நம்முள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை நாம் ஏன் ஜனவரி-1 முதல் துவங்க நினைக்கிறோம்? 

எதைச் செய்ய ஆரம்பிக்கிறோமோ, அதை 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால், மாற்றம் நிலைத்து விடும் என்பது கேள்விப் பட்டிருக்கிறோம்.
நம்முள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை நாம் ஏன் ஜனவரி-1 முதல் துவங்க நினைக்கிறோம்? 

2018-ல், இது வரையில் நம் நடைமுறையில் இல்லாததைக் கொண்டு வர முயற்சிக்கலாமா?

புதிய வருடத்தை புதிய எண்ணங்களுடன், புதிய செயல்களுடன், புதிய விதத்தில் ஆரம்பிப்பது என்பது வழக்கமாகச் செய்வதே. “இதை எல்லாம் இந்த வருடம் செய்தே தீருவேன்” என்ற முடிவு எடுப்பதும் இதில் அடங்கும். எதைச் செய்ய ஆரம்பிக்கிறோமோ, அதை 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால், மாற்றம் நிலைத்து விடும் என்பது கேள்விப் பட்டிருக்கிறோம்.

மாற்றத்தை நாம் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தே துவங்க வேண்டும் என்று  நிர்ணயித்து, உறுதியாக இருப்போம். அதனாலேயே, டிசம்பர் 31வது மாலை நெருங்க, இன்னமும் சுருசுருப்பு கூடிவிட, ஒரு பரபரப்புடன் இருப்போம். நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போது அதனுடன் வரும் ஆவலால் தவிப்பூட்டும் சேர்ந்து விடும். செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வதும், நம்மை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பது என்ற அணுகுமுறையும் மிக நல்ல விஷயமே!

புது வருடத்தின் ஆரம்பக் காலத்தில் இன்னொரு விஷயமும் வருவதுண்டு. வருடப்பிறப்பை முன்னிட்டு, நாம் எந்த அளவிற்குச் சந்தோஷமாக இருக்கலாம் என்பதைக் குறித்தே விளம்பரங்கள் காட்டப் படுகிறது. வித விதமாகப் பொருட்கள் நமக்கு மிக அத்தியாவசியம் போல், நம் மனது வசப்படும் அளவிற்குத் தகவல்கள் விளம்பரங்களில் அமைக்கப் பட்டிருக்கும். இது, “பர்சுவேஸிவ் தின்கிங்” (Persuasive Thinking) என்பதைச் சார்ந்தது, அதாவது நம்மை மறைமுகமாகத் தூண்டிவிடுவது என்று வர்ணிக்கலாம். அதன் விளைவாக, நாம் இவற்றை வாங்கி உபயோகப் படுத்துவதும் உண்டு. விளம்பரத்தின்  வெற்றி, நாம் ஈர்க்கப் படவிடுவதிலேயே!

ஒரு விதத்தில், நமக்கு என்று வாங்கி, நம்மை அலங்கரித்துக் கொண்டு, புது வருடத்தை வரவேற்பது நமக்கு இனிய தருணங்களாகும். இன்னொரு விதத்தில், வருட ஆரம்பத்திலேயே நம்மைச் தன்னலம் தூண்டி விட, நாமும் பர்சுவேஸிவ் தின்கிங்கினால் அதை ஏற்றுக் கொள்கிறோமே என்பதும் நினைத்துப் பார்க்க வேண்டியவையே. 

இதை ஒட்டினார் போல், அன்றைய தினத்தில், தொடர்ந்து எதைச் செய்தாலும், நமக்கே என்று மட்டும் என்று எண்ணி விடக்கூடும். நமக்குப் பிடித்ததை மட்டும் செய்ய, மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதைப் பற்றி யோசிக்கக் கூட மனம் மறுத்து விடக்கூடும்.

இதனுடைய பிரதிபலிப்பை நாம் புது வருடம் பிறக்கும் வேளையில் பார்க்க முடிகிறது. பலர், வெளியில் கவனமின்றி வாகனங்களைத் தாறுமாறாக ஓட்டி,  கூச்சலிட்டு, தாம் படும் சந்தோஷத்தை உலகுக்கே காட்டுவதை பார்க்கிறோம். இது மருத்துவ மனை அருகிலும் நடக்கிறது. பறவைகள், சத்தத்தில் பயந்து, விழித்துக் கலங்கி பறந்தால் என்ன, விலங்குகள் அரண்டால் தான் என்ன என்று கண்டு கொள்வதில்லை. இதில் பகிர்ந்து கொள்வது கடுகளவாகும். இப்படிச் செய்வது, புத்தாண்டு என்ற போர்வையில் போடப்படுகிறது. 

எல்லா விதத்திலும் அப்படியே இயங்கினால் இது சுயநலத்தையே காட்டும். இந்த நிலையினால் கிடைக்கும் மன நிறைவு மிகச் சிறிய காலமே நிலைக்கும். கொஞ்சம் வித்தியாசமாக, மற்றவர்களுடன் நம் பொருட்களையோ, சந்தோஷத்தையோ பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம்.  நம் தேவைகளை தாண்டி யோசித்துச் செய்வதில் வரும் அனுபவம், சந்தோஷம் மிக அலாதியானது. அதனால் தானே “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”! இதை அனுபவிக்க வில்லை என்றால், இதோ ஒரு வாய்ப்பு.

