புதையல் 9

ஆசிரியர் கூட்டம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு சென்றபின் தன் வண்டியை எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்த அறிவொளி
புதையல் 9

வாழ்வு வழி காட்டட்டும்

ஆசிரியர் கூட்டம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு சென்றபின் தன் வண்டியை எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்த அறிவொளி பத்தடி தள்ளியிருந்த பஸ் ஸ்டாண்டில் சந்தோஷ் நிற்பதைக் கண்டு அவரிடம் போய் வண்டியை நிறுத்தினார்.

அறிவொளி : சந்தோஷ் சார், நீங்க எங்க போகணும்? வீடு எங்கே?

சந்தோஷ்:  இங்கேர்ந்து ரெண்டு கிலோமீட்டர் தான் சார், நேரு நகர்ல வீடு.

அறிவொளி : சரி நானும் அந்தப்பக்கம்தான் போறேன். வண்டியில ஏறுங்க விட்டுடுறேன்.

சந்தோஷ் : உங்களுக்கு ஏன் சார் சிரமம், நான் பஸ் பிடிச்சி போய்க்குறேன் .

அறிவொளி : நான் போறவழியில உங்கள இறக்கிவிடப்போறேன். இதுல எனக்கென்ன சிரமம், வண்டிதானே  உங்கள சுமக்கப்போகுது. சும்மா ஏறுங்க.

(வண்டியில் ஏறி அமர்ந்த சந்தோஷ் அமைதியாக வரவே அறிவொளியே அந்த அமைதியைக் கலைத்தார்.)

என்ன சார் ரொம்ப அமைதியா வரீங்க?

சந்தோஷ் : இந்த ஸ்கூல்ல சேர்ந்த பத்து வருஷத்துல இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார். நாளுக்குநாள் பள்ளியோட தரம் தாழ்ந்துகிட்டே போறது ரொம்ப வருத்தமா இருந்தது.  

இதுக்கு முன்னாடி இருந்த ஹெட்மாஸ்டர்ஸ்  யாரும் உங்கள மாதிரி ரொம்ப சகஜமா பேசமாட்டாங்க. அவங்கவங்களுக்குன்னு ஒரு குரூப் இருக்கும். அவங்களோட மட்டும் நல்லா பேசுவாங்க. மத்தவங்க ஏதாவது நல்லது சொன்னாலோ, செய்தாலோ கூட அவங்களை என்கரேஜ் பண்ணமாட்டாங்க. அதனால வேலைக்கு சேர்ந்த புதுசுல ஏதாவது நல்லது செய்யணும்னு  ஆர்வமா இருந்தவங்க கூட வேலை செய்தா பாராட்டு கிடைக்கப் போறதுமில்லை, செய்யலைன்னா யாரும் திட்டப்போறதும் இல்லை. அப்புறம் எதுக்கு ரொம்ப வேலை செய்யணும்னு மத்தவங்கள போலவே ஒரே குட்டையில ஊறின மட்டைங்களா மாறிட்டாங்க.  நீங்க வந்ததுலேர்ந்து உங்கப் பேச்சும், அணுகுமுறையும் நம்பிக்கையை தருவதா இருக்கு. உங்ககிட்ட நாங்க கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்குன்னு புரியுது. சென்னையிலேர்ந்து நீங்களே விரும்பி இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்.

அறிவொளி : நன்றியெல்லாம் சொல்லி என்னை தூரத்துல நிறுத்திடாதீங்க சந்தோஷ் சார். நீங்கல்லாம் இவ்ளோ ஆர்வமா இருக்கும்போது என் வேலை ரொம்ப சுலபம்.

சந்தோஷ் : சார், நீங்க சந்தோஷ்னு கூப்பிட்டாலே போதும், இந்த சாரெல்லாம் வேண்டாம். இங்க நிறுத்திக்கோங்க சார், இந்த சந்துல மூணாவது வீடுதான் என்னோடது.

அறிவொளி : சரி, இவ்ளோ தூரம் வந்துருக்கேன், வீட்டுக்கு கூப்பிடமாட்டீங்களா?

