புதையல் 16

அறிவொளியின் ஊக்கமூட்டும் வார்த்தைகளால் மகிழ்ந்து உற்சாகமாய் இருந்த கார்த்திக்
புதையல் 16

புலன்களைப் பயிற்றுவித்து  புவனத்தை ஆள்!

(அறிவொளியின் ஊக்கமூட்டும் வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த கார்த்திக் மற்றும் விஷ்ணுவுடன் ஆசிரியர் சந்தோஷும் சேர்ந்துகொண்டார்.)

அறிவொளி : வாங்க சந்தோஷ், நீங்க என் வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.

சந்தோஷ் :  இந்தப்  பக்கம் கடைக்கு வந்தேன், நீங்க புதுசா குடிவந்திருக்கீங்க. ஏதாவது உதவி தேவையான்னு பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன் சார்.

அறிவொளி : ரொம்ப நன்றி சந்தோஷ். குறைவான சுமைகள் சுகமான பயணத்துக்கு அவசியம்னு சொல்லுவாங்க வாழ்க்கையும் ஒரு பயணம்தானே. என்னோட தேவைகள் ரொம்பக் குறைவு. ஏதாவது வேணும்னா நான் கண்டிப்பா உங்ககிட்ட  சொல்றேன்.

சந்தோஷ் : நல்லதுங்க. இவங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்துக்கிட்டுருக்காங்க? கார்த்திக் முகத்துல இவ்வளவு சந்தோஷத்தை நான் இன்னைக்கு தான் பார்க்கறேன்.

கார்த்திக் : பொதுவா பசங்க சந்தோஷப்படுற மாதிரி டீச்சர்ஸ் எதுவும் சொல்றதில்லை. குறைதான் சொல்வாங்க. ஆனா சார் நாங்க வாழ்க்கையில ரொம்ப பெரிய ஆளா வருவோம்னு சொல்லியிருக்கார். எங்களுக்கும் இப்ப அதில் நம்பிக்கை வந்துடுச்சு. அப்புறம் சந்தோஷமாதானே இருப்போம்.

சந்தோஷ் : உண்மைதான் கார்த்திக், சாரோட கொஞ்ச நேரம் பேசினாலே அவரோட உற்சாகம் கூட இருக்கவங்களுக்கு ஒட்டிக்கிட்டு அவங்களும் மகிழ்ச்சியாகிடுவாங்க.

விஷ்ணு :  ஆமா சார், யாராவது அட்வைஸ் செய்தா எனக்கு ரொம்ப கோவம்தான் வரும். ஆனா சார் நிறைய பேருடைய வாழ்க்கைய உதாரணமா காட்டியதால, அவங்களால சாதிக்க முடிஞ்சப்ப எங்களாலயும் முடியும்னு நம்பிக்கை வந்துடுச்சு.

கார்த்திக் :  சார், நான் நல்லா படிக்க என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க சார்.

அறிவொளி : கார்த்திக், நமக்கு எல்லா தகவலுக்கும் ஐம்புலன்கள் மூலம்தான் கிடைக்குது. உன் புலன்களை விழிப்பு நிலையில் வைக்கக் கத்துக்கிட்டா படிப்புல மட்டுமில்ல வாழ்க்கையிலும் ஜெயிச்சிடலாம் கார்த்திக்.

விஷ்ணு : புலன்கள்னு நீங்க சொல்றது கண், காது, மூக்கு, நாக்கு, தோல் தானே சார்.

அறிவொளி: ஆமா  விஷ்ணு.

விஷ்ணு : இதையெல்லாம் விழிப்பு நிலையில் வைக்க என்ன பண்ணனும்? பயிற்சி எதாவது இருக்கா சார் ?

அறிவொளி : ம்.. இருக்கு. சரி இந்த ரூம்ல என்னென்ன உன்னால உணர முடியுதுன்னு சொல்லு.

விஷ்ணு : இங்கே  நம்ம நாலு பேர் இருக்கோம். சோபா, சேர் டேபிள்ன்னு சில பொருட்கள்   இருக்கு.

அறிவொளி : பாத்தியா நான் உன்னால என்ன உணர முடியுதுன்னு கேட்டேன். நீ கண்ணால பார்த்ததை மட்டும் சொன்ன. சரி இப்ப என்னென்ன சத்தம் கேக்குதுன்னு உன்னிப்பா கேட்டு சொல்லு.

(விஷ்ணு கண்களை மூடிக் கொண்டு உற்று கவனித்து பின் பதில் கூறினான்.) 

