புதையல் 27

எதையும் முதல் முறையா கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கும் விஷ்ணு
புதையல் 27

கனவு மெய்ப்பட 

(இசையால் பெறக்கூடிய பலவிதமான பலன்கள் பற்றியும் அதற்குத் தேவையான பயிற்சிகள் பற்றியும் அறிவொளி விளக்கிக் கொண்டிருந்தார்.)

விஷ்ணு :  சார், இசையால் கிடைக்கும் பலன்கள் பற்றி நீங்க சொல்றதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட விஷயமா?

அறிவொளி : வெரிகுட் விஷ்ணு,  எந்த விஷயத்தையும் மத்தவங்க சொல்றதுக்காக அப்படியே கண்ணை மூடிக்கிட்டு நம்பாம அது ஆதாரபூர்வமானதான்னு கேள்வி கேட்டு தெரிஞ்சுக்குறது நல்லது.

வாஷிங்டன் பல்கலைக்கழகம் 1994-ல் ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் இசை பரிசோதனையை நடத்தியது. வெவ்வேறு விதமான இசையை கேட்கச் செய்ததில் சாஸ்திரீய இசையைக் கேட்ட மக்கள் அதிக அமைதியும் மனத்திருப்தியும் அடைந்தார்கள் என்று கண்டுபிடித்தார்கள்.  மனிதனின் உடலையும் மனதையும் இசைவிப்பதால் தான் அதற்கு இசை என்று பெயர்.

1993 ல் ஆஸ்திரிலேயாவில் பிரிஸ்போன் ராயல் சிறுவர் மருத்துவமனையில் இசையால் நோயை குணமாக்கும் துறையை ஆரம்பித்த ஜேன் எட்வர்ட், இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதோடு அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து மனத்தை வேறு திசைக்குத் திருப்புகிறது. நோயாளிகளின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, சுவாசிப்பு, மூளை அலைகள் ஆகியவற்றை சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மனதை உற்சாகப்படுத்தி மருத்துவமனையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பை போக்குகிறது என்று சொல்லியிருக்கிறார். கண்களையும் மூளையையும் இணைக்கும் நரம்புகளைவிடக் காதுகளையும் மூளையையும் இணைக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோயை குணமாக்குபவர்கள். புகழ்ப் பெற்ற நரம்பியல் மருத்துவரான ஆலிவர் சாக்ஸ் என்பவர் பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளுக்கு புத்துயிரூட்டும் நுண்ணிய சக்தி இசைக்கு இருப்பதாகவும் அதனால் அல்சீமர் என்ற மறதி நோய் இருப்பவங்க அவங்களுக்குத் தெரிந்த பாட்டுகளைக் கேட்டா பழைய ஞாபகங்களை மீட்டெடுக்க ரொம்ப உதவியா இருக்குறதாகவும் சொல்றார். 

விஷ்ணு : இதெல்லாம் கேக்கவே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சார்!

அறிவொளி : எதையும் முதல் முறையா கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கும் விஷ்ணு. உலகத்தில் நமக்குத் தெரியாம நிறைய விஷயங்கள் இருக்கும். 1993-ல் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் மொஸார்ட்ஸ் பியானோ சொனடா 448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் ஸ்பேசியல் ஐக்யு  குறிப்பிடத்தக்க அளவு அதிகரிச்சதாக பதிவு செய்திருக்காங்க. அதே பல்கலைக்கழகத்தில் 1994- ல் செய்த ஆய்வில் எல்கேஜி, யூகேஜி  படிக்கும் பிள்ளைகளுக்கு எட்டு மாதம் கீ போர்ட் சொல்லிக் கொடுத்த போது அவர்களுடைய ஸ்பேசியல் ஐக்யு 46% அதிகரிச்சதாகவும் கண்டு பிடிச்சிருக்காங்க. 

