மன அழுத்தத்தால் மலட்டுத்தன்மையா? அல்லது மலட்டுத்தன்மையால் மன அழுத்தமா?

பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கக் கூடும். மன அழுத்தமே மலட்டுத் தன்மைக்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மன அழுத்தத்தால் மலட்டுத்தன்மையா? அல்லது மலட்டுத்தன்மையால் மன அழுத்தமா?

பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கக் கூடும். மன அழுத்தமே மலட்டுத் தன்மைக்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இப்போதெல்லாம் மலட்டுத்தன்மையால் தான் மன அழுத்தமே வருகிறது. அப்படியானால் மன அழுத்தத்துக்கு காரணம் மலட்டுத் தன்மையா? அல்லது மலட்டுத் தன்மையால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறதா? என்பது பெரும்பாலோரிடையே குழப்பத்திற்குரிய கேள்வியாக எஞ்சி விடுகிறது. இப்போது நீங்கள் சொல்லுங்கள் இந்தக் கேள்விக்கான பதிலை. கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? கதை தான். சைவப் பட்ஷிணிகள் வேண்டுமானால்; காற்று வந்ததால் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததால் காற்று வந்ததா? என்று மாற்றிக் கேட்டுக் கொள்ளலாம். அத்தனைக்கு விடை காண முடியாத குழப்பம் இந்த விஷயத்திலும் நிலவுகிறது என்பதே நிஜம்!

சரி இப்போது மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏன் மனிதர்களுக்கு வருகிறது? என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறதா... என்று பாருங்கள்;

மனிதர்களுக்கு மன அழுத்தம் எதற்கு வருகிறது? எத்தனை முயன்றாலும் செய்து முடிக்க முடியாத மிதமிஞ்சிய வேலைப்பளு, நெருங்கிய உறவுகளுடனான மன மற்றும் கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள், நெருங்கியவர்களுக்குச் செய்து விட்ட துரோகத்தை மனதில் பூட்டி வைக்கும் போது ஏற்படும் கலக்கம், உறவுகள் மற்றும் நட்புகளுக்கிடையே சந்தர்ப வசத்தில் வளர்ந்து விடும் தேவையற்ற சந்தேகம், தாழ்வு மனப்பான்மை, அறிந்தும், அறியாமலும் செய்து விட்ட தவறுகளுக்குப் பொறுப்பேற்கத் தயங்கும் கோழைத்தனம், மானுட வாழ்வின் பல்வேறு சிக்கல்களைக் கையாளத் தெரியாத தெளிவின்மை, புறக்கணிப்பு, பணம் மற்றும் கல்வியால் அமையும் வாழ்க்கைத் தரம் சார்ந்து ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த கோபங்கள், சந்தான பாக்கியம் இல்லாத குறை இத்யாதி, இத்யாதி என்று மனிதனுக்கு மன அழுத்தம் வரத்தக்க, உண்டாக்கத்தக்க காரணங்களை நாம் நீட்டித்துக் கொண்டே செல்லலாம். சரி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் எனும் போது அவற்றுக்கான தீர்வுகளுக்கும் அங்கே இடமிருக்கிறது என்று தானே அர்த்தம். ‘மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்ற பழமொழிக்கு இணங்க பிரச்னைகளைத் தருவது கடவுள் என நாம் நம்பினால் அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் அவரே உண்டாக்கி வைத்திருப்பார் தானே?! அப்படி எடுத்துக் கொண்டு இந்த விஷயத்தை அணுகினால் மன அழுத்தம் வருவதற்காக காரணங்களை அடுக்கியது போல அதைத் தீர்ப்பதற்கான காரணங்களையும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

