கர்ப்பிணிகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ‘ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம்’ என்றால் என்ன?

உலகில் வெகு சிலருக்கு மட்டும் வாந்தியும், தலைச்சுற்றலும், மயக்கமும் பிரசவ நெருக்கத்திலும் கூட மிகக் கடுமையாக இருக்கும். அதைத் தான் மருத்துவர்கள் ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் என்று குறிப்பிடுகிறார்கள்.
கர்ப்பிணிகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ‘ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம்’ என்றால் என்ன?

இங்கிலாந்து இளவரசரான வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டனைத் தெரியாதவர்களென எவருமிருக்க வாய்ப்பில்லை. கடந்த வாரத்தில் தான் இவர்களது முதல் வாரிசும் அடுத்த கேம்பிரிஜ் இளவரசனுமான குட்டிப்பையன், ப்ரின்ஸ் ஜார்ஜ் முதல்முறையாகப் பள்ளி செல்லத் தொடங்கினான். இங்கிலாந்து இளவரசர்கள் வழக்கமாகப் பயிலும் தாமஸ் பாட்டர்ஸீ பள்ளியில் தான் ஜார்ஜும் சேர்ந்து பயிலவிருக்கிறார். ப்ரின்ஸ் ஜார்ஜுக்கு ஒரு குட்டித் தங்கை உண்டு. அவரது பெயர் ப்ரின்சஸ் சார்லட். ஜார்ஜ் முதல் முறையாகப் பள்ளிக்குச் செல்வது அரண்மனையின் கொண்டாட்டங்களில் ஒன்றாக இருந்த போதிலும், ஜார்ஜின் தாயாரான இளவரசி கேட் மிடில்டனால் அந்த கொண்டட்டத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. ஏனென்றால் அந்தச் சமயத்தில் கேட், தனது மூன்றாவது குழந்தையைக் கருவுற்றிருந்ததோடு கடுமையான ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் எனும் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் தான் தனது மகன், முதன்முதலில் பள்ளி செல்லும் போதான கொண்டாட்டங்களில் அவரால் பங்கு கொள்ள முடியவில்லை. இன்னும் சில நாட்களில் குட்டி இளவரசன் ஜார்ஜுக்கும், குட்டி இளவரசி சார்லட்டுக்கும் அடுத்ததாக மற்றுமொரு குட்டி இளவரசனோ, இளவரசியோ பிறந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தவிருக்கின்றனர்.

ஹப்பர் மெசிஸ் கிரேவிடம்...

கேட் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போவதோ, அல்லது இளவரசன் ஜார்ஜ் பள்ளிக்குச் செல்லப் போவதோ கூட வழக்கமான விஷயம் தான். இங்கே நம்மைச் சற்றே குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரே விஷயம். இந்த ‘ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம்’ எனும் உடல்நலக் குறைபாடு மட்டுமே தான்! அதென்ன கேட்கவே புதுமையாக இருக்கிறதே? ஹைப்பட் மெசிஸ் கிரேவிடம் என்பது இந்தியாவில் இருக்கும் கர்ப்பிணிகளிலும் கூடப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வழக்கமான ஒரு குறைபாடு தானா? அல்லது, இது ஒரு புது விதமான நோய்க்குறியா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்...

உண்மையில் பெயர் தான் ரொம்பவும் அந்நியமாகத் தோன்றுகிறதே தவிர, இது உலகில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களிலும், குறிபிட்ட சிலரைத் தாக்கக் கூடிய வழக்கமான பாதிப்பு தான். இந்தியாவில் இதை கடுமையான தலைச்சுற்றல் மற்றும் வாந்தி மயக்கம் என்று சிம்பிளாக முடித்து விடுகிறோம். 

ஆனால் அந்த வாந்தி, மயக்கத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலானது இந்த ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம். கர்ப்பிணிகளுக்கு, கருவுற்ற தொடக்க மாதங்களான 1 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும். சிலருக்கு ஆறாம் மாதத்தின் இறுதியிலிருந்து படிப்படியாக வாந்தியும், தலைச்சுற்றலும் வெகுவாகக் குறைந்து பிரசவ நெருக்கத்தில் வாந்தி முற்றிலுமாக நின்று விடும். இது தான் வழக்கமான ஒன்று. ஆனால் மேலே குறிப்பிட்டதைப் போல உலகில் வெகு சிலருக்கு மட்டும் வாந்தியும், தலைச்சுற்றலும், மயக்கமும் பிரசவ நெருக்கத்திலும் கூட மிகக் கடுமையாக இருக்கும். அதைத் தான் மருத்துவர்கள் ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் அறிகுறிகள்...

  • உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்படும்.
  • நிரிழப்பின் காரணமாக உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான மினரல்கள் மற்றும் உப்புக்கள் உடலிலிருந்து அதிக அளவில் வெளியேறி விடும்.
  • இதனால் பாதிப்படைந்த கர்ப்பிணிகளின் உடல் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.
  • எந்த அளவுக்கு என்றால் தாயின் எடையானது கருவுறுவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் 5 சதவிகிதம் குறைய் வாய்ப்புகள் உண்டு. இந்த எடைக்குறைவு வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும்.
  • பொதுவாக இத்தகைய பாதிப்புகள் உலக கர்ப்பிணிகளிடையே நூற்றில் 1 சதவிகிதம் மட்டுமே வர வாய்ப்புகள் உண்டாம். ஆனால் கேட் தனது முதல் பிரசவ காலத்திலும் இதே விதமான சிக்கலைச் சந்திர்க்க நேர்ந்த காரணத்தால் அவருக்கு இந்த 3 ஆவது பிரசவத்தில் ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் பிரச்னையின் பாதிப்பு 15 சதவிகிதமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம்.

விளைவுகள்...

  • சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள மறந்தால் ஏற்படும் 
  • இதற்கு சரியான வகையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், இதன் பக்க விளைவுகள், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி குறைப்பிரசவமாகும் வாய்ப்பு உண்டாம்.
  • அது மட்டுமல்ல தாயின் உடலில் ஏற்படும் கடுமையான நீரிழப்பின் காரணமாக ரத்தத்தில் நீரின் சதவிகிதம் குறைந்து அடர்த்தி மேலும் அதிகரித்து பிசுபிசுப்புத் அதிக தன்மையுடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் ரத்தம் உறைவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டாம்.
  • அதோடு கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு பிரசவ காலம் வரை தொடர்வதால் அவர்களுடைய மனநிலையிலும் தொடர்ச்சியான மாறுதல்கள் ஏற்பட்டு அவர்களது நிலையைக் கவலக்குள்ளாக்கி பிரசவத்தை சிக்கலாக்கி விடக் கூடும்.

ஹைப்பர் மெசிஸ் கிராவிடம் குறைப்பாட்டைக் களைவதற்கான சிகிச்சை முறைகள் ஏதாவது...

இதற்கான குறிப்பிட்ட சிகிச்சைமுறை என்ற ஒன்றை இதுவரையிலும் வரையறுக்க முடிந்ததில்லை.  ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றி வந்தால் இந்தக் குறைபாட்டின் தீவிரம் குறைவதாக மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

  • கர்பிணிகள் எப்போதுமே வயிறு நிறைந்து திணறும் அளவுக்கு உண்ணக் கூடாது. பிடித்த பதார்த்தங்கள் என்றாலும் அவற்றை ஒரே வேளையில் நிறைவாக ருசித்து உண்பதைக் காட்டிலும், தனித்தனியாகப் பிரித்து பசி உணர்வு எழும் போது மட்டுமே, அதாவது ருசிக்காக அல்லாமல் பசிக்காக மட்டுமே உண்ணுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அதனால் கடுமையான வாந்தி என்பது படிப்படையாகக் குறைய வாய்ப்புகள் உண்டு.
  • இஞ்சியை அப்படியே பச்சையாகவோ அல்லது பிஸ்கட்டுகள், அல்லது மாத்திரைகள் வடிவத்திலோ எடுத்துக் கொண்டாலும் கடுமையான வாந்தி பாதிப்பு குறையும்.
  • தகுந்த மகப்பேறு மருத்துவர் உதவியுடன், அவரது வழிகாட்டுதலில் நே குவான் அக்குபிரஸ்ஸர் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கூட கடுமையான வாந்தி மற்றும் மயக்கத்திலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு.
  • ஹப்பர் மெசிஸ் கிரேவிடம் பாதிப்பால் உடலிலுள்ள விட்டமின்கள் குறிப்பாக நீரில் கரையும் விட்டமினான தயமின் இழப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், அம்மாதிரியான சூழலில் இயற்கையாகத் தயமின் அளவு அதிகமிருக்கக் கூடிய உணவுப் பொருட்களை உண்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com