புதையல் 6

அனைவரும் கொடுக்கப்பட்ட தாளிலிருந்த வாக்கியங்களை ஆர்வமுடன் படித்து விடையெழுதிவிட்டு அடுத்து தான்
புதையல் 6

தன்னை அறிந்தவனே பிறரையும் அறியலாம்!


(அனைவரும் கொடுக்கப்பட்ட தாளிலிருந்த வாக்கியங்களை ஆர்வமுடன் படித்து விடையெழுதிவிட்டு அடுத்து தான் என்ன சொல்லப்போகிறோம் என்று ஆர்வமுடன் பார்ப்பதைக்கண்டு மகிழ்ந்த தலைமையாசிரியர் அறிவொளி மேற்கொண்டு விளக்கலானார்.)

அறிவொளி : அன்பு ஆசிரியபெருமக்களே! நூறு வாக்கியங்களில் எண் 11,24,25,26,33,41,48,54,76,79,80,92,100 ஆகியவற்றிற்கு நீங்கள் மூன்று மதிப்பெண் கொடுத்திருந்தால் உங்களிடம் மொழித்திறன் 70% முதல் 100%வரை உள்ளது என்றும் இரண்டு மதிப்பெண் தந்திருந்தால் 40% முதல் 70% வரை உள்ளது என்றும் ஒரு மதிப்பெண் தந்திருந்தால் 0% முதல் 40%வரை உள்ளது என்றும் பொருள்.

இதுபோலவே 1, 2, 4, 6, 17, 32, 37, 67, 75 ஆகியவற்றிற்கு மூன்று போட்டிருந்தால் உங்களிடம் இசைத்திறன் அதிகமுள்ளது என்று பொருள்.

15, 30, 31, 36, 39, 47,49,53, 62,65,81,86, 93 ஆகியவை கணிதத்திறனைக் குறிக்கும்.

8, 12, 14,27, 28, 29, 45, 51, 56, 59, 74, 84, 88, 99 ஆகிய வாக்கியங்கள் உடலியக்கத்திறனைக் குறிக்கும்.

3, 5, 16, 34,55, 64, 68,70,73, 78,82, 91 பிறரோடு கலந்து பழகும் திறனைக் குறிக்கும்.

9, 23, 38, 43, 58,61,66, 72, 77,83,85 ஆகியவை தன்னைத்தான் அறியும் திறனைக் குறிக்கும்.

10, 13, 18, 19,21, 35,42, 44, 52, 57, 71, 87,89,90,94,95, 96, 97,98 ஆகியவை இடம் சார்ந்த கற்பனைத்திறனைக் குறிக்கும்.

7, 20, 22,40,46,50,60, 63.69 ஆகியவை இயற்கை சார்ந்த அறிவுத்திறனைக் குறிக்கும்.

எதுக்கெல்லாம் மூன்று போட்டிருக்கீங்களோ அத்திறன் உங்களிடம் அதிகமா இருக்கும்.. அது உங்கள் பலம். இரண்டு போட்டிருந்தால் அத்திறன் சற்று குறைவா இருக்கும். ஒன்று எனப்போட்டுள்ள திறன் உங்களிடம்ரொம்பக் குறைவா இருக்கும். அதுவே உங்கள் பலவீனமும்.

(அறிவொளி சொல்லும் போதே ஒரு ஆசிரியர் எந்த எண் எத்திறனுக்கானது என கரும்பலகையில் எழுதவே அனைவரும் அதைப்பார்த்து தத்தம் பலம் பலவீனத்தைக் கணக்கிட ஆரம்பித்தனர். பத்து நிமிடங்களில் எல்லோர் முகத்திலும் ஏதோ புதிதாகக் கண்டு பிடித்துவிட்டது போன்றதொரு மகிழ்ச்சி காணப்பட்டது.)

அறிவொளி: என்ன நண்பர்களே! எல்லோரும் உங்களைப்பற்றி தெரிஞ்சுக்கிட்டீங்களா?

