இளமைக்கு என்ன கியாரண்டி?

சிறியவர்களாக இருக்கும் போது நமக்கெல்லாம் ஒரே கனவு. நான் சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிவிட வேண்டும்
இளமைக்கு என்ன கியாரண்டி?

சிறியவர்களாக இருக்கும் போது நமக்கெல்லாம் ஒரே கனவு. நான் சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிவிட வேண்டும் என்பதே அது. ஆனால் பெரியவர்களாகி வாழ்க்கையில் நாம் நினைத்தவை சில கிடைத்து, பல கிடைக்காமல் போகும் போது ஒரு ப்ளாஷ்பேக் போடுவோம். 'ஆஹா, என்னுடைய சின்ன வயசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தேன். நினைச்சது எல்லாமே எனக்கு கிடைச்சுது’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவோம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது பால்யமும் இளமைக்காலமும் அதைக் கடந்த முதிய பருவமும் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள். வயது அதிகரிக்க அனுபவமும் நிறைவும் நமக்கு ஏற்பட வேண்டும், மாறாக ஏக்கமும் சுய பச்சாதபமுமே நம்மில் பெரும்பாலோருக்கு மிஞ்சுகிறது.

இதற்கு யார் காரணம்? ஏன் இப்படி எனக்கு மட்டும் நிகழ்கிறது? என்று யோசிக்கிறீர்களா? சாட்சாத் அதற்கு காரணம் நாம் தான். நம்முடைய சிக்கல்களுக்கும் தோல்விகளுக்கும் நாமே தான் காரணம். அடுத்தவர் மீதோ ஆண்டவன் மீதோ அல்லது விதியின் மீதோ பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இன்றைய நம்முடைய நிலைக்கு வெளிக் காரணிகள் சில இருந்தாலும் உண்மையில் நாம் தான் காரணம். நம்முடைய தேர்வுகள் தான் நம்மை இந்த நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளது. ஏன் எனக்கு மட்டும் என்ற கேள்வியைக் கேட்காத மனிதர்கள் வெகு சிலரே. ஏன் என்றால் அதற்குக் காரணமும் நாம் தான். எதிலும் அதிருப்தி மற்றும் சுயநலம் இன்னும் சில குணக் கேடுகள் இவைதான். ஆச்சரியமாக உள்ளதா? ஆம். சிறிதும் சமரசம் இன்றி உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து பாருங்கள். கிடைக்கும் விடை உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும். 

வேலை, குடும்பம், அலுவலகம், சமூகம் என ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்ற புரிதல் கூட நமக்கு இருப்பதில்லை. அடிபடையாக ஒரு மனிதனுக்கு என்ன தேவை. உணவு, வசிப்பிடம், குடும்பம், நல்லுறவுகள் இவை போதாதா. இவற்றை சம்பாதித்துக் கொள்ள போதுமான பணம். ஆனால் அந்தப் போதுமான பணம் போதவே இல்லை என்பதால் தான் மேலும் மேலும் பணம் தேடி ஓடுகிறோம். அப்படி ஓடும் போது உயிர் வாழ்தலுக்கு அடிப்படை விஷயமான உணவைப் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி உணவை தவிர்ப்த்து அல்லது தாமதப்படுத்தி அல்லது குப்பை உணவுகளை சாப்பிட்டோ உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். மன அழுத்தம், ரத்த அழுத்தம், இதயக் கோளாறு என விதம் விதமான நோய்கள் ஒவ்வொன்றும் இதோ நான் இருக்கிறேன் என்று தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு கவனக் குறைவாக இருக்கிறோம். 

