புதையல் 7

ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்த பல்முனை நுண்ணறிவுத் திறனை எவ்வாறு பயன்படுத்தலாம்
புதையல் 7

உங்க மனசுல யாரு?

(ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்த பல்முனை நுண்ணறிவுத் திறனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அறிவொளி விளக்க ஆரம்பித்தார்.)

அறிவொளி : பல்முனை நுண்ணறிவுத்திறன் எனப்படும் மல்டிபிள் இன்டெலிஜென்ஸ்ஸை (Mulltiple Intelligence) கற்பித்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை. வகுப்பறையில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித  அறிவுத்திறனை பெற்றிருப்பதால்  ஆசிரியர்களும் பல்முனை அறிவுத்திறனைப்  பயன்படுத்தி பாடம்  நடத்தினால்தான் எல்லா மாணவர்களையும்  கவர முடியும். தெரிந்தோ தெரியாமலோ பலஆசிரியர்கள்   இம்முறைகளைப் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க.

இளங்கோவன் : ஏற்கனவே  பயன் படுத்திக்கிட்டிருக்காங்களா? புரியலையே சார்?

அறிவொளி : நீங்க  தமிழ் மனப்பாடச்செய்யுள்  எப்படி நடத்துவீங்க?

இளங்கோவன் : பாட்டா  பாடித்தான்  சொல்லிக்குடுப்பேன்.

அறிவொளி : எங்க ஒரு பாட்டு  பாடிக்காட்டுங்க பார்க்கலாம்.

இளங்கோவன்: சரி பாடுறேன்.

(பெண்கட்கு கல்வி வேண்டும் என்ற பாரதிதாசன் பாடலை இளங்கோவன் கம்பீரமான  குரலில் பாடி முடித்ததும்  மெய்மறந்து கேட்ட ஆசிரியர்களின் கைதட்டலால் அறை நிரம்பியது.)

அறிவொளி : பாத்தீங்களா, உங்க இசைத்திறன் எங்களையே மெய்மறக்க வைச்சிடுச்சே, உங்க மாணவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதா இருக்கும்!

இளங்கோவன் : உண்மைதான் சார், வெறும் தகவல்களா சொல்லாம இப்படி பாட்டாவோ, குரலில் ஏற்ற இறக்கங்களோட   நாடகபாணியிலோ  பாடத்தை நடத்தும்போது பிள்ளைகள் நல்லா கவனிப்பாங்க.

அறிவொளி : ஆமா, அதே போல தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நர்சரி பாடல்களை உடல் அசைவுகளோட ஆடிப்பாடி சொல்லிக் கொடுக்கும்போது பிள்ளைகளும் ஆர்வமா கத்துக்குவாங்க. உடலியக்கத் திறனைப் பயன்படுத்துவதால் அங்கே முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் நடக்கும்.

மனிதனுக்கு மொத்தம் இருநூற்றி முப்பதுக்கும் அதிகமான நினைவாற்றல்கள் இருப்பதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இதில் தசைகளின் இயக்கத்தினால் ஏற்படும் நினைவாற்றல் (Muscle memory) ஆயுள் முழுக்க மறக்காது.

கவிதா : ஏதாவது உதாரணம் சொல்லுங்க சார்.

அறிவொளி : நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சலடிப்பது போன்றவை இந்தவகை தான். ஒருமுறை கற்றுக்கொண்டால் பிறகு மறக்காது. அதுபோல பிள்ளைகள் தானாக செய்து கற்கும் செயல்பாடுகள் (Activities),  பரிசோதனைகள் (Experiments) போன்றவற்றில் ஐம்புலனும் ஒன்றி சந்தோஷமாக செய்வதால் கற்றல் கசக்காமல் கற்கண்டாய் இனிக்கும். தசைகளின் இயக்கத்தினால் ஏற்படும் நினைவாற்றல் போலவே உணர்வுரீதியான நினைவாற்றலும் மிகவும் முக்கியம்.

ஆனந்தி: அது என்ன உணர்வுரீதியான நினைவாற்றல்?

அறிவொளி : நம் மூளையின் அடிப்பகுதியில் பாதாம் பருப்புபோல சிறியதாக இருக்கும் அமீக்தலா தான் நம் உணர்வுரீதியான நினைவாற்றலுக்கு காரணம். 1996ஆம்  ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை இரு பிரிவாகப் பிரித்து ஒருபிரிவினரை அவர்களுக்குப் பிடித்த உற்சாகமூட்டக்கூடிய திரைப்படத்தையும், மற்றொரு பிரிவினரை போரடிக்கும் ஒரு திரைப்படத்தையும் பார்க்க வைத்து அவர்களுக்கு ஸ்கேன் (PET Scan) எடுத்தனர். அதில் முதல் பிரிவினருக்கு அமீக்தலாவின் செயல்பாடு மிகச்சிறப்பாகவும் மற்றவர்களுக்கு குறைவாகவும் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒரு வாரம் கழித்து இருபிரிவினரையும் கேள்வி கேட்டு ஆராய்ந்தபோது முதல் பிரிவினரால் மட்டுமே  தாம் பார்த்த படத்தின் மிக நுணுக்கமானத் தகவல்களையும் நினைவுபடுத்த முடிந்தது எனக் கண்டறிந்தனர்.  அமீக்தலாவை தூண்டிவிடும் விதத்தில் உற்சாகமாக வகுப்பெடுத்தால் கற்றல் கற்பித்தல் இரண்டுமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். அப்போது கற்கும் பாடமும் மறந்து போகாமல் நினைவில் நன்கு பதியும்.

