புதையல் 20

கணித / தர்க்க அறிவை வளர்ப்பது எப்படி, அதன் மூலம் தனி மனித வாழ்வியல்
புதையல் 20

தர்க்க சிந்தனை தெளிவை தந்திடும்!

(தர்க்க / கணித அறிவுத்திறனை வளர்ப்பது எப்படி எனக் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் அறிவொளி, சந்தோஷ், கார்த்திக் மற்றும் விஷ்ணு.  அறிவொளியிடமிருந்து நாணயங்களைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு அவற்றைத் தரையின் மீது வைத்து புதிர் போட ஆரம்பித்தான்.) 

விஷ்ணு: இந்தப் பத்து நாணயங்களில் மூன்று நாணயங்களை மட்டும் இடத்தை மாற்றித் தலைகீழான முக்கோணத்தைக் கொண்டு வரணும். யார் செய்றீங்க ?

(கார்த்திக், சந்தோஷ், அறிவொளி மூவரும் வெவ்வேறு வகையில் முயற்சித்தும் சரியான விடை கண்டுபிடிக்க முடியாததால் விஷ்ணுவே சரியான விடையைக் கற்றுக்கொடுத்தான்.)

விஷ்ணு:  சரி, உங்களுக்குத் தெரியலைனா கஷ்டப்பட வேண்டாம். நானே சொல்லிடுறேன்.   

அறிவொளி:  ரொம்ப நல்ல புதிர் விஷ்ணு. இது மாதிரியானப் புதிர்களெல்லாம் நம்மை வெவ்வேறு கோணங்களில் யோசிக்க வைக்கும்.  மூளையின் சிந்திக்கும் திறனை கூர்மையாக்கும். சரி நான் ஒரு புதிர் சொல்றேன். யார் பதில் சொல்றீங்கன்னு பாக்கலாம்! கீழே உள்ளக்கட்டங்களில் 1 முதல் 8 வரை உள்ள எண்களில் அடுத்தடுத்த எண்கள் பக்கத்துக் கட்டங்களில் குறுக்காகவோ, நெடுக்காகவோ மூலை விட்டங்களிலோ சந்திக்காமல் அமைக்கனும்.

(விஷ்ணுவும், சந்தோஷும் கையிலுள்ள காகிதத்தில் பல முறை முயற்சித்துப்பார்க்க, கார்த்திக் மட்டும் முயற்சியே செய்யாமல் மற்றவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.)

அறிவொளி: கார்த்திக் நீ ஏன் முயற்சி செய்யாம சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கே ?

கார்த்திக்: சார் எனக்கு இதெல்லாம் வராது சார். கணக்குல நான் ரொம்ப வீக்.

அறிவொளி: முயற்சியே பண்ணாம ஒரு முடிவுக்கு வராதே கார்த்திக். முதல் முறையே சரியான விடை கண்டுபிடிக்க முடியலைன்னாலும் திரும்பத் திரும்ப முயற்சி செய்யும் போது நமக்கு விடைக்கான வழி புரியும். இது வெறும் புதிருக்காக மட்டும் சொல்லல. வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனை வரும் போது அதைச் சரி செய்ய வெவ்வேறு வகையில் நாம முயற்சி செய்தா கடைசியில் நாம யோசிக்காத திசையிலிருந்து கூட தீர்வு கிடைக்கலாம் முயற்சியே செய்யலைனா சோர்ந்து போய் பிரச்சனையில் மூழ்கிப் போவோம். அதன் விளைவாக  மனஅழுத்தமும் அதனால புது நோய்களும் தான் வரும்.

விஷ்ணு: சார் நான் கண்டுபிடிச்சுட்டேன்.

(அவனுடைய தாளைக் கொண்டுவந்து காண்பித்தான்.)

135
7 8
246


சந்தோஷ்: வெரி குட் விஷ்ணு நான் சில எண்களைக் கொடுக்குறேன் அதை  நல்லா பார்த்து நினைவில் வச்சு திரும்ப அதேவரிசையில உங்களால சொல்ல முடியுதான்னு பாருங்க.

1914194219491969198420001109261212151116 0117

கார்த்திக்: ஐயையோ ! சார் நாலஞ்சு நம்பர் கொடுத்தாலே ஞாபகம் வச்சுக்கறது கஷ்டம்.  நீங்க இவ்ளோ குடுக்கிறீங்க !

