புதையல் 5

ஒவ்வொருவரிடமும் என்ன விதமான அறிவுத்திறன் உள்ளது என
புதையல் 5

என் பலம் என்ன, பலவீ னம் என்ன

ஒவ்வொருவரிடமும் என்ன விதமான அறிவுத்திறன் உள்ளது என சரியாக அறிந்துகொள்ளும் பொருட்டு நூறு வாக்கியங்கள் கொண்ட தாளினை  எல்லோருக்கும் கொடுக்கும்படி செய்த அறிவொளி அது குறித்து விளக்கலானார்.

அறிவொளி : உங்களுக்கு கொடுத்துள்ள தாளில் நூறு வாக்கியங்கள் இருக்கும். ஒவ்வொரு வாக்கியத்தையும்  படித்தவுடனே சட்டுனு உங்க மனசுல என்ன தோணுதோ அதுவே சரியான பதில். அது 40%க்கும் குறைவாகவே சரியெனத் தோன்றினால்  1 என்ற எண்ணை அதற்குப்  பக்கத்தில்  எழுதுங்கள். 40% முதல் 70% வரை சரியெனத் தோன்றினால் 2 என்ற எண்ணை எழுதுங்கள். 70% முதல் 100% வரை சரியெனத் தோன்றினால்  3 என்ற எண்ணை எழுதுங்கள். உதாரணமா முதல் வாக்கியம் எனக்கு இனிமையான குரல் வளம் உண்டு என்பதாகும். உண்மையிலேயே நீங்க நல்லா பாடக்கூடியவரா இருந்தா 3 போடுங்க. சுமாரா பாடக்கூடிய பாத்ரூம் சிங்கரா இருந்தா 2 போடுங்க. இசைஞானம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கக் கூடியவரா இருந்தா 1 போடுங்க. நூறு வாக்கியங்களையும்  படித்துப் பார்த்து  இதை செய்யுங்கள். எல்லோரும் முடித்ததும் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்.

(அறிவொளி தன்  நாற்காலியில் அமர்ந்துவிட ஆசிரியர்கள் அனைவரும் முதல்முறையாக அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் போலத் தம் கையிலிருந்த தாளில் கொடுக்கப்பட்டிருந்த வாக்கியங்களை ஆர்வத்துடன்  படிக்க ஆரம்பித்தனர். அந்த வாக்கியங்கள் கீழே தரப்பட்டுள்ளன. உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளுடைய திறனை அறிய விரும்பினால் நீங்களும் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து  வேலையைத் தொடங்குங்கள்.)

1.எனக்கு இனிமையான குரல் வளம் உண்டு.

2.நிறைய பாடல் வரிகளும் அதன் ராகமும் எனக்கு மனப்பாடம்.

3.சமூக நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு உண்டு.

4.பிறர் பாடும்போது சுருதி விலகினால் உடனே கண்டுபிடித்து விடுவேன்.

5. குழு நிகழ்வுகளில் நானே முன்வந்து கலந்து கொள்வேன்.

6. ஒருமுறை கேட்டாலும் திரும்ப அப்பாடலை என்னால்  பாடமுடியும் .

7.டிஸ்கவரி தொலைக்காட்சி, நேஷனல் ஜியாக்ராபிக் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்ப்பேன் 

8.எதையும் நானே செய்து பார்ப்பேன்  

9.என்னைப் பற்றி அறிந்து கொள்ளுதல் தொடர்பான புத்தகங்களைப் படித்தல், தியான வகுப்புகளுக்குச் செல்லுதல் போன்றவற்றில் விருப்பம் உண்டு.

10.பொருட்களை அவற்றின் தன்மைகளுக்கேற்ப வகைப்படுத்துவேன்.

11.பிறர் பேசும்போதோ எழுதும்போதோ வரும் இலக்கணப் பிழைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவேன்.

12.கண்ணால் பார்ப்பதைக் காட்டிலும் எதையும் தொட்டுப்பார்த்து எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.

