புதையல் 12

காலை அறிவொளி பள்ளிக்கு சீக்கிரமே  வந்து விட, அங்கு தனக்கு முன்பாகவே வந்து
புதையல் 12

உள்ளதைக் கொண்டு உலகை வெல்வோம்!

(காலை அறிவொளி பள்ளிக்கு சீக்கிரமே  வந்து விட, அங்கு தனக்கு முன்பாகவே வந்து அமர்ந்திருந்த கார்த்திக்கையும் விஷ்ணுவையும் கண்டு வியந்தார். எப்போதும் பள்ளிக்கு தாமதமாக வரும் அம்மாணவர்கள் இருவரும் பள்ளிக்கு ஒரு மணி நேரத்திற்கும் முன்னதாகவே வந்துவிட்டதை  ஆச்சரியமாகப்  பார்த்தவாறு அவர்களை நோக்கி நடந்தார்)

அறிவொளி : என்ன தம்பிகளா ரொம்ப சீக்கிரம் வந்திட்டீங்க?

கார்த்திக் : ஆமா சார், வருஷா வருஷம் நிறைய புது வருட உறுதிமொழி எடுக்கிறோம். ஆனா எதையும் காப்பாத்தறது இல்ல. இந்த வருஷமாவது காப்பாத்தலாமுன்னு பார்க்கிறோம். அதான்...

அறிவொளி : ரொம்ப சந்தோஷம்! என்ன உறுதிமொழி எடுத்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

விஷ்ணு  : நேத்து உங்க கூட பேசுனதுக்கு அப்புறம்தான் இந்த ஐடியா வந்துச்சு சார்,  கார்த்திக்கை தினம் ஸ்கூல் முடிஞ்சதுக்கப்புறம் ஒருமணி நேரம் படிக்க வைக்கிறேன்னு சொன்னேன்  இல்லையா! அதைக்  காலையில ஒருமணி நேரம் படிக்கிறதுன்னு மாத்திக்கிட்டோம்? காலையில பிரெஷ்ஷா படிச்ச மாதிரியும் இருக்கும், ஸ்கூலுக்கு சீக்கிரம் வந்த   மாதிரியும் இருக்கும்  இல்லையா? நல்ல விஷயத்தை தள்ளி போட வேண்டாம்னு இன்னையிலருந்தே ஆரம்பிச்சிட்டோம். ஆனா இவன் தான் அப்பப்ப பஞ்சர் ஆன டயர் மாதிரி டல்லாயிடுறான். என்னால பாஸாக முடியுமான்னு கேக்குறான்.

அறிவொளி : ஏன் கார்த்திக் என்னாச்சு?

கார்த்திக் : ஆமா சார், நான் சரியா  படிக்கமாட்டேங்குறேன்னு பெத்தவங்களும் மத்தவங்களும் திட்டிக்கிட்டே இருக்காங்க. நல்ல மார்க் வாங்கணும்னு எனக்கும்  ஆசையா தான் இருக்கு. ஆனா  படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் சொக்குது. மூஞ்சியக் கழுவி,  டீ  குடிச்சு, கவனமா படிக்கணும்னு நினைச்சுக்கிட்டு தான் படிக்க  ஆரம்பிக்கிறேன். ஆனா   நல்ல படிக்கிற பசங்க பத்து  நிமிஷத்துல படிக்கிற அதே கேள்வியை எனக்குப்  படிச்சு மண்டையில ஏத்த ஒருமணி நேரம் ஆகுது. படிச்ச கொஞ்சமும்  எக்ஸாம்ல கொஸ்டின் பேப்பரை பார்த்த உடனே மறந்து போகுது. இவ்ளோ கஷ்டப்பட்டும் பாஸாக முடியலையேன்னு நெனச்சா  நாமெல்லாம் எங்க உருப்படப் போறோம்னு எனக்கே எம்மேல வெறுப்பும் என்னைத் திட்றவங்க மேல கோவமும்தான் வருது சார்.

