சகல ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

மனிதர்களுக்கு மூன்றே மூன்று காரணங்களால் தான் உடல் ஆரோக்யம் கெடுகிறது. அந்தக் காரணங்கள் வாதம், பித்தம் மற்றும் கபம். இந்த மூன்றையும் சீராக வைத்துக் கொண்டால் நீங்கள் ஆரோக்யமானவர் என்று பொருள்.
சகல ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

மனிதர்களுக்கு மூன்றே மூன்று காரணங்களால் தான் உடல் ஆரோக்யம் கெடுகிறது. அந்தக் காரணங்கள் வாதம், பித்தம் மற்றும் கபம். இந்த மூன்றையும் சீராக வைத்துக் கொண்டால் நீங்கள் ஆரோக்யமானவர் என்று பொருள். இந்த மூன்றையும் எப்படி சீரக வைக்க முடியும் என்றால் நமது உணவுப் பழக்கத்தில் இருக்கிறது அதற்கான தீர்வு. மனித குணங்களை ரஜோ குணம், தமோ குணம், சத்துவம் அல்லது சாத்வீக குணம் என்று வகைப்படுத்தி இருப்பதைப் போல உணவுகளையும் நமது சித்தர்களும், முனிவர்களும் வகைப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி ரஜோ குண இயல்பு கொண்ட உணவு வகைகளை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களுக்கு கோபம், காமம், குரோதம் போன்ற ரஜோ குணங்கள் அதிகமிருக்கும். அதே போல தமோ குண இயல்பு கொண்ட உணவு வகைகளை அதிகம் உண்பவர்களுக்கு பசியின்மை, மந்தம், மூளைச்சோர்வு, அதீத தூக்க உணர்வு போன்ற பிரச்னைகள் இருக்கும். பொதுவாக மேற்கண்ட இரு குண இயல்பு கொண்ட உணவு வகைகளுமே உடல் ஆரோக்யத்துக்கு நல்லதல்ல. இந்த இரு வகை குண இயல்புகளையும் மட்டுப்படுத்தி இயல்பான தூக்கம், பசி, சுறுசுறுப்பான இயக்கம், ஆற்றல் போன்றவற்றுக்கு வித்திடும் சத்துவ குண உணவு வகைகளே உடல் ஆரோக்யத்துக்கு உகந்தது. அதென்ன சத்துவ குணம் என்கிறீர்களா? சத்துவ குணம் என்பது எல்லாவிதமான சூழலிலும் பதற்றமின்றி, கோப தாபங்கள் இன்றி நிதானமாகச் சிந்தித்து செயல்படக் கூடிய ஆற்றலை வழங்கும் தன்மையே சாத்வீகம். இந்தக் குணம் மனிதனின் உடல் ஆரோக்யத்தை மட்டுமே மேம்படுத்துவதில்லை... மன ஆரோக்யத்துக்கும் உகந்தது இது. அப்படிப்பட்ட சாத்வீக டயட் ரெஸிப்பி ஒன்றை தினமணி வாசர்களுக்கு வழங்குகிறோம். இதில் மலையாள முறைப்படி டயட் அளிக்கப்பட்டுள்ளது. இதை நமது தமிழ் முறைப்படி கறிவேப்பிலை மசாலா மோர், முளைகட்டிய பயறு சாலட், சிறுதானிய சாதம், சுரைக்காய்ப் பச்சடி, கீரை மசியல், கேழ்வரகு பனைவெல்ல அடை என்று நமக்குப் பழக்கமான முறையிலும் செய்து தினமும் மதிய உணவாக இந்த டயட்டைப் பின்பற்றலாம்.சாத்வீக டயட்டின் முக்கிய நிபந்தனை அதில் சாலட் தவிர மற்ற எந்த ரெஸிப்பியிலும் துளி எண்ணெய் கூட சேர்க்கக் கூடாது. உப்பு கல்லுப்பு அல்லது இந்துப்பு மட்டுமே சேர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட உப்பு சேர்க்கக் கூடாது. அறுசுவைகளும் சமநிலை பெற வேண்டும். எந்த ஒரு சுவையும் தனித்து தன்னாட்சி செய்யக்கூடாது. 
 
மஞ்சள் இலை மோர்...

சாத்வீக போஜனத்தில் முதல் செய்முறையாக மஞ்சள் இலை சேர்த்த மோர் எப்படி தயாரிப்பதென்று தெரிந்து கொள்வோம். 

தேவையான பொருட்கள்:

  • தயிர் - 1 கப்
  • மஞ்சள் இலை - 1 கனு
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி - 1 சிறு துண்டு
  • கறிவேப்பிலை - 1 ஆர்க்
  • இந்துப்பு - தேவைப்பட்டால் 1 சிட்டிகை
  • தண்ணீர் - தேவைப்பட்டால் கொஞ்சம்

செய்முறை...

மஞ்சள் இலையை பொடியாக நறுக்கி மிக்ஸியில் இடவும் அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தேவைப்பட்டால் கல் உப்பு அல்லது இந்துப்பு, அரை கப் தண்ணீர் சேர்க்கலாம். இவற்றுடன் 1 கப் தயிரையும் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்கு அரைக்கவும். இப்போது மஞ்சல் இலை சேர்த்த மோர் தயார். 

முளைகட்டிய பயறு சாலட்....

  • முளை கட்டிய பச்சைப் பயறு - 2 கப்
  • முளை கட்டிய உளுந்துப் பயறு - 2 கப்
  • புடலங்காய் - ஒரு சிறு துண்டு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 ஆர்க்
  • மிளகுத்தூள் - 1 சிட்டிகை
  • கல் உப்பு - தேவைப்பட்டால் சிறிது.