சந்தோஷ் : தாராளமா வாங்க சார். நீங்க எங்க வீட்டுக்கெல்லாம் வருவீங்களோ இல்லையோன்ற சந்தேகத்துலதான் தயங்குனேன்.

அறிவொளி : சந்தோஷ் எனக்கு உங்க தயக்கம் புரிஞ்சுதான் வரேன்னு சொல்றேன். எனக்கு இந்த ஜாதி, மதம் என்ற சின்ன வட்டத்துக்குள்ள அடைபடுறதுல உடன்பாடு இல்லை, சரியா. இந்த உலகம் எல்லோருக்குமானதுன்னு நம்புறவன் நான்.

சந்தோஷ் : ரொம்ப சந்தோஷம் சார். உள்ள வாங்க. 

(வீட்டுக்குள் நுழையும்போதே ஆறேழு குழந்தைகள், ஐ! மாமா வந்துட்டார் என சந்தோஷை வந்து சூழ்ந்து கொண்டனர். சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த சாக்லெட்களை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு இன்னைக்கு மாமாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க ரெண்டு ரெண்டு பேரா சேர்ந்து உட்கார்ந்து படிங்க, சரியா? பாரதி, இங்க வா.

(அருகில் வந்த சிறுவனுக்குப் பத்து வயதிருக்கும். சந்தோஷை பிரதி எடுத்தது போல இருந்தான்.)

சார் எங்க ஸ்கூலோட  ஹெட்மாஸ்டர்.   

சார், இது என் பையன் பாரதி.

(என இருவரையும் அறிமுகப்படுத்தியதுமே வணக்கம் சார் எனக் கரங்களைக் குவித்து வணக்கம் சொல்லிய பாரதி பக்கத்தில் மேசை மீதிருந்த தண்ணீர் ஜாடியிலிருந்து குவளையில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சமையலறைக்குச் சென்று அம்மா அப்பாவோட ஃப்ரெண்டு வந்து இருக்கார் என்று தகவல் சொல்லிவிட்டு மீண்டும் சந்தோஷின் அருகில் வந்து நின்றான்.)

பாரதி நீ போய் பசங்கள சத்தமில்லாமப் பாத்துக்கோ.

பாரதி : சரிப்பா, நீங்க நேத்து எனக்கு சொன்ன கதையை நான் அவங்களுக்கு  சொல்றேன், அப்ப அமைதியா கேப்பாங்க.

(சொல்லிவிட்டுச் சென்ற பாரதி பிள்ளைகளை வட்டமாக அமரவைத்து கதை சொல்லும் பாங்கைப் பார்த்து ரசித்த அறிவொளி சந்தோஷைப் பாராட்டும்விதமாக அவர் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.)

அறிவொளி : மிகச்சிறந்த அப்பாக்களைத் தேர்ந்தெடுத்தா அதில் கண்டிப்பா நீங்க ஒருத்தரா இருப்பீங்க சந்தோஷ் . இப்பல்லாம் எந்த வீட்டுக்குப் போனாலும் பசங்க கையில் ஒரு ஸ்மார்ட் போனை வெச்சுக்கிட்டு ஏதாவது கேம் விளையாடிக்கிட்டுத்தான் இருப்பாங்க. அந்த நேரத்தில் அவங்கட்ட ஏதாவது வேலை வாங்கணும்னா பத்து தடவை சொல்ல வேண்டியிருக்கும். வீட்டுக்கு யாராவது வந்தா ஒரு சிரிப்புக்கூட இல்லாம,  எதுவும் பேசாம எழுந்திரிச்சு வேற ரூமுக்குப்போய் விளையாட்டைத் தொடருவாங்க.   ஆனா உங்க பாரதி கை கூப்பி வணக்கம் சொல்றான், நீங்க சொல்லாமலே தண்ணி கொண்டுவந்து தர்றான். உள்ளே போய் அவங்கம்மாவுக்குத் தகவல் சொல்றான். பிள்ளைகளை அமைதியா பாத்துக்க கதை சொல்றேன்னு சூழலுக்குத் தக்கபடி அவனாவே முடிவெடுக்கிறான். நல்ல தலைமைப் பண்பு உள்ளவனா ரொம்ப பெரிய ஆளா வருவான் பாருங்க. 

