இந்தக் கோடை காலத்தில் உங்கள் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகிறார்களா?

கொளுத்தும் வெயில் காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகள் ஓடியாடி விளையாடிவிட்டு களைப்பாக வருவார்கள்.
இந்தக் கோடை காலத்தில் உங்கள் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகிறார்களா?

கொளுத்தும் வெயில் காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகள் ஓடியாடி விளையாடிவிட்டு களைப்பாக வருவார்கள். வெயில் வியர்வை போன்றவற்றால் அவர்கள் உடலிலிருந்து வெளியேற நீர்ச்சத்தை திரும்ப பெற, உணவில் அக்கறையுடன் இருக்க வேண்டும். கோடையில் பெரும்பாலும் குழந்தைகள் சாதம் போன்ற திட உணவுகளை சாப்பிட மறுப்பார்கள். முக்கியமாக காய்கறிகள், பழங்கள் என்றாலே முகம் சுளிப்பார்கள். எப்படி அவர்களை சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது? அதுவும் வேலைக்குப் போகும் தாய்மார்கள் என்றால் இன்னும் சிரமம்தான்.

இந்தக் காலத்து குழந்தைகளின் உணவு விருப்பம் என்வென்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் கேஎஃப்சி அல்லது மெக் டொனால்ட் பக்கம் தான் போய்ப் பார்க்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவில் நிச்சயம் போதிய ஊட்டச் சத்துக்கள் இருக்காது. அல்லது அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளையே பெரிதும் விரும்புகிறார்கள். பள்ளி நேரங்களில் காலை உணவு சாப்பிட நேரம் இருக்காது, மதியம் டப்பாவில் அடைக்கப்பட்ட அளவு உணவு பெரும்பாலும் அது அவர்களுக்குப் போதாது. மாலை வீட்டுக்கு வந்தபின் எதாவது ஸ்னாக்ஸ் என்ற பெயரில் கொறிக்கிறார்கள். இரவு உணவு டிவி அல்லது செல்ஃபோனைப் பார்த்தபடியேதான். இப்படி நிலைமை தொடர்ந்து கொண்டிருந்தால் குழந்தைகள் கடும் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவார்கள்.

பெரும்பாலும் டயட்டீஷியன்கள் பரிந்துரைப்பது நமது பாரம்பரிய உணவு வகைகளைத் தான். அன்றாடம் நம் வீட்டில் சமைக்கும் இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி என இதில் ஏதாவது ஒன்றை காலையில் சாப்பிட வையுங்கள். இணை உணவாக காய்கறிகளை வேக வைத்து சூப் தயாரித்து கொடுங்கள். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, கறிவேப்பிலை அல்லது கொத்தமல்லியில் சட்னி சிறந்தது.

பழங்களை நன்றாக நறுக்கி, சிறிதளவு தேன் சேர்த்து விதவிதமான சாலட்களைத் தயாரித்து மதிய உணவுக்கு முன்னால் சாப்பிடக் கொடுங்கள். கூடுமானவரை பழங்களாகவே சாப்பிடப் பழக்குங்கள். ஜூஸ் வேண்டாம். 

மதிய வேளையில் வயிறு நன்றாக நிரம்பும் படியாக உணவு தரவேண்டும். நெய் விட்டுப் பிசைந்த பருப்பு சாதம் அல்லது சாம்பார் சாதம், கீரை சாதம், காய்கறி சாதம் என சத்துள்ளதாக தரவேண்டும். புளி சாதம் கலந்து தருவதை வெயில் காலத்தில் தவிர்க்கவும். அதிகமான மசாலாவும் சேர்க்க வேண்டும். மைதா கலந்த உணவுகளை அறவே தவிர்க்கவும். ஊறுகாய், அப்பளம் உள்ளிட்ட எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தடா போடுங்கள். ஜன்க் புட்ஸ் நிச்சயம் கூடாது. ஹோட்டல், அல்லது தெருமுனை கடைகளில் விற்கப்படும் உணவுகளை தவிர்ப்பது நலம்.

நவதானியங்களைச் சேர்த்து அரைத்த மாவில் செய்த தோசையை மாலை வேளையில் கொடுங்கள். அவித்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்றவை உடல் பலத்துக்கு நல்லது. பயிறு வகைகளையும் பிடித்த வகையில் சமைத்து அவ்வப்போது கொடுத்து வாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதிகளவு எனர்ஜி கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலும் விரிவாகும்.

ப்ரிட்ஜ் வாட்டர் தான் வேண்டும் என வாண்டுகள் அடம் பிடிக்கலாம். மண் பானை வைத்து அதிலிருந்து நீரை எடுத்துப் பருகச் சொல்லுங்கள். மோர், லெமன் ஜூஸ், இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணிப் பழம் என தினமும் ஒன்று சாப்பிடத் தரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com