சந்தோஷ் :  டேவிட் டேம் என்பவர் எழுதிய 'தி சீக்ரட் பவர் ஆப் மியூசிக்' என்ற புத்தகத்தில் கிளாசிக்கல் இசையைத் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் தாவரங்களுக்குக் கொடுத்த போது அவை ஒலி பெருக்கியை நோக்கி சாய்ந்து வளர்ந்ததோடு விளைச்சலும் இரண்டு மடங்கு அதிகரிச்சதா சொல்லியிருக்காரு. ஆனா லெட் செப்பிலின் (Led Zeppelin), ஜிமி ஹென்றிக்ஸ் (Jimi Hendrix) போன்ற இசைகளை ஒலிக்கச் செய்தபோது தாவரங்கள் ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாக சாய்ந்ததோடு சீக்கிரமா பட்டுப்போச்சாம். இவ்வளவு ஏன் நம்ம நாட்டுலேயே பல வருஷங்களுக்கு முன்னாடியே கர்நாடக சங்கீதத்துக்கு பயிர் நல்லா விளையும்னு நிரூபிச்சிருக்காங்களே!

விஷ்ணு :  சின்னப்பையன் தானே கேக்குறானு நினைக்காம எவ்வளவு பேர் ஆராய்ச்சி பண்ணி நிரூபிச்ச விஷயங்களை எல்லாம் நிமிஷத்துல விளக்கிட்டீங்களே ! ரொம்ப நன்றி சார்.

கார்த்திக் :  சார், நீங்க முழு உடலாலும் இசையைக் கேட்டு ரசிக்குறது எப்படின்னு சொல்ல வந்தீங்க. அதை பத்தி சொல்லுங்க.

அறிவொளி :  சரி சொல்றேன். இசை அதோட அதிர்வெண்ணுக்கு ஏற்ப கேட்பவருடைய உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும்னு சொன்னேன் இல்லையா. இதை நாமே பல சமயங்களில் உணர்ந்திருப்போம். பக்திப் பாடல்களைக் கேக்கும் போது மெய்சிலிர்த்து பரவசமாவோம். குத்து பாட்டுக்கு எழுந்து ஆடணும்னு தோணும். சோகமா இருக்கும் போது இதமான மெல்லிய புல்லாங்குழல் இசையைக் கேட்டா மனசு அமைதியாவதை உணரலாம்.

இப்ப நான் சொல்லித் தரப்போற பயிற்சிக்கு வார்த்தைகள் இல்லாத வெறும் இசைக் கருவிகளால் வாசிக்கப்பட்ட,  இதுவரை நீங்க கேட்காத ஆல்பம் பாடல்களைத் தேர்ந்தெடுக்கணும்.

கண்களை மூடி நல்லா ஆழ்ந்து மூச்செடுத்து, மனசை நல்லா தளர்த்திக்கோங்க. எந்தவிதமான கவலையுமில்லாம, 'நான் இப்போது இங்கே இருக்கின்றேன்' என்று மனசுக்குள்ள நினைச்சுக்கோங்க.

உடலின் ஒவ்வொரு பாகமா நினைச்சு தளர்த்திக்கிட்டே வாங்க. 

இப்ப உங்க காதின் உருவத்தை மனசுக்குள் கொண்டு வாங்க. அதன் அளவைப் பெரிதாக்கிக் கொண்டே வந்து கடைசியில் உங்க உடம்பு முழுவதுமே ஒரு பெரிய காதால் மூடப்பட்டதாக கற்பனை செய்துக்கோங்க.

இப்போ நான் தேர்ந்தெடுத்து வெச்சிருக்கும் ஆல்பத்தைப் போடப்போறேன். இந்த இசை உங்க மேலும் கீழும், உடல் முழுவதும் இருக்கும் பெரிய காது வழியா உங்களுக்குள் ஊடுருவிச் செல்கிறது.

உங்க உடல் முழுவதும் இசையென்னும் இதமானப் போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது. இசையின் தாளம், ஸ்ருதி எல்லாவற்றையும் உங்க உடம்பின் எல்லா பாகங்களாலும் எல்லா செல்களாலும் கேட்க முடியுது. கேட்க மட்டுமில்லாமல் உங்களால் இசையைப் பார்க்கவும், சுவைக்கவும், நுகரவும், தொட்டு உணரவும் முடியுது.

