புதையல் 10

பெற்றோர்கள் நல்ல பெற்றோர், சர்வாதிகாரி பெற்றோர், கெடுக்கும் பெற்றோர் என்று மூன்று வகை
புதையல் 10

நால்வகை ஆசிரியர்கள்!

(பெற்றோர்களை நல்ல பெற்றோர், சர்வாதிகாரி பெற்றோர், கெடுக்கும் பெற்றோர் என்று மூன்று வகையாக பிரிக்கலாம் என்று விளக்கிய அறிவொளி, சந்தோஷ் மற்றும் அவர் மனைவி எழிலுடன் தொடர்ந்து பேசலானார்.)

சந்தோஷ் : பெற்றோர்களை வகைப்படுத்திய மாதிரி ஆசிரியர்களையும் வகைப்படுத்த முடியுமா சார்?

அறிவொளி : ஓ! செய்யலாமே ஆசிரியர்களையும் ஜனநாயக பாணி   உடையவர்கள், சர்வாதிகாரிகள், அதிகாரத்துவ பாணி உடையவர்கள், எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

சந்தோஷ் : அப்படியா! கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க சார்.

அறிவொளி : இதில் ஜனநாயகபாணி  உடைய ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தியே பாடம் நடத்துவாங்க. பிள்ளைகளோட வயசு, புரிஞ்சுக்குற தன்மைக்கு ஏத்த மாதிரி எளிமையான நடைமுறை வாழ்க்கையிலுள்ள உதாரணங்களைச் சொல்லி புரிய வைப்பார்கள். இடையில் மாணவர்கள் கேள்வி கேட்பதை இடையூறா நினைக்காம அதை ஊக்கப்படுத்துவாங்க. அவசியமான விவாதங்களையும் முன்வைத்து மாணவர்களோட கருத்துக்களைக் கேட்டு நெறிப்படுத்துவாங்க. பாடத்தை முடித்து திருப்புதல் செய்து பிள்ளைகளை மார்க் எடுக்க வைக்கிறது மட்டுமே முக்கியமா நினைக்காம அவர்களை  வாழ்க்கைக்கு தயார்படுத்துறது முக்கியமா நினைப்பாங்க. அதுக்காக சில விதிமுறைகளை தளர்த்திக்க அவசியமானா அதைத் தயங்காம செய்வாங்க. வகுப்பறை சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது அல்லது வகுப்பறை விதிகளை வகுக்கும் போது மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவங்களோட கருத்துகளையும் கேப்பாங்க. விதிகளை புரிய வைப்பாங்க. அதனாலேயே அதைக் கண்டிப்பா பிள்ளைங்க பின்பற்றுவாங்க என்பதால அங்க தண்டனைக்கு அவசியம் இருக்காது. இப்படி பக்குவப்பட்ட பிள்ளைகளைக் கட்டுப்படுத்த ஓர் அன்பான வார்த்தையும், அர்த்தமுள்ள பார்வையுமே போதும். நல்ல முன்மாதிரியா இருக்குறதால இந்த ஆசிரியரை மாணவர்கள் மறக்கவே மாட்டாங்க.

சந்தோஷ் : நான் ஜீவா சாரை நினைச்சுக்கிட்டு இருக்க மாதிரின்னு சொல்லுங்க. நீங்க சொல்ற ஓவ்வொரு விஷயமும் எனக்கு அவரைத்தான் மனக்கண்முன் கொண்டு வருது. அவர் பிள்ளைகளோட வாய் வார்த்தைகளுக்கு மட்டுமில்லாம அவங்க பாடிலாங்குவேஜ்க்கும் மதிப்புக் கொடுப்பார். வழக்கமா மற்ற வாத்தியாருங்க வகுப்புல பாடம் நடத்தும் போது பசங்க பேனா, பென்சில வச்சு விளையாடுறது, கால் ஆட்டுறது மத்தவங்களைத் தொந்தரவு பண்றது எல்லாம் ஜீவா சார்  கிளாஸ்ல இருக்காது. அப்படி என்னைக்காவது பசங்க கவனிக்காம டிஸ்டர்ப் ஆகுற மாதிரியோ கிளாஸ் டல்லா, தூக்கம் வர்ற மாதிரி இருந்தா உடனே பாடத்தை தொடராம பாடத்துக்கு சம்பந்தமா நடைமுறை வாழ்க்கையில இருக்க விஷயத்தைப் பத்தி எதாவது கேள்வி கேட்டு பசங்களை பேச வைப்பாரு. உடனே தூக்கம் போயி வகுப்பு கலகலப்பாகிடும்.

