இளம் வயதிலேயே சிகிச்சை! ஸ்மார்ட்ஃபோன் அபாயம்!

அமெரிக்காவில் பதிமூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன், வீடியோ
இளம் வயதிலேயே சிகிச்சை! ஸ்மார்ட்ஃபோன் அபாயம்!

அமெரிக்காவில் பதிமூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன், வீடியோ கேம் போன்ற பல டிஜிடல் விஷயங்களுக்கு அதி வேகமாக அடிமையாகிவருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியாமல் அவதியுறுகிறார்கள் பெற்றோர்கள். இவர்களுக்கான சிகிச்சை சமீபத்தில் அறிமுகமாகிவிட்டது என்கிறது அமெரிக்க மீடியா செய்தி.

சியாட்டில் அருகில் ‘தி ரீஸ்டார்ட் சென்டர்’ (The reSTART Life Centre) எனும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் வீடியோ கேம்களுக்கு தீவிரமாக அடிமையாகிவிட்ட இளைஞர்களுக்கான சிகிச்சையை வழங்கப்படுகிறது என்கிறது ஸ்கை ந்யூஸ்.

13 வயதிலிருந்து 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான இந்தச் சிகிச்சைக்கு செரினிட்டி மவுண்டன் (Serenity Mountain) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மெய்நிகர் உலகில் எந்த திசையிலிருந்து, எத்தகைய ஆபத்து ஏற்படும், அது எந்த அளவுக்கு இளம் வயதினரை பாதிப்படையச் செய்துவிடும் என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாது. ஆனால் அவற்றிலிருந்து ஒதுங்கி இயற்கை எழில் மிக்க ஓரிடத்தில் இளைஞர்கள் சிகிச்சை பெறும் போது அது அவர்களின் மன அமைதியை மீட்டுத் தரும் என்கிறார்கள் ரீஸ்டார்ட் மையத்தினர்.

ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட டெக்னாலஜி விஷயங்களில் இளைஞர்களின் கவனம் திரும்பிவிட்டால் அவர்கள் அதற்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றனர். வேறு எதிலும் அவர்களுக்கு இயற்கையான நாட்டம் குறைந்துபோய்விடும். இயல்பாக இருக்க வேண்டிய சில உணர்வுகள் கூட நாளாவட்டத்தில் மந்தமாகிவிடும் ஆபத்து ஃபோனில் நீண்ட நேரம் விளையாடுவதில் உள்ளது. தவிர மொபைல் ஃபோன்களில் உள்ள வண்ணங்களும் சப்தங்களும் இளம் வயதினரை வெகுவாக ஈர்த்துவிடுகிறது. ஒரு கேமை அவர்கள் விளையாடத் தொடங்கினால் மணிக்கணக்காக அதில் மூழ்கிவிடுகின்றனர். யாரேனும் அவர்களை அழைத்தால் கூட அவர்களுக்கு அந்தச் சமயத்தில் காதில் விழாது, அப்படியே விழுந்தாலும் சரியாக பதில் சொல்ல மாட்டார்கள். ஃபோனை நீங்கள் வாங்கிவிட்டால் அவர்களின் அதீத கோபத்துக்கு உள்ளாவீர்கள். அவர்களை கண்டிப்பதும் தண்டிப்பதும் ஒரு பயனும் அளிக்காத நிலையில் ரீஸ்டார்ட் போன்ற மையங்களின் தேவை அதிகரித்து வருகிறது என்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார் இந்த மையத்தின் தலைவர் டாக்டர் ஹிலாரி கேஷ்.

இளைஞர்களின் இந்த நவீன பிரச்னைக்கு இங்கு பிரத்யேகமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படும் இளைஞரின் பொதுவான குணநலன்களும், அவருடைய குடும்பப் பின்னணியும் முதலில் விசாரிக்கப்படும். ஒவ்வொரு விபரமாக சேகரித்து 8-12 வாரங்கள் வரையில் முதல் கட்ட ஆய்வில் பதிவு செய்வார்கள்.

இந்த காலகட்டத்தில் திறமையான மருத்துவ நிபுணர் குழுவொன்று இவர்களை ஆய்வு செய்யும். அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் மனம் விட்டுப் பேசி பல கேள்விகள் கேட்பதன் மூலம் டிஜிட்டல் மீடியாவுக்கு அவர்கள் எந்த அளவுக்கு அடிமைப்பட்டுள்ளார்கள் என்பதை முதலில் கண்டறிவார்கள். பிரச்னையின் தீவிரம் தெரிந்தால் தான் சிகிச்சை அளிப்பது எளிது. அவர்களின் தீவிரத்தன்மைக்கு ஏற்றபடி அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளும் கவுன்சிலிங்கும் தொடங்குவார்கள். முதலில் அவர்களையே மாற்றத்துக்குத் தயாராகும் மனநிலையை உருவாக்கிய பின்னர் தான் சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

சில இளைஞர்களுக்கு டிஜிட்டல் மீடியாவின் நன்மை தீமைகளை புரிய வைப்பது மிகவும் கடினம். தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றே அவர்கள் கருதுவார்கள். அவர்களை அணுகிப் பேசிப் புரிய வைப்பதற்கே நீண்ட காலம் ஆகும். சில சமயம் ஒருவருடம் கழித்தும் கூட தாங்கள் பிடித்த பிடியிலிருந்து சற்றும் கீழிறங்க மாட்டார்கள். இப்படி விதவிதமான இளைஞர்ளின் டிஜிட்டல் சார்ந்த புதுப் புது பிரச்னைகளை தீர்க்கவே ரீஸ்டார்ட் செயல்படுகிறது. சமீப காலமாக ஸ்பார்ட்ஃபோன் அடிக்‌ஷன் தான் இளைஞர்களை கவலைத்தரக்க அளவில் பாதித்துள்ளது.

அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துபவர்கள் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல், வேலை செய்யும் இடங்களில் மற்றும் சமூகத்தில் என எல்லா இடங்களிலும் பிரச்னையை சந்திப்பார்கள் என்கிறது இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஜர்னலில் வெளியாகியுள்ள புதிய ஆராய்ச்சியொன்றின் முடிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com