அறிவொளி : கார்த்திக் பெத்தவங்களோ, மத்தவங்களோ யார் உன்னைப் பத்தித்  தவறா சொன்னாலும் உனக்கு உன்னைப் பற்றி உயர்வான எண்ணங்கள் இருக்கணும். தன்னை முழுசா நிறை குறைகளோட ஏத்துக்கறவங்களால மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும். நல்லா படிச்சு  அதனால் கிடைக்குற மதிப்பெண்ணால பெரிய ஆளா ஆனவங்க நிறையபேர் உண்டுதான்.ஆனா அவங்க மட்டும் தான் ஜெயிக்க முடியும்னு எந்த விதியும் கிடையாது.

கார்த்திக் : சார் உண்மையாவா சொல்றீங்க?

அறிவொளி : ஆமாம்பா உலகப் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் எந்த பல்கலைக்கழகத்திலேயும் பட்டம் வாங்கல. அவர் வகுப்புல முதல் ரேங்க் வாங்கின ஒரு  நண்பர் பில்கேட்ஸ்ஸோட  மைக்ரோசாப்ட்  நிறுவனத்தில சம்பளத்துக்கு வேலை பார்த்தார். பல நட்சத்திர ஓட்டல்களுக்கு சொந்தக்காரரான ஓபராய் முதல்ல ஒரு சின்ன  ஓட்டல்ல சர்வரா வேலை பார்த்தவர். ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இருக்க இடம் இல்லாம பெஞ்சுல படுத்து தூங்கி, பிலிம் சிட்டிக்கு போகக்கூட  காசில்லாம தன் ஃப்ரெண்டுகிட்ட இருபது ரூபா கடன் வாங்கிக்கிட்டு போனவர்தான்.

விஷ்ணு : சார் நம்ம ஊர் சூப்பர்ஸ்டாரே பஸ் கண்டக்டரா  இருந்தவர் தானே!

கார்த்திக் : ஆமா  சார், சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர் .ரகுமான் கூட பத்தாவது பெயிலானவங்க தான்னு கேள்விப்பட்டிருக்கேன்.

அறிவொளி : பாத்தியா  உனக்கே தெரியுது. இவங்க மட்டும் கிடையாது இன்னைக்கு தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை இயக்கி கொண்டிருக்கும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்குனர் ஆவதற்கு  முன்னாடி  ஏவிஎம்  ஸ்டுடியோவில் வாட்ச்மேன் வேலை பார்த்தவர். அவர் தன் அப்பாவைப் பற்றி சொல்லும் போது, ‘நான் எதற்குமே ஆக மாட்டேன் என்ற கவலையோடே வாழ்ந்து, கடைசிவரை நான் என்ன ஆனேன் என்றே தெரியாமலே இறந்து போனார்’ அப்படின்னு சொல்லியிருக்கார். ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து கடுமையான போராட்டங்களுக்கு பிறகு இயக்குனரான இவரோட முதல் படமான பசங்க மூன்று தேசிய விருதுகளை வாங்குச்சு. சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுக்கான விருதை வென்ற முதல் தமிழ் இயக்குனர் இவர்தான். 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட திருவிழாவில் ஆசிய அளவிலான சிறந்த இயக்குனருக்கான தங்க யானை விருதும் பெற்ற முதல் தமிழ் திரைப்பட இயக்குனரும் இவர் தான். இதே படம் ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றதும் பெருமையான விஷயம் இல்லையா!

விஷ்ணு : ஆமா சார்! சினிமாவுல தான் ஒரே பாட்டுல ஏழையா இருந்தவங்க  பெரிய பணக்காரரா ஆயிடுவாங்க.ஆனா இவர் நிஜ வாழ்க்கையில வாட்ச்மேனா இருந்து பெரிய ஆளா ஆயிருக்காரே!

அறிவொளி : ஆமா, எதையாவது சாதிக்கணும் என்ற வெறி, அதற்கான கடுமையான உழைப்பு, எதுக்காகவும் சோர்ந்து போயிடாத மனஉறுதி இதெல்லாம் தான் அவரோட வெற்றியின் ரகசியம்.  இன்னொருத்தரைப் பற்றி சொன்னா இன்னும்  ஆச்சரியப்படுவீங்க.

கார்த்திக் : யாரு சார் சொல்லுங்க.

