நீங்க எந்த டைப்? மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காதவரா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்!

மற்றவர்கள் பேசும் போது அவர்கள் சொல்வதை நாம் கேட்பது பொதுவாக அனைவரும் செய்வதே.
நீங்க எந்த டைப்? மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காதவரா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்!

மற்றவர்கள் பேசும் போது அவர்கள் சொல்வதை நாம் கேட்பது பொதுவாக அனைவரும் செய்வதே. காது கொடுத்து கேட்பதை நாம் பல விதங்களில்
செய்வதுண்டு.

தினசரி வாழ்க்கையில் செய்வதை 'நடைமுறை கேட்பது' (Practical listening) என்பார்கள். இதை, தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய உபயோகிப்போம். 'என்ன,முடிச்சியா?’, ’சாப்பிட்டியா?’ என்று கேட்டறிவது போல், சாதாரண வாழ்கையில் பரிமாறப்படும் தகவல்கள் இதில் அடங்கும். மற்றவர்களுடன் மேலோட்டமாகப் பேசும் போதும் இது இயங்கும், உதாரணமாகச் சாலையில் பார்ப்பவரை 'எப்படி இருக்கீங்க?’, அல்லது 'எல்லாம் ஓகே தானே?’ என்ற விசாரிப்புகள்.

இந்த நடைமுறை கேட்பதில், மற்றவர் நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு பேச பெரும்பாலும் யாரும் முயற்சிப்பதில்லை. வாழ்க்கையின் சிறுசிறு விவகாரங்கள், உறவாடல்கள் நடத்திக் கொள்வதுதான் குறிக்கோளே தவிர, யாரிடம் பேசுகிறோமோ அவர்களின் மனநிலை அறிவதற்காக அல்ல. பதில் வராவிட்டால் கூட சில சமயம் அடுத்ததிற்கு நகர்ந்து விடுவோம்.

மற்றொரு வழிமுறை 'தொடர்புடன் கேட்பது’ (Relational listening). இதில் நம்முடன் பேசிக் கொண்டிருப்பவரின் நிலை, அவர்களின் உணர்வுகள், நமக்கு என்ன தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதில் கவனத்தை செலுத்துவோம். சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், நாம் எப்போதும் இப்படிச் செய்வது இல்லை. அதற்குப் பதிலாக, பெரும்பாலும் நாம் மற்றவர்களுடன் பேசும் போது நாம் பேசுவதற்கு எப்பொழுது வாய்ப்பு வரும் என்று அவர்கள் சொல்வதை முடிப்பதில் ஆர்வம் காட்டுவோம்! அதற்கான சைகைகளான, வாயை கொஞ்சம் திறந்த படி, தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு, 'ஆ’, 'நா..’ என்றெல்லாம் ஆரம்பித்த படி காத்திருப்போம். 

இப்படி நிகழ்வதற்குக் காரணம் உண்டு. அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருக்கையில், நம் சிந்தனை வேறு ஒன்றுடன் இருக்கலாம். அவர்கள் பகிர்ந்து
கொள்ளுவதைப் போல் வேறொன்று நமக்கு நடந்ததையோ, கேட்டதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருக்கலாம். இப்படி இருந்தால், நாம் காத்திருப்பதே,  
பதிலை அளிக்கத்தான். சில நேரங்களில், சொல்லுபவரை விட நாம் ஒரு படி மேலாகச் சொல்வோம் என்பதை நிரூபிப்பதே நோக்கம் ஆகும்.

சொல்பவருக்கு, தான் சொன்னதைக் கேட்பது போல் நாம் பாவனை செய்தோம் என்று கூடத் தோன்றலாம். நிஜத்தில், சொல்பவரின் விஷயத்தை நாம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இத்துடன், பேசிக்கொண்டு இருப்பவரைக் கண்ணோடு கண் பார்க்காமல், அவர்களைத் தாண்டி எதையோ கவனித்தபடி அவர்கள் சொல்வதை காதில் போட்டுக் கொண்டிருப்போம். நாமே கூட, இதை அனுபவித்திருக்கலாம். அவர்கள் சொல்வதை பாதியில் நிறுத்தி விடுவார்கள். அதற்கு 'ஓ, அவ்வளவு தானா?’ என்று நாம் கூறும்போது, சொல்லுவோரின் முக வாட்டத்தைக் கவனித்தால், நமக்கு நம் தவறு புரிய வரலாம், ஏதோ மிஸ்ஸிங் என்று. சில சமயங்களில் இதைத் திருத்தி, மன்னிப்பு கேட்டு, அவர்களைத் தொடர்ந்து சொல்லச் சொல்வோம். கவனிக்காமல் இருந்து விட்டால், சொல்லுபவர் தன் பேச்சை நிறுத்தி கொள்ளவும் செய்வார்கள். இதனாலேயே அடுத்த முறை நம்மிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். 