அகிலா: ஆமா சார், ரொம்ப நன்றி. எங்களுடையதை மட்டுமில்லாம எங்க கூடப் பழகுறவங்க, எங்க மாணவர்களோட பலம் பலவீனத்தையும் புரிஞ்சுக்க முடியுது. என் வகுப்புல ஒரு பையன் சினிமா பாட்டு ராகமெல்லாம் ஒருவரி மறக்காம நல்லா பாடுவான், கணக்கு கூடப்போடுவான். ஆனா பாடபுத்தகத்தைப் வாசிக்க ரொம்ப சிரமப்படுவான். இவ்வளவு நாள் நான் அவனை ரொம்பத் திட்டியிருக்கேன். அவனுக்கு இசைத்திறனும் கணிதத்திறனும் அதிகம், மொழித்திறன் குறைவுன்னு இப்பதான்புரியுது.

குமார்: மேடம் சொல்லறது உண்மைதான் சார். எனக்கு கர்நாடக இசைன்னா உயிர். என் மனைவிக்கோ சுத்தமா அதுல ஆர்வம் கிடையாது. ஒருவாட்டி சுதா ரகுநாதன் கச்சேரிக்குக் கூட்டிட்டுப் போனா நல்லாதூங்கிட்டா. கோவத்துல ஏன் இப்புடி ஞானசூனியமா இருக்கேனு தெரியாம கேட்டுட்டேன். அன்னைக்கு எனக்கு சாப்பாட்டுல உப்புக்கு பதிலா உப்புல தான் சாப்பாடு வந்துச்சு.
(சிரிப்பு சத்தத்தில் அறை அதிர்ந்தது.)

ஆனா சும்மா சொல்லக்கூடாது , நல்லா துணி தைப்பா, கைவேலைல அவளை அடிச்சுக்க முடியாது. பூ, பொம்மைனு ஏதாவது அலங்காரப்பொருள் செய்து வீட்டை அழகா பளிச்சுனு வெச்சிருப்பா. எனக்கு அதெல்லாம் ரொம்பக்கம்மி. நியூஸ் பேப்பர், காபி குடிச்ச டம்ளர் , முகம் தொடச்ச துண்டு எல்லாம் அங்கங்க போட்டுடுவேன். என்னை திட்டுற சாக்குல உங்கள சொல்லிக்குத்தமில்ல, புள்ளைய இப்புடி பொறுப்பில்லாம வளர்த்த உங்கம்மாவத்தான் சொல்லணும்னு எங்கம்மாவை வம்புக்கிழுப்பா. இதுக்குதான் எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும்.

அறிவொளி: குமார் சார் உங்களுக்கு இசைத்திறன் அதிகம், இடம் சார்ந்த கற்பனைத்திறன் குறைவு என்பதை உங்க மனைவியும் அவங்களுக்கு இசைத்திறன் குறைவு, இடம் சார்ந்த கற்பனைத்திறன் அதிகம் என்பதை நீங்களும் புரிஞ்சிக்கிட்டிருந்தா இந்த பிரச்சனைகளுக்கு இடமில்லை. கடவுள் படைப்புல ஒவ்வொருத்தரும் ஒரு விதம். நிறை குறைகளோட நம்மையும் மத்தவங்களையும் ஏத்துக்கிட்டா வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும்.

குமார்: அதெல்லாம் சரி சார், எனக்கு ஒரு சந்தேகம் . நம்மகிட்ட இயல்பான பலமா இருக்க ஒரு திறன் திடீர்னு அதுக்கு எதிர்மாறா பலவீனமா மாறிடுமா?

அறிவொளி: என்ன கேக்குறீங்கன்னு புரியலையே!

குமார்: எம்மனைவி எப்பவும் எல்லோரோடவும் நல்லா கலகலப்பா பழகுவா. நீங்க சொன்ன பிறரோடு கலந்து பழகும் திறன் அவளுக்கு அதிகம். ஆனா என் குடும்பத்துலேர்ந்து யாராவது வீட்டுக்கு வந்தா மட்டும் அது தன்னைத்தான் அறியும் திறனா மாறி, யாரோடையும் பேச மாட்டேங்குறாளே எப்படி?
(எல்லோரும் சேர்ந்து சிரிக்க, அமைதி மீண்டும் வர சில நிமிடங்கள் ஆனது.)