அறிவொளி : விஜய் டிவியில சமையல் நிகழ்ச்சிகளில்  வரும் வெங்கடேஷ்பட் என்றவரைத் தெரியுமா உங்களுக்கு?

கார்த்திக் : என்ன சார் இப்படி கேக்கிறீங்க. அவரைத் தெரியாம இருக்குமா! எவ்வளவு பெரிய ஆளு அவரு, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோட சி.இ.ஓ  அவரு. அவரோட ப்ரோக்ராம் முடியும்வரை எங்கம்மா வேற எந்த சேனலும் மாத்த விட மாட்டாங்க. எனக்கே அவர் கலகலன்னு பேசிக்கிட்டே சீக்கிரமா, விதவிதமா சமையல் பண்றதைப் பார்க்க ரொம்பப்  பிடிக்கும்.

அறிவொளி : நீ சொன்ன அவ்ளோ பெரிய ஆளு நாலாவதுல ஒருதடவை . எட்டாவதுல ஒருதடவை  ஒன்பதாவதுல ரெண்டு தடவை  பெயிலானவர்னு தெரியுமா?

கார்த்திக் :   ஐயையோ! நிஜமாவா சார் சொல்றீங்க!

அறிவொளி : ஆமா கார்த்திக், மூணாவது வருசம் ஒன்பதாவதுலயே படிக்கனும்னதும் அவர் அழுதுகிட்டே  வீட்ல போய், என்னோட பள்ளிக்கூடம் சேர்ந்தவன் எல்லாம் பன்னிரெண்டாவது முடிச்சிட்டான். நான் திரும்ப ஒன்பதாவது படிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சு ஸ்கூலைவிட்டு நின்னுட்டார். பிறகு  ஒரு டுடோரியல்ல சேர்ந்து பத்தாவதும், பன்னிரெண்டாவதும் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ்  பண்ணாராம்.

விஷ்ணு : ஸ்கூல்ல நாலு, ஐந்து பாடம் பெயிலானவரு எப்படி ப்ரைவேட்டா எழுதி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணார்?

அறிவொளி : நல்ல கேள்வி, ப்ரைவேட்டா எழுதும் போது நமக்கு கஷ்டமான பாடங்களை விட்டுட்டு சுலபமான பாடங்களை தேர்ந்து கொள்ளலாம். அவர் தனக்கு வராத கணக்கு, அக்கௌன்டன்சி  பாடங்களை விட்டுட்டு ஹிஸ்டரி, காமர்ஸ், அட்வான்ஸ் இங்கிலிஷ் போன்ற தனக்கு பிடிச்சப் பாடங்களைத் தேர்தெடுத்துப் படிச்சதால் பாஸாகிட்டார். அதுக்கப்புறம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் எடுத்துப் படிச்சாராம்.

கார்த்திக் : அது ஏன் குறிப்பா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் எடுத்தார் சார்.

அறிவொளி : அவங்க அம்மா எப்பவுமே, குடும்பத்தில எல்லோரும் நல்லா படிச்சிருக்காங்க நீ மட்டும் படிக்கவே இல்லை உனக்கு யாருடா பொண்ணு குடுப்பாங்க, எப்படி உனக்கு கல்யாணம் பண்றதுன்னு ரொம்ப கவலைப்படுவாங்களாம். அவரோட அப்பா ஹோட்டல் வச்சிருந்தார் அதனாலே சின்ன வயசுலேர்ந்தே அடிக்கடி ஹோட்டலுக்கு போய் சமைக்கிறதை பார்ப்பதற்கும்,  பார்த்ததை வீட்ல வந்து செய்யவும்  ஆர்வமும், வாய்ப்புகளும் அதிகமா இருந்தது. அதனால தனக்குத்  தெரியாத பாடத்தை எடுத்து கஷ்டப்படுறதை விட  ஏற்கனவே கொஞ்சம் தெரிஞ்ச ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைத்  தேர்ந்தெடுத்தார்..

விஷ்ணு : அப்ப அவரோட  அப்பாவும் சந்தோசப்பட்டிருப்பார் இல்லையா?

