39. அதி(க) வியர்வை பிரச்னைக்கு ஹோமியோபதி மருந்துகள்

தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் (Sudoriferous Glands) வியர்வை திரவத்தை கசிந்து
39. அதி(க) வியர்வை பிரச்னைக்கு ஹோமியோபதி மருந்துகள்

வியர்வையின் இயற்கைப் பலன்கள்

தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் (Sudoriferous Glands) வியர்வை திரவத்தை கசிந்து வெளியேற்றுகின்றன. உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக் கொள்ள வியர்த்தல் செயல்பாடு உதவுகிறது. தோல் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கும் இதுவே காரணம். வெயில் காலங்களிலோ, அல்லது உடலின் உஷ்ணம் மேலோங்கிய நிலையிலோ, வியர்வைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை காரணமாகவே உடல் இதமாகப் பாதுகாக்கப்படுகிறது. தோலிலிருந்து வியர்வை ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது.

அதி(க) வியர்வைக்கு காரணங்கள் என்ன?

வியர்வை அதிகரிப்புக்கு உடல் வெப்ப அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும், உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள்களிலும், அடிப்பாதங்களிலும், உள்ளங்கைகளிலும், நெற்றியிலும், வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள காரணத்தாலும் இவ்விடங்களில் அதிக வியர்வை சுரக்கக்கூடும். மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக நரம்பு முடிவுகள் தூண்டப்பட்டு கை, கால் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

சில பல தூண்டல்களால் உடலில் அதிவியர்வை ஏற்படலாம். வெப்பம், வலி, பயம், பதற்றம், உடல் உழைப்பு, குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால வியர்வை அதிகரிக்கலாம். சிலவகை ஆங்கில மருந்துகள் (diabhoetic drugs) வியர்வையை அதிகரிக்கச் செய்யலாம். தாளம்மை, ஆஸ்துமா, காசம், டைபாய்டு சுரம், இதய நோய் போன்ற கடுமையான நோய் தாக்குதல்களுக்குப் பின்னர் வியர்வை அதிகரிக்கலாம். தினமும் மாலை அல்லது இரவு லேசான சுரத்துடன் உடலில் வியர்க்கவும் செய்தால் காசநோய்க்கான (Tuberculosis) அறிகுறியாகக் கொள்ளலாம்.

இப்படி வியர்ப்பது இயற்கை தானே?

உழைப்பே இல்லாதவர்களைவிட உழைப்பவர்க்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்க்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் அளவுக்கு வியர்வை வெளியேற்றப்படுகிறது.

உலகம் போற்றும் வியர்வையின் பெருமை

வியர்வை குறித்து கலை இலக்கியவாதிகளும், தத்துவஞானிகளும், அறிஞர் பெருமக்களும் எண்ணற்ற கருத்துக்களை கூறியுள்ளனர்.

‘நெற்றி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக

அது நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக’

என்றொரு பழைய திரைப்படப் பாடலின் வரிகளில் வியர்வைப் பெருமைப் படுத்தப்படுகிறது.

‘என் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?’ என்று ஒரு பிரபல திரைக்கதாநாயகன் பாடும் பாடலின் கருத்தின் மூலம் மக்களின் வியர்வை சிந்தி உழைத்த பணம் ஓரிரு துளி வியர்வை கூட சிந்தாதவர்களின் பைகளில் தங்கக்காசுகளாய் சேர்வதை அறியமுடிகிறது.

உழைப்பவனின் வியர்வை ஈரம் காயும் முன்பே உழைப்பிற்கான ஊதியத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார் முகமது நபிகள். மாவீரன் நெப்போலியன் தன் காதலியின் வியர்வை மணத்தை வெகுவாக நேசித்தவர். அவர் தனது காதலி யோசப்பினுக்கு எழுதிய கடிதத்தில் ‘அன்பே உன் இயற்கையான வியர்வை மணத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளைக் காலை பாரிசுக்கு வருகிறேன். தயவு செய்து உன் உடம்பை அத்ற்குள் கழுவிவிடாதே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதி(க) வியர்வை என்பது அவதியே!

இயல்பாக வியர்வை வெளியேறினால் உடல் உஷ்ணம் சீராகப் பராமரிக்கப்படுதல், ரத்த சுத்திகரிப்பு, மென்மையான தோல் அமைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. மாறாக, அதிகளவு வியர்த்தல் காரணமாக உடலிலும் மனத்திலும் அசவுரியங்கள் ஏற்படுகின்றன. உலகின் மில்லியன் கணக்கானோர் அதிவியர்வைப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு அதிவியர்வை (Hyper hydrosis) பிரச்னை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

துர்நாற்றம் கூடாது!

