கண்டேன் புதையலை - அறிமுகம்

எட்டு கதவுகள் கொண்ட ஓர் அறையினுள் புதையல் பெட்டகம் உள்ளது. ஆறு கதவுகள் திறந்திருக்க இரண்டு கதவுகள் மட்டுமே மூடியுள்ளது. திறந்திருக்கும் கதவின் வழியே
கண்டேன் புதையலை - அறிமுகம்

அறிமுகம்

எட்டு கதவுகள் கொண்ட ஓர் அறையினுள் புதையல் பெட்டகம் உள்ளது. ஆறு கதவுகள் திறந்திருக்க இரண்டு கதவுகள் மட்டுமே மூடியுள்ளது. திறந்திருக்கும் கதவின் வழியே சென்றுப் புதையலை எடுக்காமல் மூடியிருக்கும் இரு கதவுகளை மட்டும் முட்டி மோதிக் திறக்க முயல்பவரை முட்டாள் என்று தானே சொல்லுவோம்? ஆனால் அதே முட்டாள் தன்மான காரியத்தைத்தான் ஆண்டாண்டு காலமாக நம் கல்வித் திட்டத்தில் கடைபிடித்து வருகின்றோம். ஒருவருக்கு இருக்கக்கூடிய எட்டுவிதமான அறிவுத் திறன்களில் மொழியறிவையும், கணிதத் திறமையையும் மட்டும் பயன்படுத்தும் படியாகவே நம் பாடத் திட்டங்களும் கற்பிக்கும் முறைகளும் உள்ளனவே தவிர பிற ஆறு அறிவுத் திறன்களை கற்றல், கற்பித்தலில் பயன்படுத்துவதே இல்லை.

குரங்கு, யானை, கழுகு, மீன், பாம்பு, நாய், சிங்கம் எனப் பல மிருகங்களை நிற்க வைத்துவிட்டு யார் முதலில் மரம் ஏறுகின்றீர்களோ அவரே வெற்றியாளர் என்று அறிவிப்பது முறையாகுமா? ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்திறன உண்டல்லவா? அது போன்றே பிற திறன்களில் சிறந்திருந்தும் மொழி மற்றும் கணிதத் திறன்களில் சற்றே பின்தங்கும் மாணவர்களை அறிவில்லாதவர்கள் என முத்திரைக் குத்தி மூலையில் முடக்கி விடுகின்றோம் பள்ளிக் கூடங்களால் நிராகரிக்கப்படும் இத்தகைய மாணவர்கள் தன்னுடைய முயற்சியினாலோ பிறரால் ஊக்குவிக்கப்பட்டோ தன் ஆற்றலை உணர்ந்து, அறிவில் ஆதவர்களாகப் பிரகாசிக்கும் போது, ’தான் முட்டாளென்று நினைத்தவன் எப்படி இந்த உயர்நிலையை அடைந்தான்’ என நிராகரித்தவர்களின் ஆச்சரியத்திற்கு ஆளாகின்றனர். பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டங்களில் இத்தகைய நிகழ்வுகளைக் காணமுடியும். மாறாக ஊக்குவிக்க ஆளின்றி சுயஊக்கமும் இல்லாத குழந்தைகள் தன்னிடமுள்ள அபரிதமான ஆற்றலை அடையாளம் காணாமல் பிறர் தன்மீது சுமத்தும் முட்டாள், ஊக்கமற்றவன், உருப்படாதவன், எதற்கும் லாயக்கற்றவன் போன்ற பட்டங்களை உண்மையென்று நம்பி தனக்கென்று ஒரு சிறு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் பின்னாளில் தன்னம்பிக்கையற்ற கோழைகளாகவோ அல்லது பிறர் கூறும் எதனையும் ஏற்க மறுக்கும் முரட்டுத்தனம் மிக்கவர்களாகவோ மாறி விடுகின்றனர். இவர்கள் தவறான தொடர்புகளால் எளிதில் மூளைச்சலவை செய்யப்பட்டு சமூக விரோத காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு. என்னை, என் திறமையை அங்கீகரிக்காது உதாசீனப்படுத்திய இந்த சமூகத்தை நான் ஏன் மதிக்க வேண்டும் என்பதே இத்தகையவர்களின் வாதம்.