அறிவொளி : அதான் இல்லை, அவங்கப்பா, ‘நீ சும்மா ஜாலியா சுத்தறதுக்குத்தான் காலேஜ் போறேன்னு சொல்ற. நீ ஒழுங்கா படிக்கமாட்டேன்னு எனக்குத் தெரியும். நீ ஹோட்டல்ல தட்டு கழுவத் தான் லாயக்கு. ஒழுங்கா நம்ம ஹோட்டலுக்கு வேலைக்கு வந்துடு. காலேஜ் எல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது’ன்னு சொல்லிட்டாராம். 

கார்த்திக் : அச்சச்சோ!அப்புறம்  என்னாச்சு?

அறிவொளி : அப்புறம் அவரோட பெரியப்பாகிட்டப் போய் அழுது, அவரை அவங்கப்பாகிட்ட பேச சொல்லி சம்மதிக்க வச்சிருக்கார்.

கார்த்திக் : காலேஜ்ல எப்படி பாஸானாரா? இல்லை, ஸ்கூல்ல இருந்த  மாதிரியே தானா சார்?

அறிவொளி : ஹோட்டல் மேனேஜ்மென்ட் பொறுத்தவரை படிச்சு மனப்பாடம் பண்ணி எழுதணும் என்ற அவசியம் கிடையாது. நிறைய ப்ராக்டிகலா செய்ய வேண்டியதுதான். அதுல அவருக்கு ஏற்கனவே ஆர்வம் நிறைய இருந்ததுனால பெஸ்ட் ஸ்டூடெண்ட்ஸ்ல அவரும் ஒருத்தரா இருந்தாரு. இந்தத்  துறைக்கு ரொம்ப அவசியமான கலகலப்பா எல்லோரோடயும் நல்லா பேசி கவரக் கூடிய பிறரோடு கலந்து பழகும் திறனும், நல்லா ஆங்கிலம் பேசக் கூடிய மொழித் திறனும், எதோட எதை எந்த விகிதத்துல சேர்த்தா சமையல் நல்லா இருக்கும்னு யோசிச்சு சமையல் செய்யும் லாஜிக்கோ மேத்தமேடிகல் ஸ்கில்லும் (logico mathematical skill) இயல்பாகவே அவருக்கு இருந்ததால இந்த துறையில அவரால சுலபமா முன்னேற முடிஞ்சது.

விஷ்ணு : இது மட்டும் தானா, இல்லை இவரோட வெற்றிக்கு வேற ஏதாவது  முக்கியமான காரணம் இருக்கும்னு   நீங்க  நினைக்கிறீங்களா  சார்? 

அறிவொளி : இதைப்பத்தி அவரே தன்னோட ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார். ‘என் வகுப்பில் படிப்பில் எப்போதும் கடைசி ஆள் நான்தான். கிரிக்கெட் நல்லா விளையாடுவேன். ஆனா எங்க வீட்ல, என்ன எப்பப் பாத்தாலும் விளையாடிக்கிட்டே இருக்கே, போய் உக்காந்து படின்னு திட்டுவாங்க. அவங்களுக்காக கையில புக்கை வெச்சுக்கிட்டு உக்காந்திருப்பேன். ஆனா நாலு மணிநேரம் ஆனாலும் என்னால நாலு வரிகூட சொல்ல முடியாது. அதுக்காக நிறைய அடியும் திட்டும் வாங்கியிருக்கேன். சொந்தக்காரர்கள் வீட்டுக்கு எப்போது போனாலும் முதல்ல  கேக்குறது, என்ன இந்த வருஷமும் பெயிலாயிட்டியா! அம்மா உன்னைப் பத்திதாண்டா எப்பவும் கவலைப்படுறாங்க ஒழுங்கா படிடா அப்படின்னு சொல்லுவாங்க. அதையெல்லாம் எப்பவுமே ஒரு காதுல வாங்கி இன்னொரு காதில் விட்டுடுவேன். மூளையில் பதிய வெச்சு  மனசை பாரமாக்கிக்கிட்டு இருந்தா வாழ்க்கையே வேறுவிதமா மாறிப்போயிருக்கும். சொல்றவங்க என்னவேனா சொல்லட்டும்னு நான் பாட்டுக்கு எனக்கு எது சந்தோஷத்தைத் தருமோ அதையெல்லாம் செய்துக்கிட்டு இருந்தேன்.  படிப்பு எனக்கு வராதுன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. படிப்பால சாதிக்க முடியாததை  என்னோட  வேற  பல திறமைகளால  சாதிக்க முடியும்னு உறுதியா நம்பினேன். என்கிட்ட எது இல்லையோ அதைப்பத்திக் கவலைப்படாம என்ன  இருக்கோ அதையே வாழ்க்கைக்கான மூலதனமா பயன்படுத்திகிட்டேன்.

