கண்டேன் புதையலை 17

நம் முன்னோர்கள் சாமி கும்பிடும்போது கூட புலன்கள் பயிற்சி பெறும் வகையில்
கண்டேன் புதையலை 17

முயற்சியே  முன்னேற்றத்தின் முதற்படி !

(நம் முன்னோர்கள் சாமி கும்பிடும்போது கூட புலன்கள் பயிற்சி பெறும் வகையில் தான் பல விதமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் என்று கூறிய தன்னை  வியப்புடன் நோக்கிய விஷ்ணுவுக்கு அது பற்றிய விளக்கமளித்தார் அறிவொளி.) 

அறிவொளி:  விஷ்ணு,  கோயிலுக்கு போகும் போது செருப்பை வாசல்லையே கழட்டிட்டுதான் உள்ளே  போறோம். அந்தக் கருங்கல் தரையில் வெறுங்காலோட நடக்கும் போது உள்ளங்காலில் கிடைக்கும் அழுத்தத்தினால் உடலில் ரத்தவோட்டம் சீரடைகிறது. இனிய பாடல்களையும் மந்திரங்களையும் காதால் கேட்கிறோம். பூமாலையின் மணத்தினை மூக்கால் நுகர்கிறோம். கர்பக்கிரகத்தில் கடவுளைக் காண்கிறோம். கற்பூர தீபாராதனையை கையால் தொட்டு கண்ணில் ஒற்றிக்  கொள்கிறோம். துளசித் தீர்த்ததையும் பிரசாதத்தையும்  சுவைக்கிறோம். இப்படி ஐம்புலன்களும் அங்கே முழுமையா விழிப்போடு  இருந்து, மனம் ஒன்றி தியானிக்கையில் நாம நினைச்சது பலிக்குது.

சந்தோஷ்: உண்மைதான் சார். நம்ம பெரியவங்க எதை செய்தாலும் அதுக்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கும். சும்மா சொன்னா கேக்காத மக்கள் சாமி பேரைச்  சொல்லிட்டா கேள்வி கேட்காம பின்பற்றுவாங்க இல்லையா?

அறிவொளி:  இந்தப் பயிற்சிகளை இன்னும் விரிவுபடுத்தி பார்த்தல்,சுவைத்தல், கேட்டல், நுகர்தல், உணர்தல் என எல்லாப் புலன்களையும் ஒரே நேரத்தில் பயிற்றுவிக்க முடியும். உதாரணமா ஒரு கல்யாண வீட்டுக்குப்  போகும் போது பலரையும் பார்க்கிறோம்., மேள, நாதஸ்வர இசையைக் கேட்கிறோம். தோரணங்கள் மற்றும் மாலையில் உள்ள பூக்களின் மணத்தை நுகர்கிறோம். ஹோம குண்டப் புகையையும் அதன் வெப்பத்தையும் உணர்கிறோம். சாப்பாட்டை ருசித்து சாப்பிடுறோம். இந்தச் சூழலில் பந்தியில் சாப்பிடும் போதே சுற்றிலும் யார்யார் இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொண்டே இசையை ரசித்தவாறே உணவில் என்னென்ன வித்தியாசமான வாசனைகள் உள்ளன என நுகர்ந்து பார்க்கணும். சில வினாடிகள் நிறுத்திவிட்டு வாசனையை நுகர்ந்த சமயத்தில் என்னென்ன சத்தங்களை கவனிக்காமல் விட்டீர்கள் என கூர்ந்து கவனிக்கணும். பிறகு சத்தத்தை கவனித்தபோது நம்மைச் சுற்றியிருப்பவர்களில் யாரைக் கவனிக்காம விட்டிங்கன்னு பாருங்க. இந்தப் பார்த்தல், கேட்டல், நுகர்தல், நடந்த போது கவனிக்காம விட்ட உணவின் சுவையையும் ,அறையின் வெப்பநிலையையும் இப்போ கவனிக்கணும். பிறகு ஐந்து புலன்களின் வேலையையும் ஒருசேர செய்து பார்த்து அதில் திருப்தி கிடைக்கும் வரை இதைத் தொடர்ந்து செய்யலாம்.

கார்த்திக்: ஒரு நேரத்துல ஒரு வேலைய செய்றதே கஷ்டமாயிருக்கு எல்லாத்தையும் ஒரே நேரத்துல செய்யச் சொல்றிங்களே சார்!