13.ஒருமுறை பார்த்த பொருளை கண்ணை மூடிக்கொண்டு மனக்கண்ணாலும் என்னால் பார்க்க முடியும்.

14. அறிவியல் சோதனைகள் மிகவும் பிடிக்கும். 

15.சுடோகு போன்ற புதிர்களை விடுவிப்பது பிடிக்கும்.

16. கூட்டத்தில் இருப்பதை விரும்புவேன்.

17.எனக்குப்பிடித்த பாடகர் குழு, பாடகர், பாடல், ஆல்பம் என்று இசைத்தொடர்பான பெரிய பட்டியலே என்னிடம் உண்டு.

18. மேகங்களில் உருவங்களை கற்பனை செய்து மகிழ்வேன்.

19.வண்ணங்களையும், வடிவங்களையும் உற்று நோக்குவது வழக்கம்.

20.தோட்டம் அமைப்பது, தோட்டத்தில் அமர்ந்து அதனழகை ரசிப்பது பிடித்தமான பொழுது போக்கு.

21.நன்கு ஓவியம் வரைவேன்.

22. சுற்றுப்புறசூழலில் நிகழும் மாற்றங்களை உற்று நோக்குவேன்.

23.என் உணர்வுகளையும் அதன் காரணங்களையும் என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

24.கதை கேட்பது, கதை சொல்வது, கதை எழுதுவது பிடித்தமான விஷயம்.

25. தினசரி நிகழ்வுகளை டைரியில் எழுதி வைப்பதுண்டு.

26.இருபொருள்பட பேசுதல், எதுகை மோனையுடன் பேசுதல் பிடிக்கும்.

27.விளையாட்டுகள், வீரதீர சாகசங்கள் பிடிக்கும்.

28.வேட்டையாடுதல், மலையேறுதல் பிடிக்கும்.

29. நான் ஒரு தடகள வீரன்/வீராங்கனை.

30.சொந்தத்தொழிலில்/ பங்கு வர்த்தகத்தில் சிறிய மீனைப்போட்டு பெரியமீனைப் பிடிப்பதில் கில்லாடி நான்.

31.சீட்டு விளையாட்டில் பெரும்பாலும் நான்தான் ஜெயிப்பேன். நான் விளையாட்டில் இருந்தாலே உடன்விளையாடும்  நண்பர்களுக்கு தோற்றுப்போகும் பயம் இருக்கும்.

32.பாடுவது, விசிலடிப்பது பிடிக்கும். மனத்தில் எப்போதும் ஒரு மெல்லிய பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

33.நான் படித்ததைப் பற்றி யாரிடமாவது பேசப்பிடிக்கும். 

34. பிறரைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதால்  எனக்கு நிறைய நண்பர்களுண்டு.

35.கிராபிக்ஸ், அனிமேஷன் வேலைகள் நன்கு செய்வேன்.

36.செஸ், டிரேட், தாயம், பல்லாங்குழி போன்று மூளையைப் பயன்படுத்தி கணக்கு போட்டு விளையாடும் விளையாட்டுக்கள் மிகவும் பிடிக்கும்.

37. இசைக்கருவிகளை நன்கு வாசிப்பேன்.

38. தனிமையில் சிந்திப்பது மிகவும் பிடிக்கும்.

39. குறிக்கோளை அடைய சரியாக காலத்தை வகுத்து செயல்படுவேன்.

40.இயற்கையை ரசிப்பது வேறு எதையும் விட அதிக ஆனந்தத்தைத் தரும்.

41.பிறமொழி கற்க ஆர்வம் உண்டு.

42.பாதைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொண்டு வழி மாறாமல் சென்று விடுவேன்.

43.விடுமுறையில் வெளியில் செல்வதைவிட வீட்டிலிருப்பதையே விரும்புவேன்.