நீங்க பேசுறது கேக்குது, அப்பறம் சமயலறையில் குக்கர் சத்தம் கேக்குது.  

அறிவொளி : டிவியில ரிமோட்ல ஒரு பட்டனை அமுக்கினா சத்தம் அதிகமாகும் இல்லையா, அதே மாதிரி உன் கேட்கும் சக்தியை அதிகமாக்க உன்கிட்ட ஒரு ரிமோட் இருக்கற மாதிரி கற்பனை பண்ணிக்க இப்ப அதை அழுத்திகிட்டே வேற என்ன சத்தம் கேக்குதுன்னு பாரு.

விஷ்ணு : வெளிய ஒரு புல்லட் வண்டி போகும் சத்தம் கேக்குது சார்.

அறிவொளி : வெரிகுட், இன்னும் கொஞ்சம் பட்டனை அமுக்கி வேறு சத்தம் கேக்குதானு நல்லா கவனி.

(கண்களை மூடிய நிலையிலேயே உற்று கவனித்த விஷ்ணு பின் பேசலானான்)

ஆமா சார், பேன் ஓடும் சத்தம் கூடக் கேக்குது சார்.

அறிவொளி : பாத்தியா, சாதாரண நிலையில் கேக்காத சத்தங்கள் நீ உற்று கவனிக்கும் போது கேட்குது இல்லையா?

விஷ்ணு : அட ஆமா சார். எனக்கே ஆச்சர்யமா இருக்கு.

சந்தோஷ் :  சார், நான் என் பிள்ளைகளோட கேட்கும் திறனை அதிகப்படுத்த ஒரு விளையாட்டு விளையாடுவேன். சிறு டப்பாக்களில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மொச்சை போன்றவற்றைத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு காதுக்கு  பக்கத்தில் ஆட்டி எது எப்படி சத்தம் கேட்குது என கவனிக்கச்  சொல்வேன். பிறகு கண்களை மூடிக் கொண்டு டப்பாவை ஆட்டும் போது வரும் சத்தத்தை வைத்து அதில் என்ன பொருள் இருக்குது என சரியா கண்டு பிடிக்கணும். இது விளையாட்டாக இருப்பதால் பிள்ளைங்க ஆர்வமாகவும் விளையாடுவாங்க, அதே சமயம் கூர்ந்து கவனிக்கும் திறனும் அதிகமாகும்.

அறிவொளி : கார்த்திக் நீ இதே மாதிரி உன் நுகரும் சக்தியை அதிகரிக்க என்னென்ன வாசனை இங்க உன்னால உணரமுடியுதுன்னு பாரு.

கார்த்திக் : இந்த ரூம்ல ஊதுபத்தி வாசனை வருது சார்.

அறிவொளி :  சரி, புலன்களுக்கான உன் ரிமோட்டில் நுகரும் சக்தியை அதிகரிக்கும் பட்டனை அமுக்குவதா கற்பனை பண்ணிக்கிட்டு வேறென்ன வாசனை வருதுன்னு பாரு.

கார்த்திக் : (நெற்றியை சுருக்கி, உற்று கவனித்தபடி...)

உங்க வீட்ல இன்னைக்கு வெங்காய சாம்பாரா சார்? சூப்பரா வாசனை வருது!

அறிவொளி : வெரிகுட், வேற ஏதாவது வாசனை வருதா?

கார்த்திக் :  ம் ... அப்புறம் .... ம் ... ஏதோ சென்ட் `வாசனை வருது.

விஷ்ணு :  டேய், சூப்பர்டா. நேத்து எங்க மாமா ஊர்லேருந்து வாங்கிட்டு  வந்த சென்ட்டை லேசா போட்டேன். எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டப்  போறாங்கன்னு ரொம்ப கொஞ்சமாத்தான் போட்டேன். நீ கண்டு புடிச்சிட்டியேடா!

அறிவொளி : இதே மாதிரி ருசி அறியும் சக்தி, தொடு உணர்வு இதையும் அதிகரிக்க பயிற்சி இருக்கு.

விஷ்ணு :  டேஸ்டு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்..தொடு உணர்வை  எப்படி சார் அதிகப்படுத்துறது.