அறிவொளி: இதெல்லாமே நாம எப்பவும் செய்துக்கிட்டுத் தான் இருக்கோம் கார்த்திக். ஆனா அதை விழிப்புணர்வோட செய்யணும்னுதான் சொல்றோம். உயிரோட இருக்கவங்க எல்லோருமே முச்சு விட்டுக்கிட்டுதான் இருக்கோம். ஆனா தியானம் பழகும் போது மூச்சை கவனிக்கச் சொல்வாங்க அப்படி விழிப்புணர்வோட செய்யும் செயல்களுக்குப் பலன் நிறைய உண்டு.  மனம் உன் கட்டுப்பாட்டில் வரும். மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். நீ இதுக்கே புலம்புறியே, புலன்களுக்குத் தொடர்பில்லாத செயல்களிலும் நாம் பயிற்சி பெற முடியும்னு நேத்து ஒரு புத்தகத்தில் படிச்சேன். 

விஷ்ணு:  புலன்களுக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் பயிற்சியா? அது எப்படி சார்?

அறிவொளி:  இப்ப நீ  பஸ்ல போய்க்கிட்டிருக்கேன்னு வெச்சுக்க, அதில் பளிச்சுனு டிரஸ் போட்டிருக்க யாரையாவது செலக்ட் பண்ணிக்கோ. அந்த நிறத்தை நல்லா உற்றுப் பார்த்து உள்வாங்கிக்கிட்டு அதைத் தொடுவது போல கற்பனைப் பண்ணிக்கணும். ஒவ்வொரு நிறத்துக்கும் குறிப்பிட்ட அலைநீளம் உண்டு. அதை உட்கிரகித்து அந்த குறிப்பிட்ட நிறத்துக்கான ஒலிஅலைகளைக் கேட்க முயற்சிக்கணும். கேட்டபின் அந்நிறத்தை நுகர்ந்து, சுவைக்கணும். இதுபோல் புலன்களுக்குத் தொடர்பில்லாத செயல்களில் பயிற்சி கொடுப்பதால் ஐம்புலன்களின் சக்தி பலமடங்கு அதிகமாகும். 

கார்த்திக்;  சார் எனக்கு கண்ணாலப் பார்த்தே  கலரை ஒழுங்கா சொல்லத் தெரியாது. நீங்க என்னடான்னா நிறத்தைக் கேக்கணும், நுகரணும் , சுவைக்கணும்னு எல்லாம் சொல்றீங்க. இதெல்லாம் நடக்குற விஷயமா சார்?

சந்தோஷ்:  மேலோட்டமா பாத்தா அப்படித்தான் தோணும் கார்த்திக். இன்டர்நெட்டில் நான்கூட நடுமூளையைத் தூண்டும் பயிற்சிகள் பத்திய தகவல்களையும் சில வீடியோக்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். இந்தப்  பயிற்சிகளால் ஒருவரின் உட்கிரகிக்கும் திறன், படைப்பாற்றல், நினைவாற்றல், செயலாற்றும்  திறன் தன்னபிக்கை எல்லாமே அதிகரிக்கும். இதெற்கென நிறைய பயிற்சி மையங்கள் உண்டு. அவற்றில் பயிற்சி பெறும் பிள்ளைகள் கண்கள்  கட்டப்பட்டிருக்கும் போதே எதிரில் காட்டப்படும் பலூனின் நிறம் என்று சரியா சொல்லறாங்க. அட்டையில் காட்டப்படும் வாக்கியம் என்ன என்று படிக்காமலே சொல்வதைப்பார்த்து எனக்கே ரொம்ப ஆச்சர்யமாயிருந்தது. முயற்சியும், பயிற்சியும்  இருந்தா எல்லாம் சாத்தியமே என்பதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டுகள் .

இதையெல்லாம் விட இன்னுமொரு விஷயம்  சொன்னா  உனக்கு ரொம்ப நல்லா புரியும். கண் பார்வை இல்லாத மாற்றுத்  திறனாளிகள்  ரூபாய் நோட்டை தொட்டுப் பார்த்து அதன் மதிப்பு என்னன்னு சரியா சொல்லிடுவாங்க. இங்க கண் செய்ய வேண்டிய வேலைய தொடு உணர்வு மூலமா  செய்றாங்க. மத்தவங்களோட காலடி சத்தத்தை கேட்டு, வர்றது  யாருன்னு சரியா சொல்லிடுவாங்க. கண் சொல்ல வேண்டிய வேலைய இங்க காது செய்யுதில்ல! ஏன், தசாவதானிகள் ஒரே நேரத்தில ஒன்பது விதமான வேலைகளை சரியா நினைவில் வைத்து செய்றாங்களே!  ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா எங்க சித்தி குழம்பு  கொதிக்கும் வாசனையை வைத்தே குழம்புல உப்பு,காரம் சரியா இருக்கான்னு சொல்லிடுவாங்க. 

