32.தீபாவளியும் ஹோமியோபதியும்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளி நாளன்று நண்பர் ஒருவரின் கிராமத்து  
32.தீபாவளியும் ஹோமியோபதியும்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளி நாளன்று நண்பர் ஒருவரின் கிராமத்து இல்லத்திற்குச் சென்றிருந்தேன். பல அடிப்படை வசதிகள் இல்லாத அந்த கிராமத்திலும் தீபாவளி பண்டிகையை குதூகலத்துடன் மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இடைவிடாத பட்டாசுச் சத்தங்களும், புகை நெடியும், புத்தாடையணிந்த சிறுசுகளின் ஆனந்தக் கூக்குரல்களும் கிராமத்தின் எல்லா வீதிகளிலும் நிரம்பியிருந்தன.

நண்பரின் அன்பான பண்டிகை உபசரிப்பினூடே பல விஷயங்களை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராத நிமிடத்தில் பக்கத்து வீட்டு மூன்று வயதுச் சிறுமியின் கதறல் கேட்டு வெளியே வந்து பார்த்தேன். வீதியில் பற்ற வைக்கப்பட்ட வெடி, வீட்டுத் திண்ணையில் வேடிக்கைப் பார்த்த குழந்தையை நோக்கி சீறி பாய்ந்து வெடித்து கையைப் பதம் பார்த்து விட்டிருந்தது. அவளது பெற்றோர் அதிர்ச்சியுற்று உடனடியாக பேனா மையை காயம்பட்ட இடத்தில் ஊற்றியுள்ளனர். மையை அகற்ற முடியாத தர்மசங்கடத்துடன் குழந்தையின் காயம்பட்ட கைமீது குளிர்ந்த நீரை சில நிமிடங்கள் ஊற்றினேன். (நெருப்பு காயத்தை குளிர்ந்த நீரில் எவ்வளவு சீக்கிரம் நனைக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் காய்ம்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தீவிரம் குறையும்) என் கைவசம் வைத்திருந்த ஹோமியோ முதலுதவிப் பெட்டியிலிருந்து ‘காந்தாரிஸ்’ என்ற ஹோமியோ மாத்திரையையும், ‘ரெஸ்கியூ ரெமடி’ என்ற பாச் மலர் மருத்துவ மாத்திரையையும் எடுத்து அழுது கொண்டிருந்த குழந்தையின் வாயில் இட்டேன்.

அடுத்த சில நிமிடங்களில் அழுகைச் சத்தம் சிணுங்கல் சத்தமாகக் குறைந்தது. மீண்டும் ஒருமுறை அதே மாத்திரைகள் கொடுத்தேன். இனிப்பு மாத்திரைகளைச் சுவைக்கத் துவங்கிய அடுத்த நிமிடம் சிணுங்கலும் நின்றுவிட்டது. கொட்டாவி விட்ட அவளை படுக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டாள். சில வேளை மருந்துகளை பொட்டலங்கலாக மடித்து பெற்றோரிடம் கொடுத்து, குழந்தை விழித்த பின் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு 1 முறை தருமாறு அறிவுறுத்தினேன். மூன்று நாட்கள் கழித்து நகரிலுள்ள எனது மருத்துவமனைக்கு பெற்றோருடன் அவள் வந்திருந்தாளோ. கையிலே நெருப்புக் காயம் ஏற்பட்டதற்கான தழும்போ, நிறமாற்றமோ, வேறு அடையாளமோ எதுவும் காணப்படவில்லை. கையில் பிடித்திருந்த பலூனுடன் மகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்து சிரித்தாள். பெற்றோர் நன்றி பாராட்டினர். எல்லாப் புகழும் ஹோமியோபதியின் தந்தை ஹானிமனுக்கே!

அருப்ப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து 25 வயது இளைஞர் கடந்தாண்டு தீபாவளி முடிந்து ஒரு மாத காலம் கழித்து என்னிடம் வந்திருந்தார். தீபாவளியன்று நண்பர்களுடன் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்த போது, ராக்கெட் வெடி ஒன்று திசைமாறி தன் மீதே சீறிப் பாய்ந்து இடது பக்க முகத்தில் காயம் ஏற்படுத்தி விட்டதாகவும், உடனடியாக அருகிலுள்ள கண்மாய்க்குள் பாய்ந்து மூழ்கி எழுந்தததாகவும், பின்னர் 10 கி.மீ தூரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு தொடர்சிகிச்சை பெற்றதாகவும் விவரித்தார்.

உடனடியாக நீரில் மூழ்கியதால், நீர் கொப்புளங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், இரண்டு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியதாகவும், ஒரு மாதமாகியும் இடது நெற்றி மற்றும் இடது விழியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புண் போன்ற வலியும், எரிச்சலும் விட்டு விட்டு வந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு ‘காஸ்டிகம்’ என்ற ஹோமியோ மருந்து தினசரி ஒரு வேளை வீதம் சில நாட்கள் எடுத்துக் கொள்ளுமாறு கொடுத்தனுப்பினேன். 15 நாட்களில் மீண்டும் வந்தார். முதல் வாரத்திலேயே எரிச்சலும், வலியும் நின்று விட்டதாகவும், அதற்குப் பின் நான் அறிவுறுத்தியவாறு மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டதாகவும் கூறினார். அதற்குப் பின் அவருக்கு எவ்வித தொடர்சிகிச்சையும் தேவைப்படவில்லை.