உங்க கவனம் முழுவதும் இசையை முழுமையா அனுபவிப்பதிலேயே இருக்கு. இப்படியே இசை முடியும்வரை இருந்தபின் இந்த அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லவோ, எழுதவோ அல்லது படமாக வரையவோ வேண்டும்.

(விஷ்ணுவும் சந்தோஷும் ஆளுக்கு ஒரு தாளெடுத்துக் கொண்டனர். விஷ்ணு வரையவும், சந்தோஷ் எழுதவும் ஆரம்பித்தனர்.)

கார்த்திக் :  சார் என் உடம்பு முழுக்க ஒரு பெரிய காது இருப்பதைப் பார்த்து ரொம்ப வேடிக்கையா இருந்தது. ஆனா நீங்க மியூசிக்கைப் போட்டதும், ஷவரைத் தொறந்தா  தண்ணி மேல வந்து பட்ட உடனே சிலிர்க்குமே அந்த மாதிரி சிலிர்த்துடுச்சு. உடம்பு லேசாகி அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா நீங்க சொன்ன மாதிரி என்னால இசையை சுவைக்கவோ, நுகரவோ முடியலை சார்.

அறிவொளி :  முதல் நாளிலேயே எல்லாம் வந்துடாது கார்த்திக். தினமும் பயிற்சி பண்ணப் பண்ண உன்னாலும் உணர முடியும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?

விஷ்ணு :  சார் பாடம் படிக்கக் கூட இசையை பயன்படுத்தலாம் இல்லையா சார்?

அறிவொளி :  ஓ! தாராளமா பயன்படுத்தலாம். மனப்பாடம் பண்ண வேண்டியதை மெட்டுப் போட்டு பாட்டா பாடினா சுலபமா மனப்பாடம் ஆகிடும். இன்னொரு வழியும் இருக்கு.

கார்த்திக்: அதென்ன வழி சார்?

அறிவொளி :  வாய்ப்பாடு, அறிவியல் விதிகள், அலகுகள்,வேதிச் சமன்பாடுகள், வரலாற்று வருடங்கள், முக்கியமானப் பெயர்கள்,தமிழ் ஆங்கில மனப்பாடப் பகுதிகள் இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க கஷ்டப்படுற மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி உதவும்.

கார்த்திக் :  எனக்கு கண்டிப்பா உதவும். என்ன செய்யணும் சொல்லுங்க சார்.

அறிவொளி :  மனப்பாடம் பண்ண வேண்டிய பாடப்பகுதியை போன்ல மூணுதடவை ரெக்கார்ட் பண்ணிக்கோ. அமைதியா ஒரு இடத்துல தியான நிலையில உட்கார்ந்து ஆழ்ந்து மூச்செடுத்து உடலையும், மனசையும் தளர்த்திக்கோ.

உன் மனசுக்குப் பிடிச்ச இசையை ஒலிக்க வைத்து முழு கவனத்தையும் இசையில் நிறுத்தணும். இப்போ பதிவு பண்ணப்பட்ட பாடத்தைப்  போடணும். இப்பவும் உங்க கவனம் இசையில் இருக்கட்டும். இசைக்குப் பின்னணியா பாடம் இருக்கட்டும்.

மூன்று முறை பதிவு செய்யப்பட்ட பாடம் முழுக்க ஒலித்து முடித்தபின் இசையை நிறுத்தி விட்டு இயல்பு நிலைக்குத் திரும்பணும்.

மனம் ஓய்வு நிலையில் (ஆல்பா நிலை) இருக்கும் போது நீங்க கேட்ட பாடம் சாதாரண நிலையில் (பீட்டா நிலை) இருக்கும் போது படிப்பதை விட நல்லா மனதில் பதியும். 10, 11, 12 வகுப்பு போக இருக்கும் பிள்ளைகள் மே மாத விடுமுறையிலேயே ஒரு வரி வினாக்கள், மனப்பாடப் பகுதிகளை இந்த முறையில் படிச்சிடலாம்.

கார்த்திக் :  ரொம்ப தேங்க்ஸ் சார், நானும் இனி இந்த முறையில் முயற்சி பண்ணி பாக்குறேன்.

