34.முகநோய்களில் கொடியது முகவாதம்

பழமுதிர்ச்சோலை என்ற பழரசக் கடையின் உரிமையாளர் தண்டபாணி.
34.முகநோய்களில் கொடியது முகவாதம்

பழமுதிர்ச்சோலை என்ற பழரசக் கடையின் உரிமையாளர் தண்டபாணி. அவரது வயது 40. இவரது கடையின் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல இவரும் பழரசம் மற்றும் குளிர்பானங்களை விரும்பி அருந்துபவர்தான். வழகத்தைவிட அதிகமாக தன் உடலில் உஷ்ணமிருப்பதாகக் கருதி, இளநீர் + நன்னாரி + எலுமிச்சம்பழச் சாறு + சிறிது வெந்தயம் + ஐஸ் கலந்து காலை, மதியம், மாலை என ஒரே நாளில் மூன்று முறை பருகியிருக்கிறார். அன்றிரவு முகத்தில் வலது பக்கம் சற்று இறுக்கமான உணர்வும், மதமதப்பும் ஏற்பட்டு, தூக்கமும் பாதிக்கப்பட்டு, அதிகாலை எழுந்து சில்லென்ற குளிர்ந்த நீரில் முகம் கழுவியிருக்கிறார். முகத்தைத் துண்டால் துடைத்தபடியே கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து வெகுவாக அதிர்ந்துவிட்டார்.

வலதுபக்க முகம் அசைவற்று இறுகி, வலது பக்க விழியின் இமை மூட முடியாமல், இடது பக்கம் வாய் சற்றுக் கோணலாக இழுபட்டு….இதென்ன விபரீதமான நோய் எனப் பீதியடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். முகவாதத்திற்குரிய மருத்துவச் சிகிச்சையுடன் பிசியோதெரபி சிகிச்சையும் இணைத்து வழங்கப்பட்ட போதிலும் நான்கே நாட்களில் முகம் மேலும் இறுகிவிட்டது. ஒரு மாதம் ஆங்கில சிகிச்சை தொடர்ந்தது. பெரிய முன்னேற்றமில்லாமல் தண்டபாணி ஹோமியோபதி சிகிச்சையை நாடி வந்தார். சாப்பிடக் கூட சிரமமாக உள்ளதே என்று கூறி வேதனைப்பட்டார்.

அவரது உடல் குறிகள், மனநிலை அனைத்தும் ஆய்வு செய்த பின்னர் ‘காஸ்டிகம்’ என்ற ஹோமியோபதி மருந்தினை நீரில் கலந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 மில்லி அளவு 1 வார காலம் அருந்துமாறு பரிந்துரைக்கப்பட்டது. மீண்டும் வந்தபோது முக அசைவுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.  விழி இமை பாதி மூட முடிந்தது. முகதசை இறுக்கம் குறைந்திருந்தது. அவரது மனநிலையில் திருப்தியும், பீதி நீங்கிய நம்பிக்கை உணர்வும் ஏற்பட்டிருந்தது. அடுத்த 3 வார சிகிச்சையில் அதிக நிவாரணம் கிடைத்தது. கடையின் பணிகளை வழக்கம் போல பார்த்து வந்தார்.

எதிர்பாராதவிதமாக திடீரென ஒருநாள் முதன்முதலில் ஏற்பட்டது போன்ற கடும்பாதிப்புடன், சிகிச்சைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார். விசாரித்தபோது காரணம் புரிந்தது. அந்தக் குளிர்கால இரவில், உறவினர் வீட்டுக் குழந்தைக்கு மொட்டை எடுப்பதற்காக திருச்செந்தூருக்கு வேனில் பயணம் செய்துள்ளார். ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த அவரது வலது பக்க முகத்தில் குளிர்க்காற்று தாக்கியுள்ளது. அத்துடன் விடிந்தும் விடியாத அதிகாலையில் உறவினர்களுடன் சேர்ந்து கடலில் குளித்திருக்கிறார். சில நிமிடங்களில் உடலில் நடுக்கம் ஏற்பட்டு, முகத்தில் சற்றே வலியுடன் கூடிய இறுக்கத்தை உணர்ந்து, அங்கிருந்து விரைந்து திரும்பியுள்ளார். இந்த தீவிர நிலையில் அவருக்கு மீண்டும் ஹோமியோபதி சிகிச்சை தொடர்ந்தது. உணவு, பழக்கவழக்கங்கள் குறித்த கறாரான அறிவுரைகளும் வழங்கினோம். இரண்டுமாத காலத்தில் பரிபூரண நலம் அடைந்தார். அவர் இப்போது சத்தமாகப் பேசும்போதும், புன்னகை செய்யும் போதும் முகவாதம் ஏற்பட்டிருந்ததற்கான எந்த தடயமும் காணமுடியாது.

முகவாத நோயைக் கண்டறிந்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த Dr.சார்லஸ் பெல் (1774 – 1842) அவரது பெயரிலேயே முகவாதம் என்பது ‘BELLS PALSY’ என்று அழைக்கப்படுகிறது. முகத் தசைகளைக் கட்டுப்படுத்தும் முகநரம்பில் – மூளையில் 7வது நரம்பில் (Cranial Nerve VII) நீர்க்கோர்ப்பும், வீக்கமும் ஏற்பட்டு இந்நோய் உண்டாகிறது.