நமக்கும், இது நேர்ந்திருக்கலாம். அப்படியும் ஏன் மற்றவர்களுக்கு அதையே நாமும் செய்கிறோம்? தொடர்புடன் கேட்பதில், சொல்லுபவரும், கேட்பவரும் ஒருங்கிணைந்து பேச்சை எடுத்துச் செல்வார்கள். இப்படி நேர்வதற்காக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்: 

இதுவரையில் கேட்டதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு நாம் சொல்ல வந்ததைச் சொல்லலாம். அப்பொழுது, அவர்கள் பகிர்ந்ததை எந்த அளவிற்கு நாம் கேட்டு உள் வாங்கிக் கொண்டோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறோம். கேட்கும் விஷயத்தில் ஆர்வமுள்ளதைத் தெரிவிக்க வேண்டும்: 'ம்ம்ம், ….’, 'இன்னும் சொல்லுங்க’, 'விளக்கம் அளிக்க முடியுமா?’

நாம் கேட்கும் கேள்விகள் வெறும் ஆம்/ இல்லை பதில் உள்ளதாக  இல்லாமல், அவர்கள் மேலும் தகவல்கள் சொல்லுவதற்கு வாய்ப்பு அமைத்துக் கொடுக்க வேண்டும். இப்படித் தொடர்புடன் கேட்பதில், அவர்களுக்கு முகம் கொடுத்துப் பேசுவோம். அவர்கள் கண்களிலிருந்து நம் கண்கள் நகராது. நம் எண்ணங்கள் எதை எதையோ நினைத்து ஓடிக்கொண்டு இருக்காது. அவர்கள் சொல்லுக்கு ஏற்றவாறு நம் வார்த்தைகள், நம் குரலின் த்வனி, சப்புக் கொட்டுவது, சைகைகள் எல்லாம் பொருத்தமாக இருக்கும். இதன் மிக முக்கியமான விளைவாக, சொல்பவர் தான் சொல்வது முழுமையாக கேட்கப்படுகிறது என்று எண்ணுவார்கள். தாம் சொல்வதைக் கேட்க யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதே மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்!

வாய்ச் சொற்களுடன், நம் உடலின் அசைவுகளாலும் சொல் இல்லாமலே நாம் உற்றுக் கேட்பதை தெரிவிக்க முடியும். இதைத்தான் 'நான்-வெர்பல் கம்யூனிகேஷன்’ (Non-verbal communication), 'பாடி லேங்குவேஜ்’ (Body Language) என்பார்கள். 20% தான் வார்த்தைகள், 80% நம் உடலின் பேச்சுகள்!

இதிலிருந்து 'ஆழ்ந்து கேட்பது’ (Profound listening) உருவாகும். மேல் விவரித்த, தொடர்புடன் கேட்பதின் நுணுக்கங்களுடன், கேட்பவரின் ஒவ்வொரு உணர் திறன்கள் உட்கொள்ளும் விவரங்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, அவற்றை புரிந்து கொள்வதற்கு உபயோகிப்பார்கள். வாய் வார்த்தைகள் மட்டும் அல்ல, இந்த ஆழ்ந்து கேட்பதில் நம் கண்கள் பார்ப்பதை, காதுகள் கேட்பதை, மூக்கு முகர்வதை, ரோமங்கள் உணர்வதை எல்லாம் சொல்லப்படுகிற விஷயங்களுடன் இணைத்து அர்த்தங்களைப் புரிந்து கொள்வோம்.  உதாரணமாக, சொல்பவரின் அசைவுகள், அவர்களின் விசும்பல், சிரிப்பு என்ற சத்தங்கள், வியர்வை-மணம், சொல்வதினால் நம் ரோமங்களின் பாதிப்பு இவையெல்லாம் சொல்லும் வார்த்தைகளுடன் ஒன்றிணைந்தால், அதன் தகவல் ஒன்று.  ஒன்றிணையாவிட்டால், அதன் தகவல் வேறு.

ஆழ்ந்து கேட்டால், மௌனமும் பேசும். பாஷையாகும். அதாவது, சொல்பவர் சற்று நிறுத்தி விட்டால், கேட்பவரிடமிருந்து அதைத் தொடர வேண்டும் என்ற அவசரமோ, அழுத்தமோ இருக்காது. அடுத்தவருக்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை தெளிவாகத் தெரியும். இருவரின் மனநிலையும் ஒன்றிணைந்திருக்கும். வித்தியாசங்கள் நேர்ந்தால், அதுவும் ஏற்கப் படும்.

இப்படி ஒரு பரந்த நிலை நிலவுவதால், இன்னொரு முக்கியமான அம்சம் தோன்றுகிறது. 'சுய பிரதிபலிப்பு’ (Self-reflection) வந்து விடுகிறது. இதன் வருகையினால், 'நான் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறேன்? 'நான் சொல்வதில் எது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது? 'சொல்பவர், என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்? 'அவர்கள் சொல்வதில், எதைப் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது?’ இந்தத் தெளிவு பெறவே பல நேரத்தில் மொளனம் தேவையாகிறது. மேலும் பல தெளிவு பெறும் பாதைகள் அமைகின்றன. சொல்வதை ஆக்கப் பூர்வமாக படைப்பது, தன்னுடைய தனித்துவம் பங்கமாகாமல் இருப்பது, ஆழமான தெளிவு பெறுவது, நிலையாக இருப்பது என்று பல விதங்கள். அமைதியாக இருந்தால் மேலும் கேட்கும்!

மாலதி சுவாமிநாதன்
மன நலம் மற்றும் கல்வி ஆலோசகர் 
malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com