முன்னாடியெல்லாம் படிப்பு மட்டும் தான் வாழ்க்கைன்னு எல்லோரும் நினைச்சு படிக்க சிரமப்படும் பிள்ளைகளை ரொம்பக்  கொடுமைப்படுத்தினாங்க. இப்போ நிறைய பெற்றோர்கள் மாறிட்டாங்க. பிள்ளைகளோட திறமையை வெளிக்கொண்டுவர முயற்சிக்குறாங்க. எல்லோரும் அப்படி மாறுனா நல்லாயிருக்கும். பிள்ளைகளும் தன்  பலத்தை உணர்ந்து, தன்னால சாதிக்கக் கூடிய துறையைத் தெரிந்தெடுத்து அந்த துறைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கணும்னு ரொம்ப அழகா அந்தப் பேட்டியில சொல்லியிருந்தார். என்ன கார்த்திக் புரிஞ்சுதா?

கார்த்திக் : ஓ! நல்லா புரிஞ்சுது சார். இதைச் செய் அதை செய்யாதேன்னு அட்வைஸ் பண்ணா பசங்க கேக்க மாட்டாங்கன்னு படிப்புல என்னை விட மோசமா இருந்தும் வாழ்க்கையில வெற்றிகரமா முன்னேறுன ஒருத்தரோட வாழ்க்கையை உதாரணமாக காட்டி எனக்கு புரியவச்சிடீங்க, ரொம்ப தேங்க்ஸ் சார். இனிமே நானும் மத்தவங்க பேசுறதைப் பத்திக் கவலைப்படாம என்னால என்ன நல்லா செய்ய முடியுமோ அதுல கவனம் செலுத்துவேன் சார்.

விஷ்ணு : ஆமா சார் டைரக்டர் பாண்டிராஜ், வெங்கடேஷ்பட் பத்தியெல்லாம் இவ்ளோ நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்களே எப்படி சார்? அவங்க உங்க ப்ரெண்ட்ஸா?

அறிவொளி : (புன்னகையுடன்) இன்டர்நெட் பயன்படுத்தத்  தெரிஞ்சா போதும். உலகத்துல இருக்க யாரைப்பத்தியும் நம்மால தெரிஞ்சிக்க முடியும் விஷ்ணு. யூ ட்யூப்ல (You Tube) இவங்களைப் பத்தி செய்திகள் நிறைய இருக்கு. இவங்க மட்டுமில்ல இன்னும் நிறைய இளைஞர்கள் படிக்குற காலத்துல ரொம்ப கஷ்டப்பட்டாலும்  இப்போ பெரிய ஆளா இருக்காங்க தெரியுமா?

கார்த்திக் : அப்படியா! யார் யாருன்னு சொல்லுங்க சார். (கார்த்திக் கேட்கவும் பள்ளி மணி அடிக்கவும் சரியாக இருந்தது.)

அறிவொளி : இப்போ மணி அடிச்சிருச்சு. வகுப்புக்கு போயிட்டு சாயங்காலம் எங்க வீட்டுக்கு வேணா வாங்க நாம நிறைய பேசலாம்.சரியா ?

கார்த்திக் : ஓகே சார்!

(மகிழ்ச்சியுடன் வகுப்புக்குச் சென்ற கார்த்திக்கும், விஷ்ணுவும் மற்ற சாதனை இளைஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள எப்போது மாலையாகும் எனக் காத்திருந்தனர். நாமும் காத்திருப்போமா!)

தொடரும் ...

பிரியசகி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com