முளைகட்டி இரண்டு நாட்களாகி வெளியில் நன்றாக முளைவிட்ட பச்சைப் பயறு மற்றும் கருப்பு உளுந்துப் பயறு இரண்டையும் எடுத்துக் கொள்ளவும். முளை கட்டல் இளசாக இல்லாது சற்று முற்றியிருந்தால் மட்டுமே பயறில் இருக்கும் முழுச்சத்தும் கிடைக்கும். ஒரு அகலமான பெளலில் முதலில் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சைச் சாற்றை நன்கு கலந்து அவற்றுடன்  முளைகட்டிய தானியங்களையும் பொடியாக நறுக்கிய அரை வேக்காட்டில் 3 முதல் 4 நிமிடங்களுக்கு மட்டுமே வேக வைத்து எடுத்த ஆர்கானிக் புடலங்காயையும் சேர்க்கவும்.

இந்த சாலட் சத்துமிக்கது மட்டுமல்லாமல் எடைகுறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

எள் ஞவர அரிசி சாதம்...

  • ஞவர அரிசி - 1 கப்
  • கருப்பு எள் - எ டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த சிவப்பு மிளகாய் - 2 (விதை நீக்கப்பட்டது)
  • தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  • கல் உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை...

ஞவர அரிசி என்பது கேரளாவில் மட்டுமே விளையக்கூடிய ஸ்பெஷல் அரிசி. இது காரரிசி என்ற பெயரில் தமிழகத்திலும் கிடைக்கிறது. 1 கைப்பிடி எள்ளில் 1 டம்ளர் பாலுக்கு நிகரான கால்சியம் சத்து இருக்கிறது. ஞவர அரிசியை அடுப்பில் வெறும் பாத்திரத்தில் சமைக்க விரும்பினால் குறைந்த பட்சம் 1 மணியிலிருந்து 1 1/2 மணி நேரம் ஆகலாம். அதே பிரஸ்ஸர் குக்கரில் வைத்தீர்கள் என்றால் 5 விசில் வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைத்தால் வெந்த அரிசி கிடைக்கும். அடுத்ததாக வாணலியை அடுப்பில் ஏற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்த பின் தக்காளி சேர்த்து வதக்கி நன்கு வதங்கியதும் வேக வைத்து இறக்கிய ஞவர அரிசிச் சாதம் கலந்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறலாம்.

எரிசேரி அலைஸ் ஒடச்ச கறி...

தேவையான பொருட்கள்...

  • சேனைக்கிழங்கு - 1 கப் (பொடியாக நறுக்கியது)
  • வாழைக்காய் - 1 கப்  (பொடியாக நறுக்கியது)
  • சிவப்புக் காராமணி - 1 கப்
  • துருவிய தேங்காய் - 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 ஆர்க்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை...

அடுப்பில் வாணலியை ஏற்றிப் பற்ற வைக்கவும். வாணலி சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் வேக வைத்து எடுத்த சேனைக்கிழங்கு மற்றும் வாழைக்காய்த்துண்டுகள் சேர்த்து கிளறவும். ஒரு கொதி வந்ததும் அதனுடன் வேக வைத்த சிவப்புக் காராமணி சேர்த்து அம்மியில் அரைத்தெடுத்த மேற்கண்ட மசாலாக்கள் சேர்த்து நன்கு கிளறவும். கிழங்கும், பருப்பும் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.

கோவக்கா தோரன்...

தேவையான பொருட்கள்...

  • நாட்டுக் கோவைக்காய் - 2 கப் ( சிறு சிறு சக்கரங்களாகப் மெல்லிசாக நறுக்கியது)
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • துறுவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1
  • கறிவேப்பிலை - 1 ஆர்க்
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

செய்முறை...

அடுப்பில் வாணலியை ஏற்றி வெறும் வாணலியில் எண்ணெய் ஏதும் விடாது கடுகு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் துறுவிய தேங்காய் சேர்த்துக் கிளறி தேங்காய் வாடியதும் அதனுடன் உப்பும், மஞ்சளும் சேர்த்துக் கிளறி  நறுக்கி வைத்த கோவைக்காய் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் சேர்க்காததால் கோவைக்காய் நன்கு வேக அதனுடன் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். லேசாக தண்ணீர் தெளித்து வதக்கினால் கோவைக்காய் சீக்கிரம் வெந்து விடும். இப்போது கோவக்கா தோரன் ரெடி!

சுட்ட ராகி அடை...

தேவையான பொருட்கள்...

  • ராகி மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1 கப்
  • துருவிய இளம்தேங்காய் - 1 கப்
  • பனைவெல்லம் - சில துண்டுகள்
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை...

ராகி மாவு மற்றும் அரிசி மாவை பனைவெல்லப்பாகும், தேங்காய்த்துருவலும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்கு கிளறவும். பிறகு அடுப்பில் தோசைக்கல்லை ஏற்றி எண்ணெய் இல்லாது கலந்து வைத்த மாவை சிறு சிறு அடைகளாகத் தட்டி வேக வைத்து எடுக்கவும்.

உண்பது ருசிக்காக மட்டுமில்லை. பசித்து உண்பது உடலை செம்மையாகப் பராமரிக்கவும் தான். என்ற உணர்வுடன் ஒவ்வொரு வேளை உணவையும் இப்படி அறுவகை சுவைகளின் ஒத்திசைவில் சரியான அளவில் சமைத்து உண்டால் வாதம், பித்தம், கபம் மூன்றையும் கட்டுப்படுத்தி நலமான நல்வாழ்வு வாழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com