***

பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான்! அதிலும் தீபாவளிப் பண்டிகை என்றால் இனிப்புகள், பலகாரங்கள் நிறைந்த விருந்தோடு பட்டாசுகளும், வான வேடிக்கைகளுமாய் அமர்க்களப்பட்டுவிடும்! மழலைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பரவசமூட்டும் பட்டாசுத் திருவிழாவை கவனக் குறைவாகவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்றியோ கொண்டாடினால் விபரீதமான விளைவுகளையும் சந்திக்க நேரிடும். உலகின் பல நாடுகளில் பட்டாசுகளை வெடிப்பதற்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வசிப்பிடங்கள் நிறைந்த தெருக்களில் வெடிப்பது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் வீட்டிற்குள், வீட்டிற்கு வெளியில், நடமாடும் வீதிகளில் பட்டாசுகள் வெடிப்பதால் விபத்துக்களும், இழப்புகளும், துயரங்களும் ஏராளம். விபத்துக்கள் இல்லாவிட்டாலும் எண்ணற்ற சுகாதாரக் கேடுகளும் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன.

நமது செவிகளின் சப்தங்கள் கேட்புத்திறன் 90 டெசிபிள். ஆனால் தற்போது வெடிக்கப்படும் வெடிகள் எழுப்பும் சப்தமோ 95 முதல் 115 டெசிபிள் வரை உள்ளது. இது செவித்திறனை பாதிக்கிறது.

பட்டாசுகளிலிருந்து வெளிவரும் புகை, ஆஸ்துமா மற்றும் இதர ஒவ்வாமை நோயுள்ள மக்களைத் தாக்கி சுவாசத்திணறலை ஏற்படுத்துகிறது. மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதால் நோயாளிகள் உடனடியாக மிகவும் பாதிக்கப்படுவார்கள். வீதிகளில், சாலைகளில் பட்டாசுகள் வெடிப்பதால் நடை பயணிகளும், வாகனப் பயணிகளும் சுவாசப் பாதிப்புக்களுக்கு இரையாகின்றனர். குறிப்பாக குழந்தைகளும் முதியவர்களும் பட்டாசுப் புகையால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

மெழுகுவர்த்திகள், பட்டாசுகள், ராக்கெட்டுகள், பூச்சட்டிகள் போன்றவற்றால் எதிர்பாராமல் ஏற்படும் சிறிய, பெரிய விபத்துக்களால் ஏற்படும் எரிகாயங்கள் பெரும் துயரங்களாக அமைந்துவிடும். ஒரு சிறிய நெருப்புப் பொறி, ஒரு மனிதரின் உயிரையே பறித்துவிட வாய்ப்புள்ளது. பெரும்பாலான பட்டாசு விபத்துகள் கைகளிலும், கண்களிலும் தான் அதிகம் தாக்குகின்றன. இவை அனைத்துமே அறிவுபூர்வமாக, முன்னெச்சரிக்கைகளுடன், உரிய கவனத்துடன் தவிர்க்க கூடிய துயரங்களே.

***

நெருப்புக் காயங்களுக்கு பயன்படும் மூன்று முக்கிய ஹோமியோ மருந்துகள்

  1. காந்தாரிஸ் (CANTHARIS) : அற்புதமான ஆற்றல்மிக்க மருந்து. நெருப்புக் காயம் / வெந்த காயம் இரண்டுக்கும் மேல் தோல் தாக்கப்பட்டு சிவந்த தன்மையுடன் எரிச்சல் வலியுடன் உள்ள (முதல் டிகிரி) நிலையில் உடனடியாக எடுத்துக் கொண்டால் கொப்புளங்கள் ஏற்படாமல் சிறிது நேரத்தில் பரிபூரண நிவாரணம் கிடைக்கும். காயத்தின் அறிகுறிகள் முற்றிலும் மாறும் வரை 10 டொ 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இம்மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
  2. யூர்டிகா யுரேனஸ் (URTICA URENUS) ; முதல் டிகிரி நெருப்பு காயத்திற்கு ஏற்ற மற்றொரு அற்புத நிவாரணி இது. காயம்பட்ட இடத்தில் எரிச்சலும், கொட்டும் வலியும், சிவந்த தன்மையுள்ள வீக்கமும் காணப்படும் போது இம்மருந்து விரைந்து நலமளிக்கும். காந்தாரிஸ் & யுர்டிகா இரண்டு மருந்தையும் மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
  3. காஸ்டிகம் (CAUSTICUM) : சில நெருப்புக் காயங்கள் மெதுவாக ஆறக் கூடும். காயம்பட்ட இடத்தில் அதிக எரிச்சல் வலி இருக்கும். சிலருக்கு நெருப்புக் காயங்கள் ஆறியது ப் ஓல் தோன்றினாலும் எரிச்சலும், புண் போன்ற வலியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அல்லது கால இடைவெளிக்குப் பீன் தோன்றித் துயரப்படுத்தும். இந்நிலையில் ‘காஸ்டிகம்’ சிறப்பாகப் பணிபுரிந்து நோய்க்கு முற்றுப்புள்ள வைக்கும்.

மேற்குறிப்பிட்ட மூன்று மருந்துகளும் ஒவ்வொரு வீட்டின் முதலுதவிப் பெட்டியிலும் 30வது வீரியத்தில் இருக்க வேண்டியது அவசியம். சமையல் அறையில் நிகழும் விபத்துக்களுக்கும் இவை உடனடி பலன் தரும். இவை தவிர காயம்பட்ட இடம் சீழ்பிடித்து விட்டால், புண் ஆறாமல் நீடித்தால், செல்கள் அழிந்து புண்கள் அழுகிப் போனால் காலண்டுலா, ஹீபர்சல்ப், கல்கேரியா சல்ப், ஆர்சனிகம் ஆல்பம், ஆந்திராசினம், சீகேல் கர்னூட்டம் போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் மூலம் சிறப்பான ஹோமியோபதி சிகிச்சை பெற்று நிவாரணமும், நலமும் பெற முடியும்.

Dr.S. வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர்,

செல் – 94431 45700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com