ஒருமுறை அப்படித்தான் தாய்நாடு என்ற தலைப்புல தேசபக்தியைப் பத்தி பாடம் நடத்திக்கிட்டிருந்தப்ப என்பக்கத்தில  இருந்த ரமேஷ்ன்ற பையன் ஏன்டா சார் ரொம்ப அறுக்குறாரு இன்னைக்குன்னு பேசிக்கிட்டுருந்தான். ஓவ்வொருவரையும் ரொம்ப உன்னிப்பா கவனிக்கிற ஜீவா சார் அவனை எழுப்பி ரமேஷ் உனக்கொரு வாய்ப்பு கிடைச்சா நீ எப்படி உன் தேசபக்தியைக் காட்டுவேன்னு கேட்டார். தன்னை எழுப்புவாருன்னு எதிர்பார்க்காத அவன் எழுந்து சார் நான் படிச்சிமுடிச்சுட்டு ராணுவத்தில சேர்ந்து நம்ம நாட்டுக்காக சண்டைபோடுவேன்னான். அவனோ குண்டா, குள்ளமா இருப்பான. ராணுவத்தில சேர வாய்ப்பே கிடைக்காது. அவன் அப்படி சொன்னதும் வகுப்பே கொல்லுனு சிரிச்சது. உடனே சமாளிச்சுக்கிட்டு அவன் ராணுவத்தில சேர்ந்தா  தான் தேசபக்தியா? சின்ன சின்ன விஷயத்தில  கூட நம்ம தேசபக்தியை வெளிப்படுத்தலாமே. ஒரு சொட்டு தண்ணீர் ஒரு சொட்டு எண்ணெய், ஒரு யூனிட்  மின்சாரம் இதை வேஸ்ட் பண்ணாம மிச்சப்படுத்தினாலும் அது தேசபக்தி தானே .தண்ணீர் குழாய் ஒழுகிக்கிட்டிருந்தா நான் அதை யாரும் சொல்லாமலே மூடுறேன், பசங்க யாரும் இல்லாம ஃபேன் ஓடிக்கிட்டிருந்தா ஆஃப் பண்றேன். இது தேசபக்திதானே! ரோட்டை க்ராஸ் பண்ணும்போது போலீஸ்காரர் இருந்தாலும் இல்லைன்னாலும் விதிமுறைகளை பின்பற்றுவேன். இதனாலே நான் மட்டுமில்லாம என் தேசத்தில இருக்க மற்ற உயிர்களையும் விபத்துல சிக்கிக்காம காப்பாத்துறேன். இதெல்லாம் தேசபக்திதானேன்னு மேடை பேச்சாளர் ரேஞ்சுக்கு பேசினான். கைத்தட்டல்ல ரூமே அதிர்ந்துச்சு. அன்னைக்கு அந்தக்  கைத்தட்டல் கொடுத்த தைரியத்தில மேடைகள் ஏறத் தொடங்கியவன் இன்னைக்கு நெஜம்மாவே பேச்சாளராகி டிவியில பட்டிமன்றத்துல  பேசுற அளவுக்கு வளர்ந்துட்டான்.

அறிவொளி : ரொம்ப மகிழ்ச்சி சந்தோஷ். இந்த மாதிரி ஆசிரியர் கிடைக்க மாணவர்கள் கொடுத்து வச்சிருக்கணும்.

