சந்தோஷமா இருக்க ஆசையா? இதோ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்!

சந்தோஷமா இருக்க ஆசையா? இதோ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்!

சந்தோஷம் என்ற வார்த்தையில் இருக்கும் சந்தோஷ நொடி கூட பலரது வாழ்க்கையில்

சந்தோஷம் என்ற வார்த்தையில் இருக்கும் சந்தோஷ நொடி கூட பலரது வாழ்க்கையில் இல்லாமல் போவது சோகம். அதெப்படி தொடர்ந்து துயரில் இருக்கும் வாழ்க்கை உண்டா என்று இந்தப் பக்கம் இருப்பவர்கள், அதாவது சந்தோஷத் தருணங்களை அதிகப்படியாக உணர்ந்தவர்கள் நினைக்கலாம். சந்தோஷம் துக்கம் ரெண்டும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை என்று சிலர் தத்துவார்த்தமாகச் சொல்லலாம். ஆனால் வெகு சிலர் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சந்தோஷம் வரும் போது பெரிய பூட்டாகப் போட்டுத் தன்னை மறைத்துக் கொண்டு அதன் இருப்பை மறந்து விடுகின்றனர். அவர்களுக்கான பதிவு இது.

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள், அடுத்தவர் வாழ்க்கையை அல்ல!

'நான் மட்டும் அன்னிக்கு எனக்கு பிடிச்ச படிப்பை படிச்சிருந்தா... இந்நேரத்துக்கு என்ன ஆயிருப்பேன் தெரியுமா?', 'அப்பவே சொன்னேன் எனக்கு அந்த வேலை தான் செட் ஆகும்னு ஆனா இவர் சொன்னதாலே அதை தட்டிக் கழிச்சிட்டு இப்ப சிரமப்படறேன்’, 'எத்தனை வருஷம் காதலிச்சோம், எல்லாத்தையும் எதிர்த்து போராடி அன்னிக்கே ஒரு முடிவு எடுத்திருந்தா இப்படி பொருந்தாத மனசோடு ஒரு திருமண வாழ்க்கையில் சிக்கியிருக்க மாட்டேன்’, இதில் ஒன்றினை வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கணத்தில் உணர்ந்திருப்பீர்கள். தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வேறு வழியே இல்லாத இக்கட்டான நிலையை கடந்து வந்திருக்காதவர்கள் யாருமில்லை.

அதன்பின் ட்ரெட்மில்லில் ஓடுவது போல் அன்றிலிருந்து இன்று வரை வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருப்பது போன்ற நிலைதான் பெரும்பாலோருக்கும். தினம் தினம் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்க, ஆயுள் ஒரு பக்கம் குறைந்து கொண்டே இருக்க, ஆசைகளின் கனம் மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த முன்முனைப் போராட்டத்தில் யார் ஜெயிப்பது யார் தோற்பது? ரெண்டுமே நீங்கள் தான்.

ஆசைகளை கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத வாழ்க்கை என்பது சாபம். உங்கள் கனவுகளை வெட்டிச் சாயக்க சமூக, குடும்ப, கலாச்சார காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பழக்கப்பட்ட வாழ்க்கையின் கூண்டுக்கிளியாக உங்களை நீங்கள்தான் வடிவமைத்துக் கொண்டு விட்டீர்கள். ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். அன்று உங்கள் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்று புலம்பித் தவித்துக் கொண்டிருக்க வேண்டாம். எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டாம்.

கடந்த ஒன்றை மாற்ற இயலாது எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள். பழைய வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள் உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை புத்தம் புதியது. உங்களுக்கே உரிய பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள் உங்கள் மீது விழ முதலில் உங்களை அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். சந்தோஷம் நிம்மதி எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும் வரும். புரிந்ததா? 

2. வேலை வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

சிலர் எப்போதும் வேலை வேலை என்று வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக வேலைக்காக தங்களை அப்படியே ஒப்புக் கொடுத்துவிடுவார்கள். வாரக்கணக்காக, வருடக்கணக்காக ஓய்வு ஒழிச்சலின்றி ஒரு இயந்திரம் போல வேலை செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வேறு வழி? ஆறு நபர்கள் சாப்பிட வேண்டும்? படிக்க வேண்டும், மானத்துடன் வாழ வேண்டும் என்ற பதில் சுடும் நிஜம் தான். ஆனால் அதற்கென்று இப்படி ஒரேடியாக சந்தோஷங்களைப் புதைத்து தியாகியாக உங்களை உருவகப்படுத்திக் கொண்டு சின்ன சின்ன சந்தோஷங்களையும் தூற எறிந்துவிடாதீர்கள். அப்படி செய்தால் ஒரு நாள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் உட்காரும் போதுதான் உங்களுக்குத் தெரிய வரும்.

எத்தனை நாள்கள் வேலைப் பளுவில் உறங்கிவிட்டு மறுநாள் காலை அதே வேகத்துடன் ஓடியதால் விளைந்த பயன். சிறிதளவு பணம் கையிருப்பு நிச்சயம். ஆனால் காலம்? குடும்பத்தை ஒதுக்கிப் பழக்கப்படுத்தியதால் அதே குடும்பம் இப்போது உங்களுடன் ஒட்டாது. அவர்கள் ஒருபக்கம் நீங்கள் மறுபக்கம் என இரு பிரிவுகளாக மாறியிருப்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.

மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பேச மறுத்து, வெளியூர்களுக்குச் சென்று திரும்பி என அனேக விஷயங்கள் இல்லாமல் காலமும் கடந்துபோய் கசப்பான மனநிலை மட்டுமே எஞ்சி நிற்கக் கூடும். இனியாவது என்ன செய்யவேண்டும் என்று விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக வேலை முக்கியம் என்னும் சிந்தனை முக்கியம். உங்களை நம்பி வந்தவர்களை, நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை அரவணைக்க வேண்டும். நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் முக்கியமான விஷயம். 

3. உண்மையாக இருங்கள்!

உங்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்துபவராக இருங்கள். மனத்தில் ஒன்று நினைத்தும் வெளியில் ஒன்றைச் சொல்லியும் முகமூடிகளுடன் வாழ்ந்தீர்கள் என்றால் உங்கள் சந்தோஷமும் புஸ்வானம் போலத்தான். பெரிதாக பொங்கி வரும் ஆனால் நிலைத்திருக்காது.

நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம் ஆனால் புத்திஜீவிகள் அதிகமாக சந்தோஷப்படுவதில்லை. அதை முட்டாள்தனம் என நினைப்பார்கள். நடந்து போகும்போது மழைச் சாரல் ஏற்பட்டு ஒரு வானவில்லை பார்த்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான கணம் எது இருக்க முடியும்? ஆனால் புத்தியால் வாழும் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள். எப்போதும் மூளைக்கு மட்டும் இடம் கொடுக்காமல் மனத்தாலும் வாழப் பழகுங்கள்.

உங்கள் உடல் சொல்வதையும் மனம் சொல்வதையும் கேட்கப் பழகுங்கள். உடலுக்கு ஓய்வு தேவை என்றால் நிச்சயம் அது சோர்வின் மூலம் எடுத்துரைக்கும். அப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்வது தான் அதற்கு மகிழ்ச்சி அளிக்கும். மன அழுத்தம், பிரச்னையில் சிக்கிக் கொள்வது போன்ற தருணங்களில் அதிலிருந்து விடுபட மனதே வழிவகுக்கும். நீங்கள் சும்மா ஒப்புக் கொடுக்க வேண்டும். எதிர் முயற்சிகள் செய்யாமல் என்ன நடக்கிறது என்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து அறுவடையும் கொடுக்கும்.

4. நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்!

'நாங்க எவ்வளவு நெருக்கம்னு தெரியுமா? ஒரே டீ ஷர்ட்டை ரெண்டு பேரும் பயன்படுத்தினோம்’ என்று ப்ளாஷ்பேக் சொல்லிக் கொண்டிருக்காமல் அந்த நட்பை இன்றைய தேதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப் பாருங்கள். தொடர்பில் இருங்கள் என்று செல்போனில் குறுஞ்செய்தியாக பதிவிடும் அந்த வார்த்தையை உண்மையில் செய்கிறீர்களா என்று யோசியுங்கள்.

ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கின்றன என்பதில் தான் உள்ளது. உங்கள் தினங்கள் அருமையாக அமைய, அதில் எத்தனை பொன்னான தருணங்கள் இருந்தன என்பது முக்கியம். உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள் என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கின்றனர் என்பது தான் விஷயம்.

ஆத்மார்த்தமாக உங்களுடன் இணைந்திருக்கும் நல்ல நட்புகள் கிடைப்பது அபூர்வம். அதை பொத்தி வைத்திருக்கப் பழகுங்கள். நண்பர்கள் என்பது நம்பர்களிலும் இல்லை. ஆழமான நட்பில் தான் உள்ளது. அதன் பின் மகிழ்ச்சி எப்படி தொலைந்து ஆகும்? எப்போதும் மகிழ்ச்சி வெள்ளம் தான்!

5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவு எடுங்கள்!

சந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம். அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைபிடித்துப் பாருங்கள். அது உங்களுடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். அதற்கு எதிராக எதாவது நடந்தால், உடனடியாக சந்தோஷத்தை உதறிவிட்டு கோபத்துக்கோ வெறுப்புக்கோ தாவி விடுவது யார்? சாட்சாத் நீங்களே தான். உங்களைச் சுற்றி எது நடந்தாலும் உடனடியாக நீங்கள் தானே ரியாக்ட் செய்கிறீர்கள்? ஏன் அப்படி? ஒரு நிமிடம் நின்று நிதானித்து காரண காரியங்களை யோசித்ததுண்டா? இது வரை இல்லையென்றால், இனிமேலாவது அப்படிச் செய்து பாருங்கள். உங்களுடைய அனுமதி இல்லாமல் யாரும் உங்களை துன்பப்படுத்திவிட முடியாது. அது உங்கள் கைகளில் இருக்கும் போது ஏன் மற்றவர்களை அனுமதிக்கிறீர்கள்? 

எல்லாவற்றையும் மீறி சந்தர்ப்ப சூழலில் பிரச்னை துயர் வந்துவிட்டால் அது எப்படி வந்ததோ வந்த வழியே போய்விடும். அதில் மூழ்கிப் போகாமல் இருங்கள். மனத்தை சமன் நிலை குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மற்ற படிப்பு எல்லாம் படிப்பல்ல, தன்னை எப்படி நடத்திக் கொள்வது எனும் தெளிவுதான் சிறந்த படிப்பு. ஆக்கபூர்வமாக இருங்கள். நேர்மறை சிந்தனைகளால் எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலிலும் விடுபடும் வழி கிடைக்கும். அல்லது அந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் மனப்பக்குவம் வாய்க்கும்.  

நம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் வாழ்தல் இனிது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com