புதையல் 15

படிக்கும்  காலத்தில் பல தோல்விகளைக் கண்டிருந்தாலும் துவண்டு போகாமல் அவற்றைத் தன் வெற்றிக்கு
புதையல் 15

எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே  மாறிவிடுவாய்!

(படிக்கும்  காலத்தில் பல தோல்விகளைக் கண்டிருந்தாலும் துவண்டு போகாமல் அவற்றைத் தன் வெற்றிக்குப் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டு, தான் கடந்துவந்த  கரடுமுரடானப் பாதைகளைச் செப்பனிட்டுத் தனக்குப் பின் வரும் தலைமுறைக்கான மலர்ப்பாதையாகவும் மாற்றியிருக்கும் திரு.அருண் பெர்னாண்டஸ் பற்றி அறிவொளி சொல்வதை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் கார்த்திக்கும் விஷ்ணுவும்.)  

கார்த்திக் :  ஒரு கல்லூரிப் பேராசிரியரா மட்டும் இருந்தா அவரைப் பத்தி இவ்வளவு அதிகமா சொல்ல மாட்டீங்களே சார்.  சமூகத்துக்குப் பயனுள்ள மாதிரி வேற ஏதாவது செய்துக்கிட்டிருக்காரோ?

அறிவொளி : ஆமா கார்த்திக், நீ சொல்றது உண்மைதான். படிக்கவே ரொம்பவும் போராடி இடம் வாங்கிய கல்லூரியில் பேராசிரியர் வேலை பார்க்கும் அளவு உயர்ந்த பிறகு, அதே இடத்துல தேங்கிப் போவதை விரும்பாத அருண் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இப்ப   'பிளிங்க் ' (blink) என்ற நிறுவனத்தை  சொந்தமா அதே கல்லூரி வளாகத்துக்குள்ள நடத்திக்கிட்டிருக்கார். அதில் கரு முதல் கல்லறை வரைன்னு ஒரு பெரிய திட்டம் வச்சிருக்கார். ஒரு குழந்தை கருவா உருவானதிலிருந்து கடைசி காலம்வரைக்கும் அக்குழந்தை அமைதியான வாழ்க்கை வாழ, மகிழ்ச்சியான  உலகை உருவாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இவரது நிறுவனத்தின் முக்கிய  நோக்கம்.

விஷ்ணு : ஒரு குழந்தை பிறந்தா அதுக்கு  சாப்பாடு போட்டு வளர்க்கிற வேலையை  குழந்தையைப்  பெத்தவங்க  பார்த்துக்கப் போறாங்க. கல்வி, ஒழுக்கமெல்லாம் சொல்லிக் குடுக்குற வேலையை  ஸ்கூல், காலேஜ்ல பார்த்துக்கப் போறாங்க. நல்லாப் படிச்சா தானே வேலை கிடைக்கப் போகுது. இதுல இவர் என்னப் பண்ண போறார்? என்னப் பண்ண முடியும்?

அறிவொளி :   மேலோட்டமா பார்த்தா அப்படித் தான் எல்லோருக்கும் தோணும். ஆனா நீ சொல்றபடி எல்லாம் சரியா நடந்தா நாட்டில் பிரச்சனையே இருக்காதே! இந்திய சுகாதாரத் துறையின் 2015 ஆம் ஆண்டு அறிக்கையின் படி தமிழ்நாட்டில் ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகளில் 23.3% வளர்ச்சி குறைத்தவர்களாகவும் 23,3% பேர் எடை குறைவானவர்களாகவும் இருக்காங்க. சத்துப் பற்றாக்குறை உள்ள பிள்ளைகளோட உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி எல்லாமே பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி குறைந்த, எடை குறைந்த பிள்ளைகள் பிற்காலத்தில் கற்றலில் குறைபாடு உள்ளவர்களாக, அதிக எடை கொண்டவர்களாக, இதய நோய், சர்க்கரை நோய் கொண்டவர்களாக மாற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்றாங்க. உடலளவு பாதிப்புதான் இப்படி இருக்குன்னு பார்த்தா உளவியல் பாதிப்புகள் உள்ள பிள்ளைங்க நிறைய பேர் இருக்காங்க.

விஷ்ணு :  எதனால உளவியல் பாதிப்புகள் வருது சார்?