சந்தோஷ்: எதையும் பார்த்த உடனே பயந்துடாதே கார்த்திக். பயம் உன்னோட யோசிக்கும் திறனைக் குறைச்சிடும். இதை ஞாபகம் வச்சிக்க எதாவது லாஜிக் உன்னால கண்டுபிடிக்க முடியுதான்னு முயற்சி பண்ணு . சாவி இல்லாத பூட்டோ, தீர்வு இல்லாத பிரச்சனையோ கிடையாது. வேணும்னா ஒரு க்ளூ குடுக்கிறேன். நாலு நாலு எண்ணா பிரிச்சுக்கிட்டு அந்த வருடத்தோட அல்லது தேதி மாசத்தோட தொடர்புடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்க. உங்களுக்கு தெரிந்த  விஷயங்களைத்தான் நான் கொடுத்திருக்கேன்.

கார்த்திக்: ஓ  ! அப்படியா சார். அப்ப முயற்சி பண்ணிப் பாக்குறோம்.

(நான்கு நான்கு எண்களாக ஒரு தாளில் எழுதிக் கொண்டு இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்திற்கு பின்...)

விஷ்ணு: சார் , ஒரு சிலது மட்டும் தெரியலை மீதியெல்லாம் கண்டு பிடிச்சுட்டோம்.

சந்தோஷ்: சரி தெரிஞ்சதை முதல்ல சொல்லுங்க.

விஷ்ணு: 1914 - முதல் உலகப் போர் துவங்கிய வருஷம்.

1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம். 

கார்த்திக்:  1947 - இந்தியா சுதந்திரம் வாங்கிய வருடம்.

அடுத்த இரண்டும் தான் என்னன்னு தெரியல! உனக்குத் தெரியுமா விஷ்ணு?

விஷ்ணு:  எனக்கும் தெரியலைடா!

சந்தோஷ்:  1969 தான்  முதன்முதலில்  நிலாவில் கால் வைத்தவருடம். 1984 - இந்தியாவின்  இரும்பு மங்கை இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வருடம். மத்ததெல்லாம் தெரியுமா?

விஷ்ணு:  ஓ! தெரியும்சார்! 2000 - இருபதாம் நூற்றாண்டின் முடிவு.

11.09 -  செப்டெம்பர் பதினொன்னாம் தேதி  அமெரிக்காவின்  இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள்.

கார்த்திக்:  26.12 - சுனாமியால் லட்சக்கணக்கான மக்கள் மடிந்த நாள்.

12.15 - 2015 டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் எல்லாம் பெருவெள்ளத்தில் தத்தளிச்சுது. இளைஞர்கள் பத்தி தப்பா நினச்சுக்கிட்டிருந்தவங்க எல்லாம் அவங்களை ரொம்ப பாராட்ட ஆரம்பிச்ச நேரம் அது.

12.16 - முதல்வரா இருந்த ஜெயலலிதா  இறந்து குழப்பங்களுக்கு  காரணமா ஆகிட்டாங்க.

01-17 - மாணவர்களோட வலிமையை உலகமே திரும்பிப் பார்க்க வெச்ச தைப்புரட்சி ஏற்பட்ட மாதம். சரியா சார்.

அறிவொளி: ரொம்ப சரி, நீங்க ரெண்டு பேரும் உலக நிகழ்வுகள், நாட்டு நடப்புகளை இவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சிருக்குறது ரொம்ப சந்தோசம்பா.

சந்தோஷ்: இப்ப உங்களால இந்த எண்களை இதே வரிசையில சொல்ல முடியுமா?

கார்த்திக்: இதே வரிசையில மட்டுமில்ல சார், தலைகீழா கூட சொல்ல முடியும்.

சந்தோஷ்: குட், இப்படித் தகவல்களை ஒன்னோடஒன்னா தொடர்புபடுத்தி சங்கிலி போல கோர்த்துக்கிட்டா மறக்கவே மறக்காது. தெரியாத விஷயங்களை தெரிந்த விஷயங்களோடு தொடர்பு படுத்திக் கொள்வதும் ஞாபகசக்தியை வளர்க்க இன்னொரு வழி.

கார்த்திக்: அது எப்படி சார். ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.

அறிவொளி: அணுவுக்கும் மூலக்கூறுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல அணு - பூந்தி மாதிரி தனித்தனியா இருக்கும். மூலக்கூறு - லட்டு மாதிரி ஒண்ணா சேர்ந்து இருக்கும்னு சொல்லலாம்.