44. அறிமுகமில்லாத இடத்திலும் கூகுள் வரைபடத்தைக்கொண்டு எளிதில் வழி கண்டுபிடித்துச் சென்றுவிடுவேன்.

45. ஒரே இடத்தில் வெகுநேரம் இருப்பது சிரமம்.

46. சுற்றுப்புறத்தை மாசுபடுத்துபவர்களைக் கண்டால் அதிக கோபம் வரும்.

47.மனக்கணக்கு போடுவது சுலபம்.

48. மொழிப்பாடம் பிடித்தமானது.

49. எதையும் விவாதக் கண்ணோட்டத்துடன்  ஆராய்வது வழக்கம்.

50. விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்குச் செல்ல விரும்புவேன்.

51.எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துகொண்டே இருப்பேன்.

52.அல்ஜீப்ராவை விட வடிவியல் பிடிக்கும்.

53.விளையாட்டோ வாழ்க்கையோ, என்ன செய்தால் எதிராளியை ஜெயிக்க முடியும் என கணக்கு போட்டு காயை நகர்த்துவதில் வல்லவன் நான்.

54.புத்தகங்கள் பொக்கிஷம் போன்றவை. புத்தகத்திற்காக செலவழிக்கத் தயங்க மாட்டேன்.

55.பிறருக்கு கற்பிப்பது பிடிக்கும் 

56. எதுவும் எப்படி வேலை செய்கிறது என ஆராய்ந்து பார்க்கப்  பிடிக்கும்.

57. நேர்த்தியாக புகைப்படம் எடுப்பது என் பொழுதுபோக்கு.

58.பிறர் என்ன சொன்னாலும் நானாக சிந்தித்து முடிவெடுப்பேன்.

59. எப்போதும் கைகால்  ஒத்திசைவுடன் செயல்படுவேன்.

60. செல்லப் பிராணிகளுடன்விளையாடப் பிடிக்கும்.

61.. நான் ஏன்  இப்படி இருக்கிறேன்  என அறிய முற்படுகிறேன்.

62.எதைப்பற்றியும்  பகுத்தறிவுடன்  விவாதிப்பது  வழக்கம்.

63. இயற்கை  சார்ந்த இடங்களுக்குச் செல்கையில் புத்துணர்வு பெறுகிறேன்.

64. பிறரது உணர்வுகளை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

65. ஏன் எப்படி எதனால் என ஆராயும் கண்ணோட்டம் உண்டு.

66. உள்ளுணர்வு அதிகம்.

67. பலவித ஒலிகள் கேட்கப் பிடிக்கும்.

68.பிறவியிலேயே தலைமைப்பண்பு அதிகம். பலரும் என்னைப் பின்பற்றுகின்றனர்.

69. பலவித மலர்கள், பறவைகள்,விலங்குகள் பற்றி அறிய ஆசை உண்டு.

70. பிறரை ஆற்றுப்படுத்துவது  கைவந்த கலை. தன்  பிரச்னையை என்னுடன் பகிர்ந்துகொள்ள பலரும் விரும்புகின்றனர். 

71. எதையும் நேர்த்தியாக வடிவமைப்பது பிடிக்கும்.

72.நான் செய்வது சரியா, தவறா  என அடிக்கடி  ஆன்ம பரிசோதனை செய்கிறேன்.

73. புதிய மனிதர்களை சந்தித்து  நண்பர்களாக்கிக்  கொள்வது பிடிக்கும்.

74. உடற்பயிற்சி யோகா போன்றவற்றில் நாட்டம் உண்டு.

75. இசை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது இயலாத  காரியம்

76. வார்த்தை விளையாட்டு பிடிக்கும்.

77.பிறரிடம் பேசவேண்டிய அவசியமில்லாத பொழுதுபோக்குகளே எனக்குண்டு.

78. பிரச்சனை ஏற்படும்போது பிறரிடம் உதவி கேட்கத் தயங்க மாட்டேன்.