அறிவொளி : இதை விளையாட்டாவே செய்யலாம். உன்னோட புறங்கையில்  என் ஆட்காட்டி விரல் நடுவிரலால் தடவிக்கொண்டே என் பெயரை சொல்வேன். மூன்று முறை இப்படி செய்வேன். என் தொடுதல் எப்படி இருக்கு என நீ கவனிக்கணும். அதேமாதிரி கார்த்திக்கும், சந்தோஷ் சாரும் ஒவ்வொருத்தரா அவங்க பேரை  சொல்லிக்கொண்டே மூன்று முறை உன் புறங்கையில் தடவுவாங்க. ஒவ்வொருவரின் தொடுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நீ கவனமா உள் வாங்கிக்கனும். பிறகு கண்ணை மூடிக்கணும். எங்கப் பெயரை சொல்லாம நாங்க அதே மாதிரி உன் கையில் தடவும் போது யார் உன்னைத் தொடுறாங்கன்னு சரியா கண்டு பிடிச்சிட்டா நீ வெற்றி பெற்றதா அர்த்தம் ஓகேவா ?

விஷ்ணு : ஓகே சார்,நான் ரெடி.

(விளையாட்டை ஆரம்பிக்க, முதலில் ரெண்டு மூன்று முறை தவறாக சொல்லிய விஷ்ணு பிறகு கூர்ந்து கவனித்து சரியாக சொல்ல ஆரம்பித்தான். பிறகு கார்த்திக், சந்தோஷ், அறிவொளி என ஒவ்வொருவராக முறைமாற்றி  விளையாடவே ஒரே கலகலப்பாக இருந்தது. அதே சமயம் தொடு உணர்வுப்பயிற்சியும் நடந்தது.)

கார்த்திக் : ரொம்ப நல்லாயிருக்கு சார் இந்த விளையாட்டு.

அறிவொளி : இதே போல கூர்ந்து பார்க்கும் திறனை அதிகரிக்கும் விளையாட்டை விளையாடுவோமா? 

கார்த்திக் : நாங்க ரெடி சார்.

அறிவொளி :  கார்த்திக், விஷ்ணு நான்  1,2,3 சொன்னதும் சிவப்பு நிறத்துல என்னென்னவெல்லாம் கிடைக்குதோ என்கிட்டக் கொண்டு வந்து கொடுக்கணும். ஒரு நிமிஷத்துக்குள்ள யார் அதிகமான பொருட்களைக் கொண்டு வர்றீங்களோ அவங்க தான் ஜெயிச்சவங்க. சரியா?

கார்த்திக் : ஓகே,ரெடி சார்.

(அறிவொளி தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடியே ஆட்டத்தைத் துவக்கி வைக்க இருவரும் சிவப்பு நிற பொருட்களை தேடித்தேடி எடுத்து  வந்து அறிவொளியிடம் கொடுத்தனர். ஒரு நிமிட முடிவில் விஷ்ணு ஒன்பது பொருட்களையும், கார்த்திக் மூன்று பொருட்களையும் வைத்திருக்க விஷ்ணு வெற்றிபெற்றான்.

அறிவொளி : சந்தோஷ் நீங்க தான் பார்வையாளரா இருந்தீங்க. நீங்க  சொல்லுங்க, விஷ்ணு அதிகமான பொருட்களும் கார்த்திக் குறைவான பொருட்களும் சேகரித்ததற்கு என்ன காரணம்?

சந்தோஷ் : நீங்க விளையாட்டைப் பற்றி விளக்கும் போதே விஷ்ணு உஷாராகி அறையைச் சுற்றிலும் என்னென்ன சிவப்பு நிறப் பொருட்கள் இருக்குன்னு பார்க்க ஆரம்பிச்சுட்டான். விளையாட்டைத்  தொடங்கியதுமே அவன் பதற்றமில்லாமே ஓடி ஒவ்வொன்னா எடுத்து வந்தான். கார்த்திக் அதைச் செய்யாம விளையாட்டு தொடங்கின பிறகு பதற்றமா அங்குமிங்கும் ஓடி பொருட்களைத் தேடி நேரத்தை வீணாக்கினான். அதனால அவனால குறைவான பொருட்களைத் தான் எடுக்கமுடிஞ்சது.

அறிவொளி : ரொம்ப சரியா சொன்னீங்க சந்தோஷ். எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நாம என்ன செய்யப் போறோம் என்பதில் தெளிவா இருந்தா பதற்றமில்லாம ஆரம்பிக்கலாம். பதறாத காரியம் சிதறாது. எந்த செயலையும் சிறப்பா செய்ய கூர்ந்து பார்க்கும் திறன் ரொம்ப முக்கியம். திருடறவங்களுக்குக் கூட  பால பாடமே புலன்களை கூர்மையா வச்சுக்கணும்கறதுதான். ஒரு வீட்டுக்கு திருடப் போனா எந்த பொருள் எங்க இருக்குன்னு கூர்ந்து  பார்க்கணும். சின்ன சத்தத்தையும்  உன்னிப்பா கேட்கணும். இல்லைன்னா மாட்டிக்கிட்டு உதை வாங்கறது நிச்சயம். 

