புதையல் 4

புதையல் 4

மொழித்திறன் மிக்கவர்கள் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, திரைப்படத்துறை,

யார் எதில் சாதிக்க முடியும்?

{ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் எட்டு வகையான அறிவுத்திறன் பற்றி  பற்றி விளக்க ஆரம்பித்த அறிவொளி அதைப்பற்றி மேலும் பலதகவல்களை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.) 

அறிவொளி: மொழித்திறன் மிக்கவர்கள் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, திரைப்படத்துறை, பத்திரிகைத்துறை, சின்னத்திரை போன்ற ஊடகத்துறைகளிலும், மேடைப்பேச்சாளர்களாகவும், மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியப்பெருமக்களாகவும்  பிரகாசிக்கமுடியும். வள்ளுவர், இளங்கோ, கம்பன், தாகூர், ஷேக்ஸ்பியர், ஆபிரகாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில்,கீட்ஸ் போன்றோர் மொழித்திறன் மிக்கவர்களுக்கு எடுத்துக்காட்டுகள்.

காரண காரியங்களை ஆராயும் கணிதத்திறன் கொண்டவர்கள் ராமானுஜம் போன்ற கணிதமேதைகளாக, ராம்ஜெத்மலானி போன்ற வாதத்திறன் கொண்ட வழக்கறிஞர்களாக , லாபநஷ்டத்தை துல்லியமாக கணக்கிடக்கூடிய அம்பானி போன்ற  தொழிலதிபர்களாக, கண்ணால் காணமுடியாதவற்றை பற்றியும் ஆராயக்கூடிய ஐன்ஸ்டீன் போன்ற  விஞ்ஞானிகளாக , பிரச்சனைகளுக்குரிய காரணங்களைக் கண்டறிந்து தீர்க்கக்கூடியவர்களாக, பில்கேட்ஸ் போன்ற கணினி நிபுணர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, கணக்கு வழக்குகளில் கைதேர்ந்தவர்களாக சிறந்து விளங்க முடியும்.

உடல் இயக்கத்திறனில் சிறந்தவர்கள்   பார்த்து கேட்டு கற்பதைவிட தானே செய்து கற்பவர்களாக , சச்சின் போல விளையாட்டு வீரர்களாக, மைக்கேல் ஜாக்ஸனைப்போல நடனக் கலைஞர்களாக, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற தேர்ந்த நடிகர்களாக, மைக்கேல் ஆஞ்சலோ போன்ற சிறந்த சிற்பிகளாக உடல் ஒருங்கிணைப்புத்திறன் மிக்கவர்களாக விளங்குவர்.

இசைத்திறன் மிக்கவர்கள் இசை, தாள ஞானம் மிகுந்த பீத்தோவன் போல, இசைஞானி இளையராஜாபோல, இரு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் போல இசையமைப்பாளர்களாக, எஸ்.பி.பாலசுப்ரமணியம்  போன்ற பாடகர்களான  பரிமளிக்க முடியும்.

இடம் சார்ந்த கற்பனைத்திறம் மிக்கவர்கள் கட்டிடக்கலை வல்லுனர்களாக, ஓவியர்களாக, பொறியியலாளர்களாக, இன்டீரியர் டிசைனிங் எனப்படும் உள்ளரங்க வேலைப்பாடுகளில் வல்லவர்களாக  விளங்குவார்கள். இவர்கள் வரைபடத்தைக் கொண்டே இடத்தை சரியாக கண்டுபிடித்து சென்று விடுவார்கள். வெட்டிய படத்துண்டுகளை ஒன்றாக சேர்ப்பது, சதுரக்கட்டைகளைக் கொண்டு வெவ்வேறு உருவங்களை உருவாக்குவது போன்ற புதிர்களை சுலபமாக முடித்து விடுவார்கள். வால்ட் டிஸ்னி, எம்.எஸ்.ஹுசேன், ராஜேந்திர சோழன், ஷாஜகான் போன்றவர்கள் இத்திறன்மிக்கவர்கள். 