அறிவொளி :  இந்தப் பயிற்சி வெறும் பாடத்தை மனதில் பதிய வைக்கத்தான். உங்க மனதில் உள்ள லட்சியத்தை நனவாக்க இன்னொரு பயிற்சி இருக்கு சொல்லவா?

கார்த்திக் :  சொல்லுங்க சார், காத்துக்கிட்டிருக்கோம்.

(அமைதியான தியானத்திற்கு உதவும் மெல்லிய இசையை ஒலிக்கச் செய்தார் அறிவொளி.)

அறிவொளி :  ஆழ்ந்து மூச்செடுத்து உடலையும் மனதையும் தளர்த்துங்க.  மனதை ஒரு நிலைப்படுத்தி எதிர்காலம் பற்றி யோசிங்க.

மனக்கண்ணில் உங்க எதிர்காலம் வரிசையாகப் படிக்கட்டுகளுடன் கூடிய ஒருவழிப்பாதையா தெரியுது.

ஒவ்வொரு படிகளிலும் நீங்க இனி மேற்கொள்ளப்போகும் பயணம், நட்பு, படிப்பு, வருங்கால லட்சியம், குடும்ப மற்றும் சமூக உறவுகள், வேலை ஓய்வுக்குப் பிறகு உங்கள் நிலை, பொழுதுபோக்கு போன்றவை குறித்து ஆக்கப்பூர்வமான குறிக்கோள்களை எழுதுங்கள்.

இவற்றில் இன்றைக்கு எது மிக முக்கியம்னு நீங்க நினைக்கிறீங்களோ அதைத் தேர்ந்தெடுத்துக்கோங்க.

அதைக் குறித்த உங்கள் எண்ணங்கள், நம்பிக்கை, பயம், பலம், லட்சியம் பற்றி யோசிங்க. 

இந்த லட்சியத்திற்குத் தொடர்பான ஏதாவது ஒரு வாக்கியத்தைத் தேர்ந்தெடுங்க. உதாரணமா 1) ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும் - எனக்குள்ள ஒரு கொலம்பஸ் 2) பைலட் ஆக வேண்டும் - வானம் வசப்படும் 

3 ) பில்கேட்ஸ் போல் பணக்காரனாகணும்  -  கடமைச் செய். பலன் தானாய் வரும்.

4) இந்தியா வல்லரசாக நான் காரணமாக இருக்கணும் - கனவு மெய்ப்படும்.

இதெல்லாம் சில உதாரணங்கள். உங்களுக்கு ஏற்றது எதுன்னு உங்களுக்கு தோணுதோ அந்த வாக்கியத்தை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் மந்திரம் போல் மறுபடியும் சொல்லணும்.

அந்த வாக்கியம் குறித்த அறிவு சார்ந்த ஆராய்ச்சி ஏதும் செய்யாமல் அதன் ஒலியிலும் அதிர்வுகளிலும் மட்டுமே கவனத்தை செலுத்துங்க.

மெதுவாக சொல்லத் தொடங்கி போகப் போக சத்தத்தைக் கூட்டி பின் மீண்டும் மெதுவா சொல்லணும்.

முடியுமானால் இம்மந்திரத்தை தாளத்துடன் கூடிய பாடலா பாடுங்க.

இந்த தாளமும் அதன் அதிர்வுகளும் உங்கள் உடலின் ஒவ்வொரு சொல்லிலும் பதிவாகி ஆழ்மனதில் நிலைக்கச் செய்திடும்.

மனதை பீட்டா நிலையிலிருந்து ஆல்பா மற்றும் தீட்டா நிலைக்கு கொண்டு செல்லும் இம்மந்திரம் உங்களோட இலட்சிய விதையை விருட்சமாக்கி  கனவை நனவாக்கும் தாரக மந்திரமாக விளங்கும்.

(இசையுடன் இயைந்த இலட்சிய வாழ்வு கைவரப் பெற நாமும் இப்பயிற்சிகளை முயன்று பார்ப்போமா!)

- பிரியசகி

 priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com