்றுப் போட்டு வைக்கலாம். இதை இரவு உணவிற்குப் பிறகு உபயோகிக்கலாம். மூக்கினுள் விடும் நஸ்ய மருந்தாகிய அணு தைலத்தை நான்கு சொட்டுகள் வரை மூக்கினுள் விட்டு மெதுவாக உறியலாம். இதை காலை, இரவு பல் துலக்கிய பிறகு பயன்படுத்தலாம். தலை பாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள், வசம்பு கட்டை, வால் மிளகு போன்றவற்றில் ஒன்றைப் புகைத்து மெதுவாக மூக்கினுள் செலுத்தலாம்.

 கோரைக் கிழங்கு, சுக்கு ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகலாம். தேன் கலந்த தண்ணீரையும் அது போலவே பயன்படுத்தலாம். செயல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - குளிரூட்டப்பட்ட அறையில் படுத்துறங்காதிருத்தல், இரவில் தயிர், பால், குளிர்ந்த நீர் ஆகியவற்றை பயன்படுத்தாதிருத்தல், குளிப்பதற்கு முன் அசனவில்வாதி தைலம், அசன மஞ்சிஸ்டாதி தைலம், மரிசாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வெது வெதுப்பாக தலைக்குத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து காலையில் குளிக்கவும்.

 (தொடரும்)

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com