எதற்காக சம்பாதிக்கிறோம்? ஆர அமர சாப்பிட வழியின்றி, ரசித்துப் பிடித்து வாழ வகையின்றி பந்தயத்துக்கு நேர்ந்துவிட்டது  போல் நமக்கு இந்த ஓட்டம் அவசரம் ஏன்? குடும்பத்துடன் அமர்ந்து நல்ல சத்தான உணவை சாப்பிடுவதில் என்ன பிரச்னை? காலை உணவைச் சாப்பிடச் சொல்லி நம் உடலில் இயங்கும் பயாலாஜிகல் க்ளாக் பசி உணர்வு எனும் அலாரத்தை அடிக்கும். போலவே எப்போதெல்லாம் தேவையோ மதியம் மாலை இரவு என அது உள்ளார்ந்த குரல் கொடுக்கும். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழக்கப்பட்டால் ஒருகட்டத்தில் அது குழம்பி அலாரம் தருவதை நிறுத்திவிடும். நன்றாகப் பசியெடுத்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏதோ ஒரு நேரத்துக்கு என்னமோ ஒரு உணவு என வாழப் பழகிவிட்டால் உடல் நம்மை ஒரு கட்டத்தி பழிவாங்கிவிடுவது நிச்சயம். மேலும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, நம் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கத் தொடங்கும். எனவே, குறைந்த அளவு கொழுப்புச்சத்து உடைய உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

தினமும் ஆறு முதல் எட்டு க்ளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. அசைவப் பிரியராக இருந்தால் கோழி, இறைச்சி உணவுகள் அடிக்கடி சாப்பிடாமல் தினமும் மீன் உணவை சாப்பிடலாம். இதில் ஒமேகா எனும் அரிய சத்து உள்ளது. செல் மீட்டுருவாக்கத்துக்கு மிகவும் நல்லது. எனவே உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடன் இருப்பது தான் இளமையை தக்க வைப்பதற்கான முதல் படி.

அடுத்து மனம் சார்ந்த அமைதியும் திருப்தி மிகவும் முக்கியம். அவனிடம் கார் இருக்கிறது, என்னிடம் பைக் கூட இல்லை. ஒரு சைக்கிளுக்காவது வழி இருக்கிறதா என்று நினைத்துப் பொறுமிக் கொண்டிருந்தால் நடக்கக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். காரணம் மனத்தில் எதிர்மறை எண்ணங்களான பொறாமை, கோபம், வெறுப்பு ஆகியவை ஒருபோதும் நம்மை ஏற்றமான வழிகளுக்கு இட்டுச் செல்லாது. அது ஒரு புதைகுழி போலத்தான். ஒருநாள் இல்லையெனில் மற்றொரு நாள் நம்மை அமிழ்த்திவிடும். நமக்கான அரிசியில் நம்முடைய பெயர் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மையிலும் உண்மை. நமக்குக் கிடைக்கவேண்டியதை நியாயமான முறையில் நமக்குக் கிடைக்கச் செய்வதுதான் வாழ்க்கையில் முக்கியமானது. அடித்துப் பிடுங்கி, ஊழல் செய்து, அடுத்தவர் வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் பணம் வந்த வழி தெரியாது போய்விடும்.

நம்மை மேன்மையான உயிர்களாக தக்க வைக்க எளிமையும், அன்பும், சக மனிதர்கள் மீதான அக்கறையும், எளியோர் மீதான கருணையும் தான். அன்பு, நன்றி, மன்னிப்பு இவை மூன்றும் நேர்மறையானவை. உங்களை முன்னேற்றப் பாதைக்கு மேன்மேலும் உயர்த்திச் செல்லும் மந்திரத்தன்மை உடையவை. இக்குணங்கள் எல்லோருக்கும் இயல்பில் இருப்பதுதான். ஆனால் அவற்றை முன்னெடுக்க விடாமல் ஈகோ தடுக்கும். நேர்முறை உணர்வுடன் வாழ்ந்தால் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அப்போது உள் அமைதியும் ஏற்படும். அது முகத்தில் புன்னகையாக வெளிப்படும். இயல்பாகவே சிரிப்புடன் இருப்பவர்களைப் பாருங்கள், அவர்களின் வயதைக் கணிக்கவே முடியாது. அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் அவர்களின் வயதை தள்ளிப்போட்டுவிட்டது. இளமையும் வசீகரமும் அவர்களுக்கு இவ்வகையில் வசமானது. 

இத்தகைய இளமையுடன் இருக்க நம்மை நாமே உள்ளும் புறமும் சரியாக பேணுவோம். அப்போது நம்முடைய இளமைக்கு நாமே கியாரண்டி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com