இயல்பான வியர்வையோ, அதிக வியர்வையோ அது வெளியேறும் சமயத்தில் வாசனை எதுவும் இருப்பதில்லை. ரத்தத்திலுள்ள வெளியேற்றப்பட வேண்டிய பொட்டாசியமும், உப்பும், நுண்கிருமிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி துர்நாற்றம் உண்டாகிறது. உடல் வியர்வையை குளிப்பதன் மூலம், கழுவுவதன் மூலம் முறையாக அகற்றாவிட்டால் துர்நாற்றம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

காற்றோட்டமான சூழலிலும் கூட, குளிர்காலத்திலும் கூட வேலையற்று ஓய்வாக இருக்கும் போது கூட சிலருக்கு வியர்த்துக் கொட்டும். சிலரது உள்ளங்கை உள்ளங்கால்களில் வியர்வையின் ஈரப் பிசுபிசுப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்களை போன்ற அதிவியர்வையாளர்கள் அவரவரின் அறிகுறிகள், தனித்தன்மைகளுக்கு ஏற்ப ஹோமியோபதி மருந்துகளில் சிகிச்சை பெற்று முழுநலம் பெறமுடியும்.

Hyperhydrosis எனப்படும் அதிவியர்வைப் பிரச்னையைத் தீர்க்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகளையும் அவற்றின் அறிகுறிகளையும் பார்ப்போம்.

கோனியம் (Conium) – கண்களை மூடித் தூங்க ஆரம்பித்ததும் ஏராளமாக வியர்த்தல்

சாம்புகஸ் (Sambucus) – தூங்கி விழிக்கும் போது முகத்திலும் பின்னர் உடல் முழுவதும் ஏராளமாக வியர்த்தல்

ஜபராண்டி (பைலோ கார்பஸ்) (Jaborandi / Pilo Carpus) – உடல் முழுவதும் அதிகளவு வியர்த்தல்

கல்கேரியா கார்ப் (Carcarea Carb) – தலை, மார்பு, கால், பிறப்புறுப்புப் பகுதிகளில் ஏராளமாக வியர்த்தல் (ஊளைச் சதைப் பெருக்கமுள்ள பருத்த உடல்வாகு) கைகளிலும், பாதங்களிலும் எப்போதும் வியர்வைக் கசிவு. தலைப்பகுதியில் இரவில் தலையணை நனைந்து விடுமளவு வியர்த்தல்

சிலிகா (Silica) – பாதங்களில் நாற்றமுள்ள வியர்வை கசிவு

தூஜா & கலாடியம் (Thuja & Caladium) – தேன் போன்ற வாசனையுடன் இனிப்பாகவும் அதிகளவு வியர்த்தல்

ஆர்ஸ், அயோடு (Ars.iod) – இரவு உடல் நனையுமளவு உடலைப் பலவீனப்படுத்தும் அதிகளவு வியர்வை

கார்போ அனிமாலிஸ் (Carpo Animolis) – இரவில் நாற்றமுள்ள அதிக வியர்வை

அம்மோனியம் மூர் (Ammonium Mur) – இரவில் பாதங்களில் அதிகம் வியர்த்தல்

நேட்ரம் மூர் (Natrum Mur) – ஒவ்வொரு சிறு உழைப்பிலும் கூட அதிகளவு வியர்த்தல்

செபியா (Sepia) – அக்குளிலும், தொடை இடுக்கிலும், புளிப்பு நாற்றமுள்ள அதிக வியர்வை

முக்கிய குறிப்புகள்

  • நோயாளி விசாரணையில்(Case Study) அவரது நோய் வரலாற்றுத் தொகுப்பில் வியர்த்தல் குறித்த விவரம் அவசியம் இடம் பெற வேண்டிய முக்கிய குறியாகும்.
  • துர்நாற்றமுள்ள அதிவியர்வைப் பிரச்னைக்கு பயன்படும் ஹோமியோபதி மருந்துகளில் சில – பாப்டீசியா, கல்கேரியா கார்ப், ஹீபர், மெர்க்சால், நைட் ஆசிட், நக்ஸ்வாமிகா, பெட்ரோலியம், சிலிகா, சோரினம், சல்பர், தூஜா.
  • உள்ளங்கையில் (Palms) அதிவியர்வைத் தொல்லையைத் தீர்க்க உதவும் ஹோமியோ மருந்துகளில் சில – பரிடாகர்ப், கல்கேரியா கார்ப், நேட்ரமூர், சோரினம், சிலிகா, நைட் ஆசிட்.
  • உள்ளங்காலில் (soles) அதிவியர்வை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் ஹோமியோபதி மருந்துகளில் சில – அலுமினா, அம்மோனியம் மூர், பரிடாகார்ப், கல்கேரியா கார்ப், லைகோ, மெர்க் சால், நைட் ஆசிட், சோரினம், சானிகுலா, சிலிகா, டெல்லூரியம், ஜிங்.மெட்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

செல் : 94431 45700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com