நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி? 

புத்தர் ஆசையை அறவேவிடச் சொன்னார். நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற
நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி? 

புத்தர் ஆசையை அறவேவிடச் சொன்னார். நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற பெயரில் தொடர் எழுதினீர்கள், ஏன்?

சத்குரு: 2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர் என்ன சொன்னாரோ, யார் அதை எப்படித் திரித்து சொன்னார்களோ, யாருக்குத் தெரியும்? இங்கே உங்கள் கண் முன்னால் ஒன்று நடப்பதை இன்னொருவரிடம் அங்கே அப்படி நடந்தது என்பீர்கள். அவர் அதை இன்னொருவரிடம் அவர் பாணியில் விளக்கிச் சொல்வார். இப்படியே அது ஒரு சுற்று சுற்றி மீண்டும் உங்கள் காதுக்கே வரும்போது, நீங்கள் சொன்னது முழுவதும் மாறி இருக்கும். உங்களுக்கே அது பெரும் வியப்பாக இருக்கும்.

நான் பேசுவதை உட்கார்ந்து கேட்டுவிட்டு, வீட்டில் போய் அவர்களுக்குப் புரிந்தவிதமாகப் போதிக்கத் தொடங்குவார்கள். ஒரேநாளில் நான் பேசியதை மாற்றிக் கூறிவிடுவார்கள். அப்படி இருக்கும்போது 2500 வருடங்களில் எவ்வளவோ நடந்திருக்க முடியும், இல்லையா?

நீங்கள் ஆசையை விட்டுவிட்டு இங்கே இருக்க முடியுமா? ஆசையை விடவேண்டும் என்பதே ஒரு மிகப்பெரும் ஆசைதானே! துன்பங்கள், ஆசைகளால் வருவதில்லை. நிறைவேறாத ஆசைகளால்தான் வருகின்றன. ஆசையை விட்டுவிட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே நிறைவேறப் போவதில்லை. அப்படியானால் புத்தர் முட்டாள்தனமாய் கூறியிருக்க முடியுமா? அவரது வாழ்க்கையை சிறிது ஆழமாய்ப் பாருங்கள். அவர் ஞானம் பெற்ற நாளில் இருந்து ஏறத்தாழ 40 வருடங்கள், தேசத்தின் எல்லாப் பகுதிகளுக்கும், கிராமம், கிராமமாக ஒவ்வொரு பகுதிக்கும் நடந்தே சென்றார். ஆசையே இல்லாத மனிதன் எதற்காக இப்படிச் செயல்பட வேண்டும்? அந்த மனிதருக்கு ஆசை இருக்கவில்லை என்றா நினைக்கிறீர்கள்?

பேராசை வைத்திருந்தார் அவர். எனக்குக் கிடைத்த பேரானந்தம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பேராசை அவருக்கு. எனக்கும் அப்படித்தான். ஒவ்வொரு உயிரும் என்னைப் போல் ஆனந்தமாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. நீங்கள் சின்னச் சின்ன ஆசை வைத்துக்கொள்கிறீர்கள். ஆசையில் ஏன் கஞ்சத்தனம்? என் நலனில் எப்படி எனக்கு ஆசையோ… அதேவிதமாக எல்லா உயிர்களின் நலன்மீதும் ஆசை வந்துவிட்டால் அது பேராசைதான். அதனால்தான் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’.

நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி? 

நீங்கள் பேராசையை வெல்லக்கூடாது. அதை இன்னும் அதிகரித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் பேராசையை வெல்லவேண்டாம் என்று நான் சொல்லக் காரணம், அதை வெல்வது நடக்காத காரியம். ‘நான் பேராசையை அடக்கிவிட்டேன்’ என்பதெல்லாம் வெறும் நடிப்பு. பேராசை என்றால் என்ன? இருப்பவை எல்லாம் உங்களுக்கே வேண்டும். ‘உங்களுக்கே’ என்பது என்ன? நீங்கள், உங்கள் குடும்பம்… சிலநேரங்களில் உங்கள் சமூகம். நான் சொல்வதெல்லாம், உங்கள் பேராசையில் எல்லோரையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்!

எதற்காக பேராசையைத் துறக்க நினைக்கிறீர்கள்? எல்லோரையும் சேர்த்துக் கொண்டால், பேராசையும் நல்லது தான். எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது, இந்த முழு பிரபஞ்சத்திற்குமே ஆசைப்படுவது பேராசையின் உச்சம் தான், இல்லையா? இதுதான் ஆன்மீகம். அதனால் இப்போது உங்களுக்கிருக்கும் பேராசை போதாது. தயவுசெய்து உங்கள் பேராசையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பேராசையை சுருக்க நினைக்காதீர்கள். அதை எவ்வளவு முடியுமோ, எந்த அளவிற்கு அது விரிவடையுமோ, அந்த அளவிற்கு அதை விரியச் செய்யுங்கள்… அப்போது நீங்கள் அற்புதமாக வாழ்வீர்கள். நான் மிகுந்த பேராசைக்காரன். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் நான் அறிந்திருப்பது போல் வாழ்வை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரே ஒருவர் கூட இந்த சாத்தியத்தை உணராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். எப்படியாவது இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். ஏனெனில் நான் மிகமிக அதிகமாக பேராசை கொண்டவன். ஒரு பத்து பேரையோ, பத்தாயிரம் பேரையோ இல்லை பத்து லட்சம் பேரையோ இது எட்டினாலும் போதாது. இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் இது சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நன்றி - ஈஷா மையம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com