அறிவொளி : குமார் சார் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான் . ஆனா இங்க உங்க மனைவிக்கு தெரிஞ்சவங்க யாரவது இருக்காங்களான்னு யோசிச்சுக்கோங்க. அப்புறம் இன்னைக்கும் உங்களுக்கு உப்புலதான் சாப்பாடு.

குமார்: அய்யய்யோ ஆமா சார்.

(பெண்கள் பக்கம் திரும்பி கும்பிடு போட்டவர் ...)

சகோதரிகளே! யாரும் போட்டுக்குடுத்து குடும்பத்துல கும்மியடிச்சிட்டுப் போய்டாதீங்கம்மா.

பிருந்தா: பொண்டாட்டிகிட்ட அவ்வளவு பயம் இருக்கவர் ஏன் எல்லார்முன்னாடியும் அவங்கள இப்படி பேசணும்? நடைமுறையிலயும் சரி, டிவி நிகழ்ச்சிகள்லயும் சரி மனைவியை கிண்டல் பண்ணி பேசுறதே சிலருக்கு வேலையாப்போச்சு.

ரேவதி: சார், எம் பொண்ணுக்கு என்ன திறமை இருக்குன்னே என்னால கண்டு பிடிக்கவே முடியல . எந்நேரமும் டிவி பாத்துக்கிட்டே இருக்காளேன்னு பரதநாட்டியம் கிளாஸ்ல சேர்த்தேன், கொஞ்சநாள் போயிட்டு கால் ரொம்ப வலிக்குதுன்னு போகமாட்டேன்னுட்டா. கீபோர்ட் கிளாஸ் சேர்த்துவிட்டேன், ஒரு மாசம் ஒழுங்கா போனவ இப்ப அதுக்கும் போக மாட்டேங்குறா. இருபதாயிரம் கீபோர்ட் வாங்க செலவு பண்ணது தான் மிச்சம். இப்ப ஸ்விம்மிங் கிளாஸ்ல சேர்த்துவிடுங்கன்றா. இதுக்கும் ஒரு வாரம் போயிட்டு நின்னுடுவியான்னு திட்டினேன். அதெல்லாம் நீங்க கட்டாயப்படுத்துனதாலத் போனேன். இதுல எனக்கே இன்ட்ரஸ்ட் இருக்கு, சேர்த்துவிடுங்க ஒழுங்கா போறேங்குறா. பொம்பளை பிள்ளைக்கு எதுக்கு ஸ்விம்மிங் எல்லாம்னு எங்க வீட்டுக்காரர் திட்டுறார். என்ன பண்றதுன்னு தெரியலசார்.

அறிவொளி: உங்க மகதான் தெளிவா இருக்காங்களே மேடம். நமக்கு நடனம் பிடிக்கும், கீபோர்ட் பிடிச்சிருக்குன்றதாலோ இல்ல வீட்டுக்குப் பக்கத்துல அந்த வகுப்புதான் இருக்குன்றதாலோ பிள்ளைகளை கட்டாயப்படுத்தினா இப்படித்தான் ஆகும். அவங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கோ அதில் சேர்த்துவிட்டா பெரிய அளவில் முன்னேற வாய்ப்புகள் அதிகம். பெண்கள் எல்லாத்துறையிலும் சாதிக்குற காலம் இதுன்னு சொல்லி உங்க கணவரோட மனச மாத்தி மகளோட ஆசையை நிறைவேத்துங்க. ஒலிம்பிக்ல இந்தியா இன்னும் தங்கம் வாங்கலை என்ற குறை ஒருவேளை உங்க மக மூலமா நிறைவேறலாம் இல்லையா?

ரேவதி: கேக்கவே சந்தோசமா இருக்கு சார், கண்டிப்பா செய்றேன்.

சேகர்: சார் இந்தத் திறனையெல்லாம் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்த எப்படிப் பயன்படுத்தலாம்?

அறிவொளி: கண்டிப்பா சொல்றேன் ....

(என்ன சொல்லியிருப்பார்...? தெரிந்துகொள்ள அடுத்த வாரம்வரை காத்திருப்போம்.)

பிரியமுடன்
பிரியசகி
priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com