அறிவொளி :  பள்ளி, கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளிடம் நடத்திய ஆய்வுகளில் மூவாயிரம் பேரில் முந்நூற்றைம்பது பேர், 'இந்த உலகத்தில நான் தேவையே இல்லை, என்னை யாருக்குமே பிடிக்கலை',  என்ற விரக்தி மனப்பான்மையோட இருக்காங்களாம்.  

கார்த்திக் :  நானே நிறைய தடவை அப்படித்தான் நினைச்சிருக்கேன் சார். ஒவ்வொரு தடவையும் ரிப்போர்ட் கார்டுல எங்கப்பாகிட்ட கையெழுத்து வாங்கும் போது, 'நீயெல்லாம் எதுக்குடா பூமிக்கு பாரமா இருக்கே, உன்னால ஒரு பிரயோசனமும் இல்லை'னு திட்டும் போது, சே! நாம ஏன் உயிரோட இருக்கணும்னு, செத்து போயிடலாமான்னு தான் தோணும். 

அறிவொளி :  பாத்தியா,  பெத்தவங்களோ இல்லை சுத்தி இருக்கும் மத்தவங்களோ இது போல எதிர்மறையா  சொல்ல சொல்ல ஆழ்மனசுல அவங்களுக்கு தன்னைப் பத்திய சுயமதிப்பு குறைஞ்சு தன்னைத்தானே வெறுக்க ஆரம்பிச்சிடுவாங்க.

விஷ்ணு : நீங்க சொல்ற மூவாயிரம் பேர்ல முந்நூற்றைம்பது பேரும் கார்த்திக் மாதிரி படிக்க கஷ்டப்படுறவங்களா சார்? 

அறிவொளி :  வேற காரணங்களும் இருக்கலாம் விஷ்ணு. ஆண்  குழந்தையை எதிர்பார்த்த குடும்பத்தில்  பெண் குழந்தையா பிறந்திருக்கலாம். குடும்பம் ரொம்ப வறுமையிலோ, அதிக பிரச்சனையிலோ இருக்கும் போதோ, கணவன், மனைவி ஒரு குழந்தைக்குத்  தயாரா இல்லாத போதோ பிறந்த குழந்தையா இருக்கலாம். எனக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பத்துல கருப்பா இருக்க ஒரே காரணத்துக்காக பெத்த அம்மாவே தன் பொண்ணை வெறுக்குறதை, வார்த்தைகளால் அவ மனசை நோகடிக்குறதை  கண் கூடாப்  பார்த்திருக்கேன். இது போல பல வித காரணங்களுக்காக தவறான வார்த்தைகளைப் பெற்றோர் பயன்படுத்தும் போது அது பிள்ளைகளின் ஆழ்மனதில் பாதிப்புகளை ஏற்படுத்தி அவங்களோட ஆளுமையை பாதிக்கும், நோய்களா கூட மாறிடும். இதுக்காகத்தான் பெற்றோராகப் போகும் தம்பதியினருக்கு குறிப்பா கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு 'பிளிங்க்' மூலமா நிறைய பயிற்சி கொடுக்குறாங்க. சந்தோசமான மனநிலையோட குடும்பத்திற்குள் வரவேற்கப்படும், வளர்க்கப்படும் குழந்தைகளோட வளர்ச்சி முழுமையானதா இருக்கும்.

கார்த்திக் :  அது சரி, பள்ளி, கல்லூரிகளில் தான் பாடம் சார்ந்த பயிற்சிகள், நல்லொழுக்கம் முதற்கொண்டு  பாடம் சாராத எல்லா பயிற்சிகளும் குடுக்குறாங்களே அங்கபோய் இவங்க என்னப்  பண்ணப் போறாங்க?

அறிவொளி :  அப்படித்தான் எல்லோரும் நினைக்குறோம் கார்த்திக். அந்தப்  பயிற்சிகள் போதுமானதா இருந்தா இளைஞர்கள் மத்தியில் ஏன் வன்முறை ரொம்ப அதிகமா இருக்கு? 

விஷ்ணு :  உண்மைதான் சார். பசங்க இப்பல்லாம் வாயால பேசுறதைவிட கையால பேசுறதுதான் அதிகம். எதுக்கெடுத்தாலும் சண்டையில் இறங்கிடுறாங்க. நம்ம கார்த்திக்கே அப்படித்தான் நேத்து ஒரு பையன் கிண்டல் பண்ணான்னு அவனை அடிச்சதுல  மூக்கிலிருந்து இரத்தம் வந்துடுச்சு.