79. படங்களுடன் கூடிய புத்தகம் படிக்கப் பிடிக்கும்.

80. பிரபலமானவர்களின் பொன்மொழிகள் பலவும் நினைவில் உண்டு.

81. எண்களும், குறியீடுகளும், சமன்பாடுகளும்  எனக்குப்  பிடித்தமானவை.

82. எல்லா வயதினருக்கும் என்னைப்  பிடிக்கும் வகையில் நடந்து கொள்வேன்.

83. பிறரிடம் நான் காணும் குறை என்னிடமும் உள்ளதா என கவனமுடன் பார்க்கிறேன்.

84. நல்ல ஆரோக்கியமான உடற்கட்டிற்காக நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன்.

85.புதியவர்கள் வீட்டுக்கு வந்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் புன்னகையுடன் அங்கிருந்து விலகி விடுவேன். 

86. பட்ஜெட் போட்டுதான் செலவு செய்வேன்.

87.பொம்மையோ, பொருட்களோ எதையும் என்னால் கழற்றி திரும்ப பழையபடி மாட்டிவிட முடியும்.

88.உடல் சார்ந்த விளையாட்டுகள் எவ்வளவு நேரம் விளையாடினாலும் சோர்வடையமாட்டேன்.

89. என் வரையும் திறன் பிறரிடமிருந்து பாராட்டுகளை பெற்றுத்  தருகிறது. 

90.கனசதுர கட்டைகள் அல்லது களிமண் கொண்டு உருவங்களை உண்டாக்குவதில் எனக்குத் திறமை உண்டு.

91. பிறரைப் பற்றி, சமூகத்தைப்  பற்றி அதிகம் அக்கறை கொள்கிறேன்.

92. என் வாதத்திறமை வெற்றிகளைப்  பெற்றுத் தருகிறது.

93. என் வீட்டின் வரவு,செலவுக்கணக்கு எனக்கு நன்கு தெரியும்.

94. எதையும் முப்பரிமாணத்துடன் என்னால் காண முடிகிறது. 

95.குறுகலான, நெரிசலான போக்குவரத்திலும்  விபத்தில் சிக்காமல் என்னால் வண்டி ஓட்ட முடியும்.

96. எல்லோரையும் கவரும்படி என் வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.

97.கோடு போடாத வெள்ளைத்தாளிலும் என்னால் நேர்க்கோட்டில் அழகாக எழுத முடியும்.

98. சிறிய சூட்கேஸிலும் அதிக துணிகளை நேர்த்தியாக அடுக்கி விடுவேன்.

99. நடனம்/விளையாட்டு/நடிப்பு சார்ந்த துறையை என் தொழிலாக்கிக் கொள்ள  முடியவில்லை என்ற பெரும் குறை என்ஆழ்மனதில் உண்டு. இப்போது  வாய்ப்பு கிடைத்தாலும் அத்துறைக்குச்  சென்று விடுவேன்.

100. தகவல்கள், வார்த்தைகள், பெயர்கள் நன்கு நினைவில் இருக்கும்.

(போதுமான நேரம் கொடுத்தபின் அறிவொளி ஒலிபெருக்கி முன் வந்து நின்றார்.)

அறிவொளி : என்ன நண்பர்களே முடிச்சாச்சா?

(எல்லோரும் ஏதோ பெரிய சாதனை செய்தவர்கள் போல புன்முறுவலுடன் அறிவொளியை நிமிர்ந்து பார்த்தனர்.)

அகிலா : முடிச்சாச்சு சார். இதிலிருந்து எங்களுக்கு எந்த அறிவுத்திறன் அதிகமிருக்குன்னு  எது குறைவா இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கிறது? 

அறிவொளி : அதைத்தான் சொல்லப்போறேன். கவனமா கேளுங்க...

[...என்ன சொல்லியிருப்பார்? அடுத்தவாரம் வரை பொறுமையுடன் காத்திருப்போம்.]

-பிரியசகி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com