மனிதனின் சிந்திக்கும் ஆற்றலால், ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளால் எவ்வளவோ புதுப்புது விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கும் சில விஷயங்களில் ஒன்று மனித மூளையின் செயல்பாடுகள். 1980-க்கு முன்பு வரை மனிதனின் அறிவுத்திறன் (IQ) என்பது மிகக் குறுகலானதொரு கண்ணோட்டத்துடனே காணப்பட்டது. பேப்பர், பென்சில் கொண்டு ஒரு சில சோதனை முறைகளால் (IQ Test) ஒரு மனிதனின் ஒட்டு மொத்த அறிவுத்திறனைக் கண்டறிந்து விட முடியும் என்றே நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு ஹோவார்ட் கார்டனர் என்பவர் உருவாக்கிய பல்முனை நுண்ணறிவுக் கோட்பாட்டின்படி அறிவுத்திறன் என்பது பல கிளைகளை உடைய மரம் போன்று பரந்து விரிந்தது என்று தெரிய வந்தது. இது மூளையின் செயல்பாடுகள் பற்றிய அடிப்படைக் கருத்துகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

பல்முனை நுண்ணறிவுக் கோட்பாடு

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எட்டு வகையான அறிவுத் திறன்கள் உள்ளன. அவை:

     1. மொழித்திறன் (Verbal/linguistic Intelligence)

     2. கணிதத் திறன் (Logical/Mathematical Intelligence)

     3. இடம் சார்ந்த காட்சித் திறன் (Visual/spatial Intelligence)

     4. உடல் இயக்கத்திறன் (Bodily kinaesthetic Intelligence)

     5. இசைத்திறன் (Musical Intelligence)

     6. பிறருடன் கலந்து பழகும் திறன் (Interpersonal Intelligence)

     7. தன்னைத்தான் அறியும் திறன் (Intra Personal Intelligence)

     8. இயற்கையோடு ஒன்றிக்கும் திறன் (Naturalistic Intelligence)

டாக்டர் ஹோவார்ட் கார்ட்னரின் கூற்றுப்படி அறிவுத்திறன் என்பது நாம் வாழும் கலாச்சாரப் பின்னனியில் எழும் எல்லாவிதமானப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் திறன் ஆகும்.

எல்லோரிடமும் இந்த எட்டு விதமான அறிவுத் திறன்களும் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. ஓரிரிரு திறன்களில் மட்டும் வல்லவர்களாக இருக்கலாம். உதாரணமாக விளையாடுவதில் வல்லவர்கள் படிப்பதில் ஆர்வமற்றவர்களாக, பாடுவதில ஈடுபாடு குறைந்தவராக இருக்கலாம். முயற்சி செய்தால், ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் எந்தவிதமான குடும்ப, கலாச்சார பின்னனியிலும் எட்டு அறிவுத் திறன்களிலும் முன்னேற முடியும். ஆனால் எதில் அதிக முயற்சியின்றி பிறரைவிட சிறப்பாகச் செய்ய முடிகிறதோ அதுவே அவரது தனித்திறன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்பன்முக அறிவுத்திறன்களின் உதவியுடன் உலகத்தை உற்று நோக்கி, உட்கிரகித்துப் பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.

ஒவ்வொரு பெற்றோரும்,ஆசிரியரும் தன்னிடம் என்ன அறிவுத்திறன் உள்ளது என்பதை அறிந்தால்தான் தன் பிள்ளையிடம், தன் மாணவரிடம் என்னத் திறன் உள்ளது என்பதை உணர முடியும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு இந்த பல்முனை நுண்ணறிவுக் கோட்பாடு பற்றியத் தெளிவு இருந்தால்தான் தன் வகுப்பிலுள்ள அத்தனை மாணவர்களையும் கவரும் வண்ணம் பாடம் எடுக்க முடியும்.

’தான் கற்பிக்கும் முறையில் ஒரு குழந்தையால் கற்றுக் கொள்ள முடியாதபோது எந்த விதத்தில் கற்பித்தால் அக்குழந்தையால் கற்றுக்கொள்ள முடியுமோ அம்முறையைப் பின்பற்றிக் கற்றுக் கொடுப்பவரே மிகச் சிறந்த ஆசிரியர்’ என்கிறார் கார்டனர்.

வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளைப் பிடிக்காது என ஒதுக்கும் குழந்தைக்கு அதே காய்கறிகளை மையனீஸ், சாஸ், புதினா சட்னி போன்றவற்றோடு சேர்த்து ரொட்டிக்குள் வைத்து சாண்ட்விட்சாகவோ, பர்கராகவோ கொடுக்கும் போது விரும்பி சாப்பிடும். அதுபோல வாய்ப்பாடு பிடிக்காத ஒரு குழந்தை இசைத்திறன் கொண்டதாக இருந்தால் வாய்ப்பாட்டையே பாடலாக மாற்றி சொல்லிக் கொடுத்தால் எளிதில் கற்றுக் கொள்ளும். நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்களை வரலாற்றுப் பாடங்களை நாடகமாக நடித்துக் காட்டச் சொல்லலாம். வரையும் திறன் கொண்டவர்களை கரும்பலகையில் படம் வரையச் சொல்லிவிட்டு, மொழித்திறன் உடையப் பிள்ளையை அதுபற்றி விளக்கச் சொல்லலாம். எளிய அறிவியல் சோதனைகளை முதல் நாளே விளக்கிச் சொல்லி, என்னென்ன பொருட்களை மாணவர்களே கொண்டு வந்து வகுப்பில் செய்ய முடியுமோ அதைச் செய்யச்  சொல்லும்போது வகுப்பறை என்பது ஆசிரியர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு வழிப்பாதையாக அல்லாமல் மாணவர்களும் விரும்பிப் பங்கேற்கும் உல்லாசப் பயணமாக அமையும்.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான் தற்போது நடைமுறையில் இருக்கும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE Method) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நூறு சதவீதம் முழுமையாக எல்லாப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். கடைகளில் விற்கும் ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டியோ அல்லது முழுமதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக பெற்றோர்களே செய்து கொடுப்பதாகவோ உள்ளது.

ஒரு குறிப்பிட்ட பாடத் தலைப்பில் என்னென்ன விதமான செயல்பாடுகள் செய்யலாம் என ஆசிரியர் பல யோசனைகனைக் கூறும்போது பிள்ளைகள் தனக்கேற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் செய்வார்கள். பல நேரங்களில் நாம் நினைத்ததைவிட பல மடங்கு சிறப்பாக செய்து விடுவார்கள். ஆசிரியர்களும், பெற்றோர்களும், பிள்ளைகள் திணறும் போது தூண்டுகோலாக இருக்கலாமேத் தவிர, ’நான்’ சொல்வதைத் தான் செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் SSA, RMSA போன்றவற்றின் மூலம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டால் தான் அரசுத் திட்டங்களின் பயன் எல்லா மாணவர்களையும் சென்றடையும். அப்போது பள்ளிக்கூடங்கள் பாடங்களை மனப்பாடம் செய்து முழுமதிப்பெண் பெறும் மாணவ இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக அல்லாமல் பல்துறை வித்தகர்களை உருவாக்கும் பல்கலைக்கழகங்களாக விளங்கும். அவ்வாறு தன்னுள் புதைந்திருக்கும் புதையலைக் கண்டுபிடித்து, அத்திறன்களை முழுமையாகப் பயன்படுத்தும் மாணவச் செல்வங்கள் வளமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் தூண்களாக விளங்குவர்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளே தன் மூளையின் செயல்திறனில் 10 முதல் 20%தான் பயன்படுத்தினார் என்றால் நம்மைப் போன்ற சாமானியர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? இனிவரும் இத்தொடர் கட்டுரையில் நம் திறன்களை அடையாளம் காண்பது எப்படி? இத்திறன்களைக் கற்றல் கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்தலாம்? உணரப்பட்ட அறிவுத் திறனைப் பயிற்சிகள் மூலம் தொடர் விழிப்பு நிலையில் வைத்து நடைமுறை வாழ்வின் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது, எந்தப் பிரச்னைக்கும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் தவறான முடிவெடுக்கும் வளர் இளம் பருவத்து பிள்ளைகளை கையாள்வது எப்படி என, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான உளவியல் ரீதியிலான சில அணுகுமுறை ஆலோசனைகளும், எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் கதை வடிவில் தரவுள்ளேன். வாசித்து கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவிடுங்கள்.

தேடலாம்….

- பிரியசகி

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com