பகிர்ந்து கொள்வதில் பல விதங்கள் உள்ளன. நமக்கு என்று வாங்கிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்காகத் தேடி, பார்த்து வாங்குவதில் வருவதும் இனிய சுகமே! யார் சொல்லியோ, கேட்டோ, படித்தோ, நமக்கு அடுத்தவர்களின் அடிப்படைத் தேவைகள் இதுதான் என்று தெரிய வரும். இதை மனதில் வைத்துக்கொண்டு அதிலிருந்து ஒன்றைத் தரமுடியும். பெரிய-சிறிய தொகையோ, பொருட்களோ என்பதில் இல்லை, கொடுப்பதை முழு மனதுடனும் விருப்பத்துடனும் கொடுப்பது தான் மிக முக்கியம். இது, பண்டிகைகளுக்கு உடை, இனிப்பு தருவது போலவே ஆகும். நாம் மனதார பங்களித்துக் கொள்வதின் இனிய உணர்வை உணரவே பண்டிகைகளுக்குக் கொடுக்கும் பழக்கமே. செய்யச் செய்ய, பகிர்ந்து கொள்வது ஒரு பழக்கமாகிவிடும்!

கொடுப்பது பழகி வர, ஒரு சிறு வித்தியாசத்திற்கு, யாருக்குக் கொடுக்கிறோம் என்று அடையாளம் தெரியாமல்,  அவர்களுக்கும் நாம் யார் என்று காட்டாமல் செய்யலாம். இந்த அனுபவமும் மிக இனியதாகும். செய்து பாருங்கள், வெகு நாளைக்கு மனநிறைவு நிறைந்து இருப்பது, நிச்சயம்!

அதே போல், நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதும் நம் மனதின் விசாலத்தைக் காட்டும். கிழிந்து கந்தலான பிறகு கொடுப்பதில் பெரிய விஷயம் இல்லை. ஒரு ஸூஃபி மகான் சொன்னது போல் “என்னிடம் கொஞ்சம் இருந்தாலும், இருப்பதிலிருந்து மற்றவருக்கும் கொடுக்கும் மனது எனக்கு இருந்தால் போதும்” என்று. 

கொடுப்பதில் வரும் சந்தோஷத்துடன், பெற்றுக் கொள்பவர்களின் முக பாவத்தில் பிரகாசிக்கும் ஆனந்தம் நமக்கு மன நிறைவை அளிக்கிறது. அது மட்டுமல்ல நம்மால் இன்னொருவரின் தேவையை உணர்ந்து, செயல் பட முடிந்தது என்பது திருப்தி அளிக்கிறது.

இதனுடன், எந்த அளவிற்கு நாம் பவ்யமாக கொடுக்கிறோம் என்பதிலும் முக்கிய பங்கும் உண்டு. இப்படி இயங்குவதால், நாம் வாழ்வதற்கான ஒரு அர்த்தம் புரிய வரும்.

மற்றவரின் கவனம் நம்மேல் வருவதற்காகத் தான் செய்து வருகிறோம் என்றால் அதை வாங்கிக் கொள்பவர்கள் கூச்சத்துடன் பெற்றுக் கொள்வார்கள். ஏனெனில் இதில் முழுக்க முழுக்க கர்வமே தலை தூக்கி நிற்கும். 

அதே போல், எக்காரணத்திற்கோ “அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள்?” என்பது எண்ணத்தில் நுழைந்து விட்டால், சந்தோஷம் போய், பேரமாகிவிடும். நாம் செய்வது மற்றவரின் புகழுக்காகவோ, கவனத்திற்காகவோ என்று இருந்து விட்டால் இதில் சுயநலம் கலந்து நல்லெண்ணம் மறைந்துவிடும்.

ஒரு செயலில் ஈடுபடும்போது அதை முழுமனதோடு, நன்றாகச் செய்ய வேண்டும் என்றிருந்தால், அது மேலோங்கும். ஆரம்பத்திலேயே விளைவுகளின் எண்ணிக்கையைத் தொடங்கினால் நம் சிந்தனை முடிவை நோக்கி இருக்குமே தவிர செய்வதில் இருக்காததால், செய்வது கடினமாகும். 

அதே போல், “என்ன” நோக்கத்துடன் செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி கவனம் செலுத்தினால் பயன் அடையலாம். நாம் செய்வதில் எந்த விதமான உள் அர்த்தமும் இல்லாமல் இருந்தால், சந்தோஷம் தானாக வரும், நீண்ட காலம் நல் உணர்வைக் கொடுக்கும். அதிலும், நமக்கு அறிமுகமே இல்லாதவர்களுக்கு உதவுவது இதில் அடங்கும்.

இந்த வருட ஆரம்பத்தில், “இதைச் செய்யலாம்” என்ற பட்டியலில் நம்மால் பலர் சந்தோசப்படச் செய்வதையும் சேர்த்துக் கொள்ளலாம். நம்முடன் இருப்பவர்களின் சந்தோஷத்தை எப்படி எல்லாம் ஊர்ஜிதம் செய்ய முடியும் என்பதையும் சேர்த்து கொள்ளலாம். அந்நியர்களுக்கும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் கவனமாக செய்து வந்தால், வருகிற பன்னிரண்டு மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கச் செய்யும்!

“எதை மாற்ற? ஏன்? எப்படி மாற்ற வேண்டும் புரிந்தது. இனி, ஆக்க்ஷன் தான்!”        

மாலதி சுவாமிநாதன்
malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com