பிறருடன் கலந்து பழகும் திறன் கொண்டவர்கள் எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகக்கூடியவர்களாக பிறரது உணர்வுகளை எளிதில் புரிந்து கொண்டு பிரச்னைகளைத் தீர்க்கவல்லவர்களாக, வார்த்தைகளாலும் உடல் மொழியினாலும் பிறரை எளிதில் கவரக்கூடியவர்களாக விளங்குவார்கள். இவர்கள் உளவியலாளர்களாக,  அரசியல்வாதிகளாக, விற்பனையாளர்களாகப் பிரகாசிக்க முடியும்.

தன்னைத்தான் அறியும் திறன் கொண்டவர்கள் ஓஷோ போன்ற ஆன்மீக குருக்களாக, சாக்ரடீஸ் போன்ற தத்துவஞானிகளாக, தனிமையை விரும்பும்  எழுத்தாளர்களாக, அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கும் விஞ்ஞானிகளாகப்    புகழ்பெற  முடியும்.

இயற்கை சார்ந்த அறிவுத்திறன் கொண்டவர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக, தோட்டக்கலை வல்லுனர்களாக, விவசாயிகளாக, மலை மற்றும் காடுகளுக்கு செல்வதில் ஆர்வம் கொண்டவர்களாக , செல்லப் பிராணி வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். கிரிகோரி மெண்டல், சார்லஸ் டார்வின் முதல் டிஸ்கவரி தொலைக்காட்சியின் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் வருபவர்கள் எல்லாம் இத்திறன் மிக்கவர்களே . 

(சொல்லி முடித்ததும் ஒரு நிமிடம் நிறுத்தி சுற்றிலும் பார்த்து விட்டுப்பின் தொடர்ந்து பேசலானார் அறிவொளி)

என்ன நண்பர்களே! எட்டு வகையான அறிவுத்திறன் பற்றி புரியுதா? இது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?

கண்ணன் : என் வகுப்பில் முரளின்னு ஒரு பையன் இருக்கான் சார். ரொம்ப நல்லா கால்பந்து விளையாடுவான். ஆனா கணக்குல எப்பவும் பூஜ்யம் தான் எடுப்பான். இன்னொருத்தன்   கணக்கு  நல்லா போடுவான் ஆனா தமிழ்ல எப்பவும் தேறவே மாட்டான்  . ஒருத்தன் நல்லா படிப்பான் ஆனா யாரோடையும் சேராம தனியாவே இருப்பான். ஏன் இப்படி இருக்காங்கன்னு ரொம்ப யோசிச்சிருக்கேன். உடல் இயக்கத்திறன் இருப்பவனுக்கு கணிதத்திறன் இல்லை. கணிதத்திறன் இருப்பவனுக்கு மொழித்திறன் இல்லைன்னு  இப்போ தான்  புரியுது. ஏன் நானே நேத்து ஒருத்தர் வீட்டுக்குப்  போக வழி கண்டு பிடிக்க முடியாம அரைமணி நேரம் சுத்திசுத்தி அலைஞ்சேன். இத்தனைக்கும் அவர் வீட்டுக்கு ஏற்கனவே ரெண்டு தடவை போயிருக்கேன். ஆனா என் மகனுக்கு  எட்டு வயசுதான் ஆகுது, ஒரு தடவை போன இடத்தைக்கூட சரியா ஞாபகம் வெச்சுக்கிட்டு வழி சொல்லிடுவான். ஏன் எனக்கு  வழியெல்லாம் சரியா ஞாபகம் வெச்சுக்க முடியலைனு நிறைய தடவை யோசிச்சிருக்கேன்..இப்போதான் புரியுது எனக்கு இடம் சார்ந்த கற்பனைத்திறன் கம்மியா இருக்குன்னு அதே திறன் என் மகனுக்கு அதிகமா இருக்குன்னு.. 