சந்தோஷ் : உண்மைதான் சார், மத்த வாதியாருங்க மாதிரி அவர் படிக்கிறவன், படிக்காதவன்னு எந்த பாகுபாடும் காட்ட மாட்டார். சரியா படிக்காதவன் ஒரு சின்ன முன்னேற்றம் காட்டினா கூட வகுப்பிலே எல்லோர்க்கும் முன்னாடி பாராட்டுவார். யாருக்கு என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடிச்சு அந்த மாதிரியான பொறுப்புகளை அவங்களுக்கு கொடுப்பார். யாராவது தப்பு பண்ணும் போது அவனோட பெயரை சொல்லாமல் வகுப்புல பொதுவான தகவலா சொல்லிட்டு, அந்த மாதிரியான தவறுகள் என்ன மாதிரி பின் விளைவுகளை ஏற்படுத்தும்னு சொல்லுவார். அந்தப் பையனைத் தனியா கூப்பிட்டு அவனோடத் தவறுகளைப் புரிய வைப்பார். பசங்க எதாவது சந்தேகம் கேட்டு அது அவருக்குத் தெரியாத விஷயமா இருந்தா, எனக்கு தெரியலப்பா, கேட்டுக்கிட்டு வந்து சொல்றேன்னு எந்த தயக்கமுமில்லாம சொல்வார். சொன்ன மாதிரி அதை அடுத்த நாள் தெளிவு படுத்துவார். இதே மத்தவங்களா இருந்தா கேள்வி கேட்ட பையன் ஏன்டா கேள்வி கேட்டோம்னு வருத்தப்படுறா மாதிரி எதாவது சொல்லி மட்டம் தட்டி அவனை உட்கார வைச்சிடுவாங்க. எல்லாப் பசங்களுக்கும் அவர்கிட்டப் பிடிச்ச ரொம்ப நல்ல விஷயம் பசங்க பேசுறதை காதுகொடுத்துக் கேட்பார். நான் டீச்சர், நீ ஸ்டூடென்ட், நீ என்ன எனக்கு சொல்றதுன்ற ஈகோ அவர் கிட்ட சுத்தமாக் கிடையாது.  

எழில் : எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் ஒரு பையனை சரி பண்ணுறதுக்காக தன்னை தாழ்த்திக்க கூட அவர் தயங்கமாட்டார். அவங்க லெவலுக்கு இறங்கிப் போயிடுவார். ஒரு முறை ரொம்ப அழுக்குச்சட்டையோட பார்க்க முரட்டுத்தனமாக இருந்த ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து காபியெல்லாம் குடுத்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தார். என்ன பேசுறார்னு பார்த்தா, படிக்கிற காலத்தில நான் கூட உன்னைவிட மோசமாவே இருந்தேன். வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு திருந்தி இப்ப இந்த நிலைக்கு வந்திருக்கேன்னு ஏதேதோ கதையெல்லாம் சொன்னாரு. ஆனா அவர் அப்படிக் கிடையாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஏம்பா இப்படியெல்லாம் பொய் சொல்றீங்கன்னு கேட்டா பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்னு திருவள்ளுவரே சொல்லியிருக்காறேம்மா. நான் சொன்ன சின்ன பொய் அவனை யோசிக்க வைக்கும். நம்மை விட மோசமா இருந்தவரே இப்ப இப்படி ஒரு நல்ல வாத்தியாரா இருக்காரு. நாம ஏன் மாறக் கூடாதுன்னு அவனுக்குத் தோணும்னார். அதே மாதிரி கொஞ்ச நாள் போகப்போக அவனோட நடை உடை பாவனையெல்லாம் மாறத் தொடங்குச்சு. தினம் வந்து அப்பாகிட்ட சந்தேகம் கேட்டு படிச்சிட்டுப் போவான். தேறவே மாட்டான்னு எல்லோரும் கைகழுவின அந்தப் பையன் பாஸ் பண்ணி இன்னைக்கு ஏதோ சொந்தமா தொழில் பண்ணிக்கிட்டிருக்கான். அப்பா இருந்தவரைக்கும் ஓவ்வொரு வருசமும் பிறந்த நாளுக்குத் தவறாம வந்து அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போவான். இது மாதிரி அடிக்கடி பழைய மாணவர்கள் வந்து அப்பாவைப் பாத்துட்டு நோட்டு, பேனா, பென்சில்ன்னு நிறைய  வாங்கிட்டு வந்து, எங்களுக்குத் தேவைப்பட்டப்போ நீங்க கொடுத்தீங்க.  இன்னைக்கு நாங்க நல்லாயிருக்கோம் இதை ஏழை பசங்களுக்குக் குடுங்கன்னு தந்துட்டுப் போவாங்க. இன்னும்  சில பேர் பசங்களுக்கு ஃபீஸ் கட்டுறது, ஏழை பிள்ளைங்களுக்கு தீபாவளி பொங்கலுக்கு புதுத்துணி எடுத்து குடுத்துட்டு போறதுகூட உண்டு.

அறிவொளி : உண்மையிலேயே கேட்க ரொம்ப பெருமையா இருக்கும்மா. உங்கப்பா பசங்களுக்கு மட்டுமில்ல, ஆசிரியர்களுக்கும் ஒரு நல்ல உதாரணம்.

சந்தோஷ்  : ஆமா சார், மத்த மூணு வகை ஆசிரியர்களைப் பத்தி சொல்லுங்களேன்.