(எல்லோரும் சிரித்தபடியே அறிவொளியின் பேச்சை ரசித்தனர்.)

சந்தோஷ் : சார் இதே மாதிரி இன்னொரு விளையாட்டு சொல்லட்டா?

அறிவொளி : தாராளமா சொல்லுங்க சந்தோஷ்.

சந்தோஷ் : கார்த்திக் நீ என் தலை முதல் கால் வரை நல்லா பார்த்துக்கோ. பிறகு நீ கண்ணை முடிக்கணும். நான் என் உடையிலோ இல்லை என்கிட்ட இருக்கும் பொருட்களின் இடத்திலோ எதாவது மாற்றம் செய்வேன். நான் என்ன மாற்றம் செய்து இருக்கேன்னு நீ கண்டுபிடிக்கணும். சரியா?

கார்த்திக் : சரி சார்.

(கார்த்திக் சந்தோஷை உற்று நோக்கியபின் கண்களை மூடிக் கொள்ள, சந்தோஷ் தன்  தலைமுடியை கலைத்து விட்டார். சட்டையின் மடக்கி இருந்த கையை நீட்டி விட்டார். இடக்கையிலிருந்த கடிகாரத்தை வலக்கைக்கு மாற்றினார். நேராக உட்கார்ந்திருந்தவர் சற்று திரும்பி கால் மீது கால் போட்ட படி அமர்ந்தார்.)

சந்தோஷ் :  கார்த்திக் கண்ணைத்  திறந்து என்னிடம் என்னென்ன மாற்றம் இருக்குன்னு சொல்லு பார்க்கலாம். 

(கார்த்திக் அவரைத் தலை முதல் கால் வரை உற்று கவனித்தான்.)

கார்த்திக் : சார் முதல்ல நேரா உட்கார்ந்திருந்தீங்க. இப்ப திரும்பி கால் மேல கால் போட்டிருக்கீங்க. தலை கலைஞ்சிருக்கு. அப்புறம் ... சட்டை கை முதல்ல மடிச்சு இருந்துச்சு. ( திரும்பவும் தலை முதல் கால் வரை பார்த்தான். அதற்குள் ஒரு நிமிடம் முடிந்து விட்டதாக அறிவொளி அறிவிக்க...)

அவ்வளவுதான் சார் வேற எதுவும் மாற்றம் இல்லை.

சந்தோஷ் : எல்லாம் சரியா சொல்லிட்ட  கார்த்திக். ஒன்றை  மட்டும் விட்டுட்ட.  கடிகாரத்தை இடக் கையிலிருந்து வலக்கைக்கு மாத்தியிருக்கேன்.

கார்த்திக் : அடடா,  அதை மட்டும் கவனிக்காம விட்டுட்டேனே! 

அறிவொளி : ஒண்ணும் பிரச்னை இல்லை கார்த்திக். இது  விளையாட்டுதானே. இதே மாதிரி அடிக்கடி  விளையாட நம் புலன்களெல்லாம் கூர்மையாகும். நாளடைவில் ஒருவரை  நாம் சந்திக்கும் போது அந்த நபரைப் பற்றிய அத்தனைத்  தகவல்களும் நம் புலன்கள் வழியாக நம் மூளைக்குள் பதிவாகிவிடும்.  நம் முன்னோர்கள் விளையாட்டு முதல் சாமி கும்பிடுவதுவரை எல்லாவற்றிலும்  புலன்களுக்குப்  பயிற்சி கொடுப்பது போலத்தான் உருவாக்கி வச்சிருக்காங்க. நாம அதையெல்லாம் மறந்து போனதாலத்தான் இப்ப கஷ்டப்படுறோம்.

விஷ்ணு : விளையாட்டு சரி, சாமி கும்பிடும்போது எப்படி சார்  புலன்களுக்குப்  பயிற்சி தர முடியும்.

அறிவொளி : சொல்றேம்பா ...

(என்ன சொல்லி இருப்பார்...?  அடுத்த வாரம் வரை காத்திருப்போம்…

தொடரும்

பிரியசகி

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com