காரம் அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

அறுசுவைகளில் நாம் அதிகம் விரும்புவது இனிப்பு, உப்பு, காரம் மற்றும் புளிப்பு
காரம் அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

அறுசுவைகளில் நாம் அதிகம் விரும்புவது இனிப்பு, உப்பு, காரம் மற்றும் புளிப்பு. பலர் தவிர்க்க நினைப்பது துவர்ப்பு மற்றும் கசப்புச் சுவைகள். ஆனால் இவை அனைத்தும் சமச் சீரில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இனிப்பு, புளிப்பு, உப்பு ஆகியவை உணவிலும், துவர்ப்பு, கசப்பு, காரம் ஆகியவை மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மூன்று சத்துக்களின் மருத்துவ பலன்களைப் பார்க்கலாம்./

துவர்ப்பு

உடலில் கபம், பித்தம், ரத்தம் ஆகியவற்றில் ஏற்படும் தோஷங்களை அழிக்க வல்லது துவர்ப்பு. துவர்ப்பில் அதிக குளிர்ச்சி உண்டு. ஜீரணிம் ஆவது கடினம். தோலின் நிறத்தை சரி செய்யும். புண்களை ஆற்றும். உடலில் அதிக வறட்சியை ஏற்படுத்தும். மலத்தைக் கட்டுப்படுத்தும். இதை அதிகம் உபயோகித்தால், நா வறட்சி, வயிற்றுப் பொருமல், கால்கள் தடித்து அசைவற்றிருப்பது, இளைப்பு, பாரிச வாயு ஆகிய நோய்களைத் தோற்றுவிக்கும். ஆண்மையை பாதிக்கும்.

கடுக்காய், அருகம்புல், நாவல், அத்தி, ஆல், இலந்தை, பாக்கு, விளாங்காய் ஆகியவை துவர்ப்புச் சுவை கொண்டவை. 

கசப்பு

கசப்பு என்று சொல்லும் போதே வாய் கசப்பது போன்று தோன்றிவிடச் செய்யும் மாயம் கசப்புக்கு உண்டு. ஆனால் உண்மையில் கசப்பு உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. உணவு ஒவ்வாமை இருந்தால் கசப்பு சாப்பிட பசி நன்று ஏற்பட்டு சாப்பாட்டை விரும்பிச் சாபிட முடியும். மேலும் கசப்புச் சுவை நாவின் ருசியின்மையைப் போக்கும். உடலில் உள்ள டாக்சின்களை நீக்கிவிடும் ஆற்றல் கசப்புக்கு உண்டு. உடலிலுள்ள கிருமிகளும் அழியும்.

மயக்கம், வயிற்றுப் பிரட்டல், காய்ச்சல், எரிச்சல், நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு ஆகிய பிரச்னைகளை நீக்க வல்லது கசப்புச் சுவை. வயிற்றில் ஜீரண சக்தியைத் தூண்டும். உடலிலுள்ள தோஷங்களையும், மலங்களையும் வழித்து வெளியேற்றும். தாய்ப்பால், தொண்டை இவற்றைச் சுத்தம் செய்யும். மலம், கபம், சிறுநீர், பித்தம் இவற்றை உலரச் செய்யும். அளவுக்கு மீறினால் தாதுக்கள், பலம் இவற்றைக் குறைத்து விடும். மயக்கம், சோர்வு, தலை சுற்றல், வாத நோய், வரட்டுத் தன்மை, சொரசொரப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.

மஞ்சள், பாகற்காய், மணத்தக்காளி ஆகியவை கசப்புச் சுவை கொண்டவை. 

காரம்

சிலருக்கு உணவில் காரம் இருந்தால் தான் சாப்பிட்ட உணர்வு ஏற்படும். காரசாரமான உணவு உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் கபத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை வளர்க்கும். புண்களை ஆற்றும். உடலைச் சுத்தப்படுத்தி புலன்களைத் தெளியச் செய்யும். உறைந்த ரத்தத்தை உடைக்கும். வீக்கம், பருமன், கிருமி நோய், தொண்டை நோய், நஞ்சு, தோல் நோய், அரிப்பு இவற்றைத் தணிக்கும்.

அதிகமாக காரம் சாப்பிட்டால் சில பிரச்னைகளையும் விளைவித்துவிடும். நாவறட்சி, மயக்கம், வெறி, வாந்தி, உடல் களைப்பு, விந்து உலர்தல், நடுக்கம், தலைசுற்றல், உடலை இளகச் செய்தல் போன்றவறை ஏற்படுத்திவிடும். கை கால்கள், விலாப் பக்கம், முதுகு, இடுப்புப் பகுதிகளில் வாயுவின் சீற்றத்தை உண்டுபண்ணி, குத்தல் வலி, சுருக்கம், உடைப்பது போன்ற வலியை உண்டாக்கும்.

பெருங்காயம், சுக்கு, மிளகு, கடுகு, துளசி, வெற்றிலை போன்றவை காரச் சுவையுள்ள பொருட்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com