அறிவொளி :   இதுக்காகத்தான் அருண் கல்லூரியில படிக்கும் இளைஞர், இளம்பெண்களுக்குப் பயிற்சி குடுத்து பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி நல்லொழுக்கத்தைப் பாடமா நடத்தாம செயல்பாடுகள் (Activities), விளையாட்டுகள் மூலமா கத்துக்குடுக்குறார். அதுமட்டுமில்லாம  உலக நடப்புகள் தொடர்பான மாணவர்களோட  எல்லா சந்தேகங்களுக்கும் தகுந்த துறைசார்ந்த நபர்கள் மூலமா விளக்கம் கொடுக்குறாங்க.

கார்த்திக் : சூப்பர் சார், இதுமாதிரி எல்லாம் இருந்தா பசங்க ஸ்கூலுக்கு ஆர்வமா வருவாங்க. சும்மா எப்பப் பாத்தாலும் படி, படிச்சதை டெஸ்ட் எழுதுன்னு உயிரை எடுக்கறதாலதான்  எப்படா ஸ்கூல் முடியும், எப்படா சனிக்கிழமை வரும்னு பசங்க காத்துக்கிட்டிருக்காங்க. அப்புடியே கஷ்டப்பட்டுப் படிச்சி நல்ல மார்க் வாங்கினாலும் நாட்ல எங்க சார் வேலை கிடைக்குது? பலபேர் விஐபியா தான் சுத்திக்கிட்டிருக்காங்க. ஏன் சார்  நாட்ல வேலைக்கு இவ்ளோ பஞ்சமாயிருக்கு?

அறிவொளி :  வேலைக்கு பஞ்சமில்லை கார்த்திக். வேலை நிறைய இருக்கு. வேலை பார்க்க தேவையான திறன்கள் தான் நம்ம இளைஞர்கள்கிட்ட இல்லை. வெறுமே பாடத்தை மனப்பாடம் பண்ணி மார்க் எடுத்துடுறாங்களே தவிர படிச்சதை எப்படி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தனும் என்ற அறிவுத்திறன் ரொம்ப கம்மியாத்தான் இருக்கு. இந்தியாவின் மக்கள் தொகையில் 60% பேர் பதினாறிலிருந்து முப்பத்தைந்து வயதுக்குள்ள இருக்கவங்க தான். உலகிலேயே அதிக மனித வளம் நிறைந்த நாடுகள்ல இந்தியாவும் ஒன்னு. முழுமையான பயிற்சி கொடுக்கப்பட்டா, முறையா பயன்படுத்தப்பட்டா 2050 ல் உலகின் தொழில்திறன்  மிக்கவர்களில் 25 % பேரை கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். ஆனா இன்றைக்கு 3 % பேர் தான் இத்தகைய திறனுடையவர்களா இருக்காங்க. ஏன்னா நம் நாட்டு பள்ளிகளோ, கல்லூரிகளோ இத்தகைய பயிற்சிகளைக் குடுக்குறதில்லை. இங்க இருக்கும் பத்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளில் நான்கு சதவீதம் பேர் தான் வேலைக்குத் தகுதியானவர்களா இருக்காங்க.

விஷ்ணு :  ஏன் சார் இந்த நிலைமை, இது சரியாக என்ன பண்ணனும் ?

அறிவொளி :  எதையுமே ஆர்வத்தோட,சந்தோஷமான மனநிலைல இருந்தா தான் முழுமையா கத்துக்க முடியும் விஷ்ணு. இங்க இன்ஜினீயரிங் காலேஜ்ல படிக்கறவங்கள்ல 25 %  பேர் தான் விருப்பப்பட்டு அந்தத் துறையில சேர்த்திருக்காங்க, மத்தவங்க விருப்பமில்லாம பெற்றோரோட கட்டாயத்துக்காகவோ, தான் விருப்பப்பட்ட குரூப் கிடைக்காததாலயோ இல்லை தான் விருப்பப்பட்ட கல்லூரியில இந்த குரூப் தான் கிடைச்சிதுன்னோ   முழு ஈடுபாடு இல்லாம படிக்கறதால அரைகுறையான அறிவோடு கல்லூரியை  விட்டு வெளியே வர்றாங்க. இதனால தான் அருண்  பள்ளிக் கல்லூரி மாணவ மாணவியருக்கு மென்திறன் பயிற்சிகள் கொடுத்து வேலைக்குத் தகுதியுள்ளவர்களா மாற்றி அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