அறிவொளி : சர்வாதிகாரி பாணி உடைய ஆசிரியர்கள்  எதுக்கும் பசங்களோட கருத்தை எல்லாம் கேட்க மாட்டாங்க. அப்படியே யாராவது எதாவது சொல்ல வந்தாலும், இங்க நான் டீச்சரா நீ டீச்சரா, எனக்கு எல்லாம் தெரியும். வாயை மூடிக்கிட்டு சொன்னதை மட்டும் செய்யுன்னு அடக்கிடுவாங்க. அவங்களைப் பொறுத்தவரை டீச்சர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காம மறுவார்த்தை பேசாம கீழ் படியிறவங்க தான் மிகச் சிறந்த மாணவர்கள். எதிர்த்து பேசுறவங்களை, அவங்க சொல்றதைக் கேக்காத பசங்களைப் பணிய வைக்க எல்லாவித அடக்குமுறைகளையும் கையாளுவாங்க அப்படியும் நெனச்சது நடக்கலைன்னா நான் சொன்னதைக் கேக்கலை  அதனால தான் இப்படி ஆச்சுன்னு பசங்க மேலயே பழியைப் போடுவாங்க. 

அதிகாரத்துவபாணி கொண்டவங்களுக்கு பள்ளி விதிமுறைகள் வழிவழியா பின்பற்றி வரும் மரபுகள் பள்ளியினுடைய நல்ல பேர் இதுக்கெல்லாம் ஒரு சின்ன பாதகம் கூட வந்திடக்கூடாதுன்றது தான் முக்கியமான நோக்கம், அதனால தனிப்பட்ட விதத்துல எந்த புது முயற்சிகளையும் அவங்களும் எடுக்க மாட்டாங்க. மத்தவங்களையும் எடுக்க விட மாட்டாங்க. கொஞ்சம் ஆபத்தான பேர்வழிகள் இவர்கள். மாணவர்களின் நலன் ஆசிரியர்களுக்குண்டான வேலை, ஆசிரியர் மாணவர்களுக்கிடையே உள்ள உறவு எல்லாம் இரண்டாம்பட்சம்தான். வேலை கொடுத்த பள்ளி நிர்வாகத்துக்கு நன்றியுள்ளவர்களா இருப்பாங்க. நிர்வாகத்தோட ஒப்புதல், அங்கீகாரம், பதவி உயர்வு அதை மட்டுமே கவனத்தில் வைச்சுக்கிட்டு வேலை பார்ப்பாங்க. வேற எதைப்பத்தியும் யோசிக்க மாட்டாங்க.

இவங்களையாவது ஏதோ ஒருவிதத்துக்கு சேர்த்துக்கலாம். ஆனா இந்தக் கடைசி பிரிவு ஆசிரியர்கள் தான் ரொம்ப மோசம். இவங்களுக்கு பள்ளியோட நல்ல பேரோ மாணவர்களோட நலனோ எதுவுமே முக்கியம் கிடையாது.இருக்குற வழக்கத்தையும் பின்பற்ற மாட்டாங்க. தானா முன்வந்தும் எந்த முயற்சியும் எடுக்கமாட்டாங்க. பிள்ளைகளுக்கு ரொம்ப சுதந்திரம் குடுத்து ரொம்ப நட்பானவங்களா காட்டிக்குவாங்க. ஆனா உண்மையில அவங்களால பிள்ளைகளுக்கு எந்த நல்லதும் நடக்காது. தன்னைப் பத்தி மட்டுமே அக்கறை கொண்ட சுயநலவாதிகள் இவர்கள். எல்லாப் பள்ளிகளிலேயும் இந்த நாலு வகை ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்வாங்க. அவர்களையெல்லாம் சரியான பாதையில் வழிநடத்துறதுதான் நல்ல தலைமை ஆசிரியரோட வேலை.

எழில் : இந்த நாலுவகையில் ஒரு ஆசிரியர் எந்த வகைன்னு தெரிஞ்சுக்க ஈஸியான எதாவது வழியிருக்கா சார்?

அறிவொளி : இப்பதான் ரெடிமேடா எல்லாமே கிடைக்குதே. இந்த கேள்விகளுக்கு பதில் எழுதினா கடைசியில நீங்க எந்த வகை ஆசிரியர்னு தெரிஞ்சிடும்.

(தன் பையிலிருந்து ஒரு கேள்வித்தாளை எடுத்து தந்தார் அறிவொளி)

என்ன கேள்வி பதில் என அடுத்த வாரம் பார்ப்போமா!

தேடலாம்......

பிரியசகி 

piriyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com