சந்தோஷ் : ரொம்ப நன்றி சார், இதில் என் மனைவியோட பங்கும் சரிபாதி உண்டு. 

(அப்போது சமையலறையிலிருந்து சற்றுத் தாங்கித் தாங்கி நடந்து வந்த தன் மனைவியின் கையிலிருந்த  காபி டம்ளரை  வாங்கி அறிவொளியிடம் கொடுத்த சந்தோஷ் அவரை  அறிமுகப்படுத்தினார்.) 

இவங்க என் மனைவி எழிலரசி, ஜீவா சாரோட மகள்.

(வணக்கம் தெரிவித்த அறிவொளி அவர் நடக்கும் விதத்தைப் பார்த்துவிட்டு தன்னை நோக்குவதைக்  கண்ட சந்தோஷ் புன்னகைத்தபடியே மேற்கொண்டு பேசினார்...)

நீங்க என்ன கேட்க நினைக்குறீங்கன்னு எனக்குப் புரியுது சார். நிச்சயமா நன்றிக்கடனா இவங்கள நான் கல்யாணம் பண்ணிக்கல. நான் அவ்ளோ பெரிய தியாகி எல்லாம் கிடையாது. ‘மகிழ்ச்சியாயிருக்கக் காரணங்கள் தேவையில்லை, மகிழ்ச்சியாயிருக்கும்போது காரணங்கள் தானாகவே வந்து தோரணங்களாகி விடுகின்றன’ அப்படின்னு ஒரு புத்தகத்துல படிச்சிருக்கேன். எந்த சூழ்நிலையிலையும் எப்படி சந்தோஷமா வாழ முடியும்னு இவங்களைப் பாத்துதான் நான் கத்துக்கிட்டேன். பெயரில் மட்டுமே இருந்த சந்தோஷத்தை,  வெற்றிடமாயிருந்த என் வாழ்க்கையில் இட்டு நிரம்ப இவரால்தான் முடியும்னு என் உள்ளுணர்வு சொன்னதை நம்பினேன். கடவுள் புண்ணியத்துல அவங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்ததுனாலயோ இல்லை, போனாப்போகுது   இவனுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு இவங்க  பெரிய மனசு பண்ணதாலயோ ஜீவா சாரோட சம்மதத்தோட நண்பர்களாயிருந்த நாங்கள்  தம்பதியராகிட்டோம். இதுதான் எங்க ஃபிளாஷ் பேக்.நான் சொன்னது சரிதானே எழில்?

எழில் : இவர் எப்பவும் இப்படித்தான் என்னை  வம்பிழுப்பார் சார். மகிழ்ச்சியா இருக்கத்தானே சார் வாழ்க்கை. எதைச் செய்தாலும் சந்தோஷமா செய், உன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமா வெச்சிக்கோன்னு அப்பா  அடிக்கடி சொல்வார். இப்ப அதைத்தான் எங்க பிள்ளைக்கும், எங்களைத் தேடி வர்ற மத்த ஏழைப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர்றோம். 

அறிவொளி : ரொம்ப மகிழ்ச்சிம்மா. குழந்தை வளர்ப்பு முறையில் நல்ல பெற்றோர், சர்வாதிகாரப் பெற்றோர், கெடுக்கும் பெற்றோர் என்று மூன்று வகை உண்டு. நீங்க கண்டிப்பா முதல் வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

எழில் : அதென்ன சார் மூன்று வகை பெற்றோர்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

அறிவொளி : நல்ல பெற்றோர் குழந்தைகள் மேல நிபந்தனைகளற்ற அன்பு கொண்டவர்கள். அந்த அன்பு குழந்தைளுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும். சில விதிமுறைகளைக் கொடுக்கவேண்டிய அவசியம் வரும் போது அதைப்  பின்பற்ற வேண்டிய காரணத்தை பிள்ளைகள் புரிந்து கொண்டு நடக்க உதவுவார்கள். எதையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுத்து ஊக்கப்படுத்தப் படுவதால் இவர்களுடைய பிள்ளைகள் யாருடனும் எளிதில் கலந்து பழகக் கூடியவர்களாக சூழ்நிலைக்கு ஏற்ப தனித்து செயல்படும் தைரியமானவர்களாக இருப்பார்கள்.