கார்த்திக்: சூப்பர் சார் ஜென்மத்துக்கும் மறக்காது. லட்டுன்ற பேரைக் கேட்டதுமே இனி மூலக்கூறு ஞாபகம் வரும்.

அறிவொளி: படிச்சதெல்லாம் மறந்துடுது ஞாபக சக்தியே எனக்கு இல்லைனு நிறைய பிள்ளைகள் சொல்வாங்க. ஆனா பயிற்சியால அடைய முடியாத விஷயம் எதுவுமே இல்லை. இருபது பொருட்களையோ, படங்களையோ மேசை மேல் வச்சுட்டு என்னென்ன இருக்குன்னு ஒரு நிமிடம் உற்றும் பார்த்து மனதில் பதிய வைக்கணும். பிறகு என்னென்ன பார்த்தோம் என எழுதணும். முதல் ஓரிரு முறை சிலவற்றை விட்டுட்டாலும் தொடர்ந்து பயிற்சி எடுத்தா  எல்லாத்தையும் சரியா எழுதிடமுடியும். முதல் முறையே சரியா எழுதுறவங்களுக்கு ஞாபக புலின்னு பட்டம் கொடுத்திடலாம்.

சந்தோஷ்: இதே போல இருபது தலைவர்களின் பெயர்களை மாணவர்களிடம் கொடுத்து வரிசைப்படுத்த சொல்லணும் சார். அரசியல் முக்கியத்துவம், பிறந்தநாள், இறந்தநாள், நாட்டுக்கு செய்த நன்மைகள், எத்தனை வருஷம் உயிர் வாழ்ந்தாங்க இப்படி எந்த காரணங்களுக்காக அவங்க வரிசைப்படுத்தினாங்க என்று  பிள்ளைகளை விளக்க சொன்னா நாம நினைச்சுப் பார்க்காத அளவு பலவித காரணங்களை சொல்வாங்க. இது பிள்ளைகளோட லாஜிக்கல் திங்கிங்ன்னு சொல்லக் கூடிய தர்க்க ரீதியான சிந்தனையை வளர்க்கும்.

அறிவொளி: சரியா சொன்னீங்க சந்தோஷ் இதேப் போல பொதுப்படையான விஷயங்களிலிருந்து ஒவ்வொரு தனிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு காணும் அறிவைப் பெற அட்டவணைப்படுத்திப் பழகுதல் அவசியம். உதாரணமா கடந்த சில வருடங்களில் தனிமனித வாழ்விலோ அல்லது சமுதாயத்திலோ மாற்றங்களை ஏற்படுத்திய முப்பது நிகழ்வுகளை முதலில் எழுதிக்கணும். ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஒரு அடையாளம் வச்சுக்கணும். எடுத்துக்காட்டா

Ø  பொருளாதார மாற்றம்       

v  கலாச்சார மற்றம்

§  அரசியல் மாற்றம்  

o   கல்வித்துறையில்மாற்றம் 

ü  கலாச்சார மாற்றம்  

·  மதம்சார்ந்த மாற்றம்

இப்படிகுறிச்சிக்கணும். பிறகு ஐந்து வரிசை கொண்ட ஒரு அட்டவணை தயார் செய்து ஒவ்வொரு மாற்றத்துக்கும் தகுதியான நிகழ்வுகளை அட்டவணையில் வரிசைபடுத்தனும்.

ஒவ்வொரு மாற்றத்தைப் பற்றியும் அது தனி மனித வாழ்வில், சமுதாய வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்குன்னு ஆராயனும். நேர்மறையான விளைவாய் இருந்தால் அதை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்றும்  எதிர்மறை விளைவாயிருந்தா அதைக் குறைக்க அல்லது தவிர்க்க என்ன செய்யணும் என்றும்  நம் கருத்துக்களை எழுதனும்.

கடைசியா இந்த அட்டவணையிலிருந்து நாம கத்துக்கிட்டது என்னன்னு யோசிக்கணும் ? 

இதே அட்டவணையை நம்முடைய வாழ்க்கையில் ஒருவருட, ஒருமாத, ஒரு வார காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சீர்தூக்கிப் பார்த்து ,சரியானதை தொடர்ந்து செய்தும். தவறான செயல்களைத் தவிர்த்தும் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளலாம்.