கார்த்திக்: ஆமா சார் எங்க அம்மா கூட கறி,மீன் சாப்பிடமாட்டாங்க. ஆனா எங்களுக்காக ரொம்ப ருசியா சமைச்சு குடுப்பாங்க. எப்படிம்மா சாப்பிட்டுப் பாக்காமலே  இவ்வளவு டேஸ்ட்டா சமைக்குறீங்கன்னு கேட்டா குழம்பு கொதிக்கிற வாசனையை வைத்தே என்னால உப்பு, புளி, காரம் எல்லாம் கண்டுபிடிக்க முடியும்னு சொல்லுவாங்க. 

அறிவொளி: பார்த்தியா ருசி அறிவது நாக்கோட வேலை. ஆனா மூக்கால வாசனையை முகர்ந்தே நாக்கு செய்ய வேண்டிய வேலையை செய்யும் போது கண்ணாலே கேட்பதும், சுவைப்பதும், நுகர்வதும், உணர்வதும் கூட சாத்தியம்தானே! இதே போல நம் உள்ளுணர்வையும் கூட பயிற்றுவிக்க முடியும்.

சந்தோஷ்: அது எப்படி சார்?

அறிவொளி: அமைதியா ஒரு இடத்திலே உட்கார்ந்து கண்களை மூடி நம் புலன்களைப் புறஉலகை விட்டு உள்மனம் நோக்கி திருப்ப வேண்டும். உள்ளுக்குள் ஒவ்வொரு செல்லாக பாய்ந்து வரும் விழிப்புணர்வின் சீரான ஓசையைக் கேட்கவேண்டும். கேட்க ஆரம்பித்ததும் நம் கற்பனையான ரிமோட்டின் ஓசையை அதிகரிக்கும் பட்டனை அழுத்தி ஓசையை அதிகரித்து தெளிவாக கேட்கணும். பிறகு படிப்படியாக குறைத்து பழைய நிலைக்கு வரணும். இந்த உள்ளுணர்வின் ஒலியும், அதிர்வுகளும் பயிற்சி மூலம் நமக்கு பழகப் பழக எந்த செயலையும் செய்ய தொடங்கும் போதே அது நல்லதா கெட்டதா, அதன் விளைவுகள் என்னவென்று நம் உள்ளுணரவு எச்சரிப்பதை நம்மால் தெளிவாக உணர முடியும். 

கார்த்திக்: சார் இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா?

அறிவொளி: இதெல்லாம் சாத்தியமான்னு கேட்டுக்கிட்டே இருந்திருந்தால் மனிதன் குரங்காகவே தான் இருந்திருப்பான். முக்காலத்தையும் உணரும் முனிவர்கள் பற்றியும் , கூடு விட்டு கூடு பாய்ந்த ஆதிசங்கரர் பத்தியும் நாம் படிச்சிருக்கோமே! பல அற்புத வித்தைகள் செய்யக்கூடிய  சித்தர்கள் மந்திரவாதிகள் பத்தியெல்லாம் கேள்விப்பட்டிருக்கோமே!. எந்த விஷயமா இருந்தாலும் அதைக் கத்துக்க ஆர்வமும், என்னால் முடியும்  என்ற நம்பிக்கையும்  ரொம்ப முக்கியம். அதை செய்து முடிக்க முயற்சியும் பயிற்சியும் ரொம்ப ரொம்ப  முக்கியம். இதையெல்லாம் இன்னைக்கே நீ செய்தாகணும்னு நான்  சொல்லல. இதெல்லாம் கூட உலகத்துல சாத்தியம்னு தான் சொன்னேன். இனி நான் சொல்லப்போகும் சின்னசின்ன விஷயங்கள் உங்களுக்கு சுலபமாத்தான் இருக்கும். அதெல்லாம் ரொம்ப அவசியமான முக்கியமான பயிற்சிகளும் கூட.

கார்த்திக்: அப்படியா ! அது எதைப்பற்றிய பயிற்சி சார்?

(அறிவொளி என்ன பயிற்சி பற்றி  சொல்லியிருப்பார் எனத் தெரிந்து கொள்ள நாமும் காத்திருப்போம்.)

தொடரும்

பிரியசகி 

 priyasahi20673@gmail.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com