அறிவொளி: உண்மைதான் சார். எல்லோருக்கும் எல்லாத்திறனும் இருக்காது. ஒரு  திறனில் சிறந்து இருப்பவர்கள்  பிறதிறன்களிலும் சிறந்தவர்களாக  இருக்கணும்னு அவசியமில்லை. தேசியக்கவின்னு புகழப்பட்ட பாரதி கூட  சின்னவயசுல கணக்கு வகுப்புன்னாலே கணக்கு பிணக்கு  ஆமணக்குன்னு ஓடிப்போயிடுவாராம். கணித மேதை ராமானுஜம் கடைசிவரை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவே இல்லை. சமய நல்லிணக்கத்திற்குப் புகழ்பெற்ற அக்பர் வாசிக்கத் தெரியாதவர்தான். அவ்வளவு ஏன் சச்சின், ஏ.ஆர்.ரகுமான், சிவாஜி கணேசன், கண்ணதாசன் இவங்கல்லாம் என்ன படிச்சிருக்காங்க? தன்னிடம் இருக்கும் திறமையை உணர்ந்து அதையே தொழிலாக்கிக்கொண்டதால்   இவங்க வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றார்கள். இதை பெற்றோர்கள்  புரிந்து கொண்டால் பிள்ளைகளின் திறனுக்கேற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க உதவ முடியும். ஆசிரியர்கள் புரிந்து கொண்டால் பிள்ளைகளின் பலத்தைக்கொண்டு பலவீனத்தை போக்க முடியும். இதனால்பள்ளி வாழ்க்கை  மனஅழுத்தம் இல்லாத சந்தோஷமாக அமையும்.

தனராஜ்: ரொம்ப சரியா சொன்னீங்க சார். எனக்கு நல்லா  தெரிஞ்ச மருத்துவர் ஒருத்தர் தன்  மகனும் ஒரு மருத்துவரா தான் ஆகணும் என்ற தன்  வறட்டு கௌரவத்துக்காக  திரைப்பட துறையில் சாதிக்க விரும்பும் மகனை ஐம்பது லட்சம் நன்கொடை குடுத்து மெடிக்கல் காலேஜ்ல சேர்த்தார். அவன் தான் விரும்பின துறைக்குப் போகமுடியலையென்ற மனஅழுத்தத்திலும் தன் அப்பா மேல இருந்த  கோவத்திலும் காலேஜுக்கு ஒழுங்கா போகாம போதைப் பழக்கத்துக்கு ஆளாகி, குடிச்சிட்டு வண்டி ஓட்டும் போது விபத்துக்கு ஆளாகி இறந்தே போய்ட்டான். ஒரே மகன் இறந்துபோன அதிர்ச்சியில் அவன் அம்மா மனநோயாளியா ஆகிட்டாங்க. குடும்பத்தைத் தொலைத்த குற்ற உணர்வோட அவர் ஒரு  நடைபிணமா வாழ்ந்துகிட்டிருக்கார் . 

அறிவொளி: பெற்றோர் தன் விருப்பங்களை எல்லாம் பிள்ளைகள் மீது திணிச்சா இப்படித்தான் நடக்கும். பாவம் அந்த பையன் அவன் விருப்பப்படி விட்டிருந்தா கண்டிப்பா சாதிச்சிருப்பான்.

அகிலா: சார், நம்மகிட்ட என்ன திறமை இருக்குன்னு சரியா கண்டு பிடிக்க எதாவது வழி முறை இருக்கா? 

அறிவொளி: இருக்கு மேடம், அதுக்கு தான் இந்த பேப்பரைக் கொண்டு வந்திருக்கேன் . இதில்  கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு ரொம்ப யோசிக்காம, கேள்வியை  படிச்ச உடனே மனசில என்ன தோணுதோ அந்த விடையை குறிச்சுக்கிட்டே வந்தா கடைசி கேள்விக்கு வரும்போது உங்க பலம் என்ன பலவீனம் என்னன்னு தெளிவா தெரிஞ்சுடும்.

(கேள்வித்தாளை எல்லோருக்கும் கொடுக்க, ஆசிரியர்கள் அனைவரும் ஆவலுடன் அதிலுள்ள  கேள்விகளைப்  படிக்க ஆரம்பித்தனர்.)

(அத்தாளில் என்ன கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்துகொள்ள நாம் அடுத்த வாரம் வரை காத்திருப்போம்.)

தேடலாம்....

பிரியசகி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com