ராஜாராம் : அப்போ  நாமும் இனிமே  பாடம் நடத்தாமல் சினிமா போட்டு காமிச்சுக்கிட்டே இருக்கவேண்டியது தான்.

அறிவொளி : அது ஆராய்ச்சிக்காக செய்தது. நான் சொல்றது என்னன்னா வகுப்பறை என்பது ஆசிரியர் மட்டுமே பேசிக்கிட்டு இருக்கும் ஒருவழிபாதையா இல்லாமல் மாணவர்களையும் பங்கேற்க வைக்கக்கூடியதா இருக்கணும். பாடத்தலைப்புக்கேற்ப மாணவர்களை குழுக்களா பிரிச்சு நாடகம், தனிநடிப்பு, பட்டிமன்றம் நடத்துவது எனப்பல வாய்ப்புகளைக் கொடுக்கும்போது அதற்காக தன்னைத் தயாரிக்கும் பிள்ளைகள் பாடப்புத்தகம் என்ற குறுகிய கண்ணோட்டத்தை விட்டு தன்  அறிவை விரிவு படுத்திக்கொள்வார்கள். பாடத்தோடு தொடர்புடைய விதத்தில் படம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல், பாட்டு பாடுதல், பரிசோதனை செய்தல், நடித்தல் என என்ன செய்தாலும் அதற்கு வளரறி மதிப்பெண் [FA(A) mark] கொடுத்திடலாம்.  ஆனா கடையிலுள்ள பொருட்களை வாங்கி வருவதை தவிர்க்கணும். அதனால பெத்தவங்களுக்கு செலவுதானே தவிர பிள்ளைகளோட திறமை வளரப்  போவதில்லை.

ராஜேஷ் : நீங்க சொல்றமாதிரி செய்தா வகுப்பறை ரொம்ப சத்தமா இருக்குமே, பரவாயில்லையா? டீச்சருக்கு கிளாஸ் கண்ட்ரோல் இல்லைனு சொல்லமாட்டீங்களே?

அறிவொளி : பிள்ளைங்க சந்தோசமா இருக்கும் இடத்துல சத்தம் இருக்கத்தான் செய்யும் . சத்தமே இல்லாத இடம் சமாதியா தான் இருக்கும். வகுப்பறை சமாதியா இருப்பதுல எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனா கற்றலினால் வரும் சத்தத்துக்கும், கட்டுப்பாடு இல்லாததுனால வரும் சத்தத்துக்கு எனக்கு வித்தியாசம் தெரியும் சார். அதனால நீங்க பயப்பட வேண்டாம்.

லதா: சார், நீங்க சொன்ன எட்டு திறனில் பிறரோடு கலந்து பழகும் திறன், தன்னைத்தான் அறியும் திறன், இயற்கையோடு இணையும் திறன் இதையெல்லாம் எப்படி வகுப்பறையில் பயன்படுத்த முடியும்?

அறிவொளி : பிள்ளைங்க அமைதியா படிச்சி,   பிடிச்சதைப்  புரிந்து, கொண்டு தொகுத்து எழுதுவது தன்னைத்தான் அறியும் திறன்தான். பாடம் நடத்தும் முன்னாடியோ அல்லது  நடத்தி முடிச்ச பிறகோ   குழுக்களா பிரிச்சு  கலந்தாலோசனை செய்து (Brain storm) குழுவுக்கு ஒரு தலைவனை வந்து விளக்கச்  சொல்லுங்க. இது பிறரோட கலந்து பழகும் திறனை வளர்க்கும். பல நேரங்களில் ஆசிரியர் நடத்தும்போது புரியாத பாடம் கூட சக நண்பர்கள் சொல்லிக் கொடுக்கும்போது நல்லாப் புரியும்.

லதா : இயற்கையோடு இணைந்த  திறனை வளர்க்க  என்ன பண்ணனும்? மரத்தடியில் பாடம் நடத்தணுமா?

