உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் சிறுதானியங்கள்!

இன்றைய கால சூழலில் உணவு என்பது கவர்ச்சிகரமானதாகிவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு  நூடுல்ஸ்
உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் சிறுதானியங்கள்!

'இன்றைய கால சூழலில் உணவு என்பது கவர்ச்சிகரமானதாகிவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு 'நூடுல்ஸ்' என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் இன்று பீட்சா, பர்க்கர் எல்லாம் கிராமப்புறங்கள் வரை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக சென்றுவிட்டது. இந்த உலகமயமாக்கல் என்பது உணவின் தன்மையையே மாற்றிவிட்டது. நம்மைப் போன்ற பாரம்பரியம் மிக்க ஒரு நாட்டில் வெளிநாட்டு உணவுகளின் மீதான மோகம் அந்த பாரம்பரியத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதிலும் சென்னை போன்ற நகரங்களில் கொரியன், வியட்நாம், ஆப்ரிக்கன், எத்தியோப்பின், ஸ்பானிஷ், கிரீக் என கிடைக்காத உணவுகளே இல்லை. இப்படி நமது பாரம்பரியம் மறைய ஆரம்பித்ததனால்தான் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் உருவாக ஆரம்பித்துவிட்டது. உடல் நலம், மனம், பழக்கவழக்கம் என எல்லாமே பிரச்னையாகிப் போனது. இதனால் ஆரோக்கியமான உணவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுதானியங்களை மட்டுமே பிரதானமாக கொண்ட உணவகத்தை தொடங்கினோம்'' என்கிறார் சென்னை அண்ணாநகரில் உள்ள "கிராம போஜனம்' உணவகத்தை நிர்வகித்து வரும் கிருஷ்ணமூர்த்தி. இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: 

'ஒசூர் எனது பூர்வீகம். கடந்த 34 ஆண்டுகளாக உணவு சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றி வருகிறேன். பணி நிமித்தமாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளேன். 

இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான இளம் தாய்மார்களுக்கு சரியான உணவு என்ன என்பது கூட தெரியாமல் போனதால், பிள்ளைகளுக்கு சரியான சரிவிகித உணவு கிடைக்காமல் போனது. அதேபோன்றுதான் நமது சூற்றுசூழல், காற்று, தண்ணீர் என எல்லாவற்றையும் மாசுப்படுத்திவிட்டோம். இதுவும் நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் போக ஒரு காரணமாகிவிட்டது. இவையெல்லாம் என் மனதை அரித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த கிராம போஜனம்.

கிராம போஜனம் என்றதும் நம்ம ஊரு கிராமப்புற உணவுகள் மட்டுமில்லாமல். ஆந்திராவின் பெசரட் என்னும் பச்சை பயறு தோசை, கேரளாவின் ரெட் ரைஸ் தோசை, கர்நாடகாவின் தட்டு இட்லி, பென்ன தோசை, குஜராத்தின் கம்பு ரொட்டி, மகாராஷ்ட்டிராவின் சோள ரொட்டி என இந்திய முழுக்கவுள்ள பல கிராமங்களின் பிரபல உணவுகளையும் தேடித்தேடி தேர்வு செய்து வைத்திருக்கிறோம். 

அந்த காலத்தில் யாரும் கடைக்குச் சென்று பெரும்பாலும் காய்கறிகள் வாங்கி வரமாட்டார்கள். அவரவர் வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் விளையும் கீரை, காய்கறி என பறித்து வந்து சமைப்பார்கள். பெரிய மெனக்கெடல் எல்லாம் இருக்காது. வீட்டில் இருப்பதைக் கொண்டே சமைத்தார்கள். சமையலும் ருசித்தது. ஆனால், இன்று அதெல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அதனால் மறக்கடிக்கப்பட்டு வரும் நமது சிறுதானியங்களை மீட்டெடுத்து, இன்றைய கால சூழலுக்கெற்ற வகையில் தயாரிக்கிறோம். அரிசி, மைதா , வனஸ்பதி, வெள்ளை சர்க்கரை, கலர்ஸ், ஃபேளவர்ஸ், கெமிக்கல்ஸ், வினிகர், அஜினமோட்டோ என எதுவும் எங்கள் உணவில் கிடையாது. சோடா உப்பு கூட சமையலில் சேர்ப்பது கிடையாது. அந்த காலத்தில் கிராமங்களில் எப்படி சமைத்தார்களோ அப்படியே சமைக்கிறோம். சுவைமிக்க, ஆரோக்கியமான பாரம்பர்யம் மிக்க உணவு மட்டும்தான் எங்களின் கான்சஃப்ட்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் இட்லி, தோசை போன்ற உணவுகளை சிறுதானியங்களில் கொடுக்கிறோம். உதாரணமாக, காராமணி, மொச்சை, பட்டாணி யுடன் ராகி சப்பாத்தி, 3 சின்ன களி உருண்டைகளுடன் அவரைக்காய் காரகுழம்பு, பெரும்பாலும் இங்கிருப்பவர்களுக்கு களி சாப்பிடத் தெரியாது. அதனால் சின்ன உருண்டைகளாக யூஸர் பிரெண்ட்லியாக உருவாக்கினோம். வரகில் நான்கு வகையான கலவை சாதம், ஒருநாள் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளிசாதம், கீரை சாதம் என கொடுக்கிறோம். 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அடையாறில்தான் முதன்முதலில் தொடங்கினேன். மிகச் சிறிய அளவில் சாதரணமாக இருந்த பழைமையான ஒரு வீட்டில் தான் தொடங்கினேன். தற்போது வரவேற்பு கூடிக் கொண்டே வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com