உங்களை இளமையாக மாற்றவல்ல காளான் காபியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நீங்கள் காபி பிரியர்களா? இதோ அது பற்றிய புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
உங்களை இளமையாக மாற்றவல்ல காளான் காபியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நீங்கள் காபி பிரியர்களா? இதோ அது பற்றிய புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. உங்கள் மனத்துக்கு நெருக்கமான காபியை பலவிதமான ருசியில் குடித்திருப்பீர்கள். கருப்பட்டி காபி, சுக்குக் காபி, இஞ்சி காபி, பால் சேர்க்காத காபி, எலுமிச்சை காபி என இப்படி பலவகையான காபிகள் இருக்க, அதிலொன்று புதியதாக சேர்ந்தால் குடிக்க கசக்கவா செய்யும்? (காபி சற்றுக் கசந்தால் தான் சுவை என்பது காபி பிரியர்களின் கணக்கு) அப்படிப்பட்ட உங்கள் விருப்பமான காபியில் புதிய சுவையொன்றையும் சேர்த்து அருந்தி மகிழுங்கள். அதுதான் காளான் காபி! அதாவது வெளிநாடுகளில் இப்போது பிரபலமாகி வரும் மஷ்ரூம் காபி. இதற்கு முன்னால் இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? இல்லையெனில் இதோ அது என்ன காளான் காபி என்று ஒரு கை பார்த்துவிடலாம்.

பொதுவாக காளான் வகை உணவுகள் ருசியாக இருப்பதுடன் அதன் மருத்துவப் பலன்களும் அதிகம் தான். காளானை காலகாலமாக சமைத்து சாப்பிட்டுவரும் சமூகம் தானே நாம். உணவில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இந்தக் காளானை காபியிலும் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சில சுவை வல்லுநர்கள். 

அவ்வகையில் காளான் காபியை பிரபலமாக்கிய நிறுவனம்தான் ஃபோர் சிக்மாடிக். இதன் நிறுவனர் டெரோ இசொகெளபில்லா என்பவர் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் காளான் காபியின் நன்மைகளைப் பற்றிக் கூறினார். 'காளான் காபிகள் வெவ்வேறு ருசிகளில் கிடைக்கின்றன. ரெய்ஷி எனும் காளான் வவையில் தயாரிக்கப்பட்ட காபியை குடித்தால், அது சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும். தவிர இதில் இளமையைத் தக்க வைக்கக் கூடிய ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகம் உள்ளன’ என்றார் டெரோ.

காளான் காபி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த ஒட்டத்துக்கு மிகவும் நல்லது. மேலும் உடலின் சர்க்கரை அளவை சீராக்கி உடலின் மெட்டாபாலிச சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்று காளான் மகிமையை அடுக்கிக் கொண்டே போகிறார்கள் இதன் விரும்பிகள்.

காபியில் மட்டுமல்லாமல் காளானை மற்ற பானங்களிலும் கலந்து குடிக்கலாம். டீ மட்டும் மில்க் ஷேக்குகளிலும் கூட காளானைப் பயன்படுத்தினால் அதன் ருசி அதிகரிக்கும். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள 'வெல்னஸ் கஃபே' என்ற கடையில் 'ஷ்ரூம் ஷேக்' மற்றும் 'எலுமிச்சை மற்றும் காளான் கலந்த டீ மிகவும் பிரபலம்.

பிரபல உணவுச் சத்து நிபுணரான மாஷா டேவிஸ் என்பவர் கூறுகையில், ‘இந்தக் காளான் காபியில் நன்மைகள் இருப்பது உண்மைதான். ஆனால் நிறுவனங்கள் விளம்பர நோக்கில் அதன் பலன்களை மேலதிகமாகச் சொல்வதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது விற்பனைத் தந்திரமாக இருக்கலாம். பயனர்கள் அவர்வர் விருப்பத்துக்கும் சுவைக்கும் ஏற்ற வகையில் தங்களுக்கு  பிடித்த சத்தான உணவு மற்றும் பானங்கலை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.

இந்த விளம்பர உலகில் காளான் காபி என்பது கார்ப்பரெட் காபியின் மறுபெயரா என்று நினைக்கத் தோன்றுகிறது. எனக்கெல்லாம் காலையில் எழுந்ததும் சுடச் சுட, சுழல் சுழலாக ஆவி பறக்க, அன்றைய செய்தித்தாளுடன் டிகாஷன் காபியே பரம சுகம்! அந்த நாளையென்ன? வாழ்க்கையே ருசிகரமாக கடந்துவிடலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com