நவரசம் காண்பிக்கும் முகத்தின் தசைகளில் ஏற்படும் முகவாத பாதிப்பு முகத்தில் தோன்றும் பல நோய்களில் கொடியது. எல்லா வயதினரையும் பாதிக்கிறது. அதிகமான குளிர்ச்சி, குளிர்காற்று, பனிக்காற்று தாக்கினாலோ, உட்செவி நோய்களாலோ (OTITIS MEDIA) தான் பெரும்பாலும் முகவாத நோய் ஏற்படுகிரது. வைரஸ் போன்ற தொற்றுக்களாலும், தலையில் பலத்த அடிபடுவதாலும், முகத்திலுள்ள ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதாலும் முகவாதம் ஏற்படலாம்.

முகவாத நோய் (Facial Paralysis) சில மணி நேரங்களில் அல்லது ஒரே இரவில் ஏற்படும். பாதிக்கப்பட்ட முகம் பகுதிகளில் எவ்வித அசைவுமிராது. முகம் ஒருபக்கம் கோணியிருப்பதை தானாகவே அறியமுடியும். முகத்தின் ஒருபக்கத்தில் இயல்பான உணர்ச்சிகள் குறைந்து, மரமரத்த நிலை உண்டாகும். முகதசை சற்றே தொங்கிவிடும்.

பாதிக்கப்பட்ட பக்கமுள்ள இமை மூட இயலாமல் போகும். காதின் பின்புறம் வலி ஏற்படும். நாக்கின் நுனி பாதிக்கப்பட்டு உணவில் சுவை தெரியாது. உமிழ்நீர் சுரப்பு, கண்ணீர் சுரப்பு மிகவும் குறைந்து விடும். வாய் ஒருபக்கம் கோணி உமிழ்நீர் கசியும். தசைகளின் வலிமை குன்றுவதால் சரியாகப் பேச முடியாது. குழறல் ஏற்படும். உணவை நன்கு மென்று சாப்பிட இயலாது.

நெற்றியைச் சுருக்குமாறு கூறினால் சுருக்கங்கள் விழாது. கோபம், புன்னகை போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாது. மலர்ந்த முகம் சாதாரண உணவையே அறுசுவை உணவாக்கிவிடும். ஆனால் கோணல்மாணலான முகம்? சரியாக சிரிக்கவோ, விசிலடிப்பது போன்ற ஒலியை எழுப்பவோ இயலாது. சிலருக்கு முகக்கிளை முகநரம்பு நோய் போல் வலியும் இருக்கும்.

நூறில் ஒருவருக்கு இருபக்க முகத் தசைகளும் பாதிக்கப்படுவது உண்டு. 99 சதவிகித நோயாளிகள் முகத்தின் ஒரு பக்கம் (Unilateral) மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இந்நோய் தோன்ற ஆரம்பித்து 4 மணி நேரத்திற்குள் தீவிரமடைந்து விடுகிறது. தாமதமின்றி சிகிச்சையை நாடுவது நல்லது.

குளிர், பனிக் காலங்களில் கோடை வாசஸ்தலங்கள் செல்லும் போது பயணங்களில் ஜன்னலருகில் உட்காரும் போதும், ஏசி அறைகளில் உள்ள போதும் நேரடியாகக் குளிர்ந்த காற்று முகத்தில் படாதவாறு முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குளிர்ச்சியை, குளிர்க்காற்றைத் தாங்கும் சக்தி குறைந்த பலவீனமானவர்களையே முகவாதம் தாக்குகிறது.

முகவாதத்திற்கு எந்த நிலையில் வந்தாலும் மிகச் சிறந்த நிவாரணம் வழங்கி நலப்படுத்துகிறது ஹோமியோபதி மருத்துவம். நோயின் பெயருக்கு மருந்து அளிக்கும் முறை ஹோமியோபதியில் கிடையாது. மற்ற அனைத்து மருத்துவமுறைகளிலிருந்தும் ஹோமியோபதியில் நோயை, நோயாளியை விசாரித்தறியும் அணுகுமுறை (Case Study) முற்றிலும் மாறுபட்டது. நோயாளியின் அகம், புறம் இரண்டும் முற்றிலும் ஆய்வு செய்யப்படுகிறது. அது ஒரு நுட்பமான கலை. நோயாளி ஒளிவுமறைவின்றி முழுமையான விவரங்களை மருத்துவருடன் பகிர்ந்து கொண்டால் சரியான மருந்து தேர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உடலின் வலதுபக்கம் சிறப்பாக வினையாற்றும் மருந்துகளும், இடதுபக்கம் சிறப்பாக வினையாற்றும் மருந்துகளும் ஹோமியோபதியில் மட்டுமே அமைந்துள்ளன. முகவாதத்தில் வலதுபக்கப் பாதிப்புக்கு Causticum, Belladonna, Kaliphos, Magphos போன்ற மருந்துகளும், இடதுபக்க பாதிப்பிற்கு Alumina, Cadmium Sulp, Sulphur போன்ற மருந்துகளும் நன்கு பலன் அளிக்கின்றன. எனினும் பக்கத்தை மட்டும் வைத்தே மருந்து தேர்வு செய்யப்படுவதில்லை. பக்கமும் உள்ளடங்கிய மொத்த குறிகளும் (Totality of symptoms) மருந்து தேர்வுக்கு பயன்படும். சிறப்பான விசாரணை (Case taking) அமைந்து விட்டால் பாதி நலம் கிடைத்துவிட்டதாகவே பொருள். ஹானிமன் காட்டிய வழியில் நோயாளியின் ஒத்துழைப்போடு சிகிச்சையானது குறிப்பிட்ட காலம் மேற்கொள்ளும் போது முகவாதம் உள்ளிட்ட எந்த நோயானாலும் பக்கவிளைவு ஏதுமின்றியும் மீண்டும் வராமலும் முழுகுணம் பெறமுடியும். அதுவே ஹோமியோபதியின் மகத்துவம்.

Dr.S. வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர்,

செல் – 94431 45700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com