மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்!

உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எது வேண்டாம்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்!

1. எது முதலில் நடக்க வேண்டும் – நிர்ணயித்துக் கொள்ளுங்கள்


உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எது வேண்டாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று பாருங்கள், அதனை நோக்கி வேலை செய்யுங்கள். உங்கள் திறமை, தகுதி, நீங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல நிலைமை வழிக்கு வரும். எந்தவிதமான வீட்டில் வாழ வேண்டும், எந்தவிதமான செயல் செய்ய வேண்டும் என்று நினைப்பதை விட்டு விட்டு, 'நான் ஆன்மீக நோக்கத்தில் இருக்க விரும்புகிறேன், நலமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்' என்று சொல்லத் தொடங்குங்கள். மற்ற விஷயங்கள் இதைச் சுற்றி தானாக சீரடையும்.

2. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம்

நீங்கள் அன்றாடம் பத்து மைல் நடக்கலாம், ஒரு விலை உயர்ந்த கார் வைத்திருக்கலாம் அல்லது ஒரு சைக்கிளில் பவனி வரலாம் – அதுவல்ல முக்கியம். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிப்பது அதுதான் முக்கியம், இல்லையா? மற்ற விஷயங்கள் எல்லாம் சௌகரியத்திற்காக நாம் செய்து கொள்ளும் ஏற்பாடுகள் மட்டுமே.

3. 'அவனைவிட நன்றாக இருக்க வேண்டும்' எனும் நோய்

இன்னொருவரை விட நன்றாய் வாழ்வதே நல்வாழ்வு என்று, அதைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் நினைக்கிறார்கள். இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது நல்வாழ்வு அல்ல, அது ஒரு நோய். உலகை இந்த நோய் மோசமாக பீடித்துள்ளது. வேறு யாரும் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காகவே பல பொருட்களை வைத்துக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர். உலகில் இருப்பதிலேயே பெரிய வைரத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், எதுவும் தெரியாமல் அதைப் பார்த்தால் அது வெறும் கல். ஆனால், சந்தையிலோ அதற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்படுத்திவிட்டோம், மதிப்பு கொடுத்துவிட்டோம். தெருவில் கிடக்கும் ஒரு சாதாரண கருங்கல்லை நீங்கள் கவனமாக பார்த்தால், அதுவும் அழகானதாகவே இருக்கிறது. நிறைய கிடைப்பதால் அதற்கு மதிப்பில்லாமலும் போய்விட்டது. உலகில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வைரங்கள் கிடைக்கின்றன. எல்லோரும் வாங்கவும் முடியாது. அதனால், அதை கழுத்தில், காதில், மூக்கில் அணிந்து கொள்கிறீர்கள். அது அழகாக இருப்பதால் அல்ல என்பதே யதார்த்தமான உண்மை.

4. வாழ்க்கையை வீணாக்காதீர்கள்

வாழ்க்கை குறித்த தவறான கருத்துக்களால் மனித வாழ்வு விஷமாகிக் கொண்டிருக்கிறது. இன்னொருவரை விட, நன்றாக இருக்க முயற்சி செய்து பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர். இன்னொருவரை விட நன்றாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வை வீணாக்கி இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை அப்படி வீணாக்காதீர்கள்.

5. உங்கள் முழு திறனோடு செயலாற்றுங்கள்

இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் முழுத் திறன் மலராது. வாழ்க்கையில் உங்களுக்கு எது முன்னுரிமை என்று உறுதி செய்து கொண்டபின், அதனை விட்டுவிடுங்கள். உங்கள் முழுத் திறனோடு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். என்ன நடக்க வேண்டுமோ, அது நிச்சயம் நடக்கும்.

நன்றி : ஈஷா மையம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com