பெற்றோருக்குப் பயிற்சியளிப்பது, குழந்தை பிறந்த பிறகு பலவித விளையாட்டுகள் மூலமா அதோட முழுமையான ஆளுமைத்திறன் வெளிப்படத் தேவையான சூழலை உருவாக்குவது, கற்றல் குறைபாடுள்ள பிள்ளைகளுக்குக் குறைதீர் கல்விப் பயிற்சியளித்து பள்ளி நாட்களை சந்தோஷமானதா மாற்றுவது, இயற்கையிலேயே  மாணவர்களிடம் இருக்கும்  திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்குத்  தேவையானத்  திறன்களில் பயிற்சியளிப்பது, திறமைக்கேற்ற வேலை வாய்ப்பளிப்பது, பணித்தளத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க ஆலோசனை வழங்குவது என ஒரு குழந்தை இவ்வுலகில் மகிழ்ச்சியான நபராக வாழத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதே அவரது நிறுவனத்தின் வேலை. ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சியாக உள்ளார்ந்த அமைதியுடன் வாழும் போது அது சங்கிலித் தொடராகப் பரவி வீடு, ஊர், மாநிலம், நாடு, உலகம் என ஒட்டு மொத்த பிரபஞ்சமே அமைதியும், சமாதானமும் கொண்டதாகிவிடும் என்பதே இதன் மையக் குறிக்கோள்.

கார்த்திக் :  எவ்வளவு நல்ல எண்ணம் சார். தான் மட்டும் நல்லாயிருக்கணும்னு நினைக்காம உலகத்திலுள்ள  எல்லோரும் நல்லாயிருக்கணும்னு நினைக்குறது ரொம்ப பெரிய விஷயம் சார்.

அறிவொளி :  இந்த சேவைகளுக்காக அருண்  பல விருதுகளை வாங்கியிருந்தாலும்  தன்னை முன்னிறுத்திக் கொள்ளாம  பல்வேறு  துறைகளில் திறமையானவர்களை ஒருங்கிணைத்து செயல்படுறார் என்பது  தான் ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். தான் கற்றல் குறைபாடுகளோட படிக்கக் கஷ்டப்பட்ட காலத்துல தனக்கு ரொம்பவும் ஊக்கம் கொடுத்து பாஸ் பண்ண உதவி செய்த  தன் பள்ளிக்கூட முதல்வர் திருமதி.ஜெயஸ்ரீ அசோக் இப்போ தன் நிறுவனத்துல கற்றல் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு குறைதீர் கல்வி வழங்கும் பிரிவின் தலைவரா இருக்காங்க என்பதை ரொம்பப் பெருமையா சொல்றார்.

எப்பவுமே தன்னலமில்லாம பிறர்நலன் கருதி நாம செய்யக்கூடிய எந்தவேலையும் வெற்றி பெறும்னு சொல்றதுக்கு இவங்க எல்லோருமே நல்ல முன்னுதாரணங்கள். நல்ல எண்ணங்கள் தான் எல்லா நல்ல செயல்களுக்கும்  அடிப்படை ஆதாரம். 

          வெள்ளத்  தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் 

            உள்ளத் தனையது உயர்வு.

அப்படின்னு வள்ளுவரே சொல்லியிருக்கார் இல்லையா.   

கார்த்திக் :  நாங்களும் கண்டிப்பா வெங்கடேஷ்பட் சார், நந்தகுமார் சார், அருண் பெர்னாண்டஸ் சார் மாதிரி தோல்வி கண்டு துவண்டு போகாம, தன்னம்பிக்கையோட  இந்த சமுதாயத்துக்குப் பயன்படுறா மாதிரி வாழுவோம் சார்.

அறிவொளி :  வெரிகுட் அப்ப நீங்க இன்னும் பத்து வருஷம் கழிச்சி என்னை வந்து பார்க்கும் போது சமுதாயத்துல பெரிய ஆளா இருப்பீங்கன்றது உறுதி.

(அறிவொளியின் நம்பிக்கை தரும் வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு, பிரகாசமான தம் எதிர்காலத்தை மனக்கண் முன் காட்சிகளாகக் காணத் தொடங்கினர் கார்த்திக் விஷ்ணு இருவரும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவோம் என்பது உண்மைதானே! )

தொடரும்

பிரியசகி 

 priyasahi 20673@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com