அறிவொளி : ஓ! செய்யலாமே, அதிலென்ன தப்பு. ஒரு பணக்கார அப்பாவுக்கு ஒரே பையன்.ரொம்ப செல்லமா வளர்த்துட்டதால யாருக்கும் கட்டுப்படா மே  ரொம்ப துறுதுறுன்னு இருந்தான். எந்த ஸ்கூலை சேர்த்தாலும் ஒரு மாசத்துக்கு மேல தாக்கு பிடிக்காம திரும்பி அனுப்பிட்டே இருந்தாங்க. கடைசியிலே அவர் ரவீந்திரநாத் தாகூரோட உறைவிடக்கல்வி கூடத்துல சேர்த்துவிட்டார். ஒருமாசமாச்சு, ரெண்டுமாசமாச்சு, நாலுமாசமாச்சு பையன் திரும்பி வரவேயில்லை. அப்பாவுக்கு பையன் எப்படி இருக்கான்னு பார்க்க ஆசை வந்துடுச்சு. பள்ளிக்குப்  போனா அவன் எந்த வகுப்புலயும் இல்லை. அவருக்கு பயமாயிடுச்சு தாகூரைத் தேடினா அவர் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில நாலைந்து பசங்க உட்கார்ந்து படிச்சுக்கிட்டுருந்தாங்க. அதுலயும்  அவர் பையன் இல்லாததுனால அவருக்கு ரொம்ப பயமாயிடுச்சு. ஐயா  என் பையன் எங்கேன்னு கேட்டார்.  அவர் மேல கையைக் காமிச்சார். மேல பார்த்தா மரத்துமேல ஒரு இருபது, முப்பது பசங்க.அவர் பதறிப்போய், ஏங்க என் பையனைப் படிக்க அனுப்பினா இப்படி குரங்கு மாதிரி மரத்துமேல ஏறவிட்டிருக்கீங்க அப்படின்னு கேட்டார். அதுக்கு தாகூர் ரொம்ப அமைதியா எனக்கு அவங்களைப் பத்தியெல்லாம் கவலையே இல்லை, இயற்கை அவங்களை பார்த்துக்கும். இந்த நாலைந்து பசங்க தான்  ரொம்ப நேரமா புத்தகத்தை  படிச்சிக்கிட்டே இருக்காங்க. என் கவலையெல்லாம் இவங்களைப் பத்திதான்னு  சொன்னாராம். இதுக்கு  என்ன சொல்றீங்க?

ராஜாராம் : நாமளும் மரம் ஏறவிட்டுடுவோம். ஆனா கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாலோ, மண்டை உடைஞ்சி உயிரே போனாலோ யாரு கோர்ட் கேஸுன்னு அலையுறது அதெல்லாம் நீங்க பார்த்துப்பீங்களா?

அறிவொளி : ஓடும் ரயில்ல  இருந்து விழுந்து பிழைச்சசவனும் உண்டு. புல் தடுக்கி செத்தவனும் உண்டு. அப்படி ஆகிடுமோ, இப்படி ஆகிடுமோனு யோசிச்சா எந்த வேலையும் யாரும் செய்ய முடியாது. மரம் ஏறி பிள்ளை கையொடிஞ்சா வைத்தியம் பார்த்து சரி பண்ணிடலாம். ஆனா பிள்ளைகளோட சின்னச் சின்ன குறைகளை பூதக்கண்ணாடி போட்டு பெரிசாக்கி இதுகூடத் தெரியாதா, மேக் அப் எல்லாம் நல்லா பண்ணத்  தெரியுது, படிக்க மட்டும் முடியாதா?  நீயெல்லாம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற மாடு மேய்க்கப் போ, மரமண்டை, உருப்படவே மாட்ட இந்த மாதிரியான எதிர்மறை வார்த்தைகளை சொல்லித் திட்டி அவங்க மனமொடிஞ்சுப்  போகாம பார்த்துக்குங்க. ஏன்னா அதுக்கெல்லாம் வைத்தியமே இல்லை. அவங்க ஆளுமைத்திறன்ல நிரந்திர பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு. ஒரு நல்ல ஆசிரியர்னு நீ யாரை சொல்லுவேன்னு கேட்டா பிள்ளைகள் யாரை சொல்வாங்கன்னு நினைக்கிறீங்க?

ராஜாராம் : நல்லா பாடம் நடத்துறவரைத்  தான் சொல்வாங்க.

அறிவொளி : நிச்சயமா இல்லை. குறைகளுக்காகத் தன்னை காயப்படுத்தாமல், தன்னுடைய திறமையை அடையாளம் காண உதவிய ஆசிரியரை, பாடம், வகுப்பறை என்பதைத் தாண்டி தன்னிடம் சிறுசிறு விஷயங்களில்  கூட அக்கறையோடு விசாரிக்கும் ஆசிரியரை பிள்ளைகள் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டார்கள், சரிதானே? அந்த மாதிரி ஒருத்தர் முகம் உங்களுக்கு ஞாபகம் வருதா?

(அறிவொளி  சொன்னது சரிதான் என நான் நினைக்கிறேன்.என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் இப்போது என் மனத்திரையில். உங்களுக்கும் அப்படியாராவது நினைவுக்கு வந்தால் முடிந்தால் ஒரு போன் செய்து நன்றி சொல்லுங்கள். குறைந்த பட்சம் மானசீகமான நன்றியாவது சொல்லுங்கள்.)

தேடலாம்...

- பிரியசகி 

piriyasahi20673@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com