சந்தோஷ் : சர்வாதிகார பெற்றோர் என்ன செய்வாங்க?

அறிவொளி : பிள்ளைகளோட எந்த விருப்பத்துக்கும் மதிப்பு கொடுக்காம, உனக்கு எதுவும் தெரியாது நான் சொல்றத செய் என்று அதிகாரம் செய்வாங்க. திட்றது, அடிக்கிறது, பயமுறுத்துறதுனு எல்லாவிதமான அடக்குமுறையையும் கையாளுவாங்க. இவங்களோடப் பிள்ளைகள் ரொம்ப பயந்தவர்களா, எதையும் தனியா செய்ய துணிவில்லாம யாரையாவது சார்ந்தே இருப்பாங்க. சிலர் ரொம்ப முரட்டுத்தனமானவங்களா, என்ன சொன்னாலும் எதிர்த்து பேசக்கூடியவங்களா, பொய் சொல்றது மாதிரியான நடத்தைக் குறைபாடுகள் உள்ளவர்களா மாறிடவும் வாய்ப்பிருக்கு.

எழில் : ஓஹோ!  மூணாவது வகைப் பெற்றோர் எப்படிப்பட்டவங்க?

அறிவொளி : இவங்க பிள்ளைகள் மேல அன்பும் அக்கறையும் உள்ளவர்கள்தான், பிள்ளைகளுக்கு கஷ்டம் தெரியாம வளர்க்கணும்னு ஆசைப்படுவாங்க. தான் ரொம்ப நல்ல பெற்றோரா இருக்கிறதா நினைச்சுக்கிட்டு வளர்ந்த  பிள்ளைக்குகூட  எந்த வேலையும் செய்ய வாய்ப்பே குடுக்காம ஸ்கூல் பையை அடுக்கி வைக்குறதுல இருந்து  சாப்பாடு ஊட்டிவிடுற  வரைக்கும் எல்லாத்தையும் தானே செய்வாங்க. ஒரு நேரம் கண்டிக்குற அதே விஷயத்துக்கு இன்னொரு நேரம் கண்டுக்காம சும்மா விட்டுடுவாங்க. பிள்ளைகள் கேட்பது எல்லாத்தையும் வாங்கிக் கொடுப்பாங்க. அதனாலேயே இவங்க  பிள்ளைகள் எவ்வளவு வாங்கிக் கொடுத்தாலும் திருப்தியடைய மாட்டாங்க. எல்லாத்துக்கும் கோபப்படுறது, எறிஞ்சிவிழறது, மரியாதை இல்லாம பேசுறதுனு பெத்தவங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுப்பாங்க. பிள்ளைகள் கெட்டுப்போறதுக்கு  இந்த வகை பெற்றோர் தான் முக்கிய காரணம். ஆஸ்திரிய நாட்டு தத்துவ மேதையும் ஆன்மீக விஞ்ஞானியுமான  ருடால்ப் ஸ்டைனர் என்பவர் ‘குழந்தைகள் நாம் என்ன சொல்கிறோம் என்பதையோ என்ன செய்கிறோம் என்பதை விட நாம் எப்படிப்பட்டவர்களாக வாழ்கிறோம் என்பதைப் பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள்’, என்கிறார். அதனால பிள்ளை பெற்றால் மட்டும் போதாது, நல்ல முன்மாதிரியாக விளங்குபவர்களே நல்ல பெற்றோர். 

[அறிவொளியின் கூற்றுப்படி நாம் நல்ல பெற்றோரா என சிந்திப்போம். நம் வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வழிகாட்டட்டும்.]

பிரியசகி 

piriyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com