உள்ளுக்குள் அடக்கி வைக்க, வைக்கத்தான் அது அழுத்தம். அதையே வெளியே தூக்கிப் போட்டு விட்டால் ஒரே நிமிடத்தில் நீர்க்குமிழி போல எந்தப் பிரச்னையும் லேசாகிக் காற்றில் பறந்து காணாமலாகி உடையும்! பெரும்பாலும் அதை நாம் செய்வதில்லை. காரணம் நமது பிடிவாதங்கள். மனிதன் தனது தனி மனிதப் பிடிவாதங்களை மட்டும் சற்றே தளர்த்திக் கொள்வான் எனில் அவனுக்கு மன அழுத்தமாவது ஒன்றாவது. வேறு எந்தப் பிரச்னையுமே வராது தவிர்க்கலாம். சக மனிதர்களிடம் எத்தனை துவேஷமிருந்தாலும் தேவை ஏற்படும் பட்சத்தில் மனம் விட்டு உங்களது கவலைகளை எங்காவது நம்பிக்கையான ஓரிடத்தில் இறக்கி வையுங்கள். மனதை ரணமாக்கிக் கொண்டிருக்கும் பிரச்னைகளை வேறு எங்கும் மனமுவந்து பகிர்ந்து கொள்ள இயலாவிட்டாலும் கூட உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதிக் கொள்வதன் மூலமாகவாவது உங்கள் பிரச்னைகளை ஆழ் மனதிலிருந்து கொஞ்சம் இறக்கி வைக்கப் பழகுங்கள். பிறகு மன அழுத்தம் தரத்தக்க வாழ்வின் தடைகள் அனைத்தும் எங்கோ காணாமல் போகும். மன அழுத்தம் என்று மருத்துவரை அணுகுவது சிலருக்கு வேண்டுமானால் பயன் தரலாம். ஆனால், பலருக்கும் மன அழுத்தத்திற்கான மருந்து தங்களிடமே இருப்பது தெரிந்தே இருப்பதே நல்லது. ஏனெனில் பிறகு வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாகி விடும். எவரெல்லாம், தங்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்காது, அவற்றுக்கான தீர்வுகளை நோக்கி முன் நகர்கிறார்களோ... அவர்களுக்கு மன அழுத்தம் என்பது நிரந்தரமாக வாய்ப்பே இல்லை. இதில் இன்னொரு விந்தையான விஷயம் என்னவென்றால், மன அழுத்தம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா? பிற உயிரினங்களுக்கிடையே இப்படி ஒரு விஷயமே கிடையாதா? என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமே! சரி இனி மலட்டுத்தன்மை பற்றிப் பார்க்கலாம்.

மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்ன?

இந்திய மருத்துவத்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எண்ணற்ற ஆய்வுகள் நடத்தப் பட்ட பின்னரும் கூட மனிதர்களில் மலட்டுத்தன்மைக்கு இன்னது தான் காரணம், அதைத் தீர்க்க இது தான் மருந்து என ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப் படவேயில்லை. இன்னதெல்லாம் காரணங்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது... இப்படியெல்லாம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கு தீர்வு காணலாம் எனச் சில வழிமுறைகள் முன் வைக்கப் படுகின்றனவே தவிர, மலட்டுத்தன்மை நீங்க நிரந்தரத் தீர்வென்ற ஒன்று இதுவரை கண்டிபிடிக்கப் படவேயில்லை. போலவே; மலட்டுத்தன்மை இதனால் தான் வருகிறது என்பதற்கும் எந்த விதமான முகாந்திரங்களும் இதுவரை அறியப்படவில்லை. மன அழுத்தம், தீரா வியாதி, விபத்து, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் முதற்கொண்டு தற்போது மடிக்கணினி, அலைபேசி, லேசர் விளக்குகளில் இருந்து கசியக் கூடிய ஒளி, ஒலி அலைகள் வரை பல காரணங்கள் மலட்டுத்தன்மைக்கான காரணிகளாகக் கருதப்பட்டாலும் அவையெல்லாம் தவிர்க்க முடியாத அங்கங்களாகி விட்ட இந்நாளில் மலட்டுத் தன்மை என்பதும் மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகத் தான் ஆகிக் கொண்டிருக்கிறது. 

மலட்டுத்தன்மை என்பது ஒரு நோயல்ல; அது ஒரு குறைபாடு மட்டுமே. தகுந்த முறையில் உடல் அல்லது உள சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது தீரக்கூடியது தான். தீர்வு என்பதற்கான அர்த்தம்  உடனடியாக மலட்டுத்தன்மை நீங்கி தாங்களே பயலாஜிக்கலாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது மட்டுமே இல்லை. ஒருவேளை குழந்தைப் பேறு கிட்டாவிட்டாலும் கூட, தத்தெடுத்தல் அல்லது சோதனைக்குழாய் முறையில் குழந்தைப் பேறு அடைவதும் கூட மலட்டுத்தன்மையை வெல்வதற்கான வழி தான் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மனதார நம்பவேண்டும். அப்படித்தான் இதனால் உண்டாகக்கூடிய மன அழுத்தத்தைக் கடக்க வேண்டும். 

மனித வாழ்வில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இந்த இரு முக்கியமான பிரச்னைகளையுமே இவ்விதமாக அணுகுவதே நல்ல பயனைத் தரக்கூடும். அதை விடுத்து மீண்டும் முதலிலிருந்து மன அழுத்தத்தால் தான் மலட்டுத் தன்மை வருகிறது என்றோ அல்லது மலட்டுத்தன்மையால் தான் மன அழுத்தம் வருகிறது என்றோ எண்ணிக் கொண்டு தானும் குழம்பி தன்னைச் சார்ந்தவர்களையும் குழப்பி வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளத் தேவை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com