சந்தோஷ்: நல்ல ஐடியா சார், இதே மாதிரி புத்தகங்கள் வாசிக்க பிள்ளைகளை ஊக்கப்படுத்தனும். அதிலும் கதை புத்தகம் வாசிப்பதா இருந்தா அத நான்கு பாகங்களை பிரிச்சு ஒவ்வொரு பாகம் முடியும் போதும் அடுத்து என்ன நடக்கும்னு அப்படி நடக்க என்ன காரணம் என தர்க்கரீதியில் யோசிச்சு அது கதையோட ஒத்துப் போகுதானு நண்பர்களோட பெட் கட்டி விளையாடலாம். விளையாட்டா நாம் பெற்ற இந்த அனுமானிக்கும் திறன் நம்மோட தினசரி வாழ்க்கையிலும் பயன்படும். ஆசிரியர்களோ, பெற்றோர்களோ, கூட வேலை செய்றவங்களோ, நம்ம உயரதிகாரிகளோ அன்னைக்கு எப்படி உடை உடுத்தியிருக்காங்க, முகபாவனை எப்படியிருக்கு, பேசும்விதம் இதெல்லாம் வைத்து நமக்கு அன்றைய நாள் எப்படியிருக்கும், நாம நினைத்த காரியத்தை அவர்களைக் கொண்டு சாதிக்க முடியுமா என்பதையெல்லாம் தீர்மானிக்க முடியும். 

கார்த்திக்: மத்தவங்களை வெச்சு முடிவு பண்றது இருக்கட்டும் சார், என் பிரச்சனைகளை நானே தீர்த்துக்க என்ன செய்யணும்.

அறிவொளி: நல்ல கேள்வி கார்த்திக். நம் துன்பங்களுக்கு நம்மை நாமே சில கேள்விகள் கேட்டு பதில் தேடுறதால நம்  பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். ஒரு பேப்பர் எடுத்து 

1. அடுத்த பத்தாண்டுகளுக்குள் நான் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் என்ன?  

2. என் எதிர்காலத்தில் எதிர் நோக்கப் போகும் மிகப் பெரிய பிரச்சனை எது?

3. கனவில் கூட என்னை பயமுறுத்தக் கூடிய பிரச்சனை எது?

4.இது ஒன்றைத் தவிர வேறு பெரிய கவலை எனக்கில்லைனு நான் எதைப் பற்றி நினைக்கிறேன்?

5. அதை தீர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு மூன்று, நான்கு பதில்கள் கிடைத்தால் முதலில் மேலோங்கி இருக்கும் பதிலை மட்டும் எழுதி வைச்சு அதைத் தீர்க்க முயலனும்.

ஒவ்வொரு நாளும் தூங்கப் போகும் முன் நம்மை நாமே சுய பரிசோதனை செய்யணும்.

விஷ்ணு: சுய பரிசோதனையா? அப்படின்னா ...?

அறிவொளி: இன்னைக்கு காலைல எழுந்ததுலேர்ந்து நான் என்னென்ன செய்தேன்? யார் யாரோட பேசினேன்? என்ன நல்ல விஷயம் நடந்துச்சு? அதுக்கு நான் யாருக்கு நன்றி சொல்லணும்? என்ன கெட்ட விஷயம் நடந்துச்சு? அதுக்கு நான் எந்த அளவு காரணமாயிருந்தேன்? நான் எப்படி நடந்திருந்தா அந்தப்  பிரச்சனையைத் தவிர்த்திருக்க முடியும்? இது மாதிரி இன்னொரு தடவை நடக்காம இருக்க நான் என்ன செய்யணும்? எதைத் தவிர்க்கணும் என டைரியில் எழுதணும். இந்த பதில்களை உண்மையா, உறுதியா வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சி செய்யணும்.

கார்த்திக்: மத்தவங்க நமக்கு அட்வைஸ் பண்ணாதான் சார் எரிச்சலும் கோபமும் வரும். நம்மை நாமே சரி செய்துக்க  நல்ல வழி தான் இது.

சந்தோஷ்: உண்மைதான் சார் ஒவ்வொரு நாள் அனுபவத்திலும் பாடம் கற்று, நல்லவற்றை தொடர்ந்து செய்து, தீயவற்றை விலக்கி , தெளிவான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடு பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுகினால் வாழ்க்கை நிச்சயம் சுவாரஸ்யமானதா இருக்கும். முன்னேற்றம